Published:Updated:

‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக்

‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக்
‘ஏ ஃபார் ஆப்பிள்’னு ஏன் பேர் வெச்சேன்?” - இயக்குநர் அட்லி லாஜிக்

ராஜா ராணி, தெறி படங்களுக்குப் பிறகு விஜய் நடிக்கும் படத்தை இயக்குகிறார் அட்லி. இதோடு கமல்ஹாசனின் அசோசியேட்டான 'ஐக்' இயக்குநராக அறிமுகமாகும் 'சங்கிலி புங்கிலி கதவ தொற' படத்தினை தனது 'ஏ ஃபார் ஆப்பிள்' தயாரிப்பு நிறுவனம் மூலம் தயாரிக்கிறார் அட்லி. அதைப் பற்றியும் தனது அடுத்த தயாரிப்புகள் பற்றியும் பத்திரிகையாளர்களை சந்தித்து பேசினார் இயக்குநர் அட்லி.

"எல்லாருக்கும் வணக்கம், ரொம்ப நாள் கழிச்சு உங்கள சந்திக்கறேன். போன வருஷம் உங்களப் பார்த்தேன், மறுபடி இப்போ தான் பாக்கறேன். அதுக்கு காரணம் 'ஏ ஃபார் ஆப்பிள்'. ராஜா ராணி எப்படி என்னோட முதல் படியா இருந்ததோ, அதே போல ஆறு வருஷத்துக்குப் பிறகு என்னோட அடுத்த படி இந்த ஏ ஃபார் ஆப்பிள். எதனால இந்த பேர்னு யோசிப்பீங்க. எதுவா இருந்தாலும் நமக்கு ஆரம்பம்னு ஒன்னு இருக்கும்ல. அந்த வகையில் தயாரிப்பாளரா எனக்கு இது ஓர் ஆரம்பம். எனக்குள்ள ரொம்ப நாளா இருந்த யோசனை இது. எப்படி ஷங்கர் சார், பாலாஜி சக்திவேல் சாருக்கு ஒரு வாய்ப்பு கொடுத்தாரோ, முருகதாஸ் சார், சரவணன் சாருக்கு, எனக்கு வாய்ப்பு கொடுத்த மாதிரி நானும் வளரும் இயக்குநர்களுக்கு ஆதரவு கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட பட நிறுவனம் தான் 'ஏ ஃபார் ஆப்பிள்'.  

முதல் படத்தில் கமல்ஹாசனின் உதவியாளரான என் நண்பன் ஐக்-கை அறிமுகப்படுத்துகிறேன். ஐக் எம்.ஆர்.ராதவின் பேரன், ரொம்ப திறமைசாலி. எனக்கு பேய்னாலே ரொம்ப பயம், யார் பேய்க்கு ரொம்ப பயப்படறாங்களோ அவன் தான் பேயப் பத்தியே பேசிட்டிருப்பான்னு சொல்வாங்க. அந்த மாதிரி ஃபேமிலியோட சேர்ந்து ரசிச்சுப் பார்க்கும் படியான பேய்ப்படம் ஒண்ணு தயாரிக்கற ஆர்வத்தில் இருந்தேன். அப்போ தான் ஐக் சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தின் ஒரு முக்கியமான சீனை சொன்னார். அது ஹீரோவும் ஹீரோயினும் முதல் முதல்ல மீட் பண்ணும் சீன். அப்போ ஒரு சம்பவம் நடக்கும்னு அந்த சீன் இருந்தது. ‘ஓகே பிரதர் முழு ஸ்க்ரிப்டும் ரெடி பண்ணுங்க’னு சொன்னேன். மூணே மாசத்தில் ஸ்க்ரிப்டோட வந்தார். ஜீவா என்னோட டார்லிங், நான் என்ன கேட்டாலும் எனக்காக முதல் ஆளா செய்யக் கூடிய டார்லிங். இந்தக் கதைய அவர்கிட்ட கொண்டு போனேன், 'நானும் ஒரு ஃபேமிலி என்டர்டெயினர் பண்ணனும்னு நினைச்சிட்டிருந்தேன்னார். சர சரனு ஸ்ரீதிவ்யா, சூரி, ராதிகா மேடம்,  கோவை சரளா மேடம், தம்பிராமையா சார், இளவரசு சார்னு ஒரு டீம் அமைஞ்சது. கூடவே ஃபாக்ஸ் ஸ்டார் ஸ்டுடியோவும் பக்கபலமா இருந்தாங்க. இப்போ படத்தின் இயக்குநர் ஐக் பேசுவார்” என அவரை மேடை ஏற்றினார் அட்லி.

“எந்த ஒரு கதைனாலும் அதை யார்மூலமா தகுந்த ஆட்கள் கிட்ட கொண்டு போறதுன்னு ஒரு சந்தேகம் வரும். சங்கிலி புங்கிலி கதவத் தொற படத்தின் ஐடியாவ யார்கிட்ட கொண்டு போலாம்னு மகேந்திரன் சார்கிட்ட பேசினேன். அவர் தான் அட்லியை அறிமுகப்படுத்தினார். அவருக்கு இந்த இடத்தில் நன்றி சொல்லிக்கிறேன். மாலையில் படத்தின் இசை வெளியீட்டு விழா இருக்கு, அங்கு இன்னும் நிறைய பேசலாம், நன்றி வணக்கம் எனக் கூறிச் சென்றார்.

மீண்டும் மேடை ஏறிய அட்லி, இனி “ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனத்தில் அடுத்த நடவடிக்கைகளா சில தயாரிப்புகள் நடக்க இருக்கு. என்னுடன் 10 ஆண்டுகளாக பயணித்து வரும் சூர்யா பாலகுமாரன் இயக்கும் படத்தை இரண்டாவதா தயாரிக்கிறேன். எழுத்தாளர் பாலகுமாரனின் மகன் இவர். அதைத் தொடர்ந்து, என் டீமில் சிறந்த திரைக்கதையாளனாக இருக்கும் அசோக் இயக்கும் படத்தை மூன்றாவது தயாரிப்பாகவும் தயாரிக்க இருக்கிறேன். இந்த இரண்டு படங்களின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜூன் மாதம் நடக்கும். என்னடா 'தளபதி 61' பத்தி எதுவுமே பேசலையேனு நினைக்க வேண்டாம். இந்த சந்திப்பு முழுக்க முழுக்க ஏ ஃபார் ஆப்பிள் நிறுவனமும் அதன் அடுத்தடுத்த தயாரிப்புகள் பற்றிய அறிமுகத்துக்காக மட்டும் தான். நிச்சயமா ஜூன் மாதம் சந்திக்கும் போது உங்க ஒவ்வொருத்தருடைய கேள்விகளுக்கும் நான் பதில் சொல்றேன். இப்போதைக்கு தளபதி 61 படப்பிடிப்பு நல்லா போய்ட்டிருக்குங்கறதை மட்டும் சொல்லிகிட்டு விடைபெறுகிறேன்” என அட்லி பேசினார்.