Published:Updated:

‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி? - 'சிவலிங்கா' விமர்சனம்

விகடன் விமர்சனக்குழு
‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி? -  'சிவலிங்கா' விமர்சனம்
‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி? - 'சிவலிங்கா' விமர்சனம்

‘சின்ன கபாலி’ ராகவா லாரன்ஸ், 'காஞ்சனா' ஆவி கூட்டணி எப்படி? - 'சிவலிங்கா' விமர்சனம்

எத்தனை ஆவிகள் வந்தாலும், உடம்புக்குள் அட்மிட் செய்து நடிப்பதில் கெட்டிக்காரரான ராகவா லாரன்ஸின் மீண்டும் ஒரு ஹாரர் த்ரில்லர் படம் ‘சிவலிங்கா’. 

ரயில் தண்டவாளத்தில் இறந்த நிலையில் கிடக்கிறார் சக்தி. அது கொலையா தற்கொலையா என்று கண்டுபிடிக்கும் சிபிசிஐடி போலீஸ் தான் மொட்ட சிவா....  (ஐய்யோ.. அது போன படம்ல....) ஸாரி.. சிவலிங்கேஸ்வரன். இந்த விசாரணையில் கொலையாளியைக் கண்டுபிடிக்க ஒரு புறாவும், கொலை செய்யப்பட்டவரின் ஆவியுமே நேரடியாக வந்து உதவுகிறது. இதற்கு நடுவே ரித்திகாவிற்கு ஏன் பேய் பிடிக்கிறது,  அந்த புறாவுக்கும் இந்த கொலைக்கும் என்ன சம்பந்தம், கொலையாளி யார் என்ற முடிச்சுகளையெல்லாம் சிஐடி ராகவா லாரன்ஸ் கண்டுபிடித்தாரா என்பதைச்சொல்லும் படம்தான் சிவசிவசிவ‘சிவலிங்கா’...!

ராகவா லாரன்ஸின் ஆடின காலும், பேய் புகுந்த உடம்பும் சும்மா இருக்காது போல. அறிமுக பாடலான ‘சின்ன கபாலி’ பாடலில் தொடங்கி ரெமான்டிக் பாடல்கள் வரையிலும் நடனத்தில் இவர் மட்டுமே தனித்துத் தெரிகிறார். ‘மொட்ட சிவா கெட்ட சிவா’ படத்தில் ‘மக்கள் சூப்பர் ஸ்டாராக’ ஒளிர்ந்தவர், இந்தப் படத்தில் ‘கபாலி’ பட போஸ்டர் பின்னணியில் ‘சின்ன கபாலி’ பாடலுக்கு நடனமாடி மிரட்டுகிறார். ’தலைவனுக்கு பாம்புன்னா பயம், எனக்கு பேய்ன்னா படம்’ என்று ரஜினி ரெஃபரன்ஸில் ரசிகர்களைக் கவர்கிறார்.  

‘நான் சிபிசிஐடி போலீஸூன்னு எங்க அம்மாவைத் தவிர யாருக்குமே தெரியாது’னு மனைவி ரித்திகாவிடம் ரகசியமாக சொல்கிறார் ராகவா லாரன்ஸ். ஆனால் படத்தில் வரும் அனைத்துக் கேரக்டரிடமும் ‘நான் சிஐடி போலீஸ்’ என ஐடி கார்டை நீட்டுகிறார். மாமனார் ஜெயபிரகாஷூக்கு மட்டும் க்ளைமேஸில் தான் தெரிகிறது. ‘உங்க கிட்ட உண்மையை மறைச்சிருக்க கூடாது’னு, ஃபீலிங் வேறு. அட ஏன் ப்ரோ...? 

பாக்ஸர், டிவி ஆங்கர் ரித்திகா இதில் ஆர்பாட்டமில்லாத ஹவுஸ் வொய்ஃப். ஆர்பாட்டமில்லை என்றாலும் ஆட்டம் ஆட முயற்சித்திருக்கிறார்.  சந்திரமுகி ஜோதிகாவை சில இடங்களில் எக்ஸ்ப்ரஷன்களில் நினைவூட்டுகிறார்.  நடனத்திலும், நடிப்பிலும் ராகவா ஸ்கோர் செய்துவிடுவதால் ரித்திகா நடிப்பு எடுபடவில்லை. பீடி பிடித்துக்கொண்டே ராகவா லாரன்ஸை மிரட்டும் காட்சிகள், பேயாக மாறும் இடங்களில் நடிப்பை உள்வாங்கி நடித்தவிதம் என சில இடங்களில் தெரிகிறார் ரித்திகா.

‘யூஸ் மி’ என்ற ஒற்றை வசனத்துடன் படம் முழுவதும் சுற்றிவருகிறார் வடிவேலு. நடிப்பில் ஆசம் என்றாலும் காமெடியில்.. கம்பேக் என்று சொல்ல முடியவில்லை. ஆனாலும் உடல்மொழி அவருக்குக் கைகொடுக்க, சில இடங்களில் சிரிக்கவைக்கிறார். பேய்க்கு பயப்படும் இடம் மற்றும் ராகவாவுடனான காமெடி ட்ராக் என்று அனைத்துமே அதே பழைய காமெடிகள். திரும்ப வந்தது ஹேப்பி வடிவேலுண்ணே.. ஆனா திரும்ப பழைய காமெடியோட வராம, புது காமெடியோட வாங்கண்ணே!  

ஊர்வசி, பானுப்பிரியா, சந்தானபாரதி, ராதாரவி, மதுவந்தி, என்று நிறைய கேரக்டர்கள் படத்தில் நிறைந்து இருக்கிறார்கள். படத்திற்கு எற்ற நடிப்பையும் கச்சிதமாக கொடுத்திருக்கிறார்கள்.

இடையிடையே ஃப்ளாஷ்பேக் காட்சிகளில் வந்தாலும், ரஹீம் கேரக்டரில் அப்படியே ஒன்றுகிறார் சக்தி. தன்னை கொன்றது யார் என்று தேடும் ஆவலும், பேயாக மிரட்டும் இடத்திலும் கச்சிதம். தந்தையின் படம் என்றாலும் கேரக்டர் ரோலில் அசத்தியதற்காகவே பாராட்டுகள் சக்திவாசுதேவன். 

குற்றவாளியைக் கண்டுபிடிக்க வழக்கில் சம்பந்தப் பட்டவர்களை அழைத்துவந்து, பேய் முன்னாடியே பேச்சுவார்த்தை நடத்தும் க்ளைமேக்ஸ் காட்சிகள், சந்திரமுகி க்ளைமேக்ஸில் ரஜினி நடத்திய சைக்கலாஜிக்கல் ட்ரீட்மென்டை நினைவுபடுத்துகிறது. இருந்தாலும் காட்சி அமைத்த விதத்தில் பக்கா. ஆனால் அசால்டாக ஆவியை ராகவா லாரன்ஸ் உடலில் வாங்கிகொள்வது மட்டும்... ‘வந்துட்டா காஞ்சனா... விடமாட்டா காஞ்சனா’... மொமென்ட்! 

ஒரு புறா குற்றவாளியைக் கண்டுபிடிக்க உதவுவது என்ற லைன் நச் என்றாலும் அதை செயல்படுத்திய விதத்தில் இன்னும் வித்தையைக் காட்டியிருக்லாம். படம் முழுவதும் வரும் தெலுங்கு, கன்னட படங்களின் சாயலை இயக்குநர் தவிர்த்திருக்கலாம். பேய்க்காக விசாரணை நடத்துவது, அதற்கு அந்த பேயே வந்து உதவி செய்வது, புறா காட்சிகள், ரித்திகாவிற்கு பேய் ஓட்டும் காட்சிகள், ராகவாவின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி என பல சுவாரஸ்யமான காட்சிகள் சிதறிக்கிடக்கிறது. சில இடங்களில் மட்டுமே சோர்வாக்கினாலும் நிச்சயம் விறுவிறுப்பான  த்ரில்லர் படம் தான் சிவலிங்கா. 

எஸ்.எஸ்.தமன் தொடர்ந்து தெலுங்கு படங்களில் இசையமைத்துவருவதால், பாடல்களிலும் தெலுங்கு வாசம். ‘ரங்குரக்கரா..’ பாடலும் ‘சிவலிங்கா..’ பாட்டுமே ரசிக்கவைக்கிறது. ஹாரர் படம் என்பதை பின்னணி இசை சில இடங்களில் நினைவுபடுத்தி பயமூட்டுகிறது.  சர்வேஸ் முரளியின் ஒளிப்பதிவும், சுரேஷ் அர்ஸின் படத்தொகுப்பும் படத்திற்கு ப்ளஸ்.   

தப்பான கண்ணோட்டத்தினாலும், எண்ணங்களாலும் எடுக்கும் முடிவு, நிச்சயம் மற்றவர்களைப் பாதிக்கும் என்ற ஒன்லைனை நச்சென பிடித்திருக்கும் இயக்குநர், திரைக்கதையில் நிறைய கதாபாத்திரங்களை நுழைய விட்டு குழப்பாமல், தெளிவு படுத்தியிருக்கலாம். எதிர்பார்த்த க்ளைமேக்ஸ் என்றாலும் புதிதாக ஏதாவது காட்சிப்படுத்தியிருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.  

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில், பி.வாசு இயக்கத்தில் கடந்தவருடம் வெளியாகி 75 நாட்களுக்கு மேல் ஓடி  செம ஹிட்டான படம் ‘சிவலிங்கா’. கன்னடத்தில் எடுத்ததை அப்படியே தமிழிலும் ரீமேக் செய்திருக்கிறார் இயக்குநர் பி.வாசு. ஆனால் தமிழ் ஆடியன்ஸ் தொடர்ந்து பல வருடங்களாகப் பேய்ப்பட ஃபீவரிலேயே இருப்பதால், தமிழுக்கு ஏற்ற மாதிரி இன்னும் அப்டேட் செய்திருந்தால் நிச்சயம் சிவலிங்கா உச்சம் தொட்டிருக்கும். 

அடுத்த கட்டுரைக்கு