Published:Updated:

உங்க லிஸ்ட்ல இந்த கோரிக்கைகள் எல்லாம் மிஸ் ஆயிடுச்சு விஷால்!

உங்க லிஸ்ட்ல இந்த கோரிக்கைகள் எல்லாம் மிஸ் ஆயிடுச்சு விஷால்!
உங்க லிஸ்ட்ல இந்த கோரிக்கைகள் எல்லாம் மிஸ் ஆயிடுச்சு விஷால்!

உங்க லிஸ்ட்ல இந்த கோரிக்கைகள் எல்லாம் மிஸ் ஆயிடுச்சு விஷால்!

திருட்டு வி.சி.டி, தமிழ் ராக்கர்ஸ் பிரச்னையால் கடுகடுத்து போயிருக்கிறார் தயாரிப்பாளர் சங்கத் தலைவரும், நடிகர் சங்கத்தின் பொது செயலாளரும், நடிகரும், தயாரிப்பாளரும், `மை டியர் லவ்வரு' பாடலின் பாடகருமான விஷால். சமீபத்தில் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ஆலோசனைக் கூட்டம் ஒன்று நடத்தியவர், சித்திரை வெயிலின் சித்திரவதையிலும் சிறப்பாக சிந்தித்து, ஆலோசனைக் கூட்டத்தின் முடிவில் மத்திய, மாநில அரசுகளுக்கு சில கோரிக்கைகளை முன் வைத்திருக்கிறார். அவற்றை படித்ததும் `இதெல்லாம் பத்தாதே பாஸ்...' என நமக்கு தோன்றியதால், மேலும் சில யோசணைகளை அவருக்கு கொடுக்கிறோம். இதெல்லாம் பெருமையா... கடமை..!

புதிய திரையரங்குகளுக்கு, ஜி.எஸ்.டி மற்றும் பல்வேறுவிதமான வரிகளிலிருந்தும் ஐந்து வருடங்களுக்கு முழு வரிவிலக்கு அளிக்க வேண்டும் என கூறியிருக்கிறார் விஷால். இதுமட்டும் போதாது, பத்து ரூபாய் பாப்கார்னை முந்நூறு ரூபாயிற்கு விற்கவும் வழிவகை செய்யலாம். இன்னும் சிறப்பான ஒரு ஐடியா...  தியேட்டரில் படம் முடிந்ததும் பார்வையாளர்களை வெளியேவிடாமல் கதவை பூட்டிக்கொண்டு வெளியே போகவும் டிக்கெட் எடுக்கவேண்டும் என புதுசட்டம் பிறப்பிக்க ஆவன செய்யலாம்.

புதிய மற்றும் உரிமை இல்லாத திரைப்படங்களைப் பதிவேற்றம் செய்பவர்கள் மற்றும் பதிவிறக்கம் செய்பவர்களை கண்காணிப்பதற்காக, மத்திய அரசு கண்காணிப்புக்குழு ஒன்றை அமைக்க வேண்டும் என மத்திய அரசிடம் கோரிக்கை வைத்திருக்கிறார் விஷால். பிரமாதமான யோசனை. இதை நடைமுறைப்படுத்த அப்படியே தமிழ்நாட்டில் உள்ள ஒவ்வொரு வீட்டிற்கும் கண்காணிப்பு குழுவை சேர்ந்தவர்களை நியமிக்கலாம். இதன்மூலமாக, வீட்டின் பெட்ரூமிற்குள் போர்வையை போர்த்திக்கொண்டு பதிவிறக்கம் செய்பவர்களையும் பொடனியில் அடித்து எழுப்பிவிடலாம். சிந்திக்கணும்...

எப்படியோ கண்காணிப்பு குழுவுக்குக் கண்கட்டு வித்தையை காட்டி பதிவிறக்கம் செய்பவர்களைப் பிடிக்க சிறப்பு கண்காணிப்பு குழு ஒன்று அமைக்கலாம். பதிவிறக்கம் செய்து படத்தை பார்த்தவர்கள், வெளியே வெப்சைட்டின் பெயரையோ, படத்தின் கதையையோ சொல்லிடாமல் தடுக்க `சொல்லாமலே' லிவிங்ஸ்டன் போல் நாக்கை கட் செய்து விடலாம். ஸ்டேட்டஸ் போடுபவர்களின் சமூகவலைதள பக்கத்தை முடக்கிவிடலாம்.

உரிமமின்றி திரைப்படங்கள், திரைப்படக் காட்சிகள், பாடல்களை ஒளிபரப்பும் பேருந்துகளுக்கு, அவற்றின் தொழில் உரிமமே ரத்து ஆகும் அளவுக்கு அரசு ஆணை பிறப்பிக்கப்பட வேண்டும் என சொல்லியிருக்கும் விஷால் அவர்கள், கூடவே எல்லா பேருந்தின் உள்புறத்திலும் சிசிடிவி கேமரா அரசு செலவில் பொறுத்தவேண்டும் என்றும், பேருந்தினுள் அமர்ந்துக்கொண்டு செல்போனில் படம் பார்ப்பவர்களை மூன்று ஸ்டாப் தள்ளிப்போய் இறக்கிவிட்டு கொடூரமான தண்டனை கொடுக்கலாம் எனவும் கேட்டுக்கொள்ளலாம்.

திரைப்படத் துறையினரே இந்த 'பைரஸி தடுப்பு'க்கு எனத் தனி அணி அமைத்துப் போராட அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று மட்டும் கேட்டிருக்கும் விஷால், அந்த அணியினர் ஏகே 47, லட்சுமிவெடிகள், அணு ஆயுதம் ஆகியவற்றையும் திருட்டி விசிடி விற்பவர்கள், வாங்குவர்களுக்கு எதிராக பயன்படுத்தவும் அனுமதி கேட்டிருக்கலாம்.

பண்டிகை நாள்கள் மற்றும் வார இறுதி நாட்களில் சிறப்புக் கட்டணம் கொண்டுவர ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார் புரட்சி தளபதி. இதனால் எந்த மாற்றமும் நிகழாது. பதிலாக, எந்த கிழமையெல்லாம் ஆங்கிலத்தில் எழுதும்போது `y' என்ற எழுத்தில் முடிகிறதோ, அந்த கிழமைகளில் எல்லாம் இருமடங்கு கட்டணம் வசூலிக்க ஒத்துழைப்பு தரவேண்டும் என கேட்கலாம். நடிகர்களின் வெறித்தன ரசிகர்கள் தனது அரைஞாண் கயிற்றை அடகு வைத்தாவது படத்தை வந்து பார்த்துவிடுவார்கள். இதன்மூலம், தயாரிப்பாளர்களின் குடும்பம் மட்டுமல்லாது, அடகுக்கடை வைத்திருப்பவர்களின் குடும்பமும் காப்பாற்றப்படும். 

தியேட்டரில் ஆயிரம் ரூபாய் வரை செலவழித்து  `முத்துராமலிங்கம்', `மொட்ட சிவா கெட்ட சிவா', `புரூஸ் லீ' போன்ற காட்டுமொக்கையிலும் கப்பிமொக்கை படங்களை பார்க்க நேரிடுவதால் தான் மக்கள் தியேட்டர் பக்கமே தலைவைக்க மாட்டேன் என்கிறார்கள். அதனால், அரசு சார்பாக ஒரு குழு அமைத்து `மொக்கை படங்கள் வெளியாகாமல்' தடுக்கலாம். இதனால், விஷால் நடிக்கும் சில படங்களுக்கே ஆபத்து வந்தாலும் வரும். என்ன செய்வது, தியாகம் தான் நம்மை உயர்த்தும். வேண்டுமென்றால், ரிஜெக்ட் ஆன படங்களுக்கு அரசு நிவாரண நிதி வழங்க வேண்டும் என கோரிக்கை வைக்கலாம்.

இணையதளத்தில் வெளியாகும் படங்களை, இந்தியாவை தாண்டி வெளிநாடுகளில் இருக்கும் கும்பல் தான் திருட்டுத்தனமாய் ரிலீஸ் செய்கிறது. எனவே, மாநில அரசு, மத்திய அரசுக்கு கோரிக்கைகள் வைத்தது போல சர்வதேச நீதிமன்றத்திக்கும், ஐ.நா. சபைக்குமே சில கோரிக்கைகள் வைக்கலாம்.

அடுத்த கட்டுரைக்கு