Published:Updated:

`மோகன்லால் ஒரு சோட்டாபீம்!' - வம்பிழுக்கும் கே.ஆர்.கே

ப.சூரியராஜ்
`மோகன்லால் ஒரு சோட்டாபீம்!' - வம்பிழுக்கும் கே.ஆர்.கே
`மோகன்லால் ஒரு சோட்டாபீம்!' - வம்பிழுக்கும் கே.ஆர்.கே

இந்தியாவின் மிகப்பிரமாண்டமான சினிமாவாக, 1000 கோடி ரூபாய் மெகா பட்ஜெட்டில் உருவாக இருக்கிறது `ரண்டமூழம்'. பிரபல மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் எழுதிய புகழ்பெற்ற நாவலான `ரண்டமூழம்' நாவலின் கதையை தழுவித்தான் இந்தப்படம் தயாராகவுள்ளது. இயக்குநர் வி.எ.ஶ்ரீகுமார் இயக்கவிருக்கும் இந்த படத்தில் நாயகனாக, இதிகாச கதாபாத்திரம் பீமன் வேடத்தில் நடிக்கவுள்ளர் மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால். இந்த செய்தி மோகன்லால் ரசிகர்கள் அனைவரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. ஆனால், அதை ஒரே ஒரு ட்வீட்டின் மூலம் கெடுத்துவிட்டார் கே.ஆர்.கே. 

தன்னை ஒரு சினிமா பிரபலம், சினிமா விமர்சகர், தயாரிப்பாளர் என சொல்லிக்கொள்ளும் கே.ஆர்.கே ( எ) கமால் ரஷீத் கானுக்கு ட்விட்டரில் சினிமா பிரபலங்களோடு ஒரண்டை இழுப்பதுதான் முழுநேர வேலை. யூடியூபில், ட்விட்டரில் சினிமா விமர்சனம் எழுதினார் என்றால் ரத்தக்காவு வாங்காமல் விட மாட்டார். பட விநியோகம், அப்படியே தயாரிப்பாளர், நடிகர் என தன்னைத்தானே செதுக்கிக்கொண்ட கமால் ரஷீத், இப்போது துபாயில் வசித்து வருகிறார். மொக்கை, வெத்து, சூர மொக்கை என வார்த்தைகளில் பிரபலங்களைக் கோர்த்துவிட்டு ட்விட்டரில் தெறிக்க விடுகிறார். ‘ராஞ்சனா’ படத்தில் நடித்த தனுஷைக் கலாய்த்து சாதி ரீதியாக விமர்சனம் பண்ண, தகவல் தொழில்நுட்பக் குற்றம் 66ஏ பிரிவு சட்டம் பாய்ந்தது. கானை முற்றிலும் இணையத்தில் இயங்கவிடாமல் தடை விதிக்க வேண்டும் எனப் பல தலித் அமைப்புகள் போராட்டத்தை அறிவித்து வழக்கு தொடுத்தன. கொஞ்சநாள் சைலன்ட் மோடுக்குப் போனவர் தனுஷின் மாமனார் மூலமாக மீண்டும் லைம்லைட்டுக்கு வந்தார். மே 23, 2014-ல் ‘கோச்சடையான்’ என்ற மொக்கைப் படத்தைப் பார்க்க மாட்டேன் என எழுதி ரஜினி ரசிகர்களிடம் வாங்கிக் கட்டிக்கொண்டார். பாலிவுட், கோலிவுட், டோலிவுட் என எல்லாப்பக்கமும் உள்ள சினிமா ரசிகர்கள் இவராலும் இவரது ட்வீட்களாலும் நொந்துப்போய் கிடக்கிறார்கள். 

இந்நிலையில், கமால் ரஷீத் கான் `ரண்டமூழம்' திரைப்படம் பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில், " மோகன்லால் சார் உங்களை பார்த்தால் `மகாபாரதம்' பீம் மாதிரி இல்லை, சோட்டா பீம் மாதிரிதான் இருக்கு. ஏன் பீமன் ரோலில் நடிச்சு தயாரிப்பாளர் பணத்தை வீணாக்குறீங்க?" என்றும் "மக்களே இந்த படத்தை பாருங்க. பீமன் வேடத்தில் இந்த ஜோக்கர் நடிக்கிறது அந்த பீமனுக்கே பெரிய அவமானம்" எனவும் ட்வீட்களை கொளுத்திப்போட்டார். இதனால், கோபமடைந்த மோகன்லால் ரசிகர்கள் கே.ஆர்.கே-வை பதிலுக்கு கன்னாபின்னாவென வறுத்தெடுத்தார்கள். மறுநாள் அதற்கு "மோகன்லாலின் முட்டாள் ரசிகர்களே... மோகன்லால் (எ) லாலேட்டன் (எ) சோட்டாபீமுக்கு ட்விட்டரில் வெறும் 1.7 மில்லியன் ஃபாலோயர்கள் தான் இருக்கிறார்கள். எனக்கு 3.7 மில்லியன் ஃபாலோயர்கள் இருக்கிறார்கள். யார் பெரிய நட்சத்திரம்னு நீங்களே கணக்குப்போட்டு பார்த்துக்கோங்க' என எரியும் நெருப்பில் மேலும் பெட்ரோலை ஊற்றியிருக்கிறார். தொடர்ந்து `பீமன் கதாபாத்திரத்தில் `பாகுபலி' பிரபாஸ் நடித்தால் தான் நல்லாருக்கும்' என கே.ஆர்.கே  ட்வீட்ட, கே.ஆர்.கே ரசிகர்கள் கொலைவெறியோடு இருக்கிறார்கள். ஆனாலும், தொடர்ந்து தனது ட்விட்டர் பக்கத்தில் மோகன்லாலையும், அவரது ரசிகர்களையும் பற்றி மோசமாக கலாய்த்துவருகிறார் கே.ஆர்.கே.  என்னத்த சொல்ல...

-ப.சூரியராஜ்