Published:Updated:

சென்னை 28 - அது எப்பவுமே நம்ம ஏரியா! #10YearsOfChennai28

சென்னை 28 - அது எப்பவுமே நம்ம ஏரியா! #10YearsOfChennai28
சென்னை 28 - அது எப்பவுமே நம்ம ஏரியா! #10YearsOfChennai28

இந்தியா, உலகத்துலேயே ஏழாவது பெரிய நாடு. மக்கள் தொகையில் இரண்டாவது இடம். பல சாதிகள், பல மதங்கள், பல மொழிகள் என கலாசார வேறுபாடுகள் நிறைந்த நாடு. இப்படிப் பல விஷயங்களில் வேற்றுமைபட்டுக் கிடந்தாலும், ஒரு விஷயத்தில் மட்டும் நம் இந்தியர்களோட ஒற்றுமையை அடிச்சுக்கவே முடியாது. அதுதான் கிரிக்கெட். அப்படி நம் நாடி, நரம்பு, ரத்தம், சதை, புத்தி எல்லாவற்றிலும் ஊறிப்போன கிரிக்கெட்டைக் களமாக எடுத்துக்கொண்டு சிக்ஸர் தட்டிய `சென்னை 600028' திரைப்படம் வெளியாகி இன்றோடு பத்து வருடங்கள் ஆகின்றன. வாங்களேன் பத்து ஆண்டுகளுக்கு முன் பார்த்த மேட்சின் ஹைலைட்ஸை இப்போது பார்ப்போம்...

நீயும் நானும் பவுலிங்கும் ஃபீல்டிங்கும் :

காலை ஒன்பது மணிக்கு கடவுள் வாழ்த்துப் பாடும் பள்ளிக்கு எட்டரை மணிக்கு எழுந்து கிளம்புகிற, அதே ஒன்பது மணிக்கு கிரவுண்டில் கிரிக்கெட் மேட்ச் என்றால் 6 மணிக்கு அலாரம் வைத்து 5 மணிக்கே எழுந்து கிளம்புகிற `நார்மல் மனுஷன் ஃப்ரம் இந்தியா' நீங்களும் நானும்தான் அந்த ஷார்க்ஸும், ராக்கர்ஸும், பேட் பாய்ஸும். கல்லோ, கரன்ட் கம்பமோ தரையில் கம்பாய் நிற்கும் அனைத்தையும் பால்யத்தில் ஸ்டெம்பாய் பார்த்த நீங்களும் நானும்தான் அந்த கார்த்திக்கும், ஜானும், டாக்டர் ராஜுசுந்தரம் பையன் ஹரியும். கேட்ச் பிடிக்கவே தெரியாத சீனுவும், சிங்கிள் சிங்கிளாக தட்டி ஆடும் கோபியும், குருட்டுச் சுத்து சுத்தும் ஏழுமலையும் எல்லா டீம்களிலும் இருக்கிறார்கள். இப்படி கிரிக்கெட் விளையாட கைலியை மடித்துக்கட்டிச் சென்றவர்களையும் சரி, தோளில் கிட் பேக்கை தூக்கிச் சென்றவர்களையும் சரி... இப்படி நினைக்கவைத்தது தான் அந்த சுண்ணாம்பு கால்வாய் பசங்க செய்த லாஜிக்கலான மேஜிக். ( ஸாரி பாஸ்... இன்னொரு தடவை சுண்ணாம்பு கால்வாய்னு சொல்லமாட்டேன்.) அதிலும், வயசுக்குத் தகுந்த சகவாகசமே இல்லாமல் இருக்கும் இளவரசு போன்றோரும் எல்லா கேங்கிலும் இருப்பார்கள்.

மேலே ஏறி வாரோம் :

`பகவதி' படத்தில் விஜய்க்கு தம்பியாக நடித்த ஜெய், `ஜி' படத்தில் அஜித்துக்கு நண்பனாக நடித்த நிதின் சத்யா, '12-பி' படத்தில் ஒரு சீனுக்கு மட்டும் தலையைக் காட்டிய சிவா, `உனக்கும் எனக்கும்' படத்தில் நடித்த அரவிந்த் ஆகாஷ், நடன இயக்குநர் அஜய்ராஜ் எனப் பலருக்கும் `சென்னை 600028' புது முகவரி தந்தது. அறிமுக நடிகர்களான விஜய் வசந்த், விஜயலக்‌ஷ்மி ஆகியோருக்கும் இந்தப் படம் நல்ல ஆரம்பம். சிவா, ஜெய், விஜய் வசந்த், அரவிந்த் ஆகாஷ், நிதின் சத்யா, இனிகோ பிரபாகரன், பிரேம்ஜி ஆகியோர் தனித்தனியாக ஹீரோவாகவே உயர்ந்தார்கள். எடிட்டர்கள் பிரவீன் கே.எல், என்.பி.ஶ்ரீகாந்த், ஒளிப்பதிவாளர் சக்தி சரவணன் ஆகியோருக்கும் இது சூப்பர் விசிட்டிங் கார்டு. எல்லாப் புகழும் வெங்கட்பிரபுவுக்கே... என்ன அருமை சரவணன் இது..!

கண்டிப்பா ரெண்டு ஸ்லிப் தேவை :

`சென்னை 600028' படத்தின் `ஸ்ட்ராங் ஸோன்' கண்டிப்பாக இசை தான். பாடல்களை யுவன் ஷங்கர் ராஜா பார்த்துக்கொள்ள, பின்னணி இசையில் பிரித்து மேய்ந்தார் பிரேம்ஜி அமரன். டைட்டில் கார்டு `உள்ளே வா' முதல் `எண்டு கார்டு `ஜல்சா ரீமேக்' வரை படத்தில் மொத்தம் 9 பாடல்கள். எஸ்.பி.பி, யோகி பி, கருணாஸ், விஜய் ஏசுதாஸ் எனக் கிட்டதட்ட 19 பாடகர்களின் குரல்கள் அவற்றில் பிண்ணிப் பிணைந்திருக்கின்றன. பாடல்கள் ரிலீஸான முதல் நாளே 25,000 சிடிக்கள் விற்றுத் தீர்ந்தன. முன்னதாகவே ரிலீஸான பாடல்களை சி.டி தேயத்தேயக் கேட்டிருந்தும், படத்திலும் இசை கேட்க அவ்வளவு புதுசாக இருந்ததற்குக் காரணம் பிரேம்ஜியேதான். க்ளைமாக்ஸ் காட்சியில், ராக்கர்ஸ் டீம் கீப்பர் நூழிலையில் மிஸ் செய்ததை ( ஜஸ்ட் மிஸ் ஆகிடுது ) பேரலையாக மாற்றிக் காட்டியது படத்தொகுப்பும், பின்னணி இசையுமே.  

பாட்டி போட்டோ உடைஞ்சது :

`சென்னை 600028', தமிழ் சினிமாவில் காலங்காலமாய் தொன்றுத்தொட்டு வரும் ஒரு ஹிட்டு பாரம்பரியத்தை சுக்குநூறாக உடைத்த படம். க்ளிஷேக்களை எல்லாம் கிழித்து எறிந்த படம். தமிழ் சினிமாவில், ஹீரோவின் டீம் செமி ஃபைனலில் தோற்றாலும் ஃபைனலுக்குச் சென்று ஜெயிக்கும். ஆனால், ஷார்க்ஸ் டீமுக்கு ஃபைனலில் என்ன ஆனது என்பது தான் ஊருக்கே தெரியுமே. எப்படிப் போட்டாலும் அடிக்கும் டீமிடம் மாட்டிக்கொண்டு சிக்கிச் சின்னாபின்னமாவார்கள். ஃபைனல் மேட்சுகளில் தத்தளித்துக் கொண்டிருக்கும் டீமை ஹீரோ தான் போராடி ஜெயிக்க வைப்பார். ஆனால், இங்கோ ஆஸ்பத்திரியில் அமர்ந்துகொண்டு சாத்துக்குடி ஜூஸ் சாப்பிட்டுக் கொண்டிருப்பார் சிவா. ஹீரோயின் இருப்பதனால் சிவா மட்டும் தான் படத்தின் ஹீரோ என்று சொன்னால் ராக்கர்ஸ் டீமே நம்மை அடிக்க பீர் பாட்டிலோடு ஓடிவருவார்கள். ஷார்க்ஸ் டீமில் விளையாடும் அரவிந்தில் ஆரம்பித்து அர்னால்டு வரை எல்லோருமே இங்கே ஹீரோக்கள் தான்.  

படத்தில் வரும் வசனங்களும் ரொம்பவே யதார்த்தமானது, தமிழ் சினிமாவிற்கு ரொம்பவே புதியது. பெரும்பாலும் கும்பல் ஆஃப் பசங்க அமர்ந்து பேச ஆரம்பித்தால் சினிமா வசனங்கள் தான் அடிக்கடி கவுன்டராக வரும்.  அதேபோன்று, `என்ன கொடுமை சரவணன் இது?' எனும் சீரியஸான டயலாக்கை டைமிங்கில் காமெடியாய் தட்டிவிடுவார் பிரேம்ஜி. `அவன் தான்டா ராக்கர்ஸ் ராஜகோபாலன்',`பவுலிங்கா ஃபீல்டிங்கா...',`பையன் வேற பார்க்க விஜய் மாதிரி இருக்கான்' என யதார்த்தமாக நாம் பேசும் வார்த்தைகளிலேயே ஹ்யூமரை அள்ளித் தூவியிருந்தார் வெங்கட்பிரபு. நிதின் சத்யாவிடம் சிவா மன்னிப்புக் கேட்கும் காட்சியாகட்டும், ராக்கர்ஸ் டீமிடம் ஜெய் கடுப்பாகி போனில் பேசுவதாகட்டும்   இப்படி,  க்ளிஷேக்களை உடைத்து, சென்னையில் வாழும் நடுத்தர வர்க்கத்து இளைஞர்களின் வாழ்க்கையை அவ்வளவு அழகானதாக, யதார்த்தமாகக் காண்பித்து, காட்சிக்குக் காட்சி நம்மை சிரிக்க வைத்து, இடையில் கொஞ்சம் அழவைத்து, பாஸிட்டிவ் நினைவுகளால் நம் பால்யத்துக்கு கூட்டிச் சென்ற `சென்னை 600028'  தமிழ் சினிமா கண்ட செம சினிமா.