Published:Updated:

விவேகம்... அஜீத்தின் ‘உலகம் சுற்றும் வாலிபன்!’ - #VikatanExclusive

விவேகம்... அஜீத்தின் ‘உலகம் சுற்றும் வாலிபன்!’ -  #VikatanExclusive
விவேகம்... அஜீத்தின் ‘உலகம் சுற்றும் வாலிபன்!’ - #VikatanExclusive

‘‘‘எங்களுக்கு ஒரு படம் பண்ணுங்க’னு மூணு வருஷமா நாங்க அஜித் சாரைக் கேட்டுட்டிருந்தோம். ஒருநாள் அஜித் சாரிடம் இருந்து எங்களுக்கு ஒரு சர்ப்ரைஸ் அழைப்பு. ‘வேதாளம்’ படத்துக்கு அடுத்து அதே காம்பினேஷன்ல உங்க பேனருக்குப் படம் பண்றேன்’னு சொன்னார். அவ்வளவு சந்தோஷம். ஆடிப் பெருக்கு அன்னைக்கு பெல்கிரேடில் ‘அஜித்-57’ படப்பிடிப்பு தொடங்கிடுச்சு. ரசிகர்களுக்கு மிகப்பெரிய என்டர்டெயின்மென்ட் காத்திருக்கு’’ - இவை, ‘விவேகம்’ என்ற தலைப்பு முடிவு செய்வதற்கு முன்பே அதன் தயாரிப்பாளர் ‘சத்யஜோதி’ டி.ஜி.தியாகராஜன் விகடனுக்கு அளித்த பேட்டியில் சொன்னவை. 

ஆமாம், கடந்த ஆண்டு ஆடிப்பெருக்கு அன்று அதாவது 2016ம் ஆண்டு ஆகஸ்ட் 2ம் தேதி படப்பிடிப்பு தொடங்கப்பட்டது.  ‘விவேகம்’ படத்தை இந்த ஆண்டு ஆடிப்பெருக்கு சமயத்தில்  ரிலீஸ் செய்ய தயாராகி வருகிறது படக்குழு. இந்தப் பயணம் பற்றி படக்குழுவினரிடம் பேசினோம். 

• ‘விவேகம்’ படத்தின் வில்லன் பாலிவுட் பிரபலம், விவேக் ஓபராய். அஜித்துக்கு சரிசமமாக டஃப் கொடுத்து மிரட்டியிருக்கிறாராம். அஜித்தின் காதலியாக காஜல் அகர்வால். தவிர தமிழில் அறிமுகமாகும் அக்ஷரா ஹாசனுக்கும் முக்கியமான கேரக்டர். மேலும் தம்பி ராமையா, கருணாகரன், அப்புகுட்டி, ‘மொட்டை’ ராஜேந்திரன் உள்ளிட்ட நடிகர்களும் உள்ளனர். தவிர ஃபாரீன் ஆர்ட்டிஸ்ட்டுகளும் ‘விவேக’த்தில் உண்டு. 

• இயக்குநர் சிவா ஏற்கெனவே அஜித்தை இயக்கிய ’வீரம்’, ‘வேதாளம்’ போல் இல்லாமல் இது வேறு பேட்டர்னில் இருக்கும் படம். தமிழ்நாட்டில் ஒரு குற்றம் நடக்கும். அதைத் தோண்டித் துருவி விசாரிக்கும்போது, ஐரோப்பிய நாடுகள் உள்பட உலகத்தின் பல்வேறு பகுதிகளில் அது தொடர்பான விஷயங்கள் கிளை பரப்பியுள்ளது தெரியவரும். அதை விசாரித்து உண்மையைக் கண்டறியும் இன்டர்போல் அதிகாரிதான் அஜித். 

• ஆமாம், படப்பிடிப்பு தொடங்கிய கடந்த ஆகஸ்ட் 2ல் இருந்து படப்பிடிப்பு முடியும் வரும் மே 10ம் தேதிவரை மொத்த நாட்கள் 282. இதில் படப்பிடிப்பு நடந்த நாட்கள் மட்டுமே 147. இதில் 70 சதவிகிதப் படப்பிடிப்பு ஐரோப்பாவின் செர்பியா, பல்கேரியா, ஆஸ்திரியா, குரோஷியா ஆகிய நான்கு நாடுகளின் முக்கியான லொக்கேஷன்களில் நடந்துள்ளது. அதாவது 122 நாட்கள் ஃபாரின் ஷூட்டிங். 30 சதவிகிதம்தான் அதாவது வெறும் 25 நாட்கள் மட்டுமே சென்னை மற்றும் ஹைதராபாத்தில் ஷூட்டிங் நடந்துள்ளது. ஆமாம், ‘விவேகம்’ படத்தை அஜித்தின் `உலகம் சுற்றும் வாலிபன்’ என்றே சொல்லலாம்.

• பரபர ஆக்ஷன்தான் ‘விவேகம்’ ஸ்பெஷல். கண்டம்விட்டு கண்டம் பாயும் ஆக்ஷன் கதை என்பதால் அதற்கு ஈடுகொடுக்கும் உடல்வாகு முக்கியம் என்பதை இயக்குநர் சிவா கதை சொல்லும் சமயத்திலேயே அஜித் உணர்ந்துவிட்டார். ஆனால் ‘வேதாளம்’ பட ரிலீஸுக்குப் பிறகு முழங்கால், ஷோல்டரில் ஆபரேஷன் செய்ய வேண்டிய கட்டாயம் அவருக்கு. அந்த ஆபரேஷன்களுக்குப் பிறகு ஏழு மாத ஓய்வு. அதை ஓய்வு என்று சொல்லமுடியாது. ‘விவேகம்’ படத்துக்கான தயாரிப்பு என்றே சொல்லலாம். நாள் ஒன்றுக்கு ஐந்து முதல் ஆறு மணி நேரம் உடற்பயிற்சி, டயட் என முறுக்கேறிய உடலுடன் வந்துநின்ற அஜித்தைப் பார்த்து ‘விவேகம்’ யூனிட்டே வியந்து நின்றது. 

• படத்தின் இன்னொரு ஸ்பெஷல் இசை. அனிருத்தின் மெனக்கெடலை வியந்து பேசுகிறது யூனிட். 5 பாடல்கள், ஒரு தீம் பாடல் என படத்தில் மொத்தம் 6 பாடல்கள். வழக்கம்போல அஜித்துக்கான ஓப்பனிங் பாடல் இதிலும் பின்னுமாம். இதை பாடி இருப்பவர் பிரபல ராப் பாடகர் யோகி பி.ரசிகர்கள் எழுந்து ஆடும் அளவுக்கு ஃபாஸ்ட் பீட்டில் அடிபின்னி எடுத்திருக்கிறாராம் அனி. 2வது பாதியிலும் அப்படி ஒரு செம மாஸ் பாடல் உண்டாம். இந்த இரண்டு பாடல்களையும் ஃபாரினில் ஷூட் செய்யும்போது லோகேஷனில் இருந்த வெள்ளைக்காரர்களே அவர்களை அறியாமல் ஆடினார்களாம். ஒவ்வொரு சிங்கிளாக ரிலீஸ் செய்யலாம் என்பது பிளான். ஜூன் கடைசி வாரத்திலோ அல்லது ஜூலை முதல் வாரத்திலோ ஆடியோ ரிலீஸ் இருக்கலாம். முதல் சிங்கிள் ரிலீஸ் அமெரிக்கா, சிங்கப்பூர், மலேசியா... இந்த மூன்று நாடுகளில் ஏதாவது ஒன்றில் இருக்கலாம்.

அஜித்தின் பிறந்தநாளான மே மாதம் 1ம் தேதி படத்தின் டீசர் வெளியாவதாக வந்த தகவலில் பாதி சரி, பாதி தவறு. அன்று வெளியாவது படத்துக்கான டீசர் அல்ல, ஒரு பாடலுக்கான டீசர் மட்டுமே. ஆகஸ்ட் 3ம் தேதி இந்த ஆண்டுக்கான ஆடிப்பெருக்கு வருகிறது. அதற்கு அடுத்த வாரம் அதாவது ஆகஸ்ட் 10ம் தேதி ‘விவேகம்’ ரிலீஸ். 


- ம.கா.செந்தில்குமார்