Published:Updated:

'என் ஆளோட செருப்பைக் காணோம்'! - டைட்டில் விளக்கம் அளிக்கும் இயக்குநர்

'என் ஆளோட செருப்பைக் காணோம்'! - டைட்டில் விளக்கம் அளிக்கும் இயக்குநர்
'என் ஆளோட செருப்பைக் காணோம்'! - டைட்டில் விளக்கம் அளிக்கும் இயக்குநர்

'கெணத்தைக் காணோம்' எனக் கூப்பாடு போட்டு இன்ஸ்பெக்டரையே வேலையை விட்டுப் போக வைத்த வடிவேலு, 'கட்டப்பாவைக் காணோம்' என வில்லத்தனம் காட்டிய சிபிராஜுக்கு அடுத்து 'என் ஆளோட செருப்பக் காணோம்' என ரகளையான டைட்டில் வைத்து ரசிகர்களை அலற வைத்திருக்கிறார் இயக்குநர் ஜெகன்நாத். 'புதிய கீதை', 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' படங்களின் இயக்குநர். செருப்புக் கதையைப் பற்றி அவரிடம் பேசினேன். 

"எப்படி ஜி இந்த டைட்டிலைப் பிடிச்சீங்க..? படத்தில் ஒண்ணும் இல்லேன்னாலும் கவரவைக்கிற டெக்னிக்கா?"

'சரவணபவன்' மாதிரி சைவமா ஒரு படத்துக்குப் பேர் வெச்சா அதுக்கு எதிர்பார்ப்பே இல்லாம புஸ்ஸுனு போய்டும். படத்தைப் பார்க்குறாய்ங்களோ இல்லையோ மக்கள் மனசுல டைட்டில் நறுக்குனு உட்காரணும். இப்போ பாருங்க... படத்தோட டைட்டிலுக்கே பல நெகட்டிவ் கமென்ட்ஸ் வர ஆரம்பிச்சிடுச்சு. படத்தோட ரீச் ரொம்ப முக்கியம்."

"டைட்டிலுக்கு மட்டும் கமென்ட்ஸ் வந்தா போதுமா... படம் பார்க்க ஆள் வரணுமே ஜி..?"

"எல்லோரும் வாழ்க்கையில் ஒரு முறையாவது நம்மளோட செருப்பைத் தொலைச்சிருப்போம். தொலைஞ்ச செருப்புக்காக ஃபீல் பண்ணியிருப்போம். இந்த டைட்டிலில் அதை ஒவ்வொரு மனுசனும் தங்களோட வாழ்க்கை அனுபவங்களோடு கனெக்ட் பண்ணிக்க முடியும். பழைய செருப்புதானேனு கடந்துபோகவிடாம ஏதோ ஒண்ணு உங்களை இழுத்துப் பிடிக்கும் பாருங்க... அதைச் சொல்றதுதான் இந்தப் படம்."

"தொலைஞ்சுபோன செருப்பை மையமா வெச்சுத்தான் படத்தை எடுத்திருக்கீங்களா..?"

" 'கயல்' ஆனந்தியோட செருப்பு காணாமப் போய்டுது. அது வெறும் செருப்புதானே அதுக்கு ஏன் இம்புட்டு ஃபீலிங்க்ஸ்னு நாம சும்மா போக முடியாது. ஏன்னா அதுக்குப் பின்னாடி ஒரு வலுவான காரணம் இருக்கு. அப்படியான வரலாற்றைக் கொண்ட செருப்பை நாயகன் தமிழ் கண்டுபிடிக்கத் தேடுறார். அதுதான் கதை. செருப்புங்கிறதை காலில் அணிகிற ஒரு அருவருப்பான பொருளாக நீங்கள் உணரமுடியாது. அந்தச் செருப்புக்குள்ள ஒரு எமோஷனல் ஃபீலிங் இருக்கு.  ஒரு பேனா மூடி தொலைஞ்சு போய்ட்டா மூடி இல்லாமயே அந்தப் பேனாவைப் பயன்படுத்தலாம். ஆனால், நீங்க போட்டிருக்கிறதுல ஒரு செருப்பு தொலைஞ்சு போய்ட்டாலும் இன்னொண்ணையும் பயன்படுத்தவே முடியாது. ஜோடியா இருந்தாதான் செருப்புக்குச் சிறப்பு. காதலோட சூத்திரமே செருப்புலதான் பாஸ் இருக்கு."

"செருப்பை வெச்சே குறியீடா கதை சொல்றீங்களாக்கும்?"

"அதேதான் பாஸ். நாற்பது நாட்கள் நடக்கிற கதை. அதுவும் டிசம்பர், ஜனவரி மாதங்களில் மழை பெய்யும் இல்லையா... அந்த மழை நாட்களில்தான் மொத்தப் படமும் நகருது. மழை பெய்யுற லொக்கேஷனுக்காக கடலூர் பக்கம் எடுத்தோம். ஒரு குடை, ஒரு ஜோடி செருப்பு, அதோடு கலந்திருக்கிற மனித உணர்வுகள், ஒரு காதல் இதெல்லாம் கலந்ததுதான் படம். தொலைஞ்சுபோனவங்களுக்கு மட்டும் இல்லாம அதைக் கண்டுபிடிக்க முயற்சிக்கும்போதும் அந்தச் செருப்பு பல பேரின் வாழ்க்கையில் ட்விஸ்ட்களை ஏற்படுத்தும். அவையெல்லாம் என்னென்னனு படத்தைப் பார்த்துத் தெரிஞ்சிக்கோங்க. ரெண்டு செருப்பை வெச்சே ஒரு இதயம் மாதிரி டிஸைன் பண்றதுக்காக 'பாரகன்' கம்பெனியோடு பேசி டைட்டில் கவர் டிஸைன் பண்ணினோம்." 

"செருப்பு உங்கள் வாழ்க்கையில் இப்படி எப்பயாவது விளையாடிய அனுபவம்..?" 

"நான் ஒரு முக்கியமான தெலுங்கு புரொடியூஸரை மீட் பண்றதுக்காக மவுன்ட் ரோடு தாஜ் ஹோட்டலுக்குப் போகவேண்டி இருந்துச்சு. போற வழியிலேயே நான் போட்டிருந்த ஷூவில் லேஸ் இருக்கும் பகுதி தனியா வந்துடுச்சு. அப்படியே அந்த மீட்டிங்குக்குப் போக முடியாம சாயங்காலம் வர்றேன்னு சொல்லி டைம் வாங்கிட்டேன். அதற்கு இடையில் இயக்குநர் ராம் அந்தப் புரொடியூசருக்குச் சொன்ன கதை ஓ.கே ஆகிடுச்சு. இப்படி அந்த ஒரு ஷூவால் நான் படம் எடுக்கவேண்டிய சந்தர்ப்பம் அப்போ கைவிட்டுப்போச்சு."

" 'பசங்க' பாண்டி, 'கயல் ஆனந்தி' ஜோடியே ஒரு மாதிரியா இருக்கே..?" 

"இந்தக் கதைக்கு இவங்க ரெண்டு பேரும்தான் பக்காவா பொருந்துவாங்க. 'பாண்டி இந்தப் படத்திற்காக தமிழ் னு பெயர் மாறியிருக்கார்.  'பசங்க', 'கோலி சோடா', படங்களிலேயே தமிழ் பயங்கரமா நடிச்சுப் பாராட்டுகளைக் குவிச்சவர். இந்தப் படத்திலும் சிறப்பா பண்ணியிருக்கார். இன்னும் பல உயரங்களுக்குப் போவார். ஆனந்தியும், தமிழும் நல்ல ஜோடி."

"உங்களுக்குப் பிடிச்ச நடிகர்?"

"எனக்கு இளையதளபதி விஜய்யைப் பிடிக்கும். அப்புறம் சார்லி சாப்ளினின் தீவிரமான ரசிகன் நான். அவர் பெர்சனல் வாழ்க்கை, அவரது நகைச்சுவை எல்லாமே என் வாழ்க்கைக்கு இன்ஸ்பிரேஷன். அவர் வாழ்க்கையை வெச்சுத்தான் காமெடி படம் எடுக்கும் எண்ணமே எனக்கு வந்தது." 

" 'கோடம்பாக்கம்', 'ராமன் தேடிய சீதை' மாதிரியான படங்கள் எடுத்துட்டு இந்தப் படம்... எப்படி இருக்கு இந்த அனுபவம்..?" 

"பொதுவாகவே சமீபமாக வந்த காமெடிப் படங்களுக்கு நாம உரிய மரியாதை தர்றதில்லை. காமெடிப் படங்களை ஒரு மூன்றாந்தரப் படங்களாகத்தான் பார்க்கிறோம். இந்தப் படம் ஆந்த எண்ணத்தை மாத்தும். காமெடியும், எமோஷனும் கலந்த கலவையாக இருக்கும். காமெடியான ஃபீல் குட் மூவி தான் பாஸ் எங்க சாய்ஸ். கே.எஸ்.ரவிகுமார் நெகட்டிவ் வில்லன் ரோல் பண்ணி இருக்கார். வழக்கமாக இந்தக் கேரக்டருக்கு மன்சூர் அலிகான் நடிக்கிறதை விட இவர் பண்ணினா நல்லா இருக்கும்னு தோணுச்சு. யோகிபாபு படம் முழுக்க கதையின் கூடவே வர்றார். காமெடின்னு தனியா ட்ராக் இல்லாம படம் நெடுக யோகிபாபு, பால சரவணன், லிவிங்ஸ்டன் ஆகியோரின் லந்து இருக்கும்."

" 'ராமன் தேடிய சீதை'க்குப் பிறகு ஏன் இவ்வளவு பெரிய இடைவெளி..?" 

"அதற்கிடையில் 'நாகராஜ சோழன் எம்.ஏ எம்.எல்.ஏ' உட்பட  12 படங்களில் அஸிஸ்டென்டா வொர்க் பண்ணினேன். அப்போதான் காமெடியா ஒரு படம் பண்ணலாம்னு திரும்ப இயக்குநர் ஆகிட்டேன்." 

"இந்தப் படத்தில் சிம்பு பாடியது எப்படி..?"

"பாடல் லிரிக்ஸைப் பார்த்துட்டு இது நான் பாடினா சரியா வராது. வேற யாரையாவது ட்ரை பண்ணலாமேனு முதலில் சொன்னார். அப்புறம் படத்தின் வீடியோவைப் போட்டுக் காட்டியதும் 'செமையா இருக்கே'னு சொல்லிப் பாட ஒத்துக்கிட்டார். அந்தப் பாட்டும் படத்தில் தூக்கலாக இருக்கும். ஸ்ரேயா கோஷலும் பாடியிருக்கார். அவங்க பிறமொழிகளில் பாடினதுலே ரொம்ப கஷ்டப்பட்டுப் பாடினது இந்தப் படத்துலதான்னு அவங்களே சொன்னாங்க..." 

"சரி... அடுத்த படத்துக்கு என்ன டைட்டில் வைப்பீங்க..?"

"கடந்த வார ஆனந்த விகடன் ரேப்பர்ல வந்த 'திறக்காதே மூடு' டைட்டில்தான் பாஸ் என் அடுத்த படத்தோட டைட்டில். அதைப் பார்த்ததுமே இதுதான்னு முடிவு பண்ணிட்டேன். ஆனால், கண்டிப்பாக அது டாஸ்மாக் பற்றிய கதை இல்லை. மிச்சத்தைப் படம் எடுக்கும்போது சொல்றேன்." என முடித்துக் கொண்டார்.

ரைட்டு ரைட்டேய்..!

இந்த படத்தின் டீஸரைப் பார்க்க... 

அடுத்த கட்டுரைக்கு