Published:Updated:

"யாருமே கண்ணோடு கண் பார்த்து லவ் சொல்லலை!’’ - கலகல சுமையா

"யாருமே கண்ணோடு கண் பார்த்து லவ் சொல்லலை!’’ - கலகல சுமையா
"யாருமே கண்ணோடு கண் பார்த்து லவ் சொல்லலை!’’ - கலகல சுமையா

"நான் இசையருவி சேனல்ல, 'இசைத்தென்றல்', 'காதலுக்காக', துள்ளிசை' போன்ற நிகழ்ச்சிகளையும், கலைஞர் டிவி-யில் 'சினிமா செய்திகள்', 'நான் பாடும் பாடல்கள்' மற்றும் அவ்வப்போது சினிமா டீம் இன்டர்வியூவையும் எடுத்துட்டு வர்றேங்க. லைஃப் செம பிஸியாகிடுச்சு. இதுவும் நல்லாதான் இருக்கு" என ஃபுல் எனர்ஜியுடன் பேசத் தொடங்குகிறார் சுமையா.

"சின்ன வயசுல நான் குரூப் டான்ஸர் ஆகணும்னுதான் ஆசைப்பட்டேன். எல்லா பாடல்கள்லயும் கலர் கலர் காஸ்ட்டியூம் உடுத்திக்கிட்டு ஹீரோ, ஹீரோயினுக்குப் பின்னாடி செம ஜாலியா ஆடுவாங்க. இதுக்காகவே சின்ன வயசுல டான்ஸ் க்ளாஸ் எல்லாம் போயிட்டிருந்தேன். காலேஜ் வந்ததும் டான்ஸ் ஆடக் கூடாதுன்னு வீட்டுல சொல்லி நிறுத்திட்டாங்க. இப்படி ட்ராக் மாறி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனதுகூட மகிழ்ச்சிதான்." 

"எப்படி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ஆனீங்க?" 

"'என் ஸ்கூல்ல இருந்து இப்போ வேலைசெய்யும் இடம் வரைக்கும் `சுமையா'ன்னா எல்லோருக்குமே தெரியும். ஸ்கூல், காலேஜ் ரெண்டுலயுமே நான் டாப்பர். நிறைய ஐ.டி கம்பெனிகள்ல வேலை கிடைச்சது. ஆனா, வெளியூர் போய் வேலைசெய்யணும். எங்க வீட்டுல `போக வேண்டாம்'னு சொல்லிட்டாங்க. அப்புறம் சென்னையில ஒரு ஐ.டி கம்பெனியில கொஞ்ச நாள் வேலை செஞ்சேன். செம போர். கம்ப்யூட்டரைப் பார்த்துட்டே இருக்கிற மாதிரி ஒரு கொடுமையான வேலை வேற எதுவுமே இல்லைங்க. இது செட் ஆகாதுனு நினைச்சேன். அப்பதான் ஆங்கர் ஆகணும்னு முடிவுபண்ணினேன்.

முதலில் மக்கள் டி.வி-யில் சான்ஸ் கிடைச்சது. அடுத்து 'ஜெயா ப்ளஸ்', 'பொதிகை', 'மெகா', 'மூன் டி.வி'னு பல சேனல்கள்ல கலந்துகட்டி ஆங்கர் பண்ணினேன். ஒவ்வொரு நிகழ்ச்சியும் `அந்நியன்' கெட்டப் மாதிரி வெரைட்டியா பண்ணி, பாராட்டு வாங்கினேன்.  அடுத்து 'இசையருவி' சேனலில் வாய்ப்பு வந்தது. நிறைய நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கியதால் ஆடியன்ஸ்கிட்ட நல்ல பேரு கிடைச்சது. ரஜினி சார், கமல் சார், அஜித், விஜய் தவிர எல்லாரையுமே பேட்டி எடுத்துட்டேன்." 

"மறக்க முடியாத பாராட்டு எந்த நிகழ்ச்சிக்குக் கிடைச்சது?" 

"நிறைய இருக்கு. பாடலாசிரியர் யுகபாரதி சாரை பேட்டி எடுத்தேன். வழக்கமா 'எந்த ஹீரோவுக்குப் பாட்டு எழுதப் பிடிக்கும்?' `எந்த நேரத்துல பாட்டு எழுதுவீங்க?'னு எல்லாம் கேட்காம, கொஞ்சம் வித்தியாசமா கேட்டேன். அவருக்கும் என் கேள்விகள் ரொம்பப் பிடிச்சிருந்துச்சு. 'நல்லா கேள்வி கேட்டீங்க சுமையா'னு பாராட்டினார்.

'எமன்' படத்துக்காக விஜய் ஆண்டனியைப் பேட்டி எடுக்க போயிருந்தப்போ, அவர் செம டென்ஷன்ல வந்தார். நான் கேள்வி கேட்கக் கேட்க செம கூல் ஆகிட்டார். 'எப்படிப் பேசப்போறேன்னு நினைச்சேன். ஆனா, ரொம்ப கூலா கேட்டு, என்னையும் கூல் ஆக்கிட்டீங்க'னு பாராட்டினார். '6 மெழுகுவத்திகள்' டீம் மீட் இன்டர்வியூ முடிஞ்சதும் மொத்த டீமும் எழுந்திருச்சுக் கைதட்டினாங்க.

இப்ப 'பிச்சுவா கத்தி' படத்தோட இசை வெளியீட்டு விழாவைத் தொகுத்து வழங்கினேன். நிகழ்ச்சி முடிஞ்சதும் எல்லோருமே என்னைப் பாராட்டினாங்க. ஆர்யா கூட 'எது தேவையோ அதை மட்டும் அழகா பேசினீங்க'னு சொன்னார். இப்படி சின்னச்சின்ன க்யூட் பாராட்டுகள்தான் இன்னும் என் வேலையை இன்னும் நேசிக்கவைக்குது." 

"உங்களை யாரும் நடிக்கக் கூப்பிடலையா?" 

"ஆங்கரிங் பண்ண யாராவது கூப்பிட்டாங்கன்னா எந்த இடமா இருந்தாலும், எவ்வளவு தூரமா இருந்தாலும் போய் அந்த நிகழ்ச்சியைத் தொகுத்துக் கொடுத்துட்டு வருவேன். ஆனா, யாராவது நடிக்கக் கூப்பிட்டா மட்டும் இதுவரை போனதே இல்லை. நான் சும்மா வெட்டியா இருந்தாலும் இருப்பனே தவிர, நடிக்கப் போக மாட்டேன். ஏன் இந்த வாய்ப்பை வேண்டாம்னு சொல்றேன்னு எனக்கே சரியான காரணம் தெரியலை. நடிக்க பயமா? அவ்வளவு பெரிய ஸ்க்ரீன்ல நான் வரும்போது ஆடியன்ஸ் எப்படி ரியாக்ட் பண்ணுவாங்கனு யோசிக்கிறேனானு எதுவும் தெரியலை. மனசு மட்டும் சினிமா வாய்ப்பு வேண்டாம்னு சொல்லுது. அதனாலதான் வர்ற வாய்ப்புகளுக்கெல்லாம் 'நோ' சொல்லிடுறேன். எதிர்காலத்துல எனக்கு ஆங்கரிங் பண்ண வாய்ப்பே இல்லை. சினிமாவுல நடிச்சாதான் சர்வைவ் பண்ண முடியும்னு ஒரு சூழல் வந்தால், அப்ப  யோசிக்கலாம்." 

"எதிர்காலத் திட்டம் ஏதாவது வெச்சிருக்கீங்களா?" 

"நல்ல திறமையான தொகுப்பாளர்னு பேரு எடுக்கணும். அதேசமயத்துல சில வருடங்கள் கழித்து எனக்கான வாய்ப்புகள் குறையலாம். அப்ப ஃபேஷன் டிசைன் பண்ண போயிடலாம்னு இருக்கேன். இப்போதைக்கு இவ்வளவுதான் திட்டம் பாஸ்." 


"எப்போ கல்யாணம்?" 

"நீங்க வேற இப்போ கல்யாணமே வேணாம்னு வீட்டுல சொல்லிட்டு வர்றேன். அவங்க, 'சீக்கிரம் இதை எல்லாம் ஓரம் கட்டிவை'னு செல்லமா மிரட்டியிருக்காங்க. `ரெண்டு வருஷம் டைம் கொடுங்க'னு கேட்டிருக்கேன். 'பார்க்கலாம்'னு சொல்லிருக்காங்க. எப்படி எனக்கு நடிக்க இஷ்டம் இல்லையோ, அதேபோல கல்யாணம் பண்ணிக்கவும் இஷ்டம் இல்லை. ஆனா, ஏன்னு தெரியலை. என்ன நடக்குதுனு பொறுத்திருந்து பார்க்கலாம்" எனப் பெருமூச்சு விடுகிறார். 

"சரி, உங்களுக்கு நிறைய புரொபோசல் வந்திருக்குமே?" 

சிரிக்கிறார். "அது ஜாலியா இருக்கும்ஜி. எனக்கே சிலசமயம் சிரிப்பா இருக்கும். ஆனா, யாருமே நேர்ல வந்து கண்ணோடு கண் பார்த்து சொல்ல மாட்டாங்க. இப்ப கொஞ்ச நாள் முன்னாடி, ஒரு விளம்பரப் பட ஷூட்ல நடிச்சேன். அங்கே ஒருத்தர் என்னை விழுந்து விழுந்து கவனிச்சார். பழங்கள் கொடுக்கிறது, தண்ணி கொடுக்கிறதுனு பார்த்துப் பார்த்து எல்லாத்தையும் செஞ்சார். `கவனிப்பு எல்லாம் ஓவரா இருக்கே... 'ஐ லவ் யூ' சொல்லப்போறார்'னு நினைச்சேன். அதே மாதிரி, நான் கிளம்பும்போது ``கொஞ்சம் பேசணும்'னு சொன்னவர் பட்டுனு புரொபோஸ் பண்ணிட்டார். நான் 'ஸாரிங்க'னு சொல்லிட்டு வந்துட்டேன். ஒவ்வொரு தடவையும் இப்படித்தான் எனக்கு வர்ற புரொபோசலையும் 'நோ' சொல்லிடுவேன். லைஃப் நல்லா இருந்தா அதுவே போதும். ஜெய் மகிழ்மதி!" என பன்ச் வைத்துச் சிரிக்கிறார் விஜே சுமையா. 

- நா.சிபிச்சக்கரவர்த்தி