Published:Updated:

விஜய்யும் அட்லீயும் சேர்ந்து நடிச்ச பாட்டு பாத்திருக்கீங்களா?

தார்மிக் லீ
விஜய்யும் அட்லீயும் சேர்ந்து நடிச்ச பாட்டு பாத்திருக்கீங்களா?
விஜய்யும் அட்லீயும் சேர்ந்து நடிச்ச பாட்டு பாத்திருக்கீங்களா?

ந்தக் காலத்தில் தான் பாடிய பாடல்களில் `இந்தப் பாடலைப் பாடியவர் உங்கள் விஜய்' என கேப்ஷன் போட்டு `நானும் பாடகன் தான்' என நம்மிடம் ரெஜிஸ்டர் செய்வார் விஜய். அதேபோல், சில இயக்குநர்கள் அவர்கள் இயக்கும் படங்களில் ஏதேனும் ஒரு பாடலில் என்ட்ரியாகி, தன்னை ரெஜிஸ்டர் செய்திருப்பார்கள். அவர்களின் லிஸ்ட் தான் இது... 

ஷங்கர் :

`காதலன்', ஷங்கர் இயக்கிய இரண்டாவது திரைப்படம். ஏ.ஆர்.ரஹ்மான் இசை, பிரபுதேவாவின் டான்ஸ், நக்மாவின் க்யூட்னஸ் என படத்தில் வரும் எல்லாப் பாடல்களுமே வேற லெவல். அப்படி ஒரு வேற லெவல் பாடலான `காதலிக்கும் பெண்ணின் கைகள்...' பாடலில் தான் ஒரு சீனில் தலையைக் காட்டியிருப்பார் இயக்குநர் ஷங்கர். பாட்டு முடியவிருக்கும் நேரத்தில் 'இந்த நுட்பம் ஊருக்குப் புரியவில்லை...' என்ற வரியின் போது, தனது கையை நீட்டி ஒரு கும்பலைக் காட்டுவார் பிரபுதேவா. அந்தக் கும்பலில் காக்கி கலர் சட்டை அணிந்துகொண்டு ராஜுசுந்தரம் அருகில் கோபமாக அமர்ந்திருப்பார் ஷங்கர். `சிவாஜி' படத்தில் வரும் `பல்லேலக்கா...' பாடலிலும், `நண்பன்' படத்தில் வரும் `அஸ்கு லஸ்கா' பாடலிலும் கூட நீங்கள் ஷங்கரை பார்க்கலாம். கூடவே, `அஸ்கு லஸ்கா...' பாடலில் அவரது உதவி இயக்குநர் அட்லியையும் பார்க்கலாம்.

கௌதம் மேனன் :

2006-ல் வெளியான திரைப்படம் `வேட்டையாடு விளையாடு'. அந்தப் படத்தில் ஹாரிஸ் - ஹரிஹரன் இணைந்து கலக்கிய பாடல் `வெண்ணிலவே வெள்ளி வெள்ளி நிலவே...'. தன் காதலை சொல்வதா, வேண்டாமா என்ற குழப்பத்தில் இருக்கும் கமல், பிரச்னைகளை சொல்லி அழத் தோள் கிடைக்காதா என்று ஏங்கும் ஜோதிகா, இருவரின் மௌனத்தையும் இசையால் விவரித்த ஹாரிஸின் இசை, அழகான காட்சிகள் என மயக்கும் பாடல் அது. அந்த மயக்கத்தில் ஒரு விசயத்தை நாம் கண்டுக்கொள்ளாமல் விட்டிருப்போம். ஆமாம், அந்த பாடலின் ஒரு காட்சியில் கமல் மற்றும் ஜோதிகாவின் பின்னால் ஆடிப்பாடிக்கொண்டே வருவார் கௌதம் மேனன்.

ஏ.ஆர். முருகதாஸ் :

2012-ல் வந்த விஜய்யின் ஹிட் லிஸ்டில் டாப் இடத்தைப் பிடித்த படம் `துப்பாக்கி'. இந்தப் படத்தில் இடம்பெற்ற பெப்பி பாடல் 'கூகுள் கூகுள்'. விஜய் மற்றும் காஜலின் அசத்தலான டான்ஸ், ட்ரெண்டி வரிகள், டிஸ்கோ எஃபெக்ட் எனப் பாடல் நம்மை ஆட்டம் போட வைக்கும். பாடல் முடியப் போகும் நேரத்தில் இருவரும் தியேட்டரில் இருப்பது போன்ற காட்சி. அதில் விஜய்யின் அருகில் இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் அமர்ந்திருப்பார். காஜலுக்கு அருகில் ஒளிப்பதிவாளர் சந்தோஷ் சிவன் அமர்ந்திருப்பார். கவனித்தீர்களா மக்களே?

வாசு :

ரஜினி - வாசு காம்பினேஷனில் வெளியாகி பட்டையைக் கிளப்பிய படம் `சந்திரமுகி'. இந்தப் படத்தின் இன்ட்ரோ பாடலான 'தேவுடா தேவுடா' பாடலின் நடுவில் 'ரிப்பீட்டு' என்ற வார்த்தை அடிக்கடி வந்துபோகும். அதையும் ஒவ்வொரு முறையும் ஒவ்வொருவர் வந்து சொல்லிவிட்டு போவார்கள். இயக்குநர் வாசுவும் அதில் அட்டன்டெண்ஸை பதிவு செய்துவிட்டுப் போவார். ரிப்பீட்டே..!

தரணி :

'சிம்பு' நடிப்பில் வெளியான படம் 'ஒஸ்தி'. இன்ட்ரோ முடிந்தவுடன் துப்பாக்கியை எடுத்து ஜீப்பை நோக்கி சுடுவார். அந்த ஜீப் செவ்வாய் கிரகத்திற்கு விசிட் அடித்துவிட்டு மீண்டும் தமிழ்நாட்டுக்கே வந்துவிடும். அதன் உள்ளே இருந்து சிம்பு இன்ட்ரோ பாடலைப் பாடி ஆக்ரோஷமாக வெளியே ஓடி வர, அவரை மடக்கிப்பிடித்து 'தமிழ்நாட்டு காப்புதான்

தரணி எல்லாம் டாப்புதான்' என்று ஆட்டத்தை ஆரம்பித்துவைப்பார் தரணி. ஓஸ்தி மாமே..!

பிரபுதேவா :

விஜய்யை வைத்து 'போக்கிரி', 'வில்லு' என இரண்டு படங்களை இயக்கியிருக்கிறார் பிரபுதேவா. அந்த இரண்டு படங்களிலுமே விஜய்யின் ஃபைட் சீன் முடிந்த பிறகே இன்ட்ரோ சாங் வரும். 'போக்கிரி' படத்தில் 'ஆடுங்கடா என்ன சுத்தி...' பாடலிலும் `வில்லு' படத்தில் 'ஏய் ராமா ராமா...' பாடலிலும் என்ட்ரியாகி குத்தாட்டம் போட்டுப் போவார் பிரபுதேவா. அதிலும் விஜய் அணிந்திருப்பது போலவே ஆடை அணிந்து வந்து கலக்கியிருப்பார். சூப்பருங்ணா..!

- தார்மிக் லீ