Published:Updated:

‘சினிமால ஒரே ஒரு ஃப்ரெண்ட் இவர்தான்!’ - யாரைச் சொல்கிறார் லட்சுமி மேனன்?

‘சினிமால ஒரே ஒரு ஃப்ரெண்ட் இவர்தான்!’ - யாரைச் சொல்கிறார் லட்சுமி மேனன்?
‘சினிமால ஒரே ஒரு ஃப்ரெண்ட் இவர்தான்!’ - யாரைச் சொல்கிறார் லட்சுமி மேனன்?

‘சினிமால ஒரே ஒரு ஃப்ரெண்ட் இவர்தான்!’ - யாரைச் சொல்கிறார் லட்சுமி மேனன்?

“என்னங்க கொஞ்ச நாட்களாக ஆளையே காணோமே? ஏன் இந்த திடீர் பிரேக்?" என்று லட்சுமி மேனனிடம் கேட்டால், சிரிக்கும் கண்களுடன் பதில் சொல்லத் தொடங்குகிறார். 

"இது நான் வேணும்னே எடுத்துகிட்ட பிரேக் கிடையாது. நல்ல கதைக்காக காத்திருந்தேன். அதுதான் நடுவுல ஒரு சின்ன பிரேக் விழுந்துடுச்சு. ஆனா, எனக்கு இந்த டைம் வேஸ்ட் ஆகலை. இந்த நேரத்துல நிறைய புதுப்புது விஷயங்களை கத்துகிட்டு இருக்கேன். கொஞ்சம் டிராவல் பண்ணினேன். ரொம்ப நாள் கழிச்சு பேமிலி கூடவும் ப்ரெண்ட்ஸ் கூடவும் நேரம் செலவழிக்கவும் முடிஞ்சது." 

"இப்ப 'யங் மங் சங்' படத்துல பிரபுதேவா கூட நடிக்கிறீங்க. படத்துல உங்க கேரக்டர் என்ன?" 

"நான் ரொம்ப நாள் கழிச்சு பண்ணுற படம் இது. படத்தோட டைரக்டர் கதை சொல்லும்போதே எனக்கு ரொம்ப பிடிச்சு இருந்துச்சு. முக்கியமா பிரபுதேவா சார் ஒரு படத்துல கமிட் ஆகிறார்ன்னா கண்டிப்பா சம்திங் ஸ்பெஷலா இருக்கும். அதுதான் உடனே நடிக்க ஓ.கே சொல்லிட்டேன். இதுல என் கேரக்டர் ஒரு கிராமத்து பொண்ணுதான். ஆனா, என் வழக்கமான சாயலில் இல்லாமல் வித்தியாசமா இருக்கும். ஸ்கிரீன்ல பார்க்கும்போது உங்களுக்கே அந்த வித்தியாசம் தெரியும். இப்ப ஷூட்டிங் நடந்திட்டு இருக்கு. அதுனால, படத்தைப் பத்தி ரொம்பவும் சொல்ல முடியாது." 

"ஆனா, 'இனி வில்லேஜ் கேரக்டர்ல நடிக்க மாட்டேன். மார்டனான வெரைட்டியான கேரக்டர்ல தான் நடிப்பேன்'னு சொல்லிட்டு இருந்தீங்களே?" 

"ஆமா... அதுக்கு அப்புறம் தான் 'றெக்க', 'மிருதன்' மாதிரி படங்கள் பண்ணினேன். 'கொம்பன்' படத்திற்குப் பிறகு நான் எந்த வில்லேஜ் கேரக்டரிலும் நடிக்கலை. இந்தக் கதையில என் கேரக்டர் பிடிச்சு இருந்ததால தான் நடிக்க சம்மதிச்சேன்." 

"நிறையப் படங்களில் பரபரன்னு நடிச்சுட்டு இப்ப ஒரே ஒரு படத்துல மட்டும் நடிக்கிறமேன்னு வருத்தப்பட்டீங்களா?" 

"ச்சே... இல்லைவே இல்லைங்க. இதுவரைக்கும் 70 படங்களுக்கும் மேல நடிக்க வாய்ப்பு வந்தது. ஆனா, எனக்கு எது செட் ஆகுமோ அதைத்தான் செலக்ட் பண்ணி நடிச்சேன். இன்னமும் நிறையப் படம் பண்ணணும். பேரு சொல்லுற மாதிரி படங்கள் பண்ணனும்னுதான் காத்திருக்கேன்." 

"வெள்ளையா இருக்கிற பொண்ணுங்களைதான் ஹீரோயினா நடிக்க வைக்கறாங்க. ஏன் கருப்பு நிறத்தில் உள்ள பெண்களையும் ஹீரோயினாக யாருமே நடிக்க வைப்பதில்லை. இதை என்னைக்காவது யோசிச்சுப் பார்த்து இருக்கீங்களா?"

"ஐயோ... ஏங்க திடீர்னு இப்படி எல்லாம் கேள்வி கேட்குறீங்க? (சிரிக்கிறார்). எல்லாரும் சொல்லுற மாதிரிதான் நிறத்தினால் அழகு இல்லை. நானே மாநிறம்தான். ஏன் கருப்பான பெண்களை நடிக்க வைக்கலைனு நீங்க டைரக்டருங்ககிட்ட தான் கேட்கணும். இதுக்கு நான் என்ன பதில் சொல்லுறது?"

"மல்லுவுட்ல இருந்து யாரும் உங்களை நடிக்கக் கூப்பிடலையா?" 

"ம்ம்ம்... இப்ப நிறைய வாய்ப்புகள் வருது. ஆனா, ரொம்ப வேகமாவும் அடுத்த ஸ்டெப் எடுத்து வைக்க விரும்பலை. அதுனால, இதைப் பற்றி விரிவாகச் சொல்ல முடியாது. நல்ல கேரக்டர் கிடைச்சா அங்கயும் பண்ணுவேன்." 

"தமிழ் சினிமால யாரெல்லாம் உங்க பெஸ்ட் ப்ரெண்ட்ஸ்?" 

"எனக்கு அப்படி யாருமே சினிமால பெஸ்ட் ப்ரெண்ட்ஸ் கிடையாதுங்க. எனக்கு இருக்கிற ப்ரெண்ட்ஸ் எல்லாமே எங்க ஊர்ல என்கூட ஸ்கூல், காலேஜ்ல படிச்சவங்கதான். எனக்கு சினிமால இருக்கிற ஒரே ஒரு ஃப்ரெண்ட் சஞ்சிதா செட்டி மட்டும்தான்." 

"நடிகைகளுக்கு என்ன சிரமங்கள் இருக்குனு நினைக்கறீங்க?" 

"சிரமம் எல்லாம் நாம பார்க்கிற பார்வையிலதான் இருக்கு. நான் எல்லா விஷயத்தையுமே ரொம்ப கூலா எடுத்துக்கிற ஒரு ஆள். பெருசா எதுக்கும் டென்ஷன் ஆகமாட்டேன். அதுனால எனக்குப் பெரிசா எந்த சிரமும் ஏற்பட்டதில்லை. நீங்க வேற யார்கிட்டயாவது கேட்டால் இந்தக் கேள்விக்கு பதில் கிடைக்கலாம்." 

"நடிகர்கள் வயசாகும் வரையிலும், வயதான பிறகும் கூடத் தொடர்ந்து ஹீரோவாகவே நடிச்சுட்டே இருக்காங்க. ஆனா, ஹீரோயின்களுக்கு அப்படி இல்லையே..." என முடிக்கும் முன்னரே குறுக்கிடுகிறார். 

"பொண்ணுங்களுக்கு ஸ்கிரீன்ல டக்குனு வயசு தெரிஞ்சுடும். அதுனாலதான் குறிப்பிட்ட வருஷத்துக்கு மேல தொடர்ந்து ஹீரோயினாக பண்ண முடியலைனு நான் நினைக்கறேன். முன்னாடி ஹீரோயின்களை மட்டுமே வைச்சு எடுக்கப்பட்ட படங்கள் ரொம்ப குறைவு. ஆனா, இப்ப இந்த டிரெண்ட் மாறிட்டு இருக்கு. தமிழில் 'மாயா', 'டோரா'னு ஹீரோயின்களை மையப்படுத்தின படங்களும் வர ஆரம்பிச்சுடுச்சு. ஹீரோயின்களும் வயசாகும்  வரை வயதான பின்னும் ஹீரோயினாகவே நடிப்பாங்க. அதுக்கான மாற்றம்தான் இப்ப நடந்திட்டு இருக்கு." 

"சமீபத்தில், பார்த்ததில் பிடித்த படங்கள் என்னென்ன?" 

"இங்க தமிழ் படங்கள் ரிலீஸ் ஆகிறது கம்மி. தமிழ்நாட்டுக்கு வந்தால் பார்ப்பேன். இப்ப மலையாளத்தில் வந்த 'அங்கமாலி டைரீஸ்' ரொம்ப பிடிச்சு இருந்தது. நான் தினமுமே ஒரு உலகப் படம் பார்த்திடுவேன். படம் பார்க்கிறதும் எனக்குப் படிப்புதான்." 

"சமூக வலைதளங்களில் இருக்கீங்களா?" 

"இல்லவே இல்லைங்க. என் பேர்ல ஃபேஸ்புக் பேஜ் இருக்கு. ஆனா, அதுக்கு நான் அட்மின் கிடையாது. வேற ஒருத்தர்தான் பார்த்துகிறார். நான் எப்பயாவது ஒரு போட்டோ போடுவேன். என்னென்ன கமெண்ட் வந்திருக்குனு பார்ப்பேன். அவ்வளவுதான். மத்தபடி நான் இன்ஸ்டாகிராம், ட்விட்டர்னு எதுலயும் இல்லை. என்னைப் பொறுத்தவரை சோஷியல் மீடியா வேஸ்ட் ஆஃப் டைம்." 

"இயக்குநர் ஆகணும்னு  ஆசை இருக்குனு கூட சொல்லிட்டு இருந்தீங்களே?" 

"ஆமா... சில ஹாலிவுட் படங்கள் பார்க்கும்போது நாமும் இப்படி படங்கள் எடுக்கணும்னு ஆசைப்படுவேன். ஆனா, டைரக்டர் ஆவது அவ்வளவு ஈஸி கிடையாதுங்க. ரொம்ப கஷ்டப்படணும். அதுக்கு நேரம் காலம் எல்லாம் சரியா அமைந்தால் டைரக்டர் ஆகிட வேண்டியதுதான்."

"ஸ்கூல் படிக்கும்போதே நடிக்க வந்துட்டீங்க. இப்ப நீங்க வந்த பாதையை நினைத்துப் பார்க்கும்போது எப்படி இருக்கு?" 

"14 வயசுலயே நடிக்க வந்துட்டேன். படிப்பிலும் கவனம் செலுத்திட்டு நடிக்க ஆரம்பத்துல கொஞ்சம் சிரமப்பட்டேன். ஆனா, ஒருகட்டத்துல ரெண்டையும் மேனேஜ் பண்ணக் கத்துகிட்டேன். சினிமால சீக்கிரம் வந்தது என் லக்குதான். ஆனா, அப்ப விளையாட்டுத் தனமா சினிமாவைப் பார்த்தேன். இப்ப அப்படி கிடையாது ரொம்ப சிரீயஸாக பார்க்கிறேன். இப்ப இந்த ஆறு வருஷத்தை திரும்பிப் பார்க்கும்போது நிறைய ஸ்வீட் மெமரிஸ் இருக்கு. இன்னமும் நிறைய ஸ்வீட் மெமரிஸ் சேர்க்கத்தான் ஆசைப்படுறேன்." என்று முடிக்கிறார் லட்சுமி மேனன். 

- நா.சிபிச்சக்கரவர்த்தி 

அடுத்த கட்டுரைக்கு