Published:Updated:

“நான்.. விஜய்.. மணிரத்னம்.. ப்ச்.. அந்த புராஜக்ட் டிராப் ஆகிருச்சு!” - மகேஷ்பாபு

“நான்.. விஜய்.. மணிரத்னம்.. ப்ச்.. அந்த புராஜக்ட் டிராப் ஆகிருச்சு!” - மகேஷ்பாபு
“நான்.. விஜய்.. மணிரத்னம்.. ப்ச்.. அந்த புராஜக்ட் டிராப் ஆகிருச்சு!” - மகேஷ்பாபு

தெலுங்கு சினிமாவின் பிரின்ஸ் மகேஷ்பாபு இப்போது தமிழ் நடிகர். ஆமாம், ஒரே சமயத்தில் தமிழிலும் தெலுங்கிலும் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கும் ‘ஸ்பைடர்’ படம் மூலம் தமிழுக்கு அறிமுகமாகிறார் மகேஷ்பாபு. பூந்தமல்லி ஈவிபி ஃபிலிம் சிட்டியில் எஸ்.ஜே.சூர்யாவுடன் ஆக்ஷனில் இருந்த மகேஷ்பாபு உடன் நடந்த லன்ச் பிரேக் கேரவன் சந்திப்பில் இருந்து... 

‘‘சென்னைக்கும் உங்களுக்குமான உறவு பற்றி சொல்லுங்கள்?’’

‘‘அண்ணா, அக்காக்கள், நான், தங்கைனு நாங்க பிறந்து வளர்ந்தது எல்லாமே சென்னையில்தான். அப்ப எங்க வீடு தி.நகர்ல சிவாஜி சார் வீட்டுக்கு எதிர்ல நீலகண்ட மேத்தா தெருவில் இருந்தது. அம்மா, பாட்டியுடன் நாங்க எல்லாருமே அந்த வீட்லதான் இருந்தோம். நானும் அண்ணனும் சாந்தோம் செயின்ட் பீட்ஸ் ஸ்கூல் படிச்சோம். காலேஜ், லயோலா. சிஸ்டர்ஸ்ல ஒருத்தவங்க ஸ்டெல்லா மேரிஸ், இன்னொருத்தவங்க எத்திராஜ். கடைசி தங்கை ஹோலி ஏஞ்சல்ஸ்னு நாங்க படிச்சது எல்லாமே சென்னையில்தான். இப்படி சென்னையில் 25 வருஷங்கள் இருந்தேன். ஆனால் ஹைதராபாத்துக்கு ஷிப்ட் ஆகி 15 வருஷங்கள்தான் ஆகுது. அப்ப நான் சென்னை பையன்மாதிரிதானே?” (சிரிக்கிறார்)

செயின்ட் பீட்ஸ்ல நான் படிக்கும்போது சூர்யா, கார்த்தி, கார்த்திக்ராஜா, யுவன்... இவங்கல்லாம் என் ஸ்கூல்மெட்ஸ். நான் தெலுங்கு சினிமா ஸ்டார் கிருஷ்ணாவின் மகன்னு நான் சொல்லவும் இல்லை. ஆனா தெலுங்கு பசங்களுக்கு மட்டும் நான் பெரிய ஸ்டாரின் மகன்னு தெரியும். (கிருஷ்ணா, ‘கந்தசாமி’ படத்தில் சிபிஐ அதிகாரியாக நடிததவர்) நான் அங்க படிக்கும்போதுதான் ‘அஞ்சலி’ படம் வந்தது. என் ஸ்கூல், கிளாஸ்ல இருந்த நிறையப் பசங்க அந்தப் படத்தில் நடிச்சாங்க. ‘நம்ம பசங்க மணி சார் படம் பண்றாங்க’னு அப்ப பயங்கர பரபரப்பா பேசிகிட்டாங்க. அவை ரொம்ப இன்ட்ரஸ்டிங்கான நாட்கள். செம அனுபவம்.”

‘‘சென்னையில் இருக்கும்போது நீங்க எந்த நடிகரின் ரசிகர்?”

‘‘அப்பா படங்கள்தான் எனக்கு பிடிக்கும். அடுத்து ரஜினி சார், கமல் சார் படங்களை முதல்நாளே மிஸ் பண்ணாமல் பார்த்துடுவேன். பல நாள் டிக்கெட் கிடைக்காம பிளாக்ல வாங்கிக்கூட பார்த்திருக்கேன். அப்பவே நான் மணிரத்னம் சாரின் பெரிய ரசிகன். அவர் படங்களை மிஸ் பண்ணவே மாட்டேன். ஆனால் நான் ஹைதராபாத் போனதும் மிஸ் பண்ணின முதல் விஷயம் இப்படி ஃப்ரெண்ட்ஸோட படம் பார்க்கும் அந்த சூழலையும் அனுபவத்தையும்தான். அதேபோல அப்ப ஏவி.எம் போனா ஒரு பக்கம் மூணு தெலுங்கு படங்கள், வேறொரு பக்கம் மூணு தமிழ்ப் படங்கள்னு ஒரே சமயத்தில் கிட்டத்தட்ட 10 படங்களோட ஷூட்டிங் நடந்துட்டு இருக்கும். தென்னிந்திய சினிமா இன்டஸ்ட்ரி முழுக்க ஒரே இன்டஸ்ட்ரி மாதிரி இயங்கிட்டு இருந்த அந்த சூழலை நினைச்சுப்பார்த்தாலே அப்படி சந்தோஷமா இருக்கும்.” 

“முதல் படத்திலேயே, ‘சிறந்த அறிமுக நடிகர்’னு மாநில அரசு விருது. எப்படி இருந்தது அந்த அனுபவம்?”

“நேர்மையா சொல்றதா இருந்தா என் முதல் படம் அவ்வளவு நல்ல படம் கிடையாது. அது சின்னச்சின்ன தவறுகளை மக்கள் மன்னிச்சிட்டு இருந்த காலம். ‘சூப்பபர் ஸ்டார் கிருஷ்ணாவின் மகன். அவனுக்கு நாம சப்போர்ட் பண்ணணும்’னு அப்பாவின் ரசிகர்கள் எனக்கு ஆதரவா இருந்தாங்க. அந்த ஆதரவில் அந்தப்படம் பெரிய ஹிட் ஆச்சு. அப்புறமா 2வது, மூணாவது படங்கள் சரியா போகலை. பிறகு வந்த ‘முராரி’, நல்ல பேர் வாங்கித் தந்தது. அதன்பிறகு வந்த ‘ஒக்கடு’தான் மிகப்பெரிய திருப்புமுனை. அந்த சமயத்தில்தான் முருகதாஸ் சார் என்னை சந்தித்தார். அப்ப அவர் சிரஞ்சீவி சாரை வைத்து ‘ஸ்டாலின்’ படம் பண்ணிட்டு இருந்தார். இப்படி நாங்க சேர்ந்து ஒர்க் பண்ணணும்னு 10 வருஷமாவே பேசிட்டு இருந்தோம். அது தாமதமா நடந்திருந்தாலும் இப்போதாவது நடந்திருக்கே என்ற வகையில் சந்தோஷம்.”

“சென்னையில் 25 வருஷங்கள் இருந்திருக்கீங்க. முதல் படம் தமிழ்ல பண்ணுவோம்னு ஏன் தோணலை?”

“உண்மையை சொல்லணும்னா அப்ப என் ஃபோகஸ் முழுக்க தெலுங்கு படத்தில்தான். காரணம், அப்பா அங்கதான் இருந்தார். நான் சைல்ட் ஆர்ட்டிஸ்டா நடிச்சதும் அங்கதான். தெலுங்கு படங்கள் பண்ணணும் என்பதில் தெளிவா இருந்தேன். ஆனால் ‘ஒக்கடு’க்குப்பிறகு தமிழ்ல இருந்து நிறைய இயக்குநர்கள் அப்ரோச் பண்ணினாங்க. மணிரத்னம் சாரும் ‘பொன்னியின் செல்வன்’க்காக அப்பதான் பேசினார். ஆனால் எதிர்பாரா விதமா அந்தப்படம் நடக்கலை. எனக்கு தனியா ஒரு தமிழ்ப் படத்துல நடிக்கணும்ங்கிற ஐடியா இல்லை. ஒரே சமயத்தில் தமிழ், தெலுங்குல பண்றமாதிரி கதை அமையும்போது பண்ணுவோம்னு காத்திருந்தேன். ஏன்னா நான் அங்க எஸ்டாபிளிஷ் நடிகர். அப்படி இருக்கையில் தமிழ்ல மட்டும் பண்ணினால் ஃபோகஸ் ஷிப்ட் ஆகிடும். அந்த சமயத்தில் இந்தக் கதையை முருகதாஸ் சார் சொன்னதுமே ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு. என் முதல் தமிழ்ப் படத்துக்கே முருகதாஸ் சார்  கிடைச்சது என் அதிர்ஷ்டம்.”

“ஓ.கே. இந்த 'ஸ்பைடர்’  அப்படி என்னமாதிரியான கதை?”

“நான் ‘ஸ்ரீமந்துடு’ நடிச்சிட்டு இருக்கும்போது அங்க வந்து ஒன்றரை மணிநேரம் இந்தக் கதையை முருகதாஸ் சார் சொன்னார். கேட்ட உடனேயே கமிட் ஆகிட்டேன். அவ்வளவு பிடிச்சிருந்துச்சு. அவர் அன்னைக்கு என்ன சொன்னாரோ அது அப்படியே ஸ்கீரின்ல இருக்குது. மிகக்குறைவான இயக்குநர்களுக்கு மட்டுமே இப்படி அமையும். சந்தோஷ்சிவன் சார், ஹாரிஸ் ஜெயராஜ்னு கிரேட் டெக்னீஷியன்களோட தமிழில் படம் பண்ணுவது உண்மையிலேயே முன்னோக்கி செல்றதுக்கான அடையாளம். என் மாதிரி ஒரு ஸ்டார் தெலுங்குலயும் பண்ணும்போது இரண்டையும் பேலன்ஸ் பண்ணணும். ஏன்னா இது பெரிய பட்ஜெட் ஃபிலிம். சில டைரக்டர்களால்தான் இந்தமாதிரி சிச்சுவேஷனை ஹேண்டில் பண்ண முடியும். யெஸ், முருகதாஸ் சார் கிரேட். அவர் பண்ணினதில் ‘கத்தி’, ‘ரமணா’ மாதிரியான படங்கள் ஒரு வகை. ‘கஜினி’, ‘துப்பாக்கி’ படங்கள் வேறொரு ஸ்டைல். இதில் ‘ஸ்பைடர்’  2வது வகை. அதேசமயம் அவர் படத்தில் ஒரு மெசேஜ் இருக்கும். இதிலும் அப்படி ஒரு மெசேஜ் வைத்துள்ளார். நீங்க படம் பாருங்க. உங்களுக்குப் பிடிக்கும்.”

“ஒரே சமயத்தில் இரண்டு மொழிகளில் நடிக்கும் அந்த அனுபவம் எப்படி இருக்கு?”

“இது எனக்கு ரொம்பப் புதுசு. ‘ஒரு ஷாட் தமிழ், அடுத்த ஷாட் தெலுங்குனு எளிதா பண்ணிடலாம்’னு நினைச்சேன். ஆனால் ஆரம்பிச்சப்பிறகுதான் இது கஷ்டம்னு தெரிஞ்சுது. தமிழ்ல ஒரு ஷாட் நாலஞ்சு டேக் போகுதுன்னா அது ஓ.கே ஆனதும் அப்படியே தெலுங்குல ஷிப்ட் ஆகணும். ஒவ்வொரு ஷாட்டுமே இப்படிதான் பண்ணினோம். தமிழ், தெலுங்குக்குனு சில ஆர்ட்டிஸ்டுகள் மாறுவாங்க. எங்க ஒட்டுமொத்த டீமுக்குமே இது புது அனுபவம்.”

“இயக்குநர் எஸ்.ஜே.சூர்யா  இதில் உங்களுக்கு வில்லன். அவர் ஏற்கெனவே உங்களை இயக்கி இருக்கார். ஒரு நடிகரா அவர் எப்படி பெர்ஃபார்ம் பண்றார்?”

“அவர் என்னை இயக்கும்போது நடிச்சு காட்டிதான் காட்சிகளை விளக்குவார். ‘இவர் பயங்கரமான பெர்ஃபார்மர்’னு அப்பபவே எனக்குத் தெரிஞ்சுடுச்சு. அதை ‘இறைவி’யிலும் நிறுபிச்சு இருந்தார். அந்தப் படத்தை நான் சமீபத்தில்தான் பார்த்தேன். எக்ஸ்ட்ராடினரி பெர்ஃபார்மன்ஸ். உடனே போன்ல பிடிச்சு பாராட்டினேன். இப்ப அவரின் நடிப்பை நான் மட்டும் இல்லை. ஒட்டுமொத்த டீமுமே பாராட்டிட்டு இருக்கு.”

“ஓ.கே. தமிழுக்கு வந்துட்டீங்க. எப்படி இருக்கு இந்த அனுபவம். இங்க உள்ள நடிகர்கள்ல யார்கூட ரெகுலர் டச்ல இருக்கீங்க?”

“முதல்ல நான் இவ்வளவு நல்லா தமிழ் பேசுறதை யாரும் எதிர்பார்க்கலை. ஆர்.ஜே.பாலாஜி, ‘ நான் தெலுங்கு ஆக்சன்ட் இருக்கும்னு நினைச்சேன். ஆனால் நீங்க ரொம்ப நல்லா பேசுறீங்க’ன்னார். நான் சூர்யாவை இன்னும் சந்திச்சது இல்லை. ஆனால் அவர் ஹைதராபாத் வரும்போதெல்லம் தன் பேட்டிகள்ல என்னை குறிப்பிடுவார். விஜய் சாரைப் பார்த்து ரொம்ப நாளாச்சு. ரொம்ப நாளுக்குமுன் ஏவி.எம் ஸ்டுடியோவில் நான் ஒரு தெலுங்கு பட ஷூட்ல இருக்கும்போது பார்த்து பேசினது. அவர் அவ்வளவு ஃப்ரெண்ட்லி. ‘ஒக்கடு’ சமயத்தில்கூட போன்ல அவ்வளவு பாசிடிவ்வா போன்ல பேசிட்டு இருந்தார்.”

“தெலுங்கு சினிமாவில் வித்தியாசமான முயற்சிகள் நடக்குதா? நீங்கக்கூட ‘நேன் ஒக்கண்டே’னு ஒரு வித்தியாசமான முயற்சி பண்ணுனீங்களே?”

“ஆமாம், அது மூணு வருடங்களுக்கு முன் பண்ணின படம். அதை ரசிகர்கள் அப்ப ஏத்துக்கலை. அது ஒரு பொங்கல் விடுமுறையில ரிலீஸ் ஆச்சு. அந்தமாதிரியான ஃபெஸ்டில் ஹாலிடேஸுக்கு நம் மக்கள் எப்போதும கிராமப் பின்னணி, குடும்பப் பின்னணி உள்ள படங்களைத்தான் எதிர்பார்ப்பாங்க. ஆனால் அது ஒரு டார்க் ஃபிலிம். அதனாலதான் அதை மக்கள் ஏத்துக்கலைனு நினைக்கிறேன். ஆனால் இப்ப வந்தா கண்டிப்பா நல்லா போகும. ஏன்னா ரசிகர்களும் வளர்ந்திருக்காங்க. புது அனுபவங்களை எதிர்பார்க்கிறாங்க.” 

“அந்தமாதிரியான வித்தியாசமான முயற்சிகள் இங்க தமிழ்ல நடக்குறதா நினைக்கிறீங்களா?”

“நிச்சயமா. தமிழ்ல எப்பவுமே ஃப்ரெஷ்ஷா பண்ணுவாங்க. ஏன்னா டைரக்டர்கள், டெக்னிஷியன்கள்னு இங்க உள்ளவங்க எங்கயோ இருக்காங்க. ரொம்ப ஃப்ரெஷ்ஷான, புதுப்புது ஐடியாஸோட பண்ணுவாங்க. ஏன்னா இங்க ஆடியன்ஸ் அதை ஏத்துக்கிறாங்க. இப்ப தெலுங்குலயும் கொஞ்சம் கொஞ்சமா மாறுது. இப்ப ‘பெல்லிசுப்புடு’ மிகப்பெரிய கேம் சேஞ்சர். ஒரு கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட படம். டைரக்டர் ஒரு குறும்பட இயக்குநர். பல நடிகர்கள் புதுசு. அது அங்க ஓடும்னு யாருமே எதிர்பார்க்கலை. இப்ப அந்தமாதிரி நிறைய படங்கள் அங்க எடுக்குறாங்க. அது நிச்சயம் இன்டஸ்ட்ரிக்கு நல்லது.

‘இறைவி’ பார்த்தேன். ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. அதேபோல, ‘கத்தி’, ‘தெறி’ பிடிச்சிருந்துச்சு. இப்படி பெரிய படங்கள் எல்லாமே பார்த்துடுவேன். சின்னப் படங்களை யாராவது சொன்னா பார்ப்பேன். அப்படி மத்தவங்க சொல்லி பார்த்த சின்னப்படம், ‘கோலிசோடா’. வீட்ல க்யூப் இருக்கு. அதுல லோட் பண்ணி பார்த்துடுவேன்.”

மகேஷ்பாபுவை வெச்சு படம் பண்ணணும்னு பலர் காத்திருப்பாங்க. அப்படி இருக்கையில் ஒரு படத்தை எதன் அடிப்படையில் ஒப்புக்குவீங்க?”


“அப்படி நார்ம்ஸ் எதுவும் தனியா வெச்சுக்கிறது இல்லை. நான் எக்சைட் ஆகணும். ‘இது பண்ணலாம்’னு நமக்குள்ள இருந்து ஒரு ஆர்வம் வரணும். அப்படி இருந்தா நிச்சயம் பண்ணிடுவேன். சில டைம் மிஸ்டேக் ஆகலாம். ஆனால் பல டைம் வெற்றியடைச்சிருக்கேன். நான் ஒருத்தன்தான் அந்த முடிவை எடுப்பேன் என்பது அதுல ஒரு நல்ல விஷயம். ஒரு கதை கேட்டுட்டு? ‘எப்படி இருக்குனு நீங்களும் இதை கேட்டுட்டு சொல்லுங்களேன்’னு மத்தவங்களின் கருத்தை கேட்கவே மாட்டேன். கதை கேட்பதும் முடிவெடுப்பதும் நான் ஒருத்தன்தான். இது இப்ப மட்டுமில்ல, ஆரம்பத்துல அப்பாகூட எனக்கான கதையை கேட்டது கிடையாது- சில சமயங்களில் தோல்வியடைஞ்சிருக்கலாம். அதுவும் ஒரு லேர்னிங் எக்ஸ்பீரியன்ஸ்தான்.” 

“உங்களையும் விஜய்யையும் ஒப்பிட்டு பேசுறதை நீங்க கேள்விப்பட்டு இருக்கீங்களா? ரெண்டு பேரும் சேர்ந்து நடிப்பீங்களா?”

“ஆமாம், நிறைய பேர் சொல்வாங்க. அவரோடு என்னை ஒப்பிடுறதுல எனக்கு ரொம்ப சந்தோஷம். ‘பொன்னியின் செல்வன்’ டைம்ல கிட்டத்தட்ட இரண்டு பேரும் சந்திச்சு பேச வேண்டியது மட்டும்தான் பாக்கி. ‘பத்து பதினைஞ்சு நாள்ல லுக் டெஸ்ட் இருக்கு. சென்னைக்கு வரவேண்டி இருக்கும்’னு மணிரத்னம் சார் சொன்னார். பயங்கர ஆர்வமா இருந்தேன். ஆனால் எதிர்பாராத விதமா அந்தப் படம் ஆரம்பிக்கப்படாமலேயே போயிடுச்சு. நாங்க இருவரும் சேர்ந்து நடிக்கணும்னா கதை ரொம்ப முக்கியம். அதைவிட முக்கியம் எங்களை ஹேண்டில் பண்ணக்கூடிய டைரக்டர். எனக்குத் தெரிஞ்சு அப்படி ஏ.ஆர்.முருகதாஸ் சார்தான் இருக்கார்னு நினைக்கிறேன்.” -

 “திரிவிக்ரம், குணசேகர்னு சில டைரக்டருக்கே திரும்ப திரும்ப படம் தந்திருக்கீங்க. என்ன காரணம்?”

“ஆமாம். எனக்கு அந்த ரிலேஷன்ஷிப் ரொம்ப முக்கியம். த்ரிவிக்ரம், குணசேகர்...னு சில இயக்குநர்கள்கூட அடுத்தடுத்து படங்கள் பண்ணியிருக்கேன். அவங்கக்கூட எத்தனை படங்கள் பண்ணியிருக்கேன் என்பது கணக்குக் கிடையாது. அவங்க அடுத்தடுத்து எடுத்துட்ட வர்ற கதை எனக்கு பிடிச்சிருந்தா தொடர்ந்து பண்ணுவேன்.”

“இங்க இரண்டு பெரிய நடிகர்கள் சேர்ந்து ஒரு படம் பண்ணினால் நாங்க அதை பெரிய விஷயமா பேசுவோம். அப்படி நீங்க சமீபத்தில் வெங்கடேஷ்கூட சேர்ந்து நடிச்சிருந்தீங்களே?”

“அங்கயும் அது எப்போதாவது நடக்குற விஷயம்தான். கேட்டாங்க. நான் வெங்கடேஷ் சார்கூட ரொம்ப ஃப்ரெண்ட்லி. என்னை ஒரு தம்பிமாதிரிதான் அவர் பார்ப்பார். அந்த உறவால் அந்த படத்தை எங்களால் பண்ண முடிஞ்சது. ஈகோ இல்லாமல். ஒரு படத்தை நம்பி பண்ணினோம். படமும் பெரிய வெற்றி. சந்தோஷம்.”

ஃபேமிலியைப் பற்றி பேசுவோம். உங்க படங்களில் அப்பாவுக்கு, உங்க பசங்களுக்கு பிடிச்ச படங்கள் பற்றி சொல்லுங்க?”

“முதல்ல அப்பா படங்களில் எனக்கு ரொம்பப் பிடிச்ச ஒரு படம் ‘அல்லுடு சீதாராமய்யா’. அது ஒரு கிளாசிக். சுதந்திர போராட்ட வீரர் ஒருத்தரைப் பற்றிய படம். அந்தப் படத்தை நான் அடிக்கடி போட்டுப் பார்ப்பேன். நான் நடிச்சதில் அவருக்கு பிடிச்ச படம் ‘முராரி’. அதை தியேட்டர்ல என்கூட மார்னிங் ஷோ பார்த்தார். படம் முடிஞ்சதும் ஒண்ணும் சொல்லலை. ஷோல்டர் மேல ஆறுதலா கைய வெச்சார். இன்னும் எத்தனை படங்கள் பண்ணினாலும் அந்த ஒரு தருணம் திரும்பி வராது. என் பையன் கவுதம், 10 வயசு ஆகுது. இப்பதான் படங்கள் பாக்குறான். இப்ப அவனுக்கும் பிடிச்சமாதிரி படங்கள் பண்ண வேண்டி இருக்கு. அது கூடுதல் டென்ஷன். அவனுக்கு ‘ஸ்ரீமந்துடு’ ரொம்பப் பிடிச்ச படம். அதுக்கு முன் ‘ஒன்’ல அவனும் நடிச்சான். அது க்ரைம், ஆக்ஷன் படம். அதனால் அது அவனுக்கு பிடிக்கலை. அதேபோல நான் அழுவுற மாதிரி காட்சிகள் இருந்தா அவனுக்கு பிடிக்காது. அவனுக்கு நடிப்பில் ஆர்வம் இருக்கு. ஆனால் அது நிஜமான ஆர்வமா இல்லை ஸ்கூலுக்கு போகாம பங்க் பண்றதுக்கான ஆர்வமானு தெரியலை.”

“அன்னைக்கு பார்த்தமாதிரி இன்னைக்கும் அப்படியே இருக்கீங்க. ஃபிட்னஸ், டயட் என்ன ஃபாலோ பண்றீங்க?”

“நடிகர்களுக்கு டயட், ஒர்க்கவுட் கட்டாயம். அதை ஆரம்பத்துல இருந்தே நான் ஃபாலோ பண்றேன். ரொம்ப முக்கியமா, அதிக டென்ஷன் எடுத்துக்க மாட்டேன். எப்பவும் சந்தோஷமா சிரிச்சிட்டே இருக்கணும். அதுல இருந்துதான் ஒரு புத்துணர்ச்சி வரும்னு நம்புறேன்.”

“தமிழ்ல தொடர்ந்து படங்கள் பண்ணுவீங்களா?”

“உடனடியா பண்றது கஷ்டம். ஏன்னா அடுத்த மூணு படங்கள் தெலுங்குல கமிட் பண்ணிட்டேன். நல்ல கதை, டைரக்டர் வந்தா நிச்சயம் பண்ணுவேன். அப்படி பண்ணினால் அது பைலிங்குவல்தான்.”

அடுத்த கட்டுரைக்கு