Published:Updated:

"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி!’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக்

"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி!’’ -  'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக்
"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி!’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக்

"அரவிந்த் சாமிக்கு நான்தான் வில்லி!’’ - 'மெட்டி ஒலி' சாந்தியின் கம்பேக்

'மெட்டி ஒலி' சாந்தி மாஸ்டரை அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. 'மெட்டி ஒலி' சீரியலைப் பார்த்தவர்களைவிடவும், சீரியலின் இன்ட்ரோ பாடலில் இவரது நடனத்தை ரசித்தவர்கள் அதிகம். டான்ஸர் சாந்தி தற்போது சீரியல் மற்றும் திரைப்படங்களில் நடிகையாகவும் அசத்திக்கொண்டிருக்கிறார். 

"13 வயசுல 'கிழக்கு வாசல்' படத்தில் 'தடுக்கித் தடுக்கி' பாட்டுல குரூப் டான்ஸரா அறிமுகமானேன். அப்படியே தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், இந்தின்னு பல மொழிகளிலும் மூவாயிரம் பாடல்களுக்கும் மேல டான்ஸ் ஆடியிருக்கேன். பல மொழிகளில் ஐந்நூறுக்கும் மேலான பாடல்களுக்கு டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணியிருக்கேன். சுசித்ரா, பிரகாஷ், தருண் குமார், கல்யாண், பிருந்தா மாஸ்டர் என ஐந்து குருநாதர்களும் என் வளர்ச்சியில் பக்கபலமா இருந்திருக்காங்க. பிரபுதேவா, ராஜூ சுந்தரம் மாஸ்டர்களின் பாடல்களில் நிறைய ஆடியிருக்கேன். பிரபுதேவா மாஸ்டர் என்னை ஸ்பெஷல் டான்ஸரா நிறையப் பாடல்களுக்கு வொர்க் பண்ணவெச்சதோடு, 'என்னோட ஸ்பெஷல் டான்ஸர்'னு சொல்லிட்டே இருப்பார். 

நான் மாஸ்டரா வொர்க் பண்ணின முதல் படம், மணிரத்னம் சாரின் 'ஆயுத எழுத்து' படத்தோட இந்தி வெர்ஷன் 'ஜன கன மன' பாடல்தான். அடுத்து, தமிழில் 'கம்பீரம்' படத்தில் 'சம்பல் காட்டுக் கொள்ளைக்காரி' பாட்டு. தொடர்ந்து முன்னணி ஹீரோ, ஹீரோயின்ஸ் பலரின் படங்களுக்கும் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணினேன். 'வெயில்' படத்தின் 'உருகுதே மருகுதே', 'கில்லி' படத்தின் 'சூரத்தேங்காய் அட்றா அட்றா', 'கந்தசாமி' படத்தின் 'மியாவ் மியாவ் பூனை' என எக்கச்சக்க ஹிட் லிஸ்ட் இருக்கு. டான்ஸராகி 25 வருஷம் ஆகியிருந்தாலும், பலருக்கும் 'மெட்டி ஒலி' சாந்தியாகத்தான் என்னைத் தெரியுது" எனச் சிரிக்கிறார். 

"2002-ம் வருஷம் 'மெட்டி ஒலி' சீரியல் ஒளிபரப்பாக இருந்த சில நாட்களுக்கு முன்னாடிதான் அந்த டைட்டில் இன்ட்ரோ பாடலை ஷூட் பண்ணினோம். சினிமாவில் டான்ஸ் மாஸ்டரா பிஸியா இருந்த சமயம். அப்போ என்னோட ஃப்ரெண்டு கந்தாஸ், அவர் மாஸ்டரா வொர்க் பண்ணின அந்தப் பாட்டுக்கு என்னை ஆடச்சொல்லி வற்புறுத்தினார். 'ஒரு சீரியல் பாட்டுத்தானே... சரி. ஆனா, நான் அக்சஸரீஸ் எதுவும் போடமாட்டேன்'னு சொல்லித்தான் ஆடறதுக்கு சம்மதிச்சேன். முதல்ல, மூணு பேரு மெயின் டான்ஸரா ஆடுறதா இருந்துச்சு. அந்த சீரியலின் டைரக்டர் திருமுருகன் சார், 'நான் உங்களோட ரசிகர். அதனால், நீங்க மட்டும் மெயின் டான்ஸரா ஆடுங்க'னு சொல்லிட்டார். ஒரு நைட் மட்டும்தான், 'அம்மி அம்மி அம்மி மிதித்து... அருந்ததி முகம் பார்த்து' என்கிற அந்தப் பாட்டின் ஷூட் நடந்துச்சு. அந்த சீரியல் ஒளிபரப்பான முதல் நாளே, ஏகப்பட்ட போன் கால்ஸ். 'சீரியலைக் குறைச்சு மதிப்பிடக் கூடாது'னு மனசார நினைக்கவெச்ச தருணம் அது.

இன்னைக்கு வரைக்கும் நான் எங்கே போனாலும் என்னை 'மெட்டி ஒலி' சாந்தினு சொல்லியே பாராட்டுறாங்க. சினிமாவில் சம்பாதிச்ச புகழைவிட, இந்த ஒரு சீரியல் கொடுத்த புகழ்தான் அதிகம். குறிப்பாக, டான்ஸர்களில் நிறைய பேர் சாந்தி என்கிற பெயரில் இருக்காங்க. நான் ஒல்லியா இருக்கிறதால் தாரா மாஸ்டர் 'பாம்பு சாந்தி'னு எனக்குப் பெயர் வெச்சாங்க. அந்தப் பெயர்லதான் பலரும் என்னை கூப்பிட்டுகிட்டு இருந்தாங்க. மெட்டி ஒலி சீரியல் வந்த பிறகு, 'மெட்டி ஒலி' சாந்தினு எனக்கு சினிமா டைட்டிலிலும் போட ஆரம்பிச்சுட்டாங்க'' என்கிற சாந்தி, திருமண வாழ்க்கைக்குப் பிறகான இரண்டாவது இன்னிங்ஸில், தனக்குப் புகழ் கொடுத்திருக்கும் 'குலதெய்வம்' சீரியலைப் பற்றியும் சினிமா வாய்ப்புகள் பற்றியும் கூறுகிறார். 

"2007-ம் வருஷம் கல்யாணமாச்சு. அடுத்த ஒன்றரை வருஷத்துல கணவர், குழந்தை, குடும்பம்னு சினிமாவுக்குச் சுத்தமா பிரேக் கொடுத்துட்டேன். குழந்தைங்க கொஞ்சம் வளர்ந்த பிறகு மறுபடியும் டான்ஸ் வாய்ப்புகள் வந்துச்சு. திருமுருகன் தயாரிச்ச 'தேனிலவு' சீரியலின் ஓபனிங் பாட்டு. அதுக்குப் பிறகு, சில சினிமாக்களில் வொர்க் பண்ணிட்டு இருந்தேன். மறுபடியும் திருமுருகன் டைரக்‌ஷனில் 'குலதெய்வம்' சீரியலில் மங்களசுந்தரி கேரக்டரில் நடிக்க சொன்னார். ஆரம்பத்துல தயக்கமா இருந்தாலும், பிறகு நடிக்க சம்மதிச்சேன். இப்போ, அந்த கேரக்டராவே மாறி நடிச்சுட்டு இருக்கேன். கணவர், பிள்ளைங்க, மாமியார், அம்மா என எல்லோரும் என்னோட ஆக்டிங்கை பாராட்டுறாங்க. சில சமயம் என் நடிப்பைக் கிண்டல் பண்ணி ரசிப்பாங்க" எனச் சிரிக்கிறார். 

"திருமுருகன் சார், வடிவுகரசி அம்மா, மெளலி சார்னு மூணு பேர்கிட்டயும் ஆக்டிங்ல நிறைய விஷயங்களை தொடர்ந்து கத்துகிட்டு இருக்கேன். இப்போ, 'ஆக்கம்', 'முந்திரிக்காடு' எனப் பல படங்களில் டான்ஸ் மாஸ்டரா வொர்க் பண்ணிட்டு இருக்கேன். செல்வா சார் டைரக்‌ஷனில், அரவிந்த் சாமி சார் ஹீரோவா நடிக்கும் படத்தில் வில்லி கேரக்டரில் நடிச்சுட்டு இருக்கேன். நடிப்பு, டான்ஸ் மாஸ்டர் என இரட்டை குதிரை சவாரி சூப்பரா போயிட்டு இருக்கு. எவ்வளவு உயரத்துக்குப் போனாலும், டைரக்டர் திருமுருகன் சாருக்கு எப்பவும் நன்றிக்கடன்பட்டவளா இருப்பேன்" என நெகிழ்கிறார் 'மெட்டி ஒலி' சாந்தி. 

- கு.ஆனந்தராஜ்

அடுத்த கட்டுரைக்கு