Published:Updated:

பாகுபலி -2 பார்க்கப் போறீங்களா...?! இதைப் படிச்சுட்டுப் போங்க! #Baahubali2Mania

பாகுபலி -2 பார்க்கப் போறீங்களா...?! இதைப் படிச்சுட்டுப் போங்க! #Baahubali2Mania
பாகுபலி -2 பார்க்கப் போறீங்களா...?! இதைப் படிச்சுட்டுப் போங்க! #Baahubali2Mania

பாகுபலி -2 பார்க்கப் போறீங்களா...?! இதைப் படிச்சுட்டுப் போங்க! #Baahubali2Mania

`பாகுபலி' வெளியாகி, கிட்டத்தட்ட இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. படத்தின் ஒட்டுமொத்த லைனே 'Why Kattappa Killed Baahubali?' என்பதாக மாறிவிட்டது. #WKKB என்ற ஹேஷ்டேக் வைத்து போஸ்டர் அடித்து ஒட்டும் அளவுக்கு இரண்டாம் பாகத்துக்கான செல்லிங் பாயின்டாக மாறியிருக்கிறது. 'பாகுபலி 2' நாளை வெளியாகிறது என்ற பரபரப்புக்கிடையே முதல் பாகத்தைக் கொஞ்சம் ரீவைண்ட் செய்துபார்க்கலாமா?

ரத்தகாயங்களுடன் வரும் சிவகாமி (ரம்யா கிருஷ்ணன்) கைக்குழந்தையைக் காப்பாற்ற ஆற்றில் மிதந்து வருவார். மலையடிவாரத்தில் வசிக்கும் மக்கள் அவரிடமிருந்து குழந்தையை எடுக்க, ரம்யா கிருஷ்ணனின் கை மேல் நோக்கியபடி ஆற்றில் மிதந்து சென்றுவிடும். 

குழந்தைக்கு ஏதேனும் ஆபத்து வந்திவிடப்போகிறது என்ற அச்சத்தில், சங்கா (ரோகினி) அந்தக் குகைப்பாதையை அடைக்கச் சொல்வார். குழந்தைக்கு `சிவுடு' எனப் பெயரிட்டு வளர்க்கவும் செய்வார். 

சிவுடுவுக்கு, அருவிக்கு மேல் என்னதான் இருக்கிறது எனத் தெரிந்துகொள்ள மிகுந்த ஆர்வம். அடிக்கடி அங்கு செல்ல முயற்சிக்கும் சிவுடுவுக்கு, ஒரு முகமுடி கிடைக்கிறது. இந்த முறை அவன் அருவிக்கு மேலே செல்ல முயற்சிக்கும்போது மர்மப் பெண் ஒருத்தியைப் பார்க்கிறான். அவளைப் பின்தொடர்ந்து செல்லச் செல்ல, முடிவில் அருவியின் உச்சிக்கே செல்கிறான். 

அந்த மர்மப் பெண்ணை, போராளி உடையில் பார்க்கிறான். அவள்தான் அவந்திகா (தமன்னா). அவளுக்குத் தெரியாமல் அவள் பின்னால் சுற்றுகிறான். பிறகு, அவள் முன்பு தோன்றுகிறான். அவளைக் கொல்ல வருபவர்களிடமிருந்து அவளைக் காப்பாற்றுகிறான். இனி `உன் கடமை... தன் கடமை' என வாக்குறுதி தருகிறான்.

இதேவேளையில் மகிழ்மதியில் சங்கிலியால் கட்டப்பட்டிருக்கும் தேவசேனா (அனுஷ்கா), தன் மகனின் வருகைக்காகக் காத்திருக்கிறாள். ராஜவிசுவாசியான கட்டப்பா (சத்யராஜ்), இன்னொரு மன்னன் தன்னை அழைத்தும் செல்ல மறுக்கிறான்; தன் நாட்டிலும் தகுந்த மரியாதை இல்லாமல் இருக்கிறான். மன்னன் பல்வாள் தேவன் (ராணா), `பாகுபலி' இறந்தும் பெரும்பகைமையுடன் இருக்கிறான் எனக் காட்டப்படுகிறது.

சிவுடு, தன் காதலி அவந்திகாவுக்காக தேவசேனாவை விடுவித்து அழைத்து வர மகிழ்மதி செல்கிறான். சாம்ராஜ்யத்தில் பல்வாள் தேவனின் சிலை நிறுவப்படுகிறது. அங்கு சிவுடுவைப் பார்க்கும் ஒருவர் `பாகுபலி...' என அழைக்க, மொத்த கூட்டமும் `பாகுபலி... பாகுபலி' என முழங்குகிறது. 

`பத்து நாள்களுக்கும் மேலாக மகன் சிவுடுவைக் காணவில்லை' என, அடைக்கப்பட்ட குகையைத் திறந்து மகனைத் தேடிச் செல்கிறார்கள் சங்கா குழுவினர்.

இரவில் படையினர்போல வேடமிட்டு அரண்மனைக்குள் நுழைகிறான் சிவுடு. அவனைப் பார்க்கும் பல்வாள் தேவன், அதிர்ச்சியாகிறான். திரைச்சீலைக்குத் தீயிட்டு அங்கிருந்து தப்புகிறான். அவனை உயிருடன் பிடித்து வருமாறு பல்வாள் தேவன் கட்டளையிடுகிறான். பல்வாள் தேவனின் மகனுடன் சிவுடுவைத் தேடிப் புறப்படுகிறது படை. சிவுடு, தான் மீட்க வந்த தேவசேனாவை அழைத்துக்கொண்டு அரண்மையிலிருந்து வெளியேறுகிறான். 

வழியில் படையினரின் தாக்குதலுக்கு ஆளாகிறான் சிவுடு. அந்தச் சண்டையில் பல்வாள் தேவனின் மகன் கொல்லப்படுகிறான். இதனால் கோபமாகும் கட்டப்பா, சிவுடுவைக் கொல்ல ஓடிவருகிறான். சிவுடுவின் முகத்தைப் பார்க்கும் கட்டப்பா, மண்டியிட்டுத் தன் தலை மீது சிவுடுவின் காலை எடுத்து வைத்துக்கொண்டு `பாகுபலி...' என முழங்குகிறார். மகனைத் தேடி வரும் சங்காவும் அந்த இடத்தை வந்தடைகிறார்.

நடக்கும் விஷயங்களால் சிவுடுவுக்கு தான் யார் என்கிற சந்தேகம் வர, கட்டப்பாவிடம் கேட்கிறான். கட்டப்பா, பாகுபலி பற்றி விவரிக்கத் தொடங்குகிறார்.

விக்ரம தேவுடு என்பவரால் உருவாக்கப்பட்டதே மகிழ்மதி சாம்ராஜ்யம். உடல்நிலை காரணமாக சிம்மாசனம் கிடைக்காத பிச்சில தேவன் (நாசர்), தன் சகோதரன் விக்ரம தேவனுக்கு சிம்மாசனம் கிடைத்த கோபத்தில் இருக்கிறார். எதிர்பாரமல் ஒருநாள் மகாராஜா விக்ரம தேவன் இறந்துபோக, தேசமும் ஆறு மாத கர்ப்பிணியான அவரின் மனைவியும் அநாதைகள் ஆகிறார்கள்.

தேசத்தையும் ராஜ்யத்தையும் ராஜ மாதாவாக சிவகாமிதான் (ரம்யா கிருஷ்ணன்) பார்த்துக்கொள்கிறார். அப்போது மகாராணி (விக்ரம தேவன் மனைவி) ஓர் ஆண் குழந்தையைப் பிரசவித்துவிட்டு இறந்துபோகிறாள். அந்தக் குழந்தைக்கு `பாகுபலி' எனப் பெயரிட்டு தன் மகன் பல்வாள் தேவனுடன் சேர்த்து வளர்க்கிறாள் சிவகாமி.

தனக்குக் கிடைக்காத சிம்மாசனத்தைத் தன் மகனுக்குக் கிடைக்கச்செய்ய வேண்டும் என நினைக்கிறார் பிச்சில தேவன். ஆனால் சிவகாமியோ, இரண்டு பேரும் வளர்ந்த பிறகு யாருக்கு நாட்டை ஆளும் தகுதி இருக்கிறது எனப் பார்த்த பிறகே ராஜ்யத்தை ஒப்படைப்பேன் எனும் முடிவெடுக்கிறார்.

ராஜ குடும்பத்தில் வளர்ந்தாலும், படைத்தளபதி கட்டப்பா மீது மிகுந்த பாசத்துடன் இருப்பான் பாகுபலி (விக்ரம தேவனின் மகன்). 

ராஜகுரு என்கிற துரோகியால் மகிழ்மதியின் படைபலம்குறித்த ரகசியங்கள் காளகேயர்களுக்குக் கிடைக்கின்றன. அவர்களால் நாட்டுக்குப் பெரும் ஆபத்து வருகிறது. அவர்களைத் தாக்கி அழிக்க, பாகுபலியும் பல்வாள் தேவனும் ஏராளமான போர் வியூகங்களை வகுக்கிறார்கள். போரில் பாகுபலிக்கு வழங்கப்படும் ஆயுதங்கள், படைவீரர்கள் தகுந்த முறையில் வழங்கப்படாமல் சதிசெய்யப்படுகிறது. இருந்தும் போரில் பல்வேறுவிதமான வித்தியாச தாக்குதல்களைச் செய்துகாட்டுகிறான் பாகுபலி. 

எதிரியான காளகேயனை போரில் கொன்றது பல்வாள் தேவனாக இருந்தாலும், பல உயிர்களைக் காப்பாற்றினான் என்ற காரணத்தால் பாகுபலியை மன்னராக அறிவிக்கிறார் ராஜமாதா சிவகாமி. 

இந்த மொத்தக் கதையையும் கூறி முடித்த கட்டப்பா, `பாகுபலியைக் கொன்றவன் நானே!' என்கிற உண்மையைச் சொல்வதோடு முடிந்தது `பாகுபலி' தி பிகினிங். இனி, பாகுபலி கன்க்ளூஷனில் என்னென்ன பிரமாண்டங்கள் காத்திருக்கின்றன என்பதை, பொறுத்திருந்து பார்ப்போம்!

அடுத்த கட்டுரைக்கு