Published:Updated:

அஜித் ஏன் மாஸ்!? - ஒரு ரசிகனின் பார்வை!

விக்னேஷ் செ

'வாழு; வாழ விடு' எனும் கொள்கையோடு வாழ்பவர் 'தல' என அவருடைய ரசிகர்கள் பெருமைப்பட்டுக் கொள்வதுண்டு. தன்னம்பிக்கைக்கு உதாரணமாகச் சொல்லப்படும் அஜித்குமாரிடம் இன்னும் நாம் கற்றுக்கொள்ள வேண்டிய பத்து நற்குணங்கள் இவை...

கூட இருப்பவர்களையும் கூடவே உயர்த்திடு 

தன்னுடன் பணியாற்றுபவர்களுக்கு சிறு பிரச்னை என்றாலும் அது தெரிந்தால் உடனே அதைத் தீர்க்க உதவக்கூடியவர் அஜித். 'அட்டகாசம்' படத்தின் 'பொள்ளாச்சி இளநீரே...’ பாடல் காட்சிக்காக ஆஸ்திரேலியாவுக்கு ஷூட்டிங் போயிருந்தார்கள். அந்தப் படத் தயாரிப்பாளருக்குப் பணச் சிக்கல். படக் குழுவினர் அனைவரையும் தன் சொந்த செலவில் பார்த்து, திரும்ப அழைத்துவந்தாராம் அஜித். பல நல்ல காரியங்களுக்கு உதவியுள்ள அஜித் 2014-ல் தனது பணியாளர்கள் பன்னிரெண்டு பேருக்குத் தனது சொந்தச் செலவில் ஆளுக்கொரு வீடு கட்டிக் கொடுத்தார் என செய்திகள் வெளியானது . தன்னோடு இருப்பவர்களும் பொருளாதாரப் பாதுகாப்போடு இருக்கவேண்டும் என்கிற எண்ணம் கொண்டவர்கள் சினிமாவில் வெகுசிலரே!

செய்ந்நன்றி மறவாதிரு 

தமிழ் சினிமாவில் முன்னணி தயாரிப்பாளராக இருந்த ஏ.எம்.ரத்னம் தொடர் கடனில் சிக்கித் தத்தளித்தபோது, அவரது படங்களில் நடித்த யாரும் கண்டுகொள்ளாத நிலையில் 'ஆரம்பம்' படத்தை அவரைத் தயாரிக்கச் சொல்லி நடித்து லாபத்தை ஏற்படுத்திக் கொடுத்தார். மேலும், 'வீரம்', 'என்னை அறிந்தால்' படங்களைத் தயாரிக்கும் வாய்ப்புகளையும் அவருக்கே வழங்கி கடனில் இருந்து மீட்டிருக்கிறார்.

அர்ப்பணிப்புக்குத் தயாராயிரு 

'பரமசிவன்' படத்தில் நடிப்பதற்காக தனது உடலை வருத்தி இருபது கிலோ எடையைக் குறைத்தார். 'ஆரம்பம்' திரைப்படத்தில் நடித்தபோது ஏற்பட்ட விபத்தின் காரணமாக முழங்கால் மற்றும் தோள்பட்டையில் அடிபட்டது. பைக் ரேஸ் மற்றும் சினிமாவில் நடித்தபோது ஏற்பட்ட விபத்துகளால் இதுவரை பத்துக்கும் மேற்பட்ட சர்ஜரிகளும் நடந்திருக்கின்றன. சில அபாயகரமான  காட்சிகளுக்கு 'டூப்' போட்டுக்கொள்ளலாம் என டைரக்டர்கள் கூறினாலும் சிரமத்தைப் பொருட்படுத்தாமல் தானே ஏற்று நடிப்பவர் அஜித். 

தோல்விகளால் துவளாமல் இரு 

கார் பந்தயங்களில் கலந்துகொண்டு பல நேரங்களில் கடும் விபத்துக்களைச் சந்தித்து படுகாயங்களுக்கு உள்ளானாலும் தொடர்ந்து பங்குபெற்று சில வெற்றிகளையும் குவித்தார். ஃபார்முலா கார் பந்தயத்தில் பங்குபெற்ற வெகுசில இந்தியர்களுள் அஜித்தும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. தொடர்ந்து சில தோல்விப் படங்கள் வெளியானாலும் துவண்டு போய்விடாதவர். 'ஜீ' படத்தின் தோல்விக்குப் பிறகு பத்திரிகையாளர்களைத் தனது அலுவலகத்துக்கு அழைத்து, 'படம் சரியாப் போகலை. ஆனால், நல்ல கதை’ என இயல்பாகப் பேசிக்கொண்டிருந்தார்.  

உயர்த்தியோருக்கு உண்மையாயிரு 

தனது ரசிகர்களில் சிலர் தங்களது குடும்பத்தைப் பார்க்காமல் அபிமான நடிகரின் படம் வெளிவந்தால் கைக்காசைச் செலவு செய்து பேனர் அமைப்பது, பாலாபிஷேகம் செய்வது போன்றவற்றில் ஈடுபட்டுவந்ததால்  2011-ம் ஆண்டு தனது ரசிகர் மன்றத்தை அதிரடியாகக் கலைத்து ரசிகர்களை நல்வழியில் செயல்படுமாறு அறிவுறுத்தினார். தன்னை ஆதரித்து, தனது பெரும் புகழுக்குக் காரணமாயிருந்த ரசிகர்கள் சீரழிவதை அவர் ஒருபோதும் விரும்பமாட்டார். 

நம்பினோர்க்கு நாணயமாயிரு 

அஜித்தின் வெள்ளித்திரைப் பிரவேசத்துக்குக் காரணமே அவர் நடித்த ஒரு செப்பல் விளம்பரம்தான். அதன் மூலமே 'ப்ரேம புஸ்தகம்' படத்தில் அவர் அறிமுகமானார். தான் உபயோகித்து அறியாத பொருளுக்குச் சாதகமாக, தன்னை நம்பி குறிப்பிட்ட தயாரிப்புகளை வாங்கும் மக்களை ஏமாற்றும் விதத்தில் விளம்பரம் செய்வதை விரும்பாததால் எந்த விளம்பரங்களிலும் நடிப்பதில்லை என  பின்னாளில் உறுதி எடுத்தார். 

சமூகத்திற்குக் காவலாயிரு 

பாதுகாப்பான பயணத்தை வலியுறுத்தி மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் 2013 ஆகஸ்டு 18 அன்று சென்னை முதல் பெங்களூர் வரையிலான இருசக்கர வாகன விழிப்புணர்வுப் பேரணியில் அஜித் பங்கேற்றார். தலைக்கவசம் அணிவதன் அவசியத்தைப் பொதுமக்களுக்கு வலியுறுத்தும் விதமாக இந்தப் பயணம் நிகழ்ந்தது. 

அநியாயத்திற்கு எதிராயிரு 

2010-ல் நிகழ்ந்த கருணாநிதி பாராட்டு விழாவில் அஜித்குமார் பேசும்போது திரையுலகினரை அரசியல் இயக்கங்களில் பங்கெடுக்குமாறும் விழாக்களில் கலந்துகொள்ளுமாறும் சிலர் மிரட்டுவதாக பகிங்கரமாகப் புகார் கூறினார். நட்சத்திரக் கிரிக்கெட் போட்டி நடத்த பொதுமக்களிடம் பணம் வசூல் செய்வதற்கு கடுமையாக கண்டனம் தெரிவித்திருந்தார். எதிர்விளைவுகளைப் பற்றிக் கவலைப்படாமல் மனதில் பட்டதை வெளிப்படையாகப் பேசும் குணம் கொண்டவர் அஜித்.

புகழுக்கு மயங்காதிரு 

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் இந்தியாவின் புகழ்பெற்ற மனிதர்கள் 2012-வது ஆண்டுப் பட்டியலில் அஜித்குமாருக்கு 61-வது இடம் கிடைத்தது. மேலும், 2013-வது ஆண்டில் கூகுளில் அதிகம் தேடப்பட்ட தென்னிந்தியத் திரைப்பட நடிகராகவும் வலம் வந்தார். எனினும் விருது விழாக்களில் கூட அதிகமாகப் பங்கேற்காமல் தானுண்டு; தன் வேலையுண்டு என நடிப்பில் மட்டும் கவனம் செலுத்துகிறார். 

கிடைக்கும் வாய்ப்பைக் கெட்டியாகப் பிடித்திடு  

சினிமாவின் எந்தவொரு பின்னணியும் இல்லாமல் நடிக்கவந்து சினிமாத்துறையில் தொடர்ந்து தனக்கென ஒரு இடத்தை தக்கவைத்திருப்பது என்பது சாதாரண விஷயமல்ல. அவரது கடின உழைப்பால் கவரப்பட்ட ரசிகர்கள் தியேட்டர்களில் 'மாஸ்' காட்டி கொடுத்த அன்புப்  பரிசுதான் 'கிங் ஆஃப் ஓபனிங்' எனும் சிறப்பு. உண்மையில், 'பில்லா' படத்தில் அவர் பேசிய டயலாக் போலவே அவரது வாழ்க்கையின் ஒவ்வொரு நாளும், ஒவ்வொரு நிமிடமும், ஏன் ஒவ்வொரு நொடியும் அவராகவே செதுக்கியது தான் போல! அதனால்தான் அவர் எப்போதும் 'தல'!

ஹேப்பி பர்த்டே 'தல'!