Published:Updated:

“ஆம்... ஏமி ஜாக்சனிடம் பொய் சொல்லி விட்டேன்!”- இயக்குநர் விஜய் #VikatanExclusive

“ஆம்... ஏமி ஜாக்சனிடம்  பொய் சொல்லி விட்டேன்!”- இயக்குநர் விஜய்  #VikatanExclusive
“ஆம்... ஏமி ஜாக்சனிடம் பொய் சொல்லி விட்டேன்!”- இயக்குநர் விஜய் #VikatanExclusive

“ஆம்... ஏமி ஜாக்சனிடம் பொய் சொல்லி விட்டேன்!”- இயக்குநர் விஜய் #VikatanExclusive

‘‘காட்ல ஷூட் பண்றது எளிதான விஷயம் கிடையாது. எப்ப எங்க இருந்து என்ன பிரச்னை வரப்போகுதுன்னு யாருக்குமே தெரியாது. தலக்கோணத்துல ஷூட்ல ஒருநாள் திடீர்னு சிறுத்தை ஒண்ணு வந்துடுச்சு. வியட்நாம்ல காட்ல ஷூட்ல இருந்தப்ப கரடியை பார்த்திருக்காங்க. ‘நம்மளை நம்பி வந்திருக்காங்க. ரொம்ப ஜாக்கிரதையா ஹேண்டில் பண்ணணும்’னு ஒவ்வொரு நாளும் கடவுள்கிட்ட பிரார்த்தனை பண்ணிட்டுதான் ஷூட்டிங் கிளம்புபேன். அந்த காட்டு நாட்களை இப்ப நினைச்சாலும் சிலிர்ப்பா இருக்கு. ஆமாம், இதில் காடு ஒரு கேரக்டராவே இருக்கும். படம் முடியும்போது, ‘ச்சே இங்க நாம வாழலையே’னு இந்தக் காட்டை மிஸ் பண்ற ஃபீல் உங்களுக்கு வரும்’’ ‘வனமகன்’ ரிலீஸ் பரபரப்பிலும் உற்சாகமாகப் பேசுகிறார் இயக்குநர் விஜய். 

‘‘படம் ஆரம்பிச்சதும் கிட்டத்தட்ட நாலரை மாசம் தீவிரமான ஆராய்ச்சினு சொல்லலாம். உலகத்துல இருக்கிற எல்லா காடுகள், அங்கிருக்கிற பழங்குடியின மக்கள், அவங்களோட வாழ்க்கை, உணவு முறைனு இப்ப கேட்டாலும் டீடெயிலா என்னால சொல்ல முடியும். அவங்ளோட ஒப்பிடும்போது நாம வாழ்ந்துட்டு இருக்கிறது பொய்யான வாழ்க்கைனு தெரியுது. அவங்க அன்னைக்கு என்ன தேவையோ அதுக்கு மட்டும்தான் உழைக்கிறாங்க. கஷடப்படுறாங்க. அடுத்தநாளுக்காக சேர்த்து வைக்கிறதே கிடையாது. நாம எல்லாருமே நாளைக்காக மட்டுமே ஓடிட்டு இருக்கோம். இதுதான் அவங்களுக்கும் நமக்குமான வித்தியாசம்.’’

‘‘வனமகன்’ என்ன கதை?’’

‘‘அந்தமான் பழங்குடி இளைஞன் ஒருவன் அங்கு சுற்றுலாவுக்கு வந்திருக்கும் பெண்ணுடன் எதிர்பாரா விதமாக சென்னைக்கு வந்துவிடுகிறான். அதற்கு முன் நகரத்தை பார்த்திராத அவன் இங்கு எதிர்கொள்ளும் விஷயங்களும், அவன் மீண்டும் அந்தமானுக்கு சென்றானா இல்லையா என்பதும்தான் கதை. முழுக்க முழுக்க நகைச்சுவை, ஆக்ஷன், லவ், த்ரில்லர் எல்லாம் கலந்த கலவை. என்னைப்பொருத்தவரை ஒரு நல்ல விஷயத்தை கமர்ஷியல் ஃபார்மட்ல சொல்லும்போது அது இன்னும் ரீச் ஆகும். கசப்பு மருந்து கொடுக்கும்போது கொஞ்சம் ஸ்வீட் கொடுப்பாங்கள்ல, ‘வனமகன்’ அப்படியான முயற்சிதான்.’’

‘‘ஹீரோ ஜெயம் ரவி என்ன சொல்கிறார்?’’

‘‘2003ல் அவர் ‘ஜெயம்’ முடிச்சதுக்குப்பிறகு அவர்ட்ட போனேன். ஆனா, இப்ப 2017ல்தான் அந்த வாய்ப்பு கிடைச்சிருக்கு. அப்ப இது 14 வருட கனவுனு சொல்லலாம். இந்த ப்ராஜெக்ட் தொடங்கும்போது எங்களுக்குள், ‘இதை எப்படி அச்சீவ் பண்ணப்போறோம்’ங்கிற மிகப்பெரிய மிரட்சி. ஒரு ஹீரோ கன்வின்ஸ் ஆனாதான் இந்தப் படத்தை பண்ண முடியும். உடம்பு இளைக்கிறது, மெருகேத்துறது, கேரக்டரை புரிஞ்சுகிட்டு ரியாக்ட் பண்றதுனு ஒவ்வொரு கட்டத்திலும் ஜெயம் ரவி சாரின் சப்போர்ட், இன்வால்வ்மென்ட் என்னை மிரள வெச்சுது. அவர் இல்லைனா இந்த ‘வனமகன்’ இல்லை.’’

‘‘அறிமுக ஹீரோயின் சாயிஷாவை எப்படி பிடிச்சீங்க?’’

‘‘ஒருநல்ல கதை அதுக்கு தேவையான விஷயங்களை தானா தேடிக்கும்’னு சொல்வாங்க. எப்படி ‘மதராசபட்டின’த்துக்கு ஏமி ஜாக்சனும், ‘தெய்வத்திருமகள்’க்கு சாராவும், ‘இது என்ன மாய’த்துக்கு ‘கீர்த்தி சுரேஷும் அமைஞ்சாங்களோ அப்படி ‘வனமகன்’க்கு சாயிஷா அமைஞ்சிருக்காங்க. ஷாகிரா பானு, திலீப் குமாரின் பேத்தி. இந்தியில ‘ஷிவானி’, தெலுங்கில் ‘அகில்’னு படங்கள் பண்ணியிருக்காங்க. 19 வயது ஆகுது. நடிப்பு, டான்ஸ், தமிழுக்கு டியூஷன் போகுறதுங்கிற மிகப்பெரிய உழைப்பு... இதையெல்லாம் தாண்டி, மிகச்சிறந்த பெண். பிரபுதேவா சார் கோரியோகிராஃப் பண்ணின ஒரு பாட்டு. நம்ம ஹீரோயின்கள்ல டான்சர்னா சிம்ரன் மேடம், இப்ப தமன்னாவை சொல்றோம். சாயிஷாவையும் அந்த லிஸ்ட்ல சொல்லுவீங்க. (தன் செல்போனில் அந்தப்பாடல் காட்சிகளை ஓடவிடுகிறார்.) ‘நீங்க எப்படி அமைஞ்சீங்கன்னே எனக்குத் தெரியலை. இந்தப்படத்துக்காக பொறந்தது மாதிரி இருக்கீங்க’னு சொன்னேன். யெஸ், சாயிஷாவுக்கு தமிழ்ல தனி இடம் காத்திருக்கு. ஐசரி கணேசனின் அக்கா மகன் வருண் பிரகாஷ்ராஜ் சாரின் மகனா வர்றார்.. ‘ஒருநாள் இரவில்’, ‘போகன்’ பண்ணினார். அவருக்கு இந்தப்படத்தில் மிகமிக முக்கியமான கதாபாத்திரம். ஒரு ரஃப் அண்ட் டஃப் அதிகாரி கேரக்டருக்கு என் நண்பரும் ‘டோனி அண்டு கை’ சலூன்களின் உரிமையாளருமான சாம் பால் என்பவரை அறிமுகப்படுத்துறேன்.’’

‘‘சீனியர் ஒளிப்பதிவாளர் திருக்கூட சேர்ந்திருக்கீங்க. என்ன பண்ணியிருக்கார்?’’

‘‘திரு சார், 10 வருஷம் கழிச்சு திரும்ப அவர்கூட சேர்ந்திருக்கேன். ஆமாம், நான் ப்ரியதர்ஷன் சார்ட்ட ஒர்க் பண்ணும்போது அவரின் படங்களுக்கு வரிசையா திரு சார்தான் ஒளிப்பதிவு. ‘ஒளிப்பதிவுன்னா என்ன’ங்கிற என் அடிப்படை அறிவே திரு சார் மூலமாதான் எனக்கு வந்துச்சு. ஃப்ரேம்ஸ் எப்படி ஃபிக்ஸ் பண்றாங்கனு அவர்ட்டதான் கத்துகிட்டேன். அப்படிப்பார்த்தால் திரு சார் என் ஒளிப்பதிவு குரு. என் பல படங்களுக்கு அவர்ட்ட கேட்டிருக்கேன். அப்பல்லாம் அவர் பிஸியா இருந்தார். இந்தப்படம்தான் எங்களுக்கு சரியா அமைஞ்சுது. ஃப்ரேம்ஸை பெயின்ட் பண்ணியிருக்கார்னு சொல்லலாம். காமெடி, ஆக்ஷன் இது எல்லாத்தையும் தாண்டி இதில் அழகான எமோஷன்ஸ் இருக்கு. அதை அவ்வளவு அழகா கேப்சர் பண்ணியிருக்கார். இதோ ‘24’ படத்தில் அவரின் உழைப்புக்கு தேசிய விருது கிடைச்சிருக்கு. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.’’

‘‘உங்கப் படங்களுக்கு பாடல்கள் பெரிய பலமா இருக்கும். இதில் ஹாரிஸ் ஜெயராஜ். இசை எப்படி இருக்கும்?’’

‘‘ஹாரிஸ் சார்கூட இதுக்கு முன்ன நான் படம் பண்ணினது இல்லை. ஆனாலும் ‘ஹாரிஸ் ஆன் தி எட்ஜ்’னு கோவை, துபாய், சென்னை, மலேசியாவுல நடந்த அவரோட கான்சர்ட் எல்லாத்தையுமே நான்தான் டைரக்ட் பண்ணினேன். அப்ப இருந்தே நாங்க க்ளோஸ். ‘படம் பண்ணணும்’னு பேசிட்டே இருப்போம். இந்தப்படத்தின் கதை சொன்னதுமே கமிட்டாகிட்டார். ஏற்கெனவே எல்லாப் பாடல்களையும் ஷூட் பண்ணிட்டோம். பாடல்களாவும், பின்னணி இசையாவும் இந்தப்படத்துக்கு ஹாரிஸ் சார் மிகப்பெரிய பில்லர்.’’

‘‘காடுதான் கதை. ரியல் லொகேஷ்ன்கள். அப்படி இருக்கையில் ஜெயஸ்ரீ லட்சுமிநாராயணன் என்ற பெண் ஆர்ட் டைரக்டரை அறிமுகப்படுத்துறீங்க. என்ன ஸ்பெஷல்?’’

‘‘ஒரு பெண் கலை இயக்குநர் தமிழ் சினிமாவுக்கு ரொம்ப வருஷம் கழிச்சு கிடைச்சிருக்காங்க. ஜெயஸ்ரீ மலையாளத்துல ‘சார்லி’ பண்ணினவங்க. ஆழ்ந்த அறிவுள்ள தமிழ்ப்பெண். அவங்க படத்துக்கு மிகப்பெரிய பலம். காட்டுக்குள்ள செட் போடணும். ஆனா செட் மாதிரி தெரியாம ரொம்ப லைவா இருக்கணும். பழமையான செட் அமைக்க சாபு சிரில் சார் மாதிரியான டாப் டெக்னீஷியன்ஸ்தான் மிகச்சிறப்பா பண்ணுவாங்க. அந்த குவாலிட்டியை, அந்த ஃபினிஷிங்கை ஜெயஸ்ரீ கொண்டு வந்திருக்காங்க. அடுத்து செல்வா மாஸ்டர். இதில் இரண்டாவது பாதி முழுக்க ஆக்ஷன்தான். அவர்ட்ட, ‘வாங்க வாங்க, 2வது பாதிக்கு நீங்கதான் டைரக்டர்’னு சொல்லுவேன். இரண்டாவது பாதி தொடங்கின 10வது நிமிஷத்துல க்ளைமாக்ஸ் ஆரம்பிச்சிடும். அதுக்கான சேஸ் ஃபைட் அப்படி பண்ணியிருக்கார். முக்கியமா ஒரு புலி வருது. வியட்நாம்ல அந்தப் புலியை பார்த்துட்டு வந்து ஷூட் பண்ணினோம். அது படத்துல முக்கியமான எபிசோட். புலிக்கும் ரவி சார்க்குமான ஃபைட் அவ்வளவு இயல்பா வந்திருக்கு. மலையாளத்துல ‘புலி முருகன்’ பண்ணின அதே டீம்தான் இந்த ஃபைட்டையும் பண்ணித்தந்தாங்க. சிஜி, அந்தப் புலியை கொண்டுவர்றது எல்லாம் அவ்வளவு கஷ்டமான விஷயம். அதை செல்மா மாஸ்டர் அவ்வளவு திறமையா பண்ணினார். இப்படி 2வது பாதியில் அவருக்கு நிறைய வேலை. எந்திரன்2 உட்பட நிறைய படங்கள் பண்ணிட்டு இருந்தாலும் நேரம் ஒதுக்கி அப்படியான ஃபைட் சீன்வென்ஸ் அமைச்சு இருக்கார்.’’

‘‘உங்களின் ஆஸ்தான இசையமைப்பாளர் ஜி.வி.ப்ரகாஷ் இன்னைக்கு பரபரப்பான நடிகர். என்ன சொல்றார்?’’

‘‘ஜி.வியும் நானும் பிரதர்ஸ் மாதிரிதான்.   நாங்க குடும்ப நண்பர்கள். இன்னைக்கு அவர் இத்தனை படங்கள்ல நடிச்சிட்டு இருக்கிறது ஒரு ஃப்ரெண்டா, சகோதரனா எனக்கு பெருமை. அவர்ட்ட மியூசிக்குக்காக கேட்கும்போது அவரால் எனக்கு டைம் கொடுக்க முடியலை. ‘தேவி’க்கும் ஆரம்பத்தில் அவர்தான் இருந்தார். ‘நீ வெளியில பண்ணு. என்னால டைம் அலாட் பண்ண முடியாதோனு பயமா இருக்கு’னு சொன்னார். ‘ஓ.கே எப்ப ஃப்ரீயா இருக்கீங்களோ அப்ப பண்ணிக்கலாம்’னு நாங்க இருவரும் சேர்ந்து பேசி எடுத்த முடிவுதான். ஆனா இன்னைக்கும் என் படத்துல ஒரு பாட்டு ரெடியாச்சுன்னா முதல்ல அவர்தான் பார்ப்பார். அவரோட ஃபர்ஸ்ட் லுக்னா முதல்ல நான் பார்ப்பேன். அந்த லைனை ரொம்ப அழகா மெயின்டைன் பண்ணிட்டு இருக்கோம். நாங்க எத்தனை படங்கள் பண்ணுவோம்னு தெரியாது. ஆனா ஜி.வி.கிற நண்பன், சைந்தவிங்கிற சகோதரி என் லைஃப் ஃபுல்லா டிராவல் ஆவாங்க. ஆனாலும் ஒரு இசையமைப்பாளரா அவரை மிஸ் பண்றேன். ஏன்னா மிட்நைட்கூட எழுப்பி அவர்ட்ட சந்தேகம் கேட்பேன். மத்த இசையமைப்பாளரும் அந்த உரிமையை கொடுத்திருந்தாலும் அவர்ட்ட நான் அதிகபட்ச உரிமை எடுத்துப்பேன். யெஸ், ஐ மிஸ் ஹிம்.’’

‘‘உங்க ஹீரோயின் ஏமி ஜாக்சன் இன்னைக்கு ரஜினி சாரின் ஹீரோயின். இந்தளவுக்கு உயரம் தொடுவாங்கனு நினைச்சீங்களா?’’

‘‘‘மதராசப்பட்டினம்’ ஹீரோயின் தேடல்ல இருந்த சமயம். அப்ப ஒரு போட்டோ நெட்ல கிடைச்சது. விசாரிச்சா, ‘லண்டன்’னு சொன்னாங்க. ‘இந்தப்பொண்ணுதான் ஹீரோயின்’னு ஆர்யாட்ட சொல்லிட்டு தனி ஆளா லண்டன் கிளம்பிட்டேன். ஆனாலும் அவங்க கிடைக்கலை. பிறகு அங்கயே ஒரு ஆடிஷன் வெச்சிருந்தோம். ஆச்சர்யமான விஷயம் என்னன்னா அந்தப்பெண்ணே ஆடிஷனுக்கு வந்திருந்தாங்க. அப்ப அவங்க 11ம் வகுப்பு ஸ்டூடன்ட். ஸ்கூல் யூனிஃபார்ம்லதான் வந்திருந்தாங்க. அதுக்கு முன்னாடிவரை ஒரு போட்டோஷூட்கூட அவங்க பண்ணினது கிடையாது. விளம்பரம் எதுலயும் நடிக்கலை. அப்படியே ஃப்ரெஷ் அறிமுகம். ஆனா அந்தப்பெண்ணுக்குள் கூர்மையான அறிவு இருந்துச்சு. ஆடிஷன் நடந்த ஹோட்டலுக்கு வெளியில நிக்கவெச்சு முதன்முதல்ல அவங்ளை எடுத்த போட்டோக்கூட என்கிட்ட இன்னும் இருக்கு. அவங்களை அந்தப் படத்தில் கமிட் பண்ணவைக்க, ‘உங்கப்பொண்ணை எப்படியாவது இந்தியாவுக்கு கூட்டிட்டு வாங்க. கண்டிப்பா இந்தப்படம் நல்லா வரும். பிறகு உங்கப் பொண்ணு மிகப்பெரிய ஹீரோயினாகிடுவாங்க. இந்திப் படங்கள்லாம்கூட பண்ணலாம்’னு ஏகப்பட்ட பொய்களை சொன்னேன். 

அவங்க முதல்முறையா சென்னைக்கு வரும்போது நான்தான் ஏர்போர்ட் போய் அழைத்துவந்தேன். அந்த நாள் நல்லா ஞாபகம் இருக்கு. ஏர்போர்ட்ல இருந்து வெளியில் வர்றாங்க. அப்ப அங்க ஒரு மாடு நின்னுச்சு. ‘மாம் லுக் அட் கவ் ஆன் தி ரோட்’னு அவங்க அம்மாட்ட சொல்லி துள்ளிக்குதிச்சாங்க. ‘இப்ப கவ் பாக்குற. போகப்போக ரோட்ல இன்னும் என்னென்ன வரும்பாரு’னு சொன்னேன். நான் அன்னைக்கு பார்த்த அந்த ஏமிக்கும் இப்ப சமீபத்துல பார்க்குற ஏமிக்கும் எவ்வளவு வளர்ச்சி. ஒரு குழந்தை வளர்ந்து மெச்சூர்டாகி தன்னைதானே பார்த்துக்கொள்ளும் பருவம் வரும் இல்லையா, அப்படி ஒரு வளர்ச்சி. அந்தப் பொண்ணு இந்தளைவுக்கு சாதிச்சிருக்குன்னா... ப்யூர்லி அவங்களோட கடின உழைப்புதான். அந்த கிரெடிட் நான் அவங்களுக்குதான் கொடுத்தாகணும். உண்மையை சொல்லணும்னா, ‘பாலிவுட் படங்கள்லாம் நடிக்கலாம்’னு நான் பொய் சொல்லிதான் கூட்டிட்டு வந்தேன். ஆனா அதெல்லாம் இன்னைக்கு நடந்திருக்கு. எல்லாத்தையும்தாண்டி ஏமி தான் ஒரு சிறந்த நடிகைனு நிரூபிச்சதுல எங்களுக்கு மிகப்பெரிய பெருமை இருக்கு. ஷீ ஈஸ் கிரேட். நான் போன் பண்ணி, ‘தேவி’யில ஒரு கெஸ்ட் அப்பியரன்ஸ் இருக்கு. பிரபுதேவா சார் சாங். அதை பண்ண முடியுமானு கேட்டேன். ‘நீங்க எதுக்கு என்கிட்ட கேட்கறீங்க. நான் எப்ப வரணும்’னுதான் கேட்டாங்க. இவ்வளவு வளர்ந்தாலும் மறக்காம இருக்காங்கங்கிறதை அவங்க கேரக்டரை காட்டுது. அதுதான் நாம, நான் கத்துக்கவேண்டிய விஷயம்.’’

‘‘அதேபோல உங்களின் இன்னொரு அறிமுகம் கீர்த்தி சுரேஷும் பரபரப்பாயிட்டாங்களே?’’

‘‘‘இது என்ன மாயம்’ல கீர்த்திக்கு வெச்ச ஃபர்ஸ்ட் ஷாட் எனக்கு ஞாபகம் இருக்கு, அதை எடுத்துட்டு, ‘கீர்த்தி நிச்சயம் நீங்க சினிமாவுல பெரிய ஆளா வரப்போறீங்க’ன்னேன். ‘அப்படியா சார்’னு ஆச்சர்யமா கேட்டாங்க. ஷூட் பண்ணிட்டு இருக்கும்போது அப்பப்ப தட்டுக்கடையில கடலை வாங்கி சாப்பிடுவோம். ‘இப்பதான் இங்கெல்லாம் வரமுடியும் அடுத்த வருஷம் பெரிய ஹீரோயினாயிடுவீங்க’னு கிண்டல் பண்ணுவேன். ‘சார் இப்பதான் நடிக்கவே ஆரம்பிச்சிருக்கேன். அதுக்கெல்லாம் இன்னும் வருஷங்கள் இருக்கு’ன்னாங்க. ஆனா இன்னைக்கு பார்த்தீங்கன்னா கீர்த்தி மிகப்பெரிய வளர்ச்சி. அவஙக பண்ற படங்கள், அவங்களின் தேர்வு எனக்கு ரொம்ப பெருமையா இருக்கு. அதேபோல ‘தெய்வத் திருமகள்’ சாரா. இப்ப சமீபத்துல அவங்களை சந்திச்சேன். அப்ப, ‘விஜய் மாமா. இப்ப எனக்கு 11 வயசு. 5 வருஷத்துகுப்பிறகு உங்கக்கூட ஒரு படம் அசிஸ்டென்ட் டைரக்டரா ஒர்க் பண்ணுவேன். பிறகு நீங்க என்னை ஹீரோயினா லான்ச் பண்ணுவீங்க. அப்புறம் நான் பெரிய ஹீரோயினாகிடுவேன்’ன்னாங்க. அவங்க ஏற்கெனவே திட்டமிட்டுட்டாங்க. ஃபாசில் சார் ஷாலினி மேடமை குழந்தையா லான்ச் பண்ணி பிறகு எப்படி ஹீரோயினா லான்ச் பண்ணினாரோ அதேபோல சாராவை குழந்தையா லான்ச் பண்ணின நானே ஹீரோயினா லான்ச் பண்ணுவேன்னு நினைக்கிறேன்.’’

‘‘உங்க குரு ப்ரியதர்ஷன் இயக்கிய ‘சில சமயங்களில்’ படத்துக்கு தயாரிப்பாளர் நீங்க. அந்த அனுபவம் சொல்லுங்க?’’

‘‘ஒவ்வொருத்தருக்கும் வாழ்க்கையில ஒரு திருப்பு முனை வரும். அப்படி என் லைஃப்ல திருப்புமுனைனா நான் ப்ரியன் சார்ட்ட சேர்ந்த அந்தத் தருணம்தான். இன்னைக்கு நான் இங்க இருக்க ஒரே காரணம் அவர்மட்டும்தான். சின்னக்குழந்தையை கையப்பிடிச்சு கூட்டிட்டு போறமாதிரி ஒரு குருவாகவும் ஒரு தந்தையாகவும் இருந்து என்னை வழிநடத்துவவார். ‘சில சமயங்களில்’ படம் அவரோட 10 வருட கனவு. எனக்குத் தெரியும், இது, அமீர்கான் சார், அக்ஷன் குமார் சார் பண்றமாதிரி இருந்த படம். கடைசியில தமிழ்ல அதுவும் எங்களுக்கு அமையணும்ங்கிறது பெரிய வரம். சில படங்கள் வியாபார ரீதியா பண்ணுவோம். சில படங்களை மனசுல இருந்து பண்ணுவோம். அப்படி இது மனசுல இருந்து பண்ணின படம்.  இது, எயிட்ஸ் விழிப்பு உணர்வுக்கான ரெஃபரன்ஸ் படமா இருக்கும். எல்லா திரைப்பட விழாக்கள்லயும் படம் பார்ததவங்க எல்லாரும் சொன்னது, ‘இது ப்ரியதர்ஷன் சாரோட மாஸ்டர் பீஸ்’. கோல்டன் குளோப்ல படம் பார்த்துட்டு ஆடியன்ஸ் அப்ரிஷியேட் பண்ணினதைப் பார்த்துட்டு, ‘நம்மைவிட நம் படத்தை இவங்க நல்லா புரிஞ்சுக்கிறாங்க விஜய்’னு ப்ரியன் சார் சொன்னார். அடுத்த மாதம் ரிலீஸ் ப்ளான் பண்றோம். ‘நீங்க என்னவாகணும்’னு கேட்டீங்கன்னா, ‘அம்மா&அப்பாவுக்கு நல்ல மகனாவும் ப்ரியன் சார்க்கு கடைசிவரை நல்ல அசிஸ்டென்டாவும் இருக்கணும்’ என்பதுதான் என் ஒரே பதிலா இருக்கும்.’’

‘‘உங்கள்ட்ட இருந்து ‘தேவி’யை எதிர்பார்க்கவே இல்லை. பிரவுதேவா என்ன சொன்னார்?’’

‘‘ ‘தேவி’, 2011ல் எழுதின கதை. அப்ப தமிழ்ல பேய்ப் படங்கள் அதிகம் வரலை. ஆனா நாங்க பண்றதுக்குள்ள வரிசையா எல்லா பேய்களும் வந்திடுச்சு. ‘இதுக்கு மேலயும் இந்தப்படம் பண்ணணுமா’னு யோசிச்சோம். ‘ஆனாலும் புதுசா இருக்கும்’னு கதையின் மீது இருந்த நம்பிக்கையில் பண்ணினோம். பிரபுதேவா சார், மிகப்பெரிய என்டர்டெயினர். மும்பை புனேயில ஒரு சந்துக்குள்ள உள்ள ஒரு லொக்கேஷன்ல ஷூட் பண்ணினாக்கூட அவரைப்பார்க்க ஆயிரம் பேர் நிப்பாங்க. யெஸ், அவர் இண்டியா ஃபிகர். ஆனா அவர், ‘என்னங்க இவ்வளவு வருஷம் கழிச்சு நடிக்கிறோம். யாராவது தியேட்டருக்கு வந்து பாப்பாங்களா’ம்பார். தமிழ்நாடு, கேரளா, ஆந்திரானு ப்ரமோஷன் போகும்போது அவருக்காக மக்கள் காத்திருந்ததை அவர் புரிஞ்சுகிட்டார். ‘ஏங்க உண்மையிலேயே என்னை ஞாபகம் வெச்சிருக்காஙகளா?’னு கேட்டார். மிகச்சிறந்த மனிதர். இன்னைக்கு அவர் என் அண்ணன்மாதிரி ஆகிட்டார். தினமும் பேசுவோம். ‘விஜய் சொந்தப்படம் பண்றீங்க. ரொம்ப கவனமா பண்ணணும்’னு அவரோட வழிகாட்டுதல்  என்னைச் சுத்தி வந்துட்டே இருக்கும். ஒருநாள், ‘சார் இந்தப்படத்துல ஒரு பாட்டு இருக்கு. நீங்க கோரியோகிராப் பண்ண முடியுமா’னு கேட்டேன். யோசிக்கவே இல்லை, ‘ஓ.கே. பண்றேன்’னு சொல்லிட்டார். ‘ஒரே ஒருநாள் வந்துட்டு போகமாட்டாரா’னு பலரும் அவருக்காக காத்திருக்கிற சூழல்ல -  நம்ப மாட்டீங்க - 15 நாள் ரிகர்சல் பண்ணி, அந்தப்பாட்டை இரண்டே நாள்ல முடிச்சுக்கொடுத்தார். எந்த ஒரு விஷயமும என்கிட்ட எதிர்பார்க்காம ஒரு தம்பிக்கு எப்படி பண்ணுவாரோ அப்படி பண்ணினார். அதேபோல என் காலேஜ் சேர்மன் ஐசரி கணேசன் அங்கிள். இவங்களோட அசோஷியேஷன் கடவுளின் பரிசு. சில உறவுகள் நம் வாழ்க்கை முழுக்க வரும் இல்லையா, அப்படித்தான் இவங்களுடனான உறவு.’’ 

‘‘‘கிரீடம் முதல் ‘வனமகன்’ வரை.... இது சினிமாவில் உங்களுக்கு 10வது வருடம். எப்படி இருக்கு இந்த அனுபவம்?’’

‘‘10 வருடங்கள் 10 படங்கள். இது கடவுளின் பரிசு, பெற்றோரின் ஆசிர்வாதம். இந்த பயணத்தில் அஜித் சார், விஜய் சார், விக்ரம் சார், ஆர்யா, பிரபுதேவா சார், ஜெயம் ரவி சார்...னு நல்ல ஹீரோக்கள், நல்ல டெக்னீஷியன்கள், நல்ல மனிதர்களை சந்திச்சிருக்கேன். இவங்க மூலமா நிறைய கத்துக்கிட்டு இருக்கேன். அடுத்து, மக்கள். ‘இவர் இன்னமும் ஏதாவது கொடுப்பார்’னு அவங்க என் மீது வைத்துள்ள நம்பிக்கை. அதுதான் இந்த ரேஸ்ல என்னை தொடர்ந்து ஓடவெச்சிட்டு இருக்கு. ஆனா, ‘நீ பண்றது தப்பு; நீ வளரலை’னு என்னைக்கு எனக்கு தோணுதோ அப்ப இந்த இன்டஸ்ட்ரியை விட்டு விலகிக்குவேன். ஆனா அதுவரை ‘தமிழ் சினிமா பார்க்காததை என் படங்கள்ல கொண்டுவந்து சேர்க்கணும்’ங்கிற என் ஆசையும் பயிற்சியும் முயற்சியும் நிற்காது. தொடர்ந்து ஓடிட்டே இருப்பேன்.’’

- ம.கா.செந்தில்குமார்

அடுத்த கட்டுரைக்கு