வெளியிடப்பட்ட நேரம்: 19:30 (26/04/2017)

கடைசி தொடர்பு:19:30 (26/04/2017)

''தியேட்டரில் படம் ஓடாது. ஷூட்டிங்கும் நடக்காது'' - கடுகடு விஷால்

யாரிப்பாளர் சங்கத் தேர்தலை மட்டுமல்ல, சங்கத்தையும் பரபரப்பாக வைத்திருக்கிறார் விஷால். சென்ற மாதம் நடைபெற்ற தயாரிப்பாளர் சங்கத் தேர்தலில் தலைவர், செயலாளர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகள் அனைத்தையும் விஷால் தலைமையிலான அணி கைப்பற்றியது. நடிகர் விஷால், தயாரிப்பாளர் சங்கத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்நிலையில், திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் இன்று நடைபெற்ற திடீர் பத்திரிகையாளர்கள் சந்திப்பில் சில கோரிக்கைகளை முன்வைத்து, `` இவற்றை நிறைவேற்றாவிட்டால், மே 30-ம் தேதி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவோம்'' என அதிரடி அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார் விஷால்.

விஷால்

தமிழ் சினிமாவின் தீராதப் பிரச்னைகளில் ஒன்று திருட்டு வி.சி.டி பிரச்னை. சமீபத்தில்கூட திரைப்பட இசை வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்ட விஷால், 'திரையரங்குகளில் திருட்டு வி.சி.டி பதிவுசெய்பவர்களைக் கையும் களவுமாகப் பிடித்துத் தருபவர்களுக்கு, தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் ஒரு லட்சம் ரூபாய் பரிசு வழங்கப்படும்' என அறிவித்திருந்தார். இந்நிலையில், திருட்டு வி.சி.டி குறித்தும், தமிழ் சினிமாவின் தற்போதைய நிலைமை குறித்தும், திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று நடந்தது. இந்நிகழ்வில் தலைவர் விஷால், செயலாளர் ஞானவேல்ராஜா, பொருளாளர் எஸ்.ஆர்.பிரபு மற்றும் திரையரங்க உரிமையாளர்கள், சங்கத்தைச் சேர்ந்த நிர்வாகிகள்  எனப் பலரும் கலந்துகொண்டனர். ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன்வைத்தார்கள். அவை...

மத்திய அரசுக்கு : 

* ஜி.எஸ்.டி என்கிற புதிய வரிக்கொள்கையில் அதிகம் பாதிப்புக்குள்ளாகியிருப்பது திரைப்படத் துறையே. திரைப்படம் என்பது, ஒரு கலைப் படைப்பு. மக்கள் பார்வைக்குச் செல்லும்போது மட்டுமே அதில் வணிகம் நுழைகிறது. எனவே ஒரு திரைப்படம் முழுமையாகி வெளியிடத் தயாராகும் வரை, மிகவும் குறைந்தபட்ச வரி விதிப்பாக நான்கு அல்லது ஐந்து சதவிகிதம் மட்டுமே ஜி.எஸ்.டி-யாக இருக்க வேண்டும்.
* திரையரங்குகளில் திரைப்படம் வெளியிடும்போது, தமிழ்த் திரைப்படங்களுக்குக் குறைவாக ஜி.எஸ்.டி விதிக்கப்படவேண்டும்
* புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்கள், இதையே தொழிலாகச் செய்யும் தொலைபேசி மற்றும் இணைய சேவை நிறுவனங்களுக்கு உடனடியாக தடை விதிக்க வேண்டும். அவ்வாறு செய்பவர்களைக் கண்காணிப்பதற்காக, மத்திய அரசு கண்காணிப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும்.
* புதிய திரையரங்குகளுக்கு, ஜி.எஸ்.டி மற்றும் பல்வேறுவிதமான வரிகளிலிருந்தும் ஐந்து வருடங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும்.
* அங்கீகரிக்கப்பட்ட தொழிலாகக் கருதி, மற்ற தொழில் செய்வோருக்கு இருக்கும் அனைத்து வசதிகளும், மரியாதைகளும் திரைப்படத் தொழிலுக்கும் வழங்க வேண்டும். 

மாநில அரசுக்கு :

* திரையரங்குகளின் கட்டண முறையில் பெரும் மாற்றங்கள் கொண்டுவரவேண்டிய காலம் இது. திரையரங்குகளின் தன்மை, இருக்கும் இடம், ரசிகர்களுக்கான வசதிகள், பண்டிகை நாள்கள் மற்றும் வார இறுதிகள்... இவற்றின் அடிப்படையில் சிறப்புக் கட்டணம் கொண்டுவர எங்களுக்கு ஒத்துழைப்பு தரவேண்டும்
* திருட்டு வி.சி.டி ஒழிப்புக்கு, காவல் துறையின் சிறப்புத் தடுப்புப் பணியில் குறைந்தபட்சம் 1,000 நபர்கள் கொண்ட குழு அமைக்க வேண்டும். இப்போது இருக்கும் 96 பேர் கொண்ட குழு, எங்களுக்குப் போதவில்லை.
* திரைப்படத் துறையினரே இந்த 'பைரஸி தடுப்பு'க்கு எனத் தனி அணி அமைத்துப் போராட அரசு அனுமதி அளிக்க வேண்டும்.
* அரசு கேபிள் நிறுவனத்தின் தலைமையில் உள்ள கேபிள் டிவி ஆபரேட்டர்கள், தனியார் நிறுவனத்தின் தலைமையில் உள்ள தனியார் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் பலரும், எங்கள் திரைப்படங்களை முழுமையாக, சில காட்சிகளாக, பாடல் காட்சிகளாக... 24 மணி நேரமும் தொடர்ந்து ஒளிபரப்பும் கொடுமை நடக்கிறது. இதை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்.
* உரிமமின்றி திரைப்படங்கள் மற்றும் திரைப்படக் காட்சிகள், பாடல்களை ஒளிபரப்பும் பேருந்துகளுக்கு, அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் அளவுக்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும்.
* ஒரே இடத்தில் இரு திரையரங்குகள் இருப்பின், அவற்றை 'மல்ட்டிபிளெக்ஸ்' என்ற பெயரிலேயே கருத வேண்டும்.
* ஒரு திரையரங்கு உள்ள இடத்தில் இரண்டு அல்லது மூன்று சிறிய திரையரங்குகளாக மாற்றிக்கொள்ளும் உரிமை, திரையரங்க உரிமையாளர்களுக்குத் தர வேண்டும். அதற்கான அனுமதியையும் எளிமையாக்க வேண்டும்.
* இந்தத் துறையின் உடனடி வளர்ச்சிக்கு, சிறிய திரையரங்குகளை மாநிலம் முழுவதும் கட்ட வேண்டும். இதற்கான அனுமதிமுறைகளை எளிமையாக்க வேண்டும். மேலும், திரையரங்குகளைப் புதிதாக அமைக்கவும், புதுப்பித்துக்கொள்ளவும் 'அனுமதி விண்ணப்பம்' 60 நாள்களில் வழங்கப்பட வேண்டும்.

தயாரிப்பாளர் சங்கம்

இப்படியாக, திரைப்படத் தயாரிப்பாளர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் சங்கம் சார்பில் கூட்டறிக்கை வெளியிடப்பட்டது. இந்தச் சந்திப்பில் பேசிய விஷால், ''திருட்டு வி.சி.டி-யால், திரைத்துறைக்குப் பெரும் இழப்பு ஏற்படுகிறது; வருமானம் குறைந்துவிட்டது. மத்திய, மாநில அரசுகளிடம் கோரிக்கை மனு அளிக்க இருக்கிறோம். திருட்டு வி.சி.டி மற்றும் இணையதளம் மூலம் நடைபெறும் பதிவேற்றம் மற்றும் பதிவிறக்கத்தைத் தடுக்கவேண்டும். ஜி.எஸ்.டி-யில் திரைத்துறைக்கு குறைந்தபட்ச வரி விதிக்கவேண்டும். இவை எல்லாம் மே 30-ம் தேதிக்குள் நடக்கும் என்று நம்புகிறோம். இல்லையெனில், மே 30-ம் தேதி காலை 8:30 மணி முதல் காலைவரையற்ற வேலைநிறுத்தம் நடைபெறும். எந்த ஒரு திரையரங்கிலும் திரைப்படம் ஓடாது, படப்பிடிப்பும் நடக்காது'' எனத் தெரிவித்திருக்கிறார் விஷால்.
 

மத்திய, மாநில அரசுகள் என்ன செய்யப்போகின்றன?

 

நீங்க எப்படி பீல் பண்றீங்க