Published:Updated:

ஒரு பாட்டுக்காகவே வைரல் ஆன தமிழ்ப்படங்கள் இதெல்லாம்!

ஒரு பாட்டுக்காகவே வைரல் ஆன தமிழ்ப்படங்கள் இதெல்லாம்!
ஒரு பாட்டுக்காகவே வைரல் ஆன தமிழ்ப்படங்கள் இதெல்லாம்!

தமிழ் சினிமாவுல எவ்வளவோ படங்கள் வந்து ஹிட் அடிச்சாலும் சில படங்கள் ஒரே ஒரு பாட்டுக்காகவே ரொம்பக்கவனத்தை பெற்றிருக்கும். அதனாலேயே கூட்டம் கூட்டமாகலாம் வந்து படத்தைப் பார்த்துட்டுப்போவாங்க. சாம்பிளுக்கு அப்படியான சில டாப் ஹிட் பாடல்கள் லிஸ்ட்தான் இது.

திருடர்கள்
'துள்ளுவதோ இளமை',  'காதல், கொண்டேன்'னு ரெண்டே ரெண்டு படங்கள் மட்டுமே அதுவரைக்கும் நடிச்சிருந்த தனுஷுக்கு, மூணாவதா சிக்குன படம்தான் இந்த 'திருடா திருடி'. மேல சொன்ன ரெண்டு படங்களும் கதைக்காகவும், அவரோட நடிப்புக்காகவும் கொண்டாடப்பட்டது. ஆனா 'திருடா திருடி' எப்படி இருக்கும்னு தெரியிறதுக்கு முன்னாடியே  படத்தைப்பார்க்க ஆடியன்ஸை கொத்துக்கொத்தாக உள்ளே இழுத்துட்டு வந்த காரணம் என்னன்னா அது 'மன்மதராசா மன்மதராசா' ங்கிற அந்த  ஃபாஸ்ட் நம்பர் சாங் தான். சின்னப்பசங்கள்ல இருந்து யூத்துகள் வரைக்கும் இதுக்கு ஆடாத ஆளுங்களே இல்லை. தனுஷ் இப்படில்லாம் ஆடுவாரான்னு பலபேரை ஆச்சரியப்பட வச்சதும் இந்தப்பாட்டுதான்.

ஓ போட்டோம்
பாட்டு வந்து பல வருசம் ஆனாலும் இப்பவரைக்கும் நாம பாக்குற பல ஸ்டேஜ் ப்ரோக்ராம்கள்ல எல்லாருக்கும் ஒரு ஓ போடுங்கன்னு ஆங்கரிங் பண்றவங்க சொல்றதையும் அதுக்கு ஆடியண்ஸ்கிட்ட இருந்து ஓ.... ஓ.. ன்னு ஒரு பெரிய சத்தம் வர்றதையும் பார்த்துக்கிட்டு இருக்குறோம்னா, அது இந்த 'ஜெமினி' படத்துல வந்த 'ஓ போடு' பாட்டுதான் காரணமே. குக்கிராமம் முதல் குக்கர் சிட்டி வரைக்கும் அடிச்சுப் பிரிச்சு மேஞ்சது இந்தப்பாட்டு. படம் பார்க்கபோனவங்களாம் படத்துல இந்தப்பாட்டு எப்ப வரும்னுதான் காத்துக்கிட்டு இருந்தாங்கன்னா பார்த்துக்கங்க.

குத்துப்பாட்டு...
ஏதாவது ஒரு பாட்டு வந்து ஹிட் ஆகிட்டா அதேமாதிரி ஆளாளுக்குக் கிளம்புறதுதானே வழக்கம். மன்மதராசாவைப்பார்த்துட்டும் அதேமாதிரி சில பேர் கிளம்பினாங்க. அந்த லிஸ்ட்டுல  இந்த 'குத்து' படத்து 'போட்டுத்தாக்கு'ம்  ஒண்ணு. மன்மதராசாவுல கறுப்பு ட்ரெஸ் போட்டு வந்து ஆடுனமாதிரி இந்தப்பாட்டுல கான்ட்ராஸ்ட்டா வெள்ளை ட்ரெஸ் போட்டு ஆடிருப்பாங்க சிம்புவும், ரம்யாகிருஷ்ணனும். இந்தப்பாட்டு இப்படி ஒருபக்கம் ஃபேமஸ் ஆக, இவ்ளோ ஏஜ்லயும் இப்படி ஒரு குத்தாட்டாம் ஆடுறாங்களான்னு ரம்யாகிருஷ்ணனும் பரபரப்பா பேசப்பட்டுட்டாங்க. இதென்ன பிரமாதம் இதைவிட ஒரு ஸ்பெசல் ஐட்டம் இருக்கு  கேப்டன் பிரபாகரன் படத்து 'ஆட்டமா தேரோட்டாமா' பாட்டுலாம் நீங்க பாத்தது இல்லையான்னு ரசிகர்கள் சிலாகிக்க ஆரம்பிச்சுட்டாங்க.

நாக்கா மூக்கா...
இப்பவரைக்கும் இந்தப்பாட்டுக்கு என்ன அர்த்தம்னே தெரியலை. ஆனா பாட்டு செம ஹிட். பாட்டு ஹிட் ஆனதைப் பார்த்துட்டு மேல் வெர்சன் ஃபீமேல் வெர்சன்னு ரெண்டு வெர்சனும் வேற வர ஆரம்பிச்சிடுச்சு. நடிகர் நகுல், சன்பிக்சர், பாடகி சின்னப்பொண்ணுனு பலபேருக்கு ஒரு அடையாளத்தைக் கொடுத்தது இந்தப்பாட்டுதான். பாட்டுல என்னனுதான் டான்ஸ் ஆடிருக்காங்கன்னு பார்க்குறதுக்காகவே தியேட்டருக்குப் பலபேரை வரவச்சது இந்த 'காதலில் விழுந்தேன்' படத்துப்பாட்டு.

அந்த ஏழு அதிசயம்...
குத்துப்பாட்டை பார்க்குறதுக்காகத்தான் மக்கள் இப்படி கூடுவாங்களான்னு கேட்டா அதுதான் இல்லை. சில பாட்டுகள் விதிவிலக்காகவும் இருந்திருக்குது மக்களே. 'ஜீன்ஸ்' படத்துல வந்த  'பூவுக்குள் ஒளிந்திருக்கும்' பாட்டுல ஏழு உலக அதிசயங்களையும் விஷ்யூவலாக காட்டுறாங்கங்கிறதுக்காகவே அந்தப்பாட்டு செம ஃபேமஸ் ஆகிடுச்சு. தாஜ்மகாலும், சீனச்சுவரும், ஈபிள் டவரும் இதுலதான் பலபேருக்கு அறிமுகம். இன்னைக்கு டைரக்டர் ஷங்கர் விஷ்யூவலாக செம ஸ்ட்ராங்கா இருக்குறார்னா ஆரம்பத்துல இந்தமாதிரி பாட்டெல்லாம் எடுத்து இன்டஸ்ட்ரியையே திரும்பிப்பார்க்க வச்சதுதான் பாஸ் காரணம்.

மூச்...
அப்படியே கொஞ்சம் பின்னோக்கிப் போனோம்னா சில பாடல்கள் இருக்குது; அது எல்லாத்தையும் சொன்னோம்னா 'அடுத்த முதலமைச்சர்' லிஸ்ட் மாதிரி பெரு...சா போகும். அதனால இந்தப்பாட்டை மட்டும் எடுத்துக்குவோம். எஸ்.பி.பியே நான் மூச்சு விட்டுத்தான் பாடினேன்னு சொல்லிருந்தாலும் மக்கள் இன்னும் அதை ஏத்துக்காம அது எப்படி சார் மூச்சு விடாம பாடுனீங்கன்னு கேக்குற பாட்டுனா அது இதுதான். மூச்சுவிடாம பாடிருக்காராமே வாய் வலிக்காதா... மூக்கு அரிக்காதா...ன்னு எல்லாம் பலபல ஆச்சரியத்தோடயே இந்த 'கேளடி கண்மணி' படத்தை பலபேர் பார்க்கப்போனதுங்கிறது வரலாறு.

பொயட்...
இந்த '3' படத்து  'வொய் திஸ் கொலவெறி' பாட்டு நவீனத்தலைமுறையின் ட்ரெண்ட் செட் பாட்டுன்னே சொல்லலாம். கேட்ஜெட்ஸ் சோசியல் மீடியான்னு நிரம்பி வழியுற இந்தக்காலத்துல எப்படி எல்லாம் அதை வச்சு ஹிட் அடிக்கலாம்னு பலபேருக்கு சொல்லித்தந்ததே இந்தப்பாட்டுதான். படம் ரிலீஸ் ஆகுறதுக்கு முன்னாடியே அதிகமாக யூ-டியூபில் பார்க்கப்பட்ட பாட்டுன்னு யூ-டியூப்பே 'கோல்டு விருது'லாம் கொடுத்திருந்திச்சு. இந்தப்பாட்டு எந்த அளவுக்கு ஹிட்னு சொல்லிவேற தெரியணுமா மக்களே.