Published:Updated:

தனுஷ், த்ரிஷாவுக்கெல்லாம் ஏன் தேசிய விருது இல்லை!? ஒரு ரசிகனின் குமுறல்

தனுஷ், த்ரிஷாவுக்கெல்லாம் ஏன் தேசிய விருது இல்லை!? ஒரு ரசிகனின் குமுறல்
தனுஷ், த்ரிஷாவுக்கெல்லாம் ஏன் தேசிய விருது இல்லை!? ஒரு ரசிகனின் குமுறல்

அமீர்கானுக்கு தேசிய விருது இல்லை... சல்மான்கானுக்கு அவார்ட் இல்லை என பாலிவுட் உலகம் பரபரக்கிறது. இங்கு முருகதாஸ் தன் பங்குக்கு ட்வீட் போட்டு கோபத்தைக் கொட்டியிருக்கிறார். நிஜமாகவே ஒருதலைபட்சமாகத்தான் இருக்கிறதா நேஷனல் அவார்ட் பரிந்துரைப் பட்டியல்? கொஞ்சம் ஆராய்ந்து பார்த்தால்... யெஸ்... உண்மைதான். சில பார் (அந்த பார் இல்லை பாஸ். கடை மூடினதுல இருந்தே நீங்க சரியில்லை) போற்றும் தமிழ்ப் படங்களை ஜஸ்ட் லைக் தட் உதாசீனப்படுத்தியிருக்கிறது தேர்வுக்குழு. அந்தப் படங்களைப் பற்றி எடுத்துச் சொன்னால் தங்கள் முடிவுகளை தேர்வுக்குழு மறுபரிசீலனை செய்யும் என்ற எதிர்பார்ப்பில்தான் இந்தப் பதிவு.

சாகசம் :

கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகள் 'அசாத்திய' மேக்கிங்கிற்காகவே செலவழித்த படம். அப்பா எழுத, மகன் நடிக்க, அம்மா தயாரிக்க என முழுக்க முழுக்க குடும்பப் படமாகவே உருவானது. 'ஒருகாலத்துல நான் யூத்து, இப்போ நான் யூத்து மாதிரி' என காட்சிக்குக் காட்சி தனக்குத்தானே சொல்லிக்கொண்டு உழைப்பைக் கொட்டியிருப்பார் டாப்ஸ்டார் பிரசாந்த். தமிழ் ரசிகர்களை உய்விக்க ஆஸ்திரேலிய மாடல் அமண்டாவை அழைத்துவந்து நாயகியாக்கி சேவை செய்தது படக்குழு. அந்த நல்ல மனசுக்கு இல்லைனாலும் அந்த தேஸி கேர்ள் பாட்டுக்காகவாவது ஆறுதல் பரிசு கொடுத்திருக்கலாம்.

போக்கிரி ராஜா :

இதற்கு முன் 'போக்கிரி ராஜா' என்ற பெயரில் தென்னிந்திய மொழிகளில் ஏகப்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன. அவை அத்தனையும் ஹிட். 'அதெப்படி எல்லாப் படமும் ஹிட்டாகலாம்?' என்ற உயரிய நோக்கத்தோடு எடுக்கப்பட்ட காவியம்தான் இந்தத் திரைப்படம். ஒருவகையில் இதற்கு ராஜமெளலிதான் இன்ஸ்பிரேஷன். கொட்டாவி விடுறப்போ உள்ளே போற ஈயை வெச்சு ஒருவர் படம் எடுத்தா, நாம ஏன் கொட்டாவியை வெச்சு எடுக்கக் கூடாது?' என படக்குழு யோசித்திருக்கிறது. இந்த யோசனைக்கே பத்து விருதுகளை கிஃப்ட் பாக்ஸில் போட்டு அனுப்பலாம். அதையும் பேன்டஸி படம் என விளம்பரம் செய்த தைரியத்துக்கு.. அவார்ட் எல்லாம் பத்தவே பத்தாது பாஸ்.

நாயகி :

நிஜமாகவே பயமுறுத்தும் பேய்ப்படங்கள் வருவதுண்டு. அந்தப் பேய்ப்படங்களை கிண்டல் பண்ணும் படங்களும் வருவதுண்டு. நாயகி ஒரு புது ஜானர். பயமுறுத்த நினைத்து காமெடிச் சித்திரமான ஒரே படம் நாயகியாகத்தான் இருக்கும். கேமராவில் மட்டும்தான் பேய் தெரியும், பெண் பேய் அப்பா பேயோடு டீம் சேர்ந்து பழிவாங்கும் போன்ற புதுமையான முயற்சிகளை படம் முழுக்க அள்ளித் தெளித்து தெறிக்கவிடுவார்கள். அந்த க்ரியேட்டிவிட்டிக்காகவே அவார்டு தரலாம். அதிலும் படத்தின் காமெடிக் காட்சிகளைப் பார்த்து வி.ஜி.பி-யில் சிலையாக நிற்பவரே விழுந்து விழுந்து சிரிப்பார். அப்படிப்பட்ட படத்தை விடுறதுக்கு எப்படி ப்ரோ மனசு வந்தது?

கடவுள் இருக்கான் குமாரு :

இயக்குநர் ராஜேஷ் படங்களுக்கு கண்ணை மூடிக்கொண்டு நேஷனல் அவார்டு தரலாம். ஜி.வி பிரகாஷ் - சொல்லவே வேண்டாம். ஆஸ்கர் லெவல். இருவரும் ஜோடி சேரும் படம் என்றால் கேட்கவா வேண்டும்? ஏகப்பட்ட ஏ ஜோக்குகள், பாட்டில் சீன்கள், மசாலாப் பாடல்கள் எனக் குடும்பக் கொத்துப் பரோட்டாவாக பூத்துக் குலுங்கிய படம். படத்துக்கு படம் ஜி.வியின் 'நடிப்பு' மெருகேருவதை கண்டு அசந்து போனார்கள் விமர்சகர்கள். முன் சீட்டில் இருந்த குழந்தைகூட அடுத்தடுத்த சீன்களைச் சொல்லிவிடும் அளவிற்கு திரைக்கதையை எளிமையாக்கிய இயக்குநருக்கு கட்டாயம் அவார்டு தந்திருக்க வேண்டும். 

தொடரி:

'Unstoppable', 'Speed' போன்ற ஹாலிவுட் படங்களின் ஸ்டன்ட் காட்சிகள் உலக ஃபேமஸ். அதை மிஞ்சும் படத்தை தமிழில் தரவேண்டும் என்ற கனவுதான் தொடரி. 150 கிலோமீட்டர் வேகத்தில் ட்ரெயின் பறக்கும்போதும் தெறி எக்ஸ்பிரசன்களால் நம்மை மெர்சலாக்குவார் கீர்த்தி சுரேஷ். தனுஷோ... ஓடுவார், பாடுவார், ஆடுவார், சுடுவார்... பாருங்கோ ஸார் பாருங்கோ... ஓடுற ட்ரெயின்ல வித்தை காட்டுறோம் ஸார் பாருங்கோ' லெவல் ஸ்டன்ட்கள் இவை. நடுநடுவே இமான் பல வருஷங்களாக பயன்படுத்தும் ட்யூன்களில் பாடல்கள் வேறு. 'தொடரி' நம்மளை நோக்கித்தான் வேகமா வருது என ரசிகர்கள் தெறித்து ஓடுவதுதான் படக்குழுவின் வெற்றி.


இந்தப் படங்களுக்கு எல்லாம் அவார்டு தராத உங்களை ரசிகர்களோட மனசாட்சி மன்னிக்கவே மன்னிக்காது  பாஸ்! 

-நித்திஷ்