தாதா சாஹேப் பால்கே’ இயக்குநர் கே.விஸ்வநாத் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்! | Facts about Dadasaheb Phalke Award winner K. Viswanath

வெளியிடப்பட்ட நேரம்: 18:16 (25/04/2017)

கடைசி தொடர்பு:18:16 (25/04/2017)

தாதா சாஹேப் பால்கே’ இயக்குநர் கே.விஸ்வநாத் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்!

ந்திய மக்களுக்கு முதன்முதலில் சினிமாவை அறிமுகப்படுத்தியவர் தாதா சாஹேப் பால்கே. இவர், `இந்திய சினிமாவின் தந்தை' என்று அழைக்கப்படுகிறார். இந்திய சினிமாவில் சிறப்பான பங்களிப்பைச் செய்தவர்களுக்கு ஆண்டுதோறும் இவர் பெயரிலேயே விருது வழங்கி கெளரவிக்கிறது மத்திய அரசு. அந்த வகையில், 2016-ம் ஆண்டுக்கான 'தாதா சாஹேப் பால்கே' விருதைப் பெறுகிறார், இந்தியாவின் மிகமுக்கியமான இயக்குநர்களில் ஒருவரும் நடிகருமான கே.விஸ்வநாத். 

தாதா சாஹேப் பால்கே

87 வயதான கே.விஸ்வநாத், ஆந்திர மாநிலத்தில் பிறந்தவர். தனது 27-வது வயதில் சென்னை ஸ்டூடியோ ஒன்றில் சவுண்ட் இன்ஜினீயராகத் தன் திரைப் பயணத்தைத் தொடங்கினார். சில தெலுங்குப் படங்களுக்கு சவுண்ட் இன்ஜினீயராகப் பணியாற்றிவிட்டு, திரைப்பட இயக்கம் மீதிருந்த ஈர்ப்பின் காரணமாக, பிரபல தெலுங்கு இயக்குநர் அதுர்தி சுப்பாராவிடம் உதவி இயக்குநராக இணைந்தார். பிறகு, ரம்னோத், கே.பாலசந்தர், பாபு எனப் பல இயக்குநர்களிடம் சினிமாவைக் கற்றார். 1965-ம் ஆண்டு 'ஆத்மகெளரவம்' என்ற நாவலை அதே பெயரில் தெலுங்குத் திரைப்படமாக எடுத்து, இயக்குநராக அறிமுகமானார். முதல் படமே சிறந்த திரைப்படத்துக்கான நந்தி விருதைப் பெற்றது.

பிறகு 'பிரைவேட் மாஸ்டர்', 'சுடிகுண்டலு', 'காலம் மாறிண்டி', 'ஓ சீதா கதா', 'ஜீவன ஜோதி', 'சங்கராபரணம்' எனத் தெலுங்கு, இந்தி மொழிகளில் 50-க்கும் மேற்பட்ட திரைப்படங்களை இயக்கியுள்ளார் கே.விஸ்வநாத். இவர் இயக்கிய 'சங்கராபரணம்', 'சாகர சங்கமம்' படங்கள் 100 சிறந்த படங்களில் ஒன்றாக இடம்பெற்று, இன்றும் கொண்டாடப்படுகிறது. இதில், கமல்ஹாசன் நடித்த 'சாகர சங்கமம்' தெலுங்குப் படம், 'சலங்கை ஒலி' என்ற பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. கமல்ஹாசன்-இளையராஜா கூட்டணியில் இவர் இயக்கிய 'சலங்கை ஒலி' திரைப்படம், கமல்ஹாசனின் கலைப் பயணத்தில் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது. 'சங்கராபரணம்' என்ற தெலுங்குத் திரைப்படம், சில வருடங்களுக்கு முன்புதான் அதே பெயரில் தமிழில் மொழிமாற்றம் செய்யப்பட்டது. சமீபத்தில், இந்தப் படம் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது.

அவர் தெலுங்கில் இயக்கிய ஸ்வாதி முத்யம் திரைப்படம், சிறந்த தெலுங்கு படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. 

 

கே விஸ்வநாத்-கே.பாலச்சந்தர்-கமலஹாசன்

தெலுங்கு, தமிழ், ஆங்கிலம் என மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேசும் திறமை பெற்ற கே.விஸ்வநாத், இயக்குநராக மட்டுமல்லாமல் நடிகராகவும் பயணித்தார். தெலுங்கு, தமிழ், இந்தி எனப் பல மொழிகளில் 40-க்கும் அதிகமான படங்களில் நடித்திருக்கிறார். தமிழில், 'குருதிப்புனல்', 'முகவரி', 'யாரடி நீ மோகினி', 'ராஜபாட்டை', 'சிங்கம்-2', 'உத்தமவில்லன்' உள்ளிட்ட படங்கள், இவரது பங்களிப்பில் குறிப்பிடத்தக்கவை. 

இயக்குநர், தயாரிப்பாளர், நடிகர் என சினிமாவின் பல்வேறு துறைகளிலும் கவனம் செலுத்தி, வெற்றிபெற்ற கே.விஸ்வநாத்துக்கு இசை, நடனம் மீதும் ஆர்வம் அதிகம். இதை 'சங்கராபரணம்', 'சலங்கை ஒலி' போன்ற படங்களில் பிரதிபலித்தார். இவர் 50-க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியிருந்தாலும், 'சங்கராபரணம்' படத்துக்கு அவர் கொடுத்த நேர்த்திதான், 37 வருடங்களாக அந்தப் படத்தைப் பேசுபொருளாக வைத்திருக்கிறது. 

சங்கராபரணம்

ஐந்து தேசிய விருதுகள், 20 நந்தி விருதுகள், பத்துக்கும் மேற்பட்ட ஃபிலிம்பேர் விருதுகள் என இந்திய சினிமாவின் தவிர்க்க முடியாத இயக்குநர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்கும் கே.விஸ்வநாத்துக்கு, இப்போது `தாதா சாஹேப் பால்கே' விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
மே மாதம் 3-ம் தேதி நடைபெறும் விழாவில், குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி இந்த விருதை அவருக்கு வழங்குகிறார்.

இதற்கு முன்பு 'தாதா சாஹேப் பால்கே' விருதை சத்யஜித் ரே, ராஜ்கபூர், லதா மங்கேஷ்கர், சிவாஜி கணேசன், கே.பாலசந்தர் உள்ளிட்டோர் பெற்றிருக்கிறார்கள். விருது பெறவிருக்கும் கே.விஸ்வநாத்துக்கு, ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருக்கிறார் நடிகர் கமல்ஹாசன் . 

- கே.ஜி.மணிகண்டன்

 

 

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க


டிரெண்டிங் @ விகடன்