Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

By clicking Allow you accept ours Privacy Policy and Terms

வித்யா பாலன், திரிஷா, அதிதி ராவ்.. இவங்களுக்கு டப்பிங் பேசிய கிருத்திகா யார் தெரியுமா?

கிருத்திகா நெல்சன். தமிழ் சினிமாவின் புதிய வாரிசு. இன்னார் மகள், இன்னார் மனைவி என்ற அடையாளங்கள் தாண்டி.. தனக்கென ஓர் அடையாளம் பெற்றிருக்கிறார் இப்போது. டப்பிங் ஆர்ட்டிஸ்ட். அவர் யார் என்பதைப் பின்னால் பார்ப்போம்.  டப்பிங் ஆர்ட்டிஸ்டாக அவர் மாறியது எப்படி மற்றும் அவரது  டப்பிங் அனுபவங்களை அவர் சொல்லக் கேட்போம்;   

 ''எலெக்ட்ரானிக் மீடியா படிச்சேன். அப்புறம் ரேடியோ, டி.வி.னு சில வருடங்கள் வேலை. இப்போ பெங்களூர்ல முன்னணி மீடியா ஏஜென்சியில கன்டென்ட் ஹெட்டா இருக்கேன். ‘கோ’ படத்துல பியாவுக்கு டப்பிங் பேச எந்த வாய்ஸும் செட் ஆகலை. ‘நான் பேசட்டுமா’னு  விளையாட்டா கேட்டேன். 'ட்ரை பண்ணிப் பார்'னு சொன்னாங்க. என் வாய்ஸ் பியாவுக்கு ஓகே ஆயிடுச்சு. அடுத்தடுத்து 'உருமி' (வித்யா பாலன்), 'ஆதிபகவன்' (நீது சந்திரா), 'கடல்' (துளசி), 'ஒருநாள் கூத்து' (மியா ஜார்ஜ்), 'என்னை அறிந்தால்', 'அரண்மனை 2', 'நாயகி' (த்ரிஷா), தொடர்ந்து 'காற்று வெளியிடை' வரைக்கும் வந்திருக்கு...'' என்றவர், தொடர்கிறார்.

கிருத்திகா நெல்சன்

''மணி சார் கூட வொர்க் பண்ணணும்ங்கிறது எல்லாரோட கனவா இருக்கும். எப்போதும் ஒரு ஸ்மைலோட சிம்பிளா இருப்பார். நல்லா பண்ணிட்டோம்னா மனசார பாராட்டுவார். 'கடல்' படத்துல ஒரு சீன்ல நான் குரல்ல சரியா எமோஷன்ஸ் காட்டலை. டேக் மேல டேக் போயிட்டிருந்தது. மணி சார் எதிர்பார்த்த எமோஷன்ஸ் வரலை. அவர் டப்பிங் ரூமுக்குள்ள வந்து, 'ஏன் என்னாச்சு... என்னவோ தயக்கத்தோட இருக்கியே... நீ குரலால நடிக்கணும். கை கால்களை ஆட்டணும். குதிக்கணும்... அதுல சத்தம் வருமேனு எல்லாம் கவலைப்படாதே. அது சவுண்ட் இன்ஜினியர் பிரச்னை. எதிர்பார்த்த எமோஷன்ஸ் வர்றதுக்கு என்னவெல்லாம் முடியுமோ அத்தனையும் நீ பண்ணு'னு சொன்னார். அந்தக் கணம் எனக்குள்ள எல்லாமே மாறினது. டப்பிங் என்பது வெறுமனே குரல் கொடுக்கிறது மட்டுமில்லை. நானும் நடிக்கணும்னு உணர வெச்சார் மணி சார். அன்னைக்கு அவர் பக்கத்துல உட்கார்ந்து டீ குடிச்சேன். அந்த நிமிஷத்தை என்னால மறக்கவே முடியாது. அது ஒருமாதிரியான சிலிர்ப்பு. அந்த சிலிர்ப்பே இன்னும் அடங்கலை. அதுக்குள்ள மணி சாரோட அடுத்த படத்துக்கு அழைப்பு. அதுதான், 'காற்று வெளியிடை' வாய்ப்பு.'' என்றவர், அந்த அனுபவங்களைப் பகிர்ந்துகொண்டார்.

'' 'காற்று வெளியிடை' படத்துல ஹீரோயின் அதிதி ராவுக்கு டப்பிங் பேசினேன். 'நாங்க சில குரல்களை ட்ரை பண்ணினோம். எதுவுமே திருப்தியா இல்லை... நீங்க வந்து பேசுங்க'னு சொன்னாங்க. வந்தேன். பேசினேன். மணி சார் உடனே ஓகே பண்ணிட்டார்.  என்னால அவங்க கூப்பிட்டபோதெல்லாம் வந்து பேச முடியாம இருந்திருக்கு. ஆனாலும் எனக்காக அட்ஜஸ்ட் பண்ணினாங்க. படத்துல 'நான் ஏன் திரும்பத் திரும்ப உன்கிட்ட வரேன்'னு அதிதி, கார்த்திகிட்ட கேட்கற மாதிரி ஒரு சீன் வரும். பார்க்கிறவங்களுக்குத்தான் அது வெறும் சீன். டப்பிங் பேசினபோது அந்தக் காட்சியில அவங்க ரெண்டுபேருக்கும் இடையிலான அந்தக் காதல்ல இருந்த வலியை நான் உணர்ந்தேன். எனக்கு அது ரொம்பவே ஸ்பெஷலான சீனும்கூட. ரொம்ப முக்கியமான காட்சிகளுக்கு மட்டும் மணி சார் டப்பிங்கின் போது இருப்பார். இந்த சீன்லயும் இருந்தார். அழுகையில ஆரம்பிச்சு, கோபத்துக்குள்ள போய், ஹெல்ப்லெஸ்னெஸ்ல முடிஞ்சு, விரக்திக்குப் போற மாதிரி ஏகப்பட்ட உணர்ச்சிகளை உள்ளடக்கின சீன் அது. அத்தனை எமோஷன்ஸையும் காட்டிப் பேச வேண்டியிருந்தது. அந்த சீன் பேசி முடிச்சபோது எனக்கு கண்ணீர் வந்திருச்சு. அந்த சீன்ல நான் நல்லா பேசியிருக்கேன்னு மணி சார் பாராட்டினதும் மறக்க முடியாதது.

கிருத்திகாநான் சாதாரணமா பேசுற குரலுக்கும் டப்பிங் பேசுற குரலுக்கும் நிறைய வித்தியாசம் இருக்குனு என் ஃப்ரெண்ட்ஸ் எல்லாம் சொல்வாங்க. குறிப்பிட்ட ஒரு கேரக்டருக்கு டப்பிங் பேசும்போது அவங்களோட பாடிலாங்குவேஜூக்கு நம்மளை அறியாமலே போயிடுவோம். அதிதியோட வாய்ஸ் ரொம்ப ஸ்வீட்டா இருக்கும். பிரமாதமான பாடகி. அவங்களோட குரலோட மேட்ச் பண்ற சேலஞ்ச் எனக்கு இருந்தது. ரெண்டு, மூணு சீன்ல அவங்க பாடியிருப்பாங்க. அங்கெங்ல்லாம் நானும் பாடவேண்டியிருந்தது. பேசறது வேற... பாடறது வேற...  எனக்கு சாங்ஸுக்கான டிராக்கையும் முதல் நாளே அனுப்பிட்டாங்க. நான் அதுவரைக்கும் பாட்டுக்கு டப்பிங் பண்ணினதில்லை. எனக்கும் சங்கீதம் தெரியும்ங்கிற அடிப்படையில அதிதியைத் திருப்திப்படுத்துற அளவுக்குப் பாடியிருக்கேன்னு நினைக்கிறேன்.'' அதிதி மாதிரியே அழகாகப் பேசுகிறவருக்கு, படத்தின் பல காட்சிகள் உலகம் மறக்கச் செய்தனவாம்.

''என் வேலை டப்பிங் பேசறது. ஆனா மணிசார் படத்துல கேமரா அழகு பத்திச் சொல்லவே வேண்டாம். ஒவ்வொரு சீனும் அவ்வளவு அழகா இருக்கும். ஒரு சீன்ல முழுக்க வெண்பனி மூடியிருக்கிற மாதிரியான ஒரு ஏரியா. கிட்டத்தட்ட 'ரோஜா' படத்தை ஞாபகப்படுத்தும். அதுல நிறைய டேக் வாங்கினேன். அந்தக் காட்சியோட அழகைப்  பார்த்துட்டு, என்னையே மறந்துட்டேன். டப்பிங் பேசறதையும் மறந்துட்டு அந்த இடத்தோட அழகுல மூழ்கிட்டேன். அதுலேருந்து வெளியில வந்து சுதாரிச்சுக்கிட்டுப் பேசறதுக்குள்ளே போதும் போதும்னு ஆயிடுச்சு...'' எனச் சிரிக்கிறார் கிருத்திகா.

கிருத்திகா நெல்சன்

''காற்று வெளியிடை' படம் பண்ணாமப் போயிருந்தேன்னா ரொம்ப வருத்தப்பட்டிருப்பேன். என் டப்பிங் கேரியர்லயே இது ரொம்ப ஸ்பெஷல் படம். மணிரத்னம் சார் மாதிரியான ஒருத்தர் ஒரு டப்பிங் ஆர்ட்டிஸ்ட் பெங்களூர்லேருந்து வந்து வாரா வாரம் பேசிட்டுப் போகறதுக்காக வெயிட் பண்ணணும்னு எந்த அவசியமும் இல்லை. அதையும் தாண்டி அவருக்கு என் திறமையில ஒரு நம்பிக்கை இருந்ததா நம்பறேன். அதே நேரம் தொடர்ந்து இதையே என் முழுநேர வேலையா எடுத்துக்கிற ஐடியா இப்போதைக்கு இல்லை. 

எனக்கு மீடியாவுல பெரிய கனவுகள் இருக்கு. ஆனா அதுக்கான சரியான வாய்ப்புகள் சென்னையில கிடைக்கலை. பெங்களூர்ல இப்போ நான் பார்த்துக்கிட்டு இருக்கிற வேலை ரொம்பப் பிடிச்சிருக்கு. எனக்கு எப்போதும் நாலஞ்சு விஷயங்கள் பண்ணிட்டிருக்கணும். பாடப் பிடிக்கும். டப்பிங் பேசுறேன். எழுதுறேன். 'யுகேலேலே'னு ஒரு இசைக்கருவி வாசிக்கக் கத்துக்கிட்டிருக்கேன்.'' ஸ்மைலியுடன் சைன் ஆஃப் செய்கிறார்.

சரி.. கிருத்திகா நெல்சன் யார்? இரட்டை எழுத்தாளர்கள் சுபா இணையில், சுரேஷின் மகள். 'ஒருநாள் கூத்து' இயக்குநர் நெல்சனின் காதல் மனைவி.  

 ​-​ ஆர்.வைதேகி

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

Advertisement