Published:Updated:

வ.உ.சியின் கதையா காற்று வெளியிடை? - பரபர குறியீடுகள்

வ.உ.சியின் கதையா காற்று வெளியிடை? - பரபர குறியீடுகள்
வ.உ.சியின் கதையா காற்று வெளியிடை? - பரபர குறியீடுகள்

'காற்று வெளியிடை' படத்தைப் பார்க்கும்போதெல்லாம் படம் முழுவதுமாக இல்லைனாலும் சில காட்சிகளில் குறியீடாக வ.உ.சி-யை நினைவுபடுத்துற மாதிரியே இருந்துச்சு. அதெல்லாம் என்னன்னு நீங்களே பாருங்க மக்களே...

* படத்துல கார்த்தியோட பேர் வருண் சக்கரபாணி. ஆனா படம் முழுக்க அவரை 'VC' ன்னுதான் எல்லாருமே கூப்பிடுவாங்க. அவருடைய ஏர்ஃபோர்ஸ் யூனிஃபார்ம்லகூட VC ன்னுதான் பெயர் போட்ருப்பார் கார்த்தி. வள்ளியப்பன் உலகநாதன் சிதம்பரம்பிள்ளைங்கிற பேர்ல இருந்து வந்த VOCயைத்தான் ஷார்ட்டா VC னு கூப்பிடுறாங்களோன்னு தோணுது.

* படத்துல அடிபட்டு ஹாஸ்பிட்டலிலே கிடக்கும்போதுகூட பாரதியார் கவிதையாகத்தான் பேசுவார் கார்த்தி. அப்படியே இந்தப் பக்கம் வந்தீங்கன்னா நிஜத்தில் பாரதியாருடைய கவிதைகளிலும் பாடல்களிலும் ஈர்த்துதான் அவரோட நெருங்கிய நண்பராகவே ஆனார் வ.உ.சி. அவர் பற்றி எடுக்கப்பட்ட 'கப்பலோட்டிய தமிழன்' படத்தினுடைய எல்லாப் பாடல்களுமே பாரதியாரோட பாட்டுகள்தான்ங்கிறதும் இதில் ஹைலைட். அவ்வளவு ஏன் பாஸ் இந்தப் படத்தோட டைட்டிலான 'காற்று வெளியிடை'ங்கிற பெயர் பாரதியாரோட பாட்டுனு தெரியும். ஆனா அந்தப் பாட்டு 'கப்பலோட்டிய தமிழன்' படத்துல வருதுங்கிறது பல பேருக்குத் தெரிஞ்சிருக்காது. என்ன ஒண்ணு அந்தப் பாட்டு வ.உ.சி-க்கு வராம மாடசாமிங்கிற கேரக்டரில் வரும் ஜெமினிகணேசனுக்கு வரும். எல்லாத்தையுமே டைரக்டா சொல்லாம கொஞ்சம் சுற்றிவளைச்சு சொல்றவர்தானே பாஸ் மணிரத்னம்.

* கார்த்திக்கு காயம் ஏற்பட்டு இக்கட்டான சூழ்நிலையில் மருத்துவமனையில் இருக்கும்போது கூடவே  இருந்து உதவி செய்வார் இலியாஸ் ஹுசைன் என்கிற கேரக்டரில் வருகிற ஆர்.ஜே.பாலாஜி. வ.உ.சி பக்கம் பார்த்தோம்னா கப்பல் வாங்க உதவி கேட்டு ஒவ்வொருவராகத் தேடிக்கொண்டிருக்கும்போது முன்வந்து அவருக்கு மிகப்பெரிய பொருள் உதவிகள் செய்திருப்பார் முகமது பக்கீர்சேட் என்கிற இஸ்லாமியர்.

* வ.உ.சி முதல் மனைவியுடன் பிரச்னை ஏற்பட்டு இரண்டாவதாக ஒரு திருமணம் செய்துகொண்டார். படத்திலும் அதே போல முதலில் ஒரு பெண்ணோடு ரிலேசன்ஷிப்பில் இருக்கிற கார்த்தி பிறகு அதிதியுடன் ஜோடி சேர்வார்.

* சிதம்பரனார் என்றாலே நாட்டுக்காக சிறை சென்றதும் அதிலே அவர் பட்ட கஷ்டங்களும்தான் உடனே நினைவுக்கு வரும். அதுபோலவே இதிலும் கார்த்தி நாட்டுக்காக சண்டை போட்டு சிறையிலே சித்ரவதை செய்யப்பட்டு 'பருத்திவீரன்' கார்த்தி போல ஆளே மாறிப்போய் இருப்பார்.

* படத்தில் கார்த்தி தப்பிக்க ஜெயிலில் அவருடனேயே இருக்கும் ஒருவர் உதவி செய்வார். அவரது கேரக்டரை நன்றாகக் கவனித்தால் பரட்டைத்தலை, அழுக்கு உடை என ஆளையே விகாரமாகக் காட்டியிருப்பார்கள். சிதம்பரனார் வரலாற்றுப் பக்கம் வந்தால் அவருக்குப் பல இடங்களில் உதவியாக இருந்தவர் சுப்ரமணிய சிவா. ஆனால் இறுதியில் தொழுநோய் வந்து சிறையில் இருந்து திரும்பி வரும் வ.உ.சி-க்கே அடையாளம் தெரியாமல் இதேபோல் பரட்டைத்தலையுடன் இருப்பார். 'கப்பலோட்டிய தமிழன்' படம் பார்த்தால் புரியும். அதை அப்படியே காட்டியிருப்பார்கள்.

* சுதந்திரப் போராட்டத்துக்காக சிறை சென்று வெளியே வரும்போது தனக்காக பெரிய கூட்டமே காத்துக்கொண்டிருக்கும் என நினைத்த சிதம்பரனார் மாறாக மிகப்பெரிய அமைதி நிலவியதைக் கண்டு ஏமாற்றம் அடைந்தார் என்பதும் பாரிஸ்டர் பட்டமே பறிக்கப்பட்டது என்பதும் வரலாறு. கிட்டத்தட்ட அதுபோலவே பாகிஸ்தான் சிறையிலிருந்து தப்பி இந்திய எல்லைக்குள் நுழைந்ததுமே மிகுந்த சந்தோசத்துடன் நான் இந்துஸ்தானி என கத்திக்கொண்டே வருவார் கார்த்தி. ஆனால் எந்த ரியாக்‌ஷனுமே இருக்காது. அவரை வரவேற்க யாருமே இருக்க மாட்டார்கள், அவரது காதலி உட்பட.

* நிஜத்தில் சிதம்பரனார் நாட்டுக்காக சுதேசிக்கப்பல் ஓட்டினார். அதையே கொஞ்சம் குறியீடாக கார்த்தியை இந்தப் படத்தில் நாட்டுக்காக விமானம் ஓட்டும் விமான ஓட்டியாகக் காட்டியிருப்பார்கள். அவ்வளவுதான் வித்தியாசம்.

* ஒரு காட்சியில் நாயகி அதிதியை கார்த்தி தன்னுடைய வீட்டுக்குக் கூட்டிவந்து தன்னுடையை குடும்பத்தை அறிமுகம் செய்து வைப்பார். படத்தைக் கொஞ்சம் கவனிச்சுப் பார்த்தா தெரியும். அதிலே இது எங்க அண்ணன் மதுசூதனன் பிள்ளைனு அறிமுகம் செய்வார். அவரது அப்பாவை அறிமுகம் செய்யும்போதும் பெயரோடு சேர்த்து பிள்ளை என்பதையும் சேர்த்துதான் சொல்லுவார். பெயரிலேயே சிதம்பரம்பிள்ளை என வைத்திருக்கும் வ.உ.சி பிள்ளைமார் சமூகத்தைச் சேர்ந்தவர் என்பதெல்லாம் யாருக்கும் சொல்லித் தெரியவேண்டும் என்பதே இல்லை.

* ஆச்சரியப்படும்படியான இன்னொரு விஷயமும் இதில் இருக்கு. கார்த்தியுடைய தம்பியாக தீபக் என்கிற பெயரில் மனநலம் பாதிப்படைந்தவர் போல ஒருவரைக் காட்டியிருப்பாங்க. இது எதுக்கு சம்பந்தமே இல்லாமல் புது கேரக்டர்னு பார்த்தா வ.உ.சி-யின் வாழ்க்கைக் கதையான கப்பலோட்டிய தமிழனிலும் அதே போல வ.உ.சி-க்கு  மீனாட்சி சுந்தரம் என்கிற கேரக்டரில் மனநலம் பாதிக்கப்பட்ட தம்பி ஒருத்தர் அந்தக் குடும்பத்திலே இருப்பார்.

* கார்த்தி தன்னுடைய அப்பாவை அறிமுகம் செய்துவைக்கும்போதுகூட அவரைப்பற்றி நெகடிவ்வாகதான் அறிமுகம் செய்துவைப்பார். கூடவே தன்னைத்தவிர வேறு யாருக்கும் ஒண்ணுமே தெரியாதுன்னு எங்க அப்பா நினைப்பார்னு சொல்லுவார். அவரது அப்பாவும் அதிதியிடம் நான் சொல்ற பேச்சைலாம் கேட்டுருந்தா உருப்பட்டுருப்பான்னு கார்த்தியைப் பற்றிச் சொல்லுவார். அப்படியே இந்தப் பக்கம் வந்தால் கப்பலோட்டிய தமிழனிலும் காசுக்காக பொய்வழக்குக்கெல்லாம் வக்கீலாக ஆஜர் ஆவார் வ.உ.சி-யின் அப்பா. ஆங்கிலேயர்களுக்கு எதிராக எல்லாம் போராட வேண்டாம் முதலில் பணம் சம்பாதிக்கும் வழியைப்பாரு என் பேச்சைக்கேளு எனக் கட்டாயப்படுத்துவார்.

* வரலாற்றை எடுத்துக்கொண்டால் சிறு வயதில் மகாபாரதக்கதைகளை எல்லாம் கேட்டு வளர்ந்துதான் ஓர் ஆளுமையாக வ.உ.சி தன்னை வளர்த்துக்கொண்டார் என வரலாறு கூறுகிறது. காற்று வெளியிடையிலோ அல்ட்ரா மாடர்னில் இருக்கும் நவநாகரிக கார்த்திகூட தன் நண்பருடன் தான் பார்க்கும் வேலை குறித்து பேசிக்கொண்டிருக்கும் ஒரு காட்சியில் இது ஒண்ணும் மகாபாரதம் இல்ல நாம ஒண்ணும் கண்ணனோ அர்ஜுனனோ இல்ல எல்லாத்தையும் நாமதான் பாத்துக்கணுங்கிற டோனில் ஒரு வசனம் பேசியிருப்பார்.

இதெல்லாம் மேலோட்டமாக பார்த்ததுல கிடைச்ச சின்ன  சாம்பிள்ஸ்தான். இன்னும் நிறையவே இருக்கு. அதுக்காக இந்தப் படம் வ. உ.சி-யோட கதைதான்னும் தீர்க்கமாகச் சொல்லிட முடியாது. ஏன்னா காற்று வெளியிடை படம்  யதார்த்தமாக எடுக்கப்பட்ட வேற கதையாகக்கூட இருக்கலாம் மக்களே...

- ஜெ.வி.பிரவீன்குமார்