Published:Updated:

பன்னீர்செல்வம்... பழைய பன்னீர்செல்வம்... ஜோஸப் குருவிலா... விஜய்குமார்! #1YearofTheri

தார்மிக் லீ
பன்னீர்செல்வம்... பழைய பன்னீர்செல்வம்... ஜோஸப் குருவிலா... விஜய்குமார்! #1YearofTheri
பன்னீர்செல்வம்... பழைய பன்னீர்செல்வம்... ஜோஸப் குருவிலா... விஜய்குமார்! #1YearofTheri

ணிரத்னம் கதை, திரைக்கதை எழுதி... அவரே தயாரித்து, சுபாஷ் இயக்கிய 1990-ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் 'சத்ரியன்'. 90-களில் வெளியான எவர்க்ரீன் மூவீஸ் லிஸ்ட்டில் இந்தப் படத்திற்கு முக்கிய இடமுண்டு. அதே சாயலில் வந்த காரணமா என்று தெரியவில்லை... அட்லீ இயக்கி விஜய் நடிப்பில் வெளிவந்த 'தெறி' படத்திலும், இந்தத் தலைமுறைக்கு சூட் ஆகக்கூடிய அனைத்து அம்சங்களும் பொருந்தியிருந்தது. இன்றோடு இந்தப் படம் வெளிவந்து ஓராண்டு நிறைவு பெற்று, இரண்டாவது ஆண்டு தொடங்குகிறது. அதற்காகதான் இந்த சிறப்புப் பதிவு!

ஏ.சி.பி. பன்னீர் செல்வம் என்றழைப்படும் 'சத்ரியன்' ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரி. 'அண்ணாச்சி' என்ற ஒரு டெட்லி வில்லன் படத்தின் ஆரம்பத்திலேயே ஜெயிலில் இருப்பார். ஊரில் மட்டுமல்லாது போலீஸ் மத்தியிலேயே 'யார் இவரை அரெஸ்ட் பண்ணியது?' என்று பரவலாகப் பேசப்படும் சமயத்தில், ஹீரோ விஜயகாந்தின் என்ட்ரி. சராசரியான குடும்பத் தலைவன் என்னென்ன செய்வாரோ... அதை மிகவும் எளிமையாக செய்து கொண்டிருப்பார் ஹீரோ சத்ரியன். அப்படியே இப்போது 'தெறி' படத்திற்கு வருவோம்... தனது பெண் குழந்தை மேல் சேறை வாரி அடித்து சென்றுவிடும் கார்காரனை சேஸ் பண்ணி 'இதெல்லாம் தப்பு... இது மாதிரியெல்லாம் பண்ணக்கூடாது'னு சொல்லும் ஜோஸப் குருவிலாவின் என்ட்ரி. 

கேப்டனுக்கும், பானுப்பிரியாவிற்கும் ஆரம்பத்தில் இருந்தே சண்டையும் சச்சரவுமாக திரைக்கதை நகர்ந்து கொண்டிருக்கும். முக்கியமான நேரத்தில் வில்லனைப் பற்றிய சில துருப்புகள் பானுவிடம் சிக்கும். அதையறிந்த வில்லன் கும்பல் இவரை கொல்லத் திட்டமிடுவார்கள். இந்த நிலையை ஹீரோவிடம் எடுத்துச் சொன்னால், அவரோ அதை விளையாட்டாக எடுத்துக்கொள்வார். பின் கொஞ்சம் கொஞ்சமாக சத்ரியனின் மகன், மகளோடு நெருக்கமாவார் பானு. அதன் பின் நியூஸ் பேப்பரில் வில்லனின் போட்டோவைப் பார்த்த பானு போலீஸிடம் கம்ப்ளெயின்ட் பண்ணப் போவார். பின் அங்கு நடக்கும் பிரச்னைகளை சமாளித்து எஸ்கேப் ஆகிவிடுவார் பானு. சின்னச் சின்ன குறும்புத் தனம்... பாட்டு... காமெடி என்று படம் மெதுவாக கதைக்குள் செல்லும். கம்ப்ளெயின்ட் செய்யப்போன அதே இன்ஸ்பெக்டர் சத்ரியனைப் பார்த்து மறுபடியும் போலீஸில் சேருமாறு வலியுறுத்துவார். ஆனால் கேப்டனோ அதை மறுத்துவிடுவார். இதையெல்லாம் பார்த்த பிறகுதான் இவர் போலீஸ் என்ற உண்மையே பானுவிற்கு தெரியவரும்.

இவர் அந்த வாய்ப்பை மறுத்ததைப் பார்த்த பானு, போலீஸுக்கான முக்கியத்துவத்தை கேப்டனிடம் காரசாரமாக விவரிப்பார். அப்போதுதான் ஃப்ளாஷ்பேக் ஆரம்பம் ஆகும். அப்படியே தெறி பக்கம் வருவோம்... நிவியின் க்ளாஸ் டீச்சராக இன்ட்ரோ ஆவார் ஆனி (ஏமி ஜாக்சன்). வகுப்புக்குத் தாமதமாக வருவதாலும், நிவி சின்னச்சின்ன சேட்டைகள் செய்வதாலும், டீச்சர் ஆனிக்கும் நிவிக்கும் இடையே ஏழாம் பொருத்தமாக இருக்கும். பின் ஒருகட்டத்தில் விஜய் சொல்லை மீறி ரவுடிகள் மீது புகார் தருவார் ஆனி. அதைத் துளிகூட விரும்பாத ஜோஸப், கம்ப்ளெயின்டை வாபஸ் வாங்கப் போவார். அங்கிருக்கும் போலீஸ் இவரை அடையாளம் கண்டு 'விஜய் குமார்' என்றழைக்க... கதை சுவாரசியமாக சூடுபிடிக்கத் தொடங்கிவிடும். டவுட்டான ஆனி வீட்டிற்கு சென்று கூகுளில் விஜய் குமார் என்று தட்டிப் பார்க்கிறார். விஜய்யை போலீஸ் கெட்அப்பில் பார்த்த ஆனி ஷாக் ஆகி உடனே அவரைப் பார்க்க கிளம்புகிறார். அங்கு சிலரோடு சண்டையிடுவதைப் பார்த்து மேலும் அதிகமாக ஷாக் ஆகிறார் ஆனி. பின் இந்தப் பக்கம் ஃப்ளாஷ்பேக் ஆரம்பம்... ரெண்டு பக்கமும் இன்டெர்வல் பாஸ்! போய் தெம்பா ஒரு ஜுஸ் குடிச்சிட்டு மீதியைப் படிக்க வாங்க!

சிறு வயதிலேயே தன் குடும்பத்தைக் கொன்றவர்களை பழி வாங்கி சிறுவர் சீர்திருந்த பள்ளியில் சேர்கிறார் சத்ரியன். மீதமுள்ள மூன்று பேரை பழி வாங்கத் துடிக்கும் சத்ரியனை நல் வழிப்படுத்தி போலீஸ் ஆசையைக் காட்டுகிறார் விஜய்குமார். அதை யோசித்துப் பார்த்த அந்த சிறுவன் வருடங்கள் சென்ற பின் போலீஸ் கெட்அப்பில் தீம் மியூஸிக்கை போட்டு களத்தில் இறங்குகிறார். தப்பு செய்பவர்களுக்கு தன் வழியில் தண்டனை கொடுக்கிறார் சத்ரியன். பின் ஜெயா (ரேவதி) மீது காதல் கொண்டு அவரைத் திருமணம் செய்து இவர்களுக்கு இரண்டு குழந்தைகளும் பிறக்கிறது. பிறகு முக்கியமான வழக்கில் மெயின் வில்லனான அண்ணாச்சியை அரெஸ்ட் செய்கிறார் சத்ரியன். ஆனால் சட்டத்திலிருக்கும் ஓட்டையை வைத்து தப்பித்து, தன்னை பழி வாங்கத் துடிக்கும் சத்ரியனின் மனைவி ஜெயாவை அண்ணாச்சி கொன்றுவிடுகிறார். பின் போலீஸ் துறையிலிருந்து மொத்தமாக விலகி தன் குழந்தையை நல்ல முறையில் வளர்க்கும் வேலையில் இறங்குகிறார் சத்ரியன். இப்போ வாங்க பாஸ் தெறி பக்கம் போவோம். இந்தப் பக்கம் போலீஸ் மீதுள்ள ஈர்ப்பினால் படித்து போலீஸ் ஆகிறார் விஜய்குமார். அவரைச் சுற்றி நடக்கும் தப்புகளைத் தட்டிக்கேட்டு சராசரி போலீஸாக செயல்படுகிறார் விஜய். பின் ஒரு பக்கம் பெண் ஒருவர் கற்பழித்து கொலை செய்யப்படும் வழக்கில் கடுப்பான விஜய்குமார்... மெயின் வில்லனின் மகனைக் கொன்றுவிடுகிறார். நடுவில் மித்ரா மீது காதல் கொண்டு கரம் பிடிக்கும் முயற்சியில் வெற்றி பெற்ற விஜய், அவரையே கல்யாணமும் செய்கிறார். தன் மகனை கொன்ற விஜய்யை பழி வாங்கத் தடிக்கும் வானமாமலைக்கு தக்க தருணம் வந்த வேலையில் குடும்பத்தோடு சேர்த்து அவரது அம்மா மற்றும் அவரது மனைவி மித்ராவையும் கொன்றுவிடுகிறார் வில்லன். அதிர்ஷ்ட வசமாக அவரது மகளை மட்டும் காப்பாற்றிய விஜய், போலீஸ் வேலையை விட்டுவிட்டு கேரளாவில் போய் செட்டில் ஆகிவிடுகிறார். க்ளைமாக்ஸுக்கு போவோம் பாஸ் வாங்க!

தண்டனைக் காலம் முடிந்து வெளியே வருகிறார் அண்ணாச்சி. அதையறிந்த சத்ரியன் மறுபடியும் போலீஸ் வேலையில் களமிறங்க வேண்டும் என நினைக்கிறார். துப்பாக்கி சூட்டில் நடக்கும் ட்ரெயினிங்கில் சுடத் தவறிவிடும் சத்ரியன் சிறிது நாள் தன்னைத் தானே தயார் செய்துகொண்டு மீண்டும் போலீஸ் வேலையில் இறங்கி யூனிஃபார்மில் கெத்து காட்டுகிறார். பின் வழக்கமான ரிவெஞ்ச் ஸ்டோரிதான். தன் மனைவியைக் கொன்றதற்காக அண்ணாச்சியை பழி வாங்கிவிடுகிறார் சத்ரியன். அந்தப் பக்கம் வானமாமலைக்கு விஜய்யின் இருப்பிடம் தெரிந்ததும், குடைச்சல் கொடுக்கிறார். அதை சகிக்க முடியாத விஜய்குமார் மறுபடியும் போலீஸ் வேலையில் களமிறங்குகிறார். அதற்கும் இதற்கும் சின்ன வித்தியாசம்... இதில் அன்டர்கவராக வில்லன் கும்பலை கொஞ்சம் கொஞ்சமாக பழி வாங்குகிறார் விஜய். இதிலேயும் வழக்கமான ரிவெஞ்ச் ஸ்டோரியாக முடிவில் தன் அம்மா, மனைவியை கொன்றதற்காக வானமாமலையை பழி வாங்கிவிடுகிறார். 

சத்ரியனில்  அடக்கி வாசிக்கும் பன்னீர்செல்வமாகவும்,  திமிறி எழுந்து பன்னீர்செல்வமாகவும் விஜயகாந்த் காட்டிய கெத்தை ஜோஸப் குருவிலாவாகவும், விஜய்குமாராகவும் விஜய் கொஞ்சமும் குறையாமல் தெறியில் காட்டியிருந்தார். ஆனால் அருமைநாயகமாக திலகனின் கதாபாத்திரத்துக்கு இயக்குநர் சுபாஷ் கொடுத்த அழுத்தம், வானமாமலையாக மகேந்திரனின் கதாபாத்திரத்திற்கு அட்லீ கொடுக்கவில்லை என்று சொல்லலாம்.

எப்படியோ அந்தப் படத்தை ஞாபகப்படுத்தியதற்காகவும், வெற்றிகரமான திரில்லராக தெறியை கொடுத்தமைக்காகவும் தெறிக்கு எனது வாழ்த்துகள்!

- தார்மிக் லீ