Published:Updated:

“நிலநடுக்கத்திலும் நியூஸ் படித்தேன்!” - நியூஸ் 18 சரண்யா சர்ப்ரைஸ் பேட்டி! #Video

“நிலநடுக்கத்திலும் நியூஸ் படித்தேன்!” - நியூஸ் 18 சரண்யா சர்ப்ரைஸ் பேட்டி! #Video
“நிலநடுக்கத்திலும் நியூஸ் படித்தேன்!” - நியூஸ் 18 சரண்யா சர்ப்ரைஸ் பேட்டி! #Video

‘சமீபத்தில் கோயிலில் ஒரு பெண், ‘நான் எம்.பி.பி.எஸ் படிக்கிறேன். நியூஸ் ரீடர் ஆகணும்னு ஆசை. என்ன பண்ணணும்’னு கேட்டாங்க. ‘நான் டாக்டராகணும். அதுக்கு நான் என்ன பண்ணணும்’னு திருப்பி கேட்கணும்னு நினைச்சேன்.” இயல்பாகப் பேசுகிறார் ‘நியூஸ் 18’ சரண்யா.

“இது, ‘நியூஸ் ரீடர்’ என்ற வேலை வழக்கொழிந்து ‘நியூஸ் ஆங்கர்’ ஆக தரம் உயர்ந்துள்ள காலம். மிகப்பெரிய உழைப்பு இருந்தால் மட்டுமே தனித்த நியூஸ் ஆங்கரா நாம் அறியப்படுவோம். இது, எப்போது என்ன பிரேக்கிங் நியூஸ் வரும் என்று சொல்ல முடியாத காலம். அப்டேட் ஆகலைனா, லைவில் நாம் முட்டாளா பார்க்கப்படுவோம். இதில் நாம் மட்டுமில்லாம நாம் சார்ந்துள்ள சேனலின் மரியாதையும் அடங்கியிருக்கு. நீங்கள் நியூஸ் ஆங்கர் ஆகணும் என்றால், நிறைய வாசிங்க. அனைத்தையும் முழுமையா தெரிஞ்சுக்க முடியலைனாலும் எல்லாவற்றிலும் 5 சதவிகித புரிதலுடனாவது இருங்கள்.’’ தெளிவாக இருக்கிறார் ‘நியூஸ் 18’ சரண்யா. ‘கலைஞர்’, ‘ராஜ்’, ‘ஜீ தமிழ்’, ‘புதிய தலைமுறை’ என சேனல்கள் கடந்து தற்போது ‘நியூஸ் 18’ல் மையம் கொண்டு இருக்கிறார். தெளிவான தமிழில் இயல்பாக பேசுவது சரண்யா ஸ்பெஷல். 

“மீடியாவில் சேர்ந்த அனுபவம் பற்றி சொல்லுங்கள்?”

‘‘மீடியாவில் இது என் பத்தாவது வருடம். ரமேஷ் பிரபா சார் ஒரு நிகழ்ச்சிக்காக எத்திராஜ் காலேஜ் வந்தருந்தார். அப்ப அங்க நான் பி.காம் மாணவி. ‘‘ ‘கலைஞர் டிவி’னு ஒரு புது சேனல் தொடங்குறோம். நிகழ்ச்சித் தொகுப்பாளரா வர்றீங்களா’னு கேட்டார். அங்க ‘சுவையோ சுவை’னு ஒரு சமையல் நிகழ்ச்சியின் தொகுப்பாளர். 2 மாதம் கழித்து கட் பண்ணினால், ‘ராஜ் மியூசிக்’னு ஒரு சேனல் லான்ச் பண்ணப்போறோம். வர்றீங்களா’னு ராஜ் டிவி குரூப்பில் இருந்து அழைப்பு. அங்கேயும் குறுகிய காலம்தான். ‘ஜீ தமிழ்’ லான்ச் ஆனபோது நானும் அங்கு இருந்தேன். என் லான்ச் ராசி என்னை துரத்தியது. ‘புதிய தலைமுறை’ தொடங்கியதுபோது அங்கு சேர்ந்த நான், இப்போது ‘நியூஸ் 18 தமிழ்நாடு’ சேனலில் சீனியர் நியூஸ் ஆங்கர். இடையில் ஒரு தெலுங்கு படம், இரண்டு தமிழ்ப் படங்களில் ஹீரோயின்.’’

‘‘சேனல் அனுபவத்தில் மறக்கமுடியாத சம்பவம்?’’
 

‘‘ ‘புதிய தலைமுறை’ நேரலை அனுபவம். திடீர்னு கட்டடம் ஆடுற மாதிரி ஓர் உணர்வு. ‘எனக்கும் அப்படிதாம்மா இருந்துச்சு’ என்கிறார் கேமராமேன். ‘சென்னையில் லேசான நிலநடுக்கம் சரண்யா. அதை அப்படியே செய்தியா வாசிச்சிடுங்க’னு பிசிஆர்ல சொல்றாங்க. உள்ளுக்குள் பயம். ‘சென்னையில் லேசான நிலநடுக்கம் உணரப்பட்டது’னு வாசிக்கிறேன். அதுக்கான விஷுவலா, ‘இப்ப ஆடுச்சுல்ல’னு நான் லைவ்ல கேட்டதையே கட் பண்ணி ஒளிபரப்பினாங்க. அப்போது நான், கேமராமேன் உள்பட கட்டடத்தில் இருந்தது மூணு பேர் மட்டும்தான்.

அடுத்து 2012 லண்டன் ஒலிம்பிக்கை புதிய தலைமுறைக்காக ரிப்போர்ட் பண்ணின அனுபவம். ‘கம்பெனியில இருந்து லண்டன் அனுப்புறாங்க. ஸோ லக்கி’னு டாட்டா காட்டி அனுப்பினாங்க. நானும் ‘வாவ்’னு பெருமையா போனேன். ஆனால் ‘அது எவ்வளவு பெரிய வேலை’னு அங்க போனப்பிறகுதான் புரிஞ்சுது. அதை அங்க சம்மர் ஒலிம்பிக். ஆனால் நமக்கோ கைகால்களை நடுக்க வைக்கும் குளிர்கால ஒலிம்பிக். இந்தியா சார்பா அந்த ஒலிம்பிக்கில் ஆறு பேர் மெடல் அடிச்சு இருந்தாங்க. அத்தனை பேரிடமும் எக்ஸ்க்ளுசிவ் பேட்டி எடுக்கணும். கேட்டதுமே பேட்டி கொடுத்துடவும் மாட்டாங்க. ஏன்னா இந்தியாவல் இருந்து மட்டும் நூற்றுக்கணக்கான பத்திரிகையாளர்கள் வரிசையில் நிப்பாங்க. காத்திருக்கணும். அதுவும் ஆறு மணிநேரம் காத்திருந்து மேரிகோம்ட்ட பேட்டி வாங்கியது பெருமித தருணம்.’’

‘‘இந்த பயணத்தில் மனசுக்கு நெருக்கமான மனிதர்கள்?’’

‘‘நிறைய பேர்கள். குறிப்பாக குட்டி லேடி மேரிகோம். காத்திருந்து அவங்களை பார்த்ததும் ‘உயரம் குறைவு. ஆனால் எவ்வளவு பெரிய சாதனை’னு தோணுச்சு. அதை கேள்வியாவே கேட்டேன். ‘உயரம் பிரச்னையே இல்லை. நம் மனசு உயரமா இருக்கா என்பதுதான் முக்கியம்’னாங்க. ஒரு பெண்ணா, இந்தியனா நான் பெருமைப்பட்ட தருணம். அடுத்து சென்னை ராயபுரம்ல நிலத்தடி நீரொடு எரிபொள் கலந்த சம்பவம் பற்றி செய்தி சேகரிக்க சென்றிருந்தேன். அவ்வளவு துயரத்தில் உள்ள அந்த மக்களின் அன்பு மிகப்பெரியது. இதேபோல் வாடிவாசலை அடைத்துக்கொண்டு அமர்ந்து அலங்காநல்லூர் மக்கள் நடத்திய போராட்டம். அங்க இருந்து நேரலையில் பேசிட்டு இருக்கேன். அப்ப ஒரு அம்மா, ‘ஏம்ப்பா அந்தப்பொண்ணு காலையில இருந்து பேசிட்டே இருக்கு. உங்களுக்கு மனசாட்சியே இல்லையா? இவ்வளவு வேலை வாங்குறீங்களே?’னு கேமராமேனை திட்டிட்டு, ‘இந்தாமா போய் முகம் கழுவிட்டு வா. சாப்பிடலாம்’னு இரண்டு வாட்டர் பாக்கெட்டுகளை கையில் திணிச்சாங்க. ‘லைவ் போயிட்டு இருக்குமா’ன்னேன். ‘அப்படின்னா இப்பவே சாப்பிடு’னு சொல்லி சாப்பாடு பொட்டலத்தைப் பிரிச்சு ஊட்டிவிட ஆரம்பிச்சுட்டாங்க. அதேபோல என் சல்வார் காற்றில் பறப்பதை பார்த்துட்டு ஒரு பெண் ஓடிவந்து சேஃப்டி பின் போட்டு விட்டாங்க. நாளைக்கு அவங்க என்னை பார்க்கப்போறது இல்லை. ஆனால் அது எதையும் மனசுல வெச்சுக்காத அவங்களின் வெள்ளந்தியான அன்பு ரொம்ப பரிசுத்தமானவை.’’ 

‘‘மனசுக்கு நிறைவான பாராட்டுக்கள்...’’

‘‘ நல்லா தெளிவா தமிழ் பேசுறீங்க.’ இது பிரபலங்கள் முதல் சாதாரண பார்வையாளர்கள் வரை எல்லாரும் எனக்கு தரும் பொதுவான பாராட்டு. ஒருபக்கம் மகிழ்ச்சியா இருந்தாலும் தாய்மொழியை நல்லா பேசுறதுக்கு பாராட்டு வாங்குற அளவுக்குத்தான் நம் சமூகம் இருக்குனு நினைக்கும்போது வருத்தமா இருக்கும்.’’

‘‘வருத்தமான தருணங்கள்னா எதைச் சொல்லுவீங்க?’’

‘‘நிறைய. சமீபத்தில் மீனவர் பிரிட்ஜோ சுட்டுக்கொல்லப்பட்டதை கண்டிச்சு தங்கச்சிமட போராட்டத்துக்கு போயிருந்தோம். அப்ப மீனவ சமூக மக்களின் போராட்டமயமான வாழ்க்கை முறையைப் பார்த்து கலங்கினேன். எளிய வாழ்க்கை வாழ்வதே இவங்களுக்கு எவ்வளவு பெரிய போராட்டமா இருக்கு. ‘எங்கள் பக்கம் உள்ள நியாயத்தை ஏம்மா அரசாங்கங்கள் கேட்க தயங்குறாங்க’னு ஒரு அம்மா கேட்டாங்க. பலநேரங்களில் ஜேர்னலிஸ்ட்களுக்கு இதுபோன்ற கையறு நிலைதான். ‘இவர்களின் கோரிக்கைகளை கேட்காத அரசுகளிடம் தொடர்ந்து சொல்லிக்கொண்டு இருக்கிறோமே’ என்று ரொம்ப வருத்தமா இருந்துச்சு.’’

‘‘வேறு என்னமாதிரியான விஷயங்களில் ஆர்வம்?’’

‘‘கார்ப்பரேட் செக்ரட்டரிஷிப், ப்ராட்காஸ்ட்னு படிச்சிருந்தாலும் எனக்கு சோறுபோடுவது தமிழ்தான். சிறு வயதில் முதல் தொடரும் வாசிப்புதான் இதற்கு காரணம். ‘பொன்னியின் செல்வன்’, ‘பார்த்திபன் கனவு’ தொடங்கி இன்றைய நவீன இலக்கியம் வரை நேரம் கிடைக்கும்போது வாசிக்கிறேன். இப்ப வாசிக்கிறது, சில ஆண்டுகளுக்கு முன் வந்த ஜோடி குரூஸின் ‘கொற்கை’. கடலும் கடல் சார்ந்த மனிதர்களையும் பற்றிய பதிவு. அடுத்து, ‘காடு’ காத்திருக்கு. ஒரு குறிப்பிட்ட இடைவெளியில் அடிக்கடி வாசிப்பது, ‘வானம் வசப்படும்’. ஃப்ரெஞ்ச் ஆளுகையில் பாண்டிச்சேரி எப்படி இருந்தது என்பதைப்பற்றிய குறுக்குவெட்டு தோற்றம்தான் இந்த புத்தகம். இந்தமாதிரியான புத்தகங்களைப் படிக்கும்போதுதான் சமூகம் குறித்த தெளிவான பார்வை கிடைக்கும்னு நினைக்கிறேன். எனக்கு ஆர்கானிக் ஃபார்மிங் குறித்த புரிதல் இருக்கு. அதுக்கு பசுமை விகடன் ஒரு முக்கியமான காரணம். ‘நம் கையால் நாமளே வளர்க்கும் ஆர்கானிக் காய்கறிளை சாப்பிடணும். நோய்நொடி இல்லாமல் வாழ்ந்து மறையணும்’னு ஆசை.’’

‘‘உங்களுக்குப் பிடிச்ச நியூஸ் ஆங்கர்கள் யார்யார்?’’


‘‘பர்கா தத். இது வழக்கமான பதிலா இருக்கலாம். ஆனால் அர்னாப் போன்றோர் இருக்கும் ஃபீல்டுல பர்கா தத் மாதிரியான ஒரு பெண் தன் இருப்பை பதிவு செய்தது மிகப்பெரிய வெற்றி. திறமை, அனுபவத்தின் அடிப்படையில் நிறைய பேரை லிஸ்ட் போடலாம். அதில் குறிப்பிட்டு சொல்லக்கூடியவர் குணசேகரன் சார். அவர் தலைமையில் வேலை செய்கிறேன் என்பதற்காக மட்டும் இதை சொல்லலை. அரசியல் விவாதங்கள் எவ்வளவு சூடா இருந்தாலும் முகத்தை அவ்வளவு பிளசண்டா வெச்சுகிட்டு பேசுவார். பதட்டமடையாமல் ஜென் மனநிலையில் இருப்பார். அந்த தன்மை பலர்ட்ட இல்லைனு நினைக்கிறேன். யெஸ், கேப்டன் கூல்.’’


- ம.கா.செந்தில்குமார்,
படங்கள்: கே.ராஜசேகரன்

அடுத்த கட்டுரைக்கு