Published:Updated:

'மீடியா நினைத்தால் அரசியல்வாதிகளை உருவாக்க முடியும்!' - இயக்குநர் கே.வி.ஆனந்த்

ரா.அருள் வளன் அரசு
'மீடியா நினைத்தால் அரசியல்வாதிகளை உருவாக்க முடியும்!' - இயக்குநர் கே.வி.ஆனந்த்
'மீடியா நினைத்தால் அரசியல்வாதிகளை உருவாக்க முடியும்!' - இயக்குநர் கே.வி.ஆனந்த்

'கவண்' திரைப்படத்தின் இயக்குநர் கே.வி.ஆனந்த், எழுத்தாளர்கள் சுபா (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) ஆகியோருடனான கலந்துரையாடல் நிகழ்வு, கடந்த 16-ம் தேதி சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கவிக்கோ மன்றத்தில் நடைபெற்றது. 'மாற்றத்திற்கான ஊடகவியலாளர்கள் மையம்' சார்பில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடல் கூட்டத்தில் நூற்றுக்கணக்கான செய்தியாளர்கள் கலந்துகொண்டு, பல்வேறு கேள்விகளை எழுப்பினர். செய்தியாளர்களின் பலவிதமான கேள்விகளுக்கு கே.வி.ஆனந்த் மற்றும் எழுத்தாளர்கள் சுபா பதிலளித்தனர். அந்த நிகழ்ச்சியின் தொகுப்பு இது.

" 'கவண்' அப்படினா?"

" 'கவண்' தூய தமிழ் சொல். பேச்சு வழக்கில் இது உண்டிக்கோல் என்று நம் ஊர்களில் சொல்லப்படுகிறது. இலக்கைக் குறிபார்த்து கல் எறியப் பயன்படுத்தப்படும் கருவி. எவ்வளவு தொலைவிலிருந்தாலும், சரியாக இலக்கைக் கணித்தால் ஒரு கை பார்க்கலாம் என்ற பொருளில் அந்தத் தலைப்பை வைத்தேன்.  ஒரு பிரபலமான டி.வி. சேனலை, ஒரு பிரபலம் இல்லாத டி.வி. சேனலும், செய்தியாளர்களும் எதிர்கொண்டு வெற்றி பெறுவதுதான் அது."

"நீங்கள் ஒரு ஊடகவியலாளர் என்பதால்தான் இந்தப் படமா?"

"இந்தப் படத்தில் நான் மட்டும் அல்ல, எழுத்தாளர்கள் சுபா, கபிலன் வைரமுத்து என மொத்தம் நான்கு ஊடகவியலாளர்கள் சேர்ந்து உருவாக்கியதுதான் இந்த 'கவண்'. நான்  'கல்கி' பத்திரிகையில் புகைப்படக் கலைஞராகவும், நிருபராகவும் இருந்தபோது பெரும்பாலும் என் புகைப்படங்கள்தான் அட்டையை அலங்கரிக்கும்.  அங்கேதான், எனக்கு எழுத்தாளர்கள் சுபாவுடன் நட்பு ஏற்பட்டது. அந்தப் புரிதல் இன்றுவரை தொடர்கிறது. இந்தக் கதை சமகாலத்தில் பிரதிபலிக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தோம், அதற்கு கபிலன் வைரமுத்துவின் பங்களிப்பு பெரிதும் உதவியது."

"மீடியா உலகத்தின் உண்மை நிலைக்கும், படத்தில் வரும் காட்சிகளுக்கும் இடையிலான இடைவெளி அதிகமாக இருக்கிறதே?"

" 'கவண்', ஒரு மாஸ் எண்டர்டெயின்மென்ட் படம். இன்றைய சமகாலச் சூழலுக்கு ஏற்ற படம். அதனால், வர்த்தக நோக்கில் சில காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளன. முக்கியமாக, 'இந்தப் படத்தில் வரும் காட்சிகளும், கதைகளும் கற்பனையே' என்றுதான் ஆரம்பத்தில் நாங்கள் சொல்லியிருக்கிறோம். மற்றவை ரசிகர்களின் புரிதலுக்கு விட்டுவிட்டோம்."

"டி.வி. நேரலையில், நெறியாளரே இல்லாமல் மிமிக்ரி மூலம் நிகழ்ச்சியை நடத்தும் அளவுக்குத் தொழில்நுட்பம் இன்னும் வளரவில்லை. அதை எப்படி நீங்கள் படமாக்கி மீடியா மீது பழி சுமத்தலாம்?

"தற்போதைய நவீன தொழில்நுட்பத்தில் இது சாத்தியம். இந்தத் தொழில்நுட்பம் அறிமுகமாகி சில ஆண்டுகள்தான் ஆகிறது. இந்தத் தொழில்நுட்பம் நீங்கள் பணியாற்றும் மீடியாவில், இல்லாமல் இருக்கலாம். ஆனால், உண்மையில் இருக்கிறது. நான் பார்த்திருக்கிறேன்.''

"மீடியா நினைத்தால் அரசியல் தலைவர்களை வளர்த்தெடுக்க முடியுமா?"

"ஏன் முடியாது? சமூக ஆர்வலர் அன்னா ஹசாரேவை அடையாளம் காட்டியது ஊடகம்தான். டெல்லிக்கு ஒரு முதலமைச்சரை உருவாக்கியதும் ஊடகம்தான். அமெரிக்கா போன்ற ஒரு வல்லரசு நாடு, ஈராக் மீது போர் தொடுப்பதற்கு முன் என்ன செய்தது என்பதைப் படத்திலேயே வசனமாக வைத்திருந்தோம்.”  

"திரைப்படத்தின் ஒரு குறிப்பிட்ட காட்சியில் இஸ்லாமியர்கள் தீவிரவாதிகள் போல் சித்தரிக்கப்பட்டிருப்பதும், இறுதியில் அவர்கள் நல்லவர்கள் என்று காட்டியிருப்பதும் ஏன்?

"நல்லவர்கள், கெட்டவர்கள் என்பது மதத்தை சார்ந்த விஷயம் அல்ல; மனிதர்களை சார்ந்த விஷயம். அதைதான் நான் காட்சிப்படுத்தியிருக்கிறேன்."

" 'கோ' படத்திலும், 'கவண்' படத்திலும் தமிழக அரசியல்வாதிகளுக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்பதுபோல் பதிவு செய்வது எந்த வகையில் நியாயம்?

"அப்படியா!?, இப்படி ஒரு பார்வை இருப்பது நீங்கள் சொல்லித்தான் எங்களுக்குத் தெரிகிறது. சரி விடுங்க, அடுத்தப்படத்துல, அரசியல்வாதி முழுக்க முழுக்க ஆங்கிலம் பேசுவதுபோல் காட்டிவிடுகிறேன்"  - சிரிக்கிறார்.

"மீடியாவின் இன்னொரு முகத்தைக் காட்டுவது போன்றுதான் படத்தில் காட்சிகள் இருக்கிறது. தமிழக ஊடகங்கள் அப்படித்தான் செயல்படுகிறதா? எந்த ஊடகம் அது??"

"தமிழக ஊடகம் உண்மையிலேயே அப்படித்தான் செயல்படுகிறதா என்று தெரியவில்லை. ஆனால், பலரும் பலவிதமாக பேசுகிறார்கள். ஆனால், கடந்த 1990 மற்றும் 1995 கால கட்டங்களிலேயே லண்டனில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி டி.வி. ரியாலிட்டி ஷோவில், வேண்டுமென்றே நிகழ்ச்சியில் பங்கேற்பவர்களை அழ வைத்த சம்பவங்கள் நடந்தது உண்டு. அதே நேரத்தில், சில நிகழ்ச்சியில் பொதுமக்களே ஓட்டுப்போட்டு வெற்றியாளரைத் தேர்ந்தெடுக்கலாம் என்று அறிவித்துவிட்டு, ஒரு குறிப்பிட்ட செல்போன் நம்பரைக் கொடுப்பதும், அதற்காக அந்த நிறுவனத்துடன் டீல் பேசிக்கொள்வதும் நடந்துள்ளது. அந்தச் செயலின் தாக்கத்தை, நான் படத்தில் பதிவு செய்துள்ளேன். மற்றபடி ஒன்றும் இல்லை." 

"நாயகி மடோனா செபாஸ்டின், இளம் பெண் நிருபர்களுக்கே உரிய ஆண் மிடுக்கோடு அழகாக அசத்தியிருக்கிறார். மீடியாவில் அவர் யாருடைய சாயல்??"

"ஏன் சார், ஏன் இப்படி? அழகான பொண்ணு, இயல்பா நடிச்சிருக்காங்க. போதுமா." - அதே சிரிப்பு. 

தொடர்ந்து பத்திரிகையாளர் கேள்விகளுக்கு  எழுத்தாளர்கள் சுபாவும் பதில் சொல்ல, சுவையாகச் சென்றது நிகழ்ச்சி.

- ரா.அருள் வளன் அரசு,

படங்கள்: தி.குமரகுருபரன்