Published:Updated:

தனுஷ் மட்டுமில்லை இந்த தமிழ் ஹீரோக்களும் இயக்குநர்கள்தான்..!

ப.சூரியராஜ்
தனுஷ் மட்டுமில்லை இந்த தமிழ் ஹீரோக்களும் இயக்குநர்கள்தான்..!
தனுஷ் மட்டுமில்லை இந்த தமிழ் ஹீரோக்களும் இயக்குநர்கள்தான்..!

`பவர் பாண்டி' படத்தின் மூலம் இயக்குநராக புரொமோட் ஆகியிருக்கிறார் நடிகர், பொயட்டு தனுஷ். இவரை போலவே நடிகராய் இருந்து இயக்குநராய் புரொமோட் ஆகிய `கோலிவுட் நடிகர்கள் டூ இயக்குநர்கள்' லிஸ்ட் இதோ... கரகோசங்கள் எழுப்புங்கள் மக்களே...

எம்.ஜி.ஆர் :

அந்த காலத்தில் `மர்மயோகி', `மலைக்கள்ளன்', `மதுரை வீரன்' என தொடர்ந்து ஹிட்களாக கொடுத்து வந்த எம்.ஜி.ஆர்., அடுத்ததாக ஒரு படம் தயாரித்து அதில் தானே நடிக்க விரும்பினார். ஆர்.எம்.வீரப்பன், வித்வான் வி.லக்‌ஷமணன் மற்றும் எஸ்.கே.டி.சாமி ஆகியோரை அழைத்து படத்திற்கான கதையையும் உருவாக்க சொன்னார். `தி ப்ரைசனர்ஸ் ஆஃப் ஸென்டா' எனும் நாவல் மற்றும் `விவா ஸபாடா' எனும் ஆங்கிலப்படத்தின் கதைகளை ஆங்காங்கே பட்டி டிங்கரிங் பார்த்து நம் ஊருக்கேற்றார் போல் `நாடோடி மன்னன்' படத்திற்கான கதையை உருவாக்கினார்கள். முதலில் இந்த படத்தை கே.ராம்நாத் இயக்குவதாகத்தான் இருந்தது. பின்னர், துருதிர்ஷ்டவசமாக அவர் உயிரிழந்ததால் எம்.ஜி.ஆரே இயக்குநர் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.  1958 ஆம் ஆண்டு வெளியான அந்த திரைப்படம், தொடர்ந்து 250 நாட்கள் ஓடி ப்ளாக்பஸ்டர் ஹிட் ஆனது. மேலும், `அதிக வசூல் செய்த தமிழ்த்திரைப்படம்' என்ற சாதனையையும் படைத்தது. வாத்தியார் வாத்தியார் தான்...

கமல் :

சகலகலா வல்லவரான கமல், நிறைய படங்களுக்கு எழுத்தாளராகவும், தயாரிப்பாளராகவும் பணியாற்றியிருக்கிறார். `தேவர் மகன்', `மகாநதி', `மைக்கேல் மதன காமராஜன்' போன்ற பல க்ளாஸிக் படங்கள் அவர் எழுத்துக்களில் விளைந்தவை தான். ஆனால், கமல் முதன்முதலில் இயக்குநரானது கோலிவுட்டில் அல்ல பாலிவுட்டில்.  நம் ஊரில் அவர் நடித்து ஹிட் அடித்த `அவ்வை சண்முகி' படத்தை `சாச்சி 420' என்ற பெயரில் ரீமேக்கினார் கமல். ( அவ்வை சண்முகியே ஹாலிவுட் படத்தின் காப்பி தான் ). `சாச்சி 420'  படத்திற்கு ஓரளவு நல்ல பெயர் கிடைத்து, பாக்ஸ் ஆபிஸில் `ஹிட்' ஆனது. 

விஜயகாந்த் :

`விருதகிரி' படத்தின் மூலம் இயக்குநர் அவதாரம் எடுத்தார் கேப்டன் விஜயகாந்த். `டேக்கன்' எனும் அதிரிபுதிரி ஹிட் அடித்த பிரெஞ்சு ஆக்‌ஷன் திரைப்படத்தின் டிவிடியை தேயத்தேய பார்த்து அதை அப்பட்டமாக காப்பி அடித்திருந்தார் நம் கேப்டன். 2010 ஆம் ஆண்டின் இறுதியில் ரிலீஸான இந்த படம் பாக்ஸ் ஆஃபிஸில் படுத்த படுக்கையானது. விருதகிரி வருத்தகிரி ஆனது...

சரத்குமார் :

சரத்குமார் நடிப்பில் வெளியான 100வது திரைப்படம் `தலைமகன்'. இயக்குநர் சேரன் திரைக்கதை அமைத்த இந்த திரைப்படத்தை இயக்கியது நம்ம சுப்ரீம் ஸ்டார், புரட்சி திலகம் சரத்குமாரேதான். நயன்தாரா, வடிவேலு, விஜயக்குமார், குஷ்பு என நிறைய நட்சத்திரங்கள் நடித்த இந்த படத்தை `காட்டு மொக்கை' என கலாய்த்து தள்ளினர் விமர்சகர்கள். தலைமகனே கலங்காதே...

சத்யராஜ்

எடிசன், மீனாட்சி சுந்தர சாஸ்திரியார், மற்றும் பூ என மூன்று வேடங்களில் சத்யராஜ் கலக்கிய திரைப்படம் `வில்லாதி வில்லன்'. அவர் முதலும் கடைசியுமாக இயக்கிய இந்த திரைப்படம்தான் அவரது நடிப்பில் வெளியான 125வது திரைப்படமும் கூட. ராதிகா, நக்மா, விசித்ரா, சில்க் ஸ்மிதா ( ஹீ...) , கவுண்டமணி, மணிவண்ணன் என பல நட்சத்திரங்கள் நடித்த இந்த திரைப்படம் பாக்ஸ் ஆஃபிஸில் தாறுமாறு ஹிட் அடித்தது. குறிப்பாக, நக்மாவின் ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். 

பிரபுதேவா :

இந்தியன் மைக்கேல் ஜாக்சன் பிரபுதேவா இயக்கிய முதல் திரைப்படம் `நுவ்வொஸ்தானன்டே நேனொடன்டானா' எனும் தெலுங்கு திரைப்படம். சித்தார்த் மற்றும் த்ரிஷா இணைந்து நடித்த இந்த சூப்பர் டூப்பர் ஹிட் திரைப்படம்தான் தமிழில் `சம்திங் சம்திங்' என ரீமேக் ஆனது. அந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் தெலுங்கிலேயே `பௌர்ணமி' எனும் படத்தை இயக்கினார் பிரபுதேவா. அந்த படம் பப்படம் ஆக, அதன் பிறகே, `போக்கிரி' மூலம் தமிழ் சினிமாவில் இயக்குநராக மாஸ் என்ட்ரி கொடுத்தார். 

சிம்பு :

`யங் சூப்பர் ஸ்டார்' எஸ்.டி.ஆர் இயக்கிய திரைப்படம் `வல்லவன்'. யுவன் சங்கர் ராஜாவின் இசை, நயன்தாரா, ரீமா சென்னின் கிளாமர், சந்தானத்தின் காமெடி ஆகியவை அப்போதைய இளைஞர்களை வெகுவாக ஈர்த்தது. விளைவு, பாக்ஸ் ஆஃபிஸிலும் நல்ல வசூல். `லூஸு பெண்ணே...' பாடல் தான் அப்போது பலபேரது ரிங்டோன்.

நாசர் :

தமிழ் சினிமாவுக்கு கிடைத்த ஆகச்சிறந்த நடிகர்களில் ஒருவர் நாசர். `அவதாரம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான நாசர், தொடர்ந்து `தேவதை', `மாயன்' ஆகிய படங்களை கோலிவுட்டிற்கு தந்தார். மலையாளத்திலும் `பாப்கார்ன்' எனும் திரைப்படத்தை இயக்கியுள்ளார். பெரும்பாலான இசை ரசிகர்களின் ஆல்டைம் ஃபேவரைட் பாடலான `தென்றல் வந்து தீண்டும் போது...' பாடல் இவர் இயக்கிய `அவதாரம்' படத்தில் இடம்பெற்றதே.

இவர்களை போன்று பிரகாஷ் ராஜ், `சின்ன கபாலி'  ராகவா லாரன்ஸ், சுஹாசினி, ஶ்ரீப்ரியா மற்றும் ரேவதி ஆகியோரும் நடிகராக இருந்து இயக்குநராக மாறியவர்களே.

-ப.சூரியராஜ்