Published:Updated:

'பாகுபலி' ராஜமெளலியை இயக்கிய இரண்டு பெண்கள்! #Baahubali2

'பாகுபலி' ராஜமெளலியை இயக்கிய இரண்டு பெண்கள்! #Baahubali2
'பாகுபலி' ராஜமெளலியை இயக்கிய இரண்டு பெண்கள்! #Baahubali2

“பாகுபலியை ஏன் கட்டப்பா கொன்றார்?" என்ற விடை கண்டுபிடிக்க முடியாத கேள்வியை, இரண்டு  வருடங்களாக ரசிகர்களிடையே உலவவிட்டவர் இயக்குநர் ராஜமெளலி. 2015-ம் ஆண்டு பாகுபலி-1 வெளியானது. அதன் வெற்றி சினிமா உலகமே ராஜமெளலியை வியந்து பார்க்க வைத்தது. மிகுந்த ஆவலைத் தூண்டும் விதத்தில் பாகுபலி முதல் பாகம் முடிக்கப்பட்டிருந்தது. அந்த நாள் முதலே பாகுபலி-2 க்கான எதிர்பார்ப்பு தொடங்கி விட்டது.

ரசிகர்களின் கொண்டாட்ட வரவேற்போடு பாகுபலி- 2  வெள்ளியன்று  வெளியாகி மிகுந்த பாராட்டுகளைப் பெற்ற வண்ணம் உள்ளது.  படத்தைப் பார்த்தவர்கள் சமூக ஊடகங்களில் சிலாகித்து எழுதி வருகின்றனர். இந்திய சினிமா இயக்குநர்களின்  மதிப்பை இன்னும் கூட்டியிருக்கிறார் ராஜமெளலி. இந்தியத் திரை உலகமே அவரைப் பாராட்டி வருகிறது. வசூலில் புதுப்புது சாதனைகளை நிகழ்த்தி வருகிறது.  ராஜமெளலியின் இந்த வெற்றிக்குப் பின்னால், அவரின் குடும்பம் பெரிய பலமாக இருந்து வருகிறது. அவரின் அப்பா கூறிய கதையே இதன் அடிப்படை. படத்தின் காஸ்டியூம் டிசைனர்களில் ஒருவர் அவரின் மனைவி ரமா. இசையமைப்பாளர் கீரவாணியும்

ராஜமௌலியின் உறவினரே. கீரவாணியின் மனைவியான ஶ்ரீவள்ளிதான் படத்தின் லைன் புரொடியூசர். ராஜமெளலியின் மகன் கார்த்திகேயா படத்தின் இரண்டாவது யூனிட்டின் இயக்குநர். இந்தப் பட்டியலில் இன்னும் சிலரும் இருக்கின்றனர்.

ராஜமெளலியின் வெற்றிக்கு அவரின் குடும்பத்தினர் அனைவரின் துணை இருந்தாலும், குறிப்பிட்ட இருவரின் பங்கு மிக முக்கியமானது. பாகுபலியில் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருக்கும் நடிகர் நாசர், ஒரு நேர்காணலின்போது இதைக் குறிப்பிடுகிறார். அந்த இருவர் ராஜமெளலியின் மனைவி ரமா மற்றும் ரமாவின் சகோதரியும் படத்தின் லைன் புரொடியூசருமான ஶ்ரீவள்ளி ஆகியோர்தான்.

ரமா ராஜமெளலி: திருமணமாகி ஒரு ஆண் குழந்தை பிறந்த நிலையில் விவாகரத்து பெற்றிருந்தார் ரமா. கீரவாணியின் உறவினர் ரமா என்பதால், அவரது மகன் கார்த்திகேயாவிடம் ராஜமௌலி தன் கதைகளைச் சொல்லிக் கொண்டிருந்தார். பின்னர், ரமாவைத் திருமணமும் செய்துகொள்கிறார். இல்லற வாழ்க்கையின் பொருத்தமான இணையாகிவிட்ட ரமா, ராஜமெளலியின் படங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக பணியாற்றத் தொடங்கினார்.

பாகுபலியின் ஆடை வடிவமைப்பாளர்கள் ரமாவும் பிரசாந்தி திப்ரினேனியும்தான். அரசர் காலத்து கதை என்பதால், அரசர், அரசி, அமைச்சர்கள், எதிரி நாட்டு அரசன், பொதுமக்கள் என பலவித உடைகளை வடிவமைக்க வேண்டியிருந்தது. இந்த உடைகளை அவர்கள் இருவரும் மிக நுட்பமாக வடிவமைத்துள்ளனர். வாழ்க்கையில் தனக்கென்று பெரிய கனவுகள் ஏதுமில்லாமல் இருந்தவர் ரமா. கணவர் ராஜமெளலியின் அதிதீவிர உழைப்பைப் பார்த்து, தன் பங்களிப்பை செய்யத் தொடங்கியவர் இன்று மிகப்பிரமாண்ட படத்தின் ஒரு தூணாக இருக்கிறார். தன் கணவரைப் பற்றி குறிப்பிடும்போதெல்லாம், "அவர் சினிமாவை அர்ப்பணிப்போடு அணுகுபவர். ஏதேனும் ஒரு விஷயம் பற்றி கேள்விப்பட்டால் அதுபற்றி அனைத்துத் தகவல்களையும் தெரிந்து கொள்வார். யாருடன் பழகினாலும் அவர் ஈகோ பார்ப்பதில்லை" என்பார். இவர் இப்படி என்றால், ரமாவைப் பற்றி, பாகுபலி -2 ஆடியோ வெளியீட்டின்போது ராஜமௌலி சொன்னது முக்கியமானது.

"கணவனுக்கு மனைவி சப்போர்ட்டாக இருப்பது வழக்கம்தான். ஆனாலும் எனக்கு பெரும் நம்பிக்கையைத் தருபவராக என் மனைவி இருக்கிறார். இது இல்லை என்றால் இந்தப் படம் இல்லை, அது இல்லை என்றால் இந்தப் படம் இல்லை என எல்லோரும் எமோஷனலாக சொல்வார்கள். நான் உண்மையாகச் சொல்கிறேன். என் மனைவி இல்லையென்றால் இந்தப் படம் பண்ணியிருக்க முடியாது" என்று மேடையில் ராஜமெளலி சொல்லும்போது அவரின் குரல் நெகிழ்ந்திருந்தது. உண்மையைப் பகிரும்போது குரல் அடையும் நெகிழ்வு அது.

ஶ்ரீவள்ளி : ராஜமெளலியின் உறவினரும் இசையமைப்பாளருமான கீரவாணியின் மனைவி ஶ்ரீவள்ளி. பாகுபலியின் லைன் புரொடியூசர். இயக்குநருக்கு படப்பிடிப்பின் சுமை தெரியாமல் பார்த்துக் கொள்ளும் கடினமான பொறுப்பு. அதைக் கவனத்துடனும் அர்ப்பணிப்புடனும் செய்திருக்கிறார் ஶ்ரீவள்ளி. அதைப் பற்றி ராஜமெளலி, "சாதாரணப் படத்துக்கு இந்தப் பொறுப்பை ஏற்பதே கஷ்டனமானது. இவ்வளவு பெரிய படத்துக்கு என்றால், சிரமம் பற்றிச் சொல்லவே வேண்டாம். எந்த நடிகர் நடித்தாலும் சரியாக ஷூட்டிங் நடந்தது என்றால் அதற்கு ஒரே காரணம் ஶ்ரீவள்ளிதான். உறவுமுறையைக் கடந்து, அவரை நான் 'அம்மா' என்றே அழைப்பேன்" என்றார்.

தனது வெற்றிகளை குடும்பத்துடன் கொண்டாடுபவர்கள் பலர் இருப்பார்கள். ஆனால், குடும்பத்தினரோடு வெற்றியை ருசிப்பதில் ராஜமெளலி பலருக்கு வழிகாட்டியாகவே இருக்கிறார். அவரின் தொடர் வெற்றிக்கும் பின்னால் இருந்து இயக்குவதில் ரமாவும், ஶ்ரீவள்ளியும் முதன்மையானவர்களாக விளங்குகிறார்கள்.