Published:Updated:

"அரசியலுக்கு வரலாம்னு இருக்கேன்... ஆனா, ஒரு கண்டிஷன்!" - கஸ்தூரி

"அரசியலுக்கு வரலாம்னு இருக்கேன்... ஆனா, ஒரு கண்டிஷன்!" - கஸ்தூரி
"அரசியலுக்கு வரலாம்னு இருக்கேன்... ஆனா, ஒரு கண்டிஷன்!" - கஸ்தூரி

"அரசியலுக்கு வரலாம்னு இருக்கேன்... ஆனா, ஒரு கண்டிஷன்!" - கஸ்தூரி

தமிழகத்தில் கடந்த சில மாதங்களாகவே நடிகை கஸ்தூரி எது பேசினாலும் அது ட்ரெண்டாகி வைரல் ஆகிவிடுகிறது. சினிமாவில் உள்ள 'அட்ஜஸ்ட்மென்ட்' ஒரு வகையான டீலிங் என்றார், 'சினிமா நடிகர்கள் ஏன் அரசியலுக்கு வரக்கூடாது' என்று குரல் கொடுத்தார். இப்போது அவர் நம்மிடம் பேசிய விஷயமும் சர்ச்சைக்குத் திரி கிள்ளுகிறது.

"தமிழ்நாட்டுல இப்ப என்ன நடந்துகிட்டு இருக்குனே தெரியல. எதுவும் சொல்ற மாதிரி இல்ல. இத போதாதென்று, தமிழ்நாட்டைச் சுற்றி என்னனோமோ நடந்துகிட்டு இருக்கு. ஒரு சில சம்பவங்களைச் சொல்லியே ஆக வேண்டும். எதுவுமே இருக்கும்போது தெரியாது. போன பிறகுதான் அதன் அருமை தெரியும். எனக்கு அமெரிக்க என்.ஆர்.ஐ இருக்குது. அமெரிக்காவில் இருக்கும்போதெல்லாம் நம்ம ஊர் தமிழையும், இங்க உள்ள பழக்க வழக்கங்கள், உணவு முறைகள் இப்படி எல்லாவற்றையும் மிஸ் பண்றேனு பீல் பண்ணுவேன்.  சென்னைல இரண்டு நாளைக்கு முன்னாடி, ஃபிரண்ட்ஸ்சோட நுங்கம்பாக்கத்துல உள்ள ஒரு ரெஸ்டரண்டுக்கு சாப்பிடப் போனேன். அங்க உள்ள எல்லோருமே இந்திகாரங்க. யாருக்குமே இங்கிலீஷ், தமிழ் இரண்டுமே தெரியலை. எங்க டீம்ல எனக்கு மட்டும்தான் இந்தி தெரியும். சாப்பாடு ஆர்டர் பண்றதுல இருந்து, இந்தந்த உணவு... இப்படி இப்படி தான் வேண்டும் என்று ஆர்டர் பண்றது முதல், பில் கேட்பது வரை எல்லாமே இந்தியில்தான் கேட்க வேண்டியிருந்தது. என் காசுல நான் சாப்பிடுறதுக்கு, அங்க இருந்த ஒரு மணி நேரமும், நான் இந்தியில் பேச வேண்டிய நிர்பந்தம். 'நீங்கள்தான் சென்னைக்கு வந்து இத்தனை நாள் ஆச்சே, ஏன் இங்கிலீஷ்சும், தமிழும் கற்றுக்கொள்ளவில்லை' என்று கேட்டதற்கு, 'நான் ஏன் கற்றுக்கொள்ள வேண்டும்' என்று இந்தியில் திருப்பிக் கேட்கிறார்கள். வந்த கோபத்துக்கு டிப்ஸ் வைக்காமல், முறைத்துப் பார்த்துவிட்டு வந்துவிட்டேன்.

தமிழ்நாட்டில் ஏற்கெனவே பல பிரச்னைகள். இப்போ எரியுற நெருப்புல எண்ணெயை ஊற்றுவதுமாதிரி சாலையோர மைல் கல்லிலும்,  இந்தியைக் கொண்டு வர்றாங்க. கேட்டா, 'தமிழை எங்கே அழிச்சாங்க? ஆங்கிலத்தை அழித்துவிட்டுதானே, அதன் மீது இந்தியில் எழுதுறாங்க'னு இங்குள்ள சில அறிவு ஜீவிகளே சொல்றாங்க. வட மாநிலத்தில் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சுற்றுலா வருபவர்களை விட, வெளிநாடுகளில் இருந்து தமிழகத்துக்கு சுற்றுலா வருபவர்கள் நான்கு மடங்கு அதிகம். அப்படி வருபவர்கள் இங்கிலீஷ் மட்டும்தான் பேசுவார்கள். இனி இந்தியா சென்றால், இந்தி கற்றுக்கொண்டுதான் செல்ல வேண்டும் என்கிற நிர்பந்தம் வெளிநாட்டுச் சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இதனால், சுற்றுலாப் பயணிகளின் வருகை குறையும்; டுரிசம் பாதிக்கப்படும். இங்குள்ள வியாபாரம் எல்லாம் குறையும். இந்தி திணிக்குறதுக்கு உள்ளே இருக்கும் அரசியலை நம்ம ஆட்கள் யாருமே புரிஞ்சுக்கறது இல்லை. முதலில் நம்மைச் சுற்றி என்ன நடக்கிறது என்று நிமிர்ந்து பாருங்கள்.

தமிழ்நாட்டில் தமிழுக்கு மரியாதை இல்லைனா, வெளிநாட்டுல இருக்குற எங்களை மாதிரியான ஆளுங்களுக்கு ரொம்ப கஷ்டமா இருக்குது. தமிழ் சினிமாவில் வளர்ந்த நன்றி உணர்வுக்காக மட்டும் இதைப் பேசவில்லை. உண்மையில் தமிழர்களே தமிழின் பெருமை புரியாமல் இருப்பதுதான் எனக்கு வேதனையா இருக்குது. நம்மை, நாம் அறியாமல், தாய்மொழியை மதிக்காமல் இருப்பதன் விளைவுதான் தற்போது நடக்கும் அரசியல் அவலங்களுக்கு அடிப்படைக் காரணம். 'தமிழ்' 'தமிழ்' என்று பேசுபவர்கள்கூட அதை வைத்து அரசியல்தான் செய்கிறார்கள். இந்தி மொழிக்கு நான் எதிரி இல்லை. திணிப்புக்குதான் நான் எதிரி. இந்தியை ஏன் ரோட்டுக்கு கொண்டு வரவேண்டும்? தமிழை ஏன் முடக்க வேண்டும் என்றுதான் கேட்கிறேன்'' என ஆவேசமடைந்தார். 

"தமிழக அரசியலை பாஜக ஆட்டுவிக்கிறதா...?'' என்ற கேள்வியை முன்வைத்தோம். ஊர் மைல் கல்லில்கூட இந்தியைத் திணிப்பவர்கள், நம்ம ஊரில் ஆட்சிக்கு வந்தால், எப்படி இருக்கும்? தமிழகத்தில் தண்ணீரை வச்சுகூட அரசியல் பிழைப்பு நடத்துறாங்க. விவசாயிகள் பிரச்னை, காவிரி பிரச்னை, முல்லைப் பெரியாறு இப்படிப் பல பிரச்னைகள் நம்மைச் சுற்றி இருக்கு. நம்ம இதையெல்லாம் கவனிக்கணும் . இனிமேல், 'இங்க அடிச்சா.. அங்க வலிக்கும்..' என்ற நிலை வரவேண்டும். யாருடைய குரல் அங்கே ஓங்கி ஒலிக்குமோ.. அவுங்களுக்குதான் நாம் ஓட்டு போடணும். 

இன்றைய தமிழக அரசியலில் நல்லவங்களுக்கும், நாணயமானவர்களுக்கும் இடமில்லை என்றே நினைக்கிறேன். அப்படி ஒரு சூழல் மலர்ந்தால், ஒரு நல்ல தலைமை ஆட்சிக்கு வந்தால், குடும்பத் தலைவியாக இருக்கிற நான் கூட அரசியலுக்கு வருவேன். இதனை அரசியல் என்று சொல்வதை விட ஒரு சமூகப்பணி என்றுதான் கருதுகிறேன். ஒரு நல்ல மாற்றத்திற்காக குரல் கொடுக்க எனக்கு தயக்கமில்லை. அதனால் வரும் எதிர்ப்புகளையும், விமர்சனங்களையும் எதிர்கொள்ளவும் தயங்கமாட்டேன். அரசியல் ஆசை இல்லை. ஆனால், கோபம் இருக்கிறது. இன்னொன்றும் சொல்ல ஆசைப்படுறேன்... எல்லா மொழிகளையும் தெரிஞ்சவனா தமிழன் இருக்கணும். பிறரையும் தமிழ் மொழி பேசுபவனா தமிழனும் மாத்தணும். அதுதான் தமிழனுக்கு கெத்து. 'தமிழ்' இந்திய மொழி என்ற அடையாளம் மாறி, அது உலக மொழி என்ற அடையாளப்பட வேண்டும். அதற்கு நீங்களும் கை கொடுங்களேன், நானும் கரம்  கொடுக்கிறேன்" என்றார்.

இந்தி எதிர்ப்பு, பா.ஜ.க. எதிர்ப்பு என்று அனல் கிளப்பும் கஸ்தூரியின் குரல், அரசியல்பிரவேசத்துக்கு அஸ்திவாரமோ?

அடுத்த கட்டுரைக்கு