Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

“சீக்கிரமே நான் டியூஷன் மிஸ்!” - நெகிழும் நடிகை ஊர்வசி

நடிகை ஊர்வசி

தான் நடிக்கும் எல்லா படங்களிலும் கொடுக்கப்பட்ட தனக்கான கதாப்பாத்திரத்தில் தன் தனித்துவத்தை வெளிப்படுத்தி சிரிக்கவும், அழவும் வைக்கிற திறமை கொண்ட நடிகை ஊர்வசி. பள்ளிப் படிப்பைக்கூட முடிக்காத நிலையில் கதாநாயகியாக நடிக்கத் தொடங்கி, 80, 90-களில் பிரபலமான நடிகையாக பல மொழிகளிலும் உச்சம் தொட்டவர், இன்னும் சில ஆண்டுகளில் டீச்சராகவும் அவதாரம் எடுக்கவிருக்கிறார். தன் நடிப்பில் விரைவில் திரைக்கு வரவிருக்கும் 'மகளிர் மட்டும்' திரைப்படம் பற்றியும், தான் எடுக்கவிருக்கும் டீச்சர் அவதாரம் குறித்தும் உற்சாகமாக மனம் திறந்து பேசினார் நடிகை ஊர்வசி.

"கல்யாணத்துக்கு முன்பும், பின்பும் ரொம்பவே ஆக்டிவாகதான் வொர்க் பண்ணிகிட்டு இருக்கேன். எல்லா காலகட்டங்கள்லயும் நடிக்கும் படங்களின் கதையை பலமுறை கேட்டு, அது எனக்குப் பிடிச்சும், பெண்களுக்கு முக்கியத்துவம் உள்ளதுமாக இருக்கானு பார்த்துதான் ஒத்துக்குவேன். பணத்துக்காகவும், எண்ணிக்கைக்காகவும், புகழுக்காகவும் இதுவரைக்கும் எந்த படத்துலயும் நடிக்க ஒத்துக்கிட்டதே இல்லை.

ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு போனபிறகு சொல்லித் தர்ற சீனை எனக்கான மேனரிசம் கலந்து அந்த கேரக்டருக்கு உயிர்கொடுப்பேன். நடிப்புக்குனு இதுவரை பயிற்சி எடுத்துகிட்டதே இல்லை... கடவுளுக்கு நன்றி" என நெகிந்தவர் 'மகளிர் மட்டும்' திரைப்படம் பற்றி பேசினார்.

மகளிர் மட்டும் படத்தில் நடிகை ஊர்வசி

"1994-ல் ரிலீஸ் ஆன படம் 'மகளிர் மட்டும்'. முழுக்க பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து படம் எடுத்தா ஓடுமானு பலரும் பயப்பட்டாங்க. கமல்ஹாசன் தன் ஹீரோ பிம்பத்தை ஒதுக்கி வைச்சுட்டு வந்து நடிச்சு கொடுத்ததோட தயாரிக்கவும் செய்ஞ்சார். செம ஹிட்டான அந்த படத்தோட பேர்ல 23 வருஷம் கழிச்சு பெண்களுக்கான 'மகளிர் மட்டும்' இப்ப ரிலீஸ் ஆகப்போகுது. பெண்களுக்கான ஒரு படம் வெளிவர 20 வருஷம் பிடிக்குதுனு நினைச்சா ரொம்பவே வருத்தமா இருக்குது.

குறிப்பா 'மகளிர் மட்டும்' படத்துல நடிச்சது மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுத்திருக்குது. நல்ல டீம், உடன் நடிச்ச ஜோதிகா, பானுப்பிரியா, சரண்யானு ஃப்ரெண்ட்ஸ் டீமோடநடிகை ஊர்வசி நடிச்சது ஜாலியான அனுபவமாகத்தான் இருந்துச்சு. நாங்க நாலு பேரும் சேர்ந்து ஒரு பாட்டையும் பாடியிருக்கிறோம். சுத்தமா பாடவே வராத என்னோட குரலை பாடலா கேட்டு, யாரும் என்னை திட்டீடாதிங்க. கல்யாணத்துக்குப் பிறகா தன்னோட ஒவ்வொரு படத்துக்குமான கதை செலக்‌ஷனை ஜோதிகா ரொம்பவே சிரத்தையோட கையாள்றதை ஆச்சர்யமாகப் பார்க்குறேன். ஜோதிகாவை கெளரவப்படுத்த அவங்க ஒட்டுமொத்த குடும்பமும் ஆடியோ ரிலீஸ்ல கலந்துகிட்டது சந்தோஷமா இருந்தது. எல்லா வீடுகளிலும் பெண்களுக்கு முக்கியத்தும் கொடுக்கும் இதுமாதிரியான விஷயத்தை ஃபாலோ செய்யணும்" என்பவரின் கவனம் தற்போதைய சினிமா மீது திரும்புகிறது.

நடிகை ஊர்வசி''இப்போ பார்க்குற, கேட்குற, ரசிக்குற சினிமாக்கள் அதிகப்படியான கலாச்சார சீரழிவோடு, குழந்தைகளை தீய வழிக்கு கொண்டுபோகுற மாதிரிதான் இருக்குது. அதை நினைச்சா ஒரு தாயா ரொம்பவே வருத்தமாவும் பயமாவும் இருக்குது. இப்படிப்பட்ட வளர்ச்சி சினிமாவுக்கு நல்லதில்லைங்கிறதை ஒரு சினிமா ஆர்டிஸ்டா ஒத்துக்கிறேன். சமூகத்தை நல்வழிப்படுத்துற கதைகளுடன்கூடிய படங்கள் நிச்சயம் அதிகமா வரணும். அவை வெற்றியும் பெறணும். நான் பீக்ல இருந்த 80-களின் காலகட்டத்துல ரிலீஸ் ஆகும் படங்களின் எண்ணிக்கையும், தியேட்டர்களின் எண்ணிக்கை குறைவா இருந்துச்சு. இப்போ இந்த ரெண்டுமே அதிகமாகிடுச்சு. கூடவே நிறையப் பேரு ஆன்லைன், திருட் விசிடியில படம் பார்க்குறாங்க. இதெல்லாம் நல்ல படங்கள்கூட சீக்கிரமே நடையைகட்ட வேண்டிய சூழலை உருவாக்குது. இதனாலேயே எந்த படம் ஹிட் ஆகும்னு கணிக்க முடியமாட்டேங்குது. பெரிய ஹிரோக்களின் படங்கள்கூட வந்த தடம் தெரியாம போயிடுது. எங்க காலத்தோடு ஒப்பிடுறப்போ, இப்போதைய நிலைமை ரொம்பவே வருத்தமா இருக்குது" என்பவர் விரைவில் தான் எடுக்க இருக்கும் டீச்சர் அவதாரம் குறித்து நெகிழ்ச்சியாகக் கூறுகிறார்.

முந்தானை முடிச்சு படத்தில் நடிகை ஊர்வசி

"ஒன்பதாவது படிச்சுகிட்டு இருந்தப்ப 'முந்தானை முடிச்சு' படத்துல ஹிரோயினா நடிக்க வெச்சார், பாக்கியராஜ் சார். அதுவும் முதல் படத்துலயே ரெண்டாம் தாரம் கேரக்டர். துணிஞ்சு நடிச்சேன். தொடர்ந்து பல மொழிகள்லயும் ஏராளமான கேரக்டர்கள்ல நடிச்சேன். ஆனா என்னோட முதல் படத்தோடு நடிப்புக்கு முழுக்குப் போட்டுட்டு, மறுபடியும் ஆசையா படிக்கப் போயிடலாம். டீச்சர் ஆகிடலாம்னு நினைச்சேன். ஆனா அந்த ஆசையிலயே கிட்டத்தட்ட 50 படங்கள்ல ஹிரோயினா நடிச்சிட்டேன். அதுக்குப் பிறகாதான் என்னோட ஆசை இப்போதைக்கு நிறைவேராதுன்னு உணர்ந்தேன். அதனால இனி சினிமாதான் நம்ம உலகம்ங்கிறதை உணர்ந்தேன். தொடர்ந்து நடிப்புலமட்டும் முழுக் கவனத்தை செலுத்தினேன். எவ்ளோ பெரிய பிரபலமாக, உயர்ந்த பதவிகள்ல இருக்குறவங்களா இருந்தாலும் அவங்களோட வெற்றிக்கு ஒரு ஆசிரியர்தான் முதல் காரணமா இருப்பாங்க. அதனாலயே என்னோட ஆசையான டீச்சர் கனவு நிறைவேறாததால, எந்த ஒரு டீச்சரைப் பார்த்தாலும் எனக்கு பொறாமையா இருக்கும்.

இப்போகூட வீட்டுல சும்மா இருந்தா பக்கத்து வீட்டுக் குழந்தைகளுக்கு எதாச்சும் பாடம் சொல்லிக்கொடுத்துகிட்டு இருப்பேன். நடிச்சது போதும்னு ஒரு முடிவெடுத்தப்பிறகு கட்டாயம் வீட்டில் டியூஷன் மிஸ்ஸா என்னை நீங்க பார்க்கலாம். அதுக்கு இன்னும் சில வருஷம் நீங்க காத்திருக்கணும்" என தனக்கே உரித்தான புன்னகையுடன் வெட்கப்படுகிறார், ஊர்வசி.

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்

மகாராஷ்ட்ரா விவசாயிகள் போராட்டம் கற்றுக்கொடுக்கும் பாடங்கள்... கவனிக்குமா தமிழ்நாடு?