Published:Updated:

‘அமரேந்திர பாகுபலியாகிய நான்...’ - இதே குரல்தான் அஜித்துக்கும் ஒலித்திருக்கிறது தெரியுமா?

பரிசல் கிருஷ்ணா
‘அமரேந்திர பாகுபலியாகிய நான்...’ - இதே குரல்தான் அஜித்துக்கும் ஒலித்திருக்கிறது தெரியுமா?
‘அமரேந்திர பாகுபலியாகிய நான்...’ - இதே குரல்தான் அஜித்துக்கும் ஒலித்திருக்கிறது தெரியுமா?

மகிழ்மதி மக்கள் எல்லாரும் நின்று கொண்டிருக்க, உச்சத்தில் நின்று கொண்டு பிரமாணப்பத்திரத்தைப் பார்க்காமலே படிக்கிறார் பிரபாஸ்.. இல்லை... அமரேந்திர பாகுபலி. 

அமரேந்திர பாகுபலியாகிய நான்... மகிழ்மதி மக்களின் உடல், பொருள், மானம், உயிர் காப்பேன் என்று.. உயிர்தியாகம் செய்யவும் தயங்கமாட்டேன் என்று.. ராஜமாதா சிவகாமி தேவியின் சாட்சியாக பிரமாணம் செய்கிறேன்

அந்த கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரைப் பிடித்தேன். “கேரளால ஷூட்ல இருக்கேன். ப்ரேக்ல பேசறேன்” என்றார். சொன்னமாதிரியே அழைத்தார். 

“ருத்ராபதி சேகர் என் பெயர்.  சென்னைதான். அப்பா ருத்ராபதி, பிரபல இயக்குநர் ஏ.பி. நாகராஜன் சார்கிட்ட நடிகரா, டெக்னீஷியனா இருந்தார். அவர்மேல இருக்கற மரியாதைல, அப்பா ”ஏ.பி.என். ஆர்ட்ஸ்’ அப்டிங்கற பேர்ல நாடக்குழு நடத்திட்டு இருந்தார். சின்ன வயசுல நாடகங்கள்ல நடிச்சிருக்கேன். மனோகர் சார், ஜெய்கணேஷ் சார்னு பலரோட குழுல குழந்தை நட்சத்திரமா நடிச்சு,  3 முறை சிறந்த குழந்தை நட்சத்திரம்னு விருது வாங்கிருக்கேன்”  

“நடிச்சிட்டிருந்து எப்படி டப்பிங்ல வந்தீங்க?”

“என் குரல், இப்ப எப்படி இருக்கோ, அப்படித்தான் சின்ன வயசுலயும் இருக்கும். அதுனால டப்பிங் வாய்ப்பு வந்து அப்படியே பேச ஆரம்பிச்சேன். அது ரீச் ஆகி, பலருக்கும் பிடிச்சிடுச்சு. 

‘காதல் தேசம்’ படத்துல வினீத் குரல் நான் குடுத்தது. அப்பாஸுக்கு விக்ரம் சார் குடுத்திருந்தார்.  ‘உள்ளம் கேட்குமே’ படத்துல ஷாம் சாருக்கு பேசினேன். எந்த ஹீரோ நடிக்க வந்தாலும் ஆரம்பத்துல என்னைப் பேச கூப்டுடுவாங்க. அப்பாவோட ஆசிர்வாதம்னு நம்பறேன்” 

 “குடும்பம்...”

“மனைவி காயத்ரி சேகர். பெரியவன் அக்‌ஷத் தேஜ்-க்கு 5 வயசாகுது. சின்னவன் வில்வா. ரெண்டு வயசு. ஃபேமலி சப்போர்ட் இல்லாம நான் இதெல்லாம் செஞ்சிருக்க வாய்ப்பே இல்லை. இங்கயும் ஒரு நன்றி சொல்லிக்கறேன்!”

“பாகுபலி பத்தி சொல்லுங்க”

“’மஹதீரா’, தமிழ்ல ‘மாவீரன்’னு வந்தப்ப ராம் சரணுக்கு நான் பேசிருந்தேன். மோஸ்ட்லி தெலுங்கு ஹீரோஸ்க்கு தமிழ் டப்பிங் நான் பேசிருக்கேன். மகேஷ்பாபுக்கு பேசிருக்கேன். ‘பயணம்’ படத்துல நாகார்ஜூனா வாய்ஸ் நான் பேசினதுதான். 

பாகுபலி 1-க்கு, மொதல்ல ‘ஷிவு’ கேரக்டருக்குத்தான் குரல்தேர்வுக்கு கூப்டிருந்தாங்க. அதுக்கு ராஜேஷ்னு ஒருத்தர் தேர்வாகிட்டார். நான் வந்துட்டேன். திரும்ப எனக்கு 4 மாசம் கழிச்சு வாய்ஸ் டெஸ்ட்க்கு கூப்டாங்க. ‘அல்ரெடி ஒருத்தர் பேசிட்டிருக்கார், அப்பறமும் கூப்பிடறாங்களே’னுதான் போனேன். அப்பதான் ஒரு போர்க்காட்சில தோத்துட்டா எல்லாரும் இருக்கறப்ப  பிரபாஸ் ‘எது மரணம்...’னு பேசுவாரே அதப் பேசச்சொன்னாங்க. ராஜமௌலி சாருக்கு ரொம்ப பிடிச்சு, ரிலீஸுக்கு 2 வாரம் முன்னாடிதான் அப்பா பிரபாஸ் கேரக்டருக்கு நான் டப்பிங் அப்டினு ஃபிக்ஸ் ஆச்சு.”

“அந்த ‘அமரேந்திர பாகுபலியாகிய நான்’ பேசின அனுபவம் சொல்லுங்க”

“அந்த வசனத்தை ரெண்டு தடவை பேசினேன். டிரெய்லர் வெளியாகறதுக்கு 2 நாள் முந்தி ஹைதராபாத் கூப்டாங்க. ‘ஏற்கெனவே பேசிட்டோமே திரும்ப ஏன் கூப்டறார்’னு யோசிச்சேன்.  ‘ரொம்ப பக்கத்துல ஒருத்தர் இருந்தா எப்டி சொல்லுவீங்களோ அப்படிச் சொல்லுங்க’னு பேச வெச்சார் ராஜமௌலி சார். டிரெய்லர்ல பார்த்தப்பதான் அந்த வித்தியாசம் தெரிஞ்சது. படத்துல இந்த வசனம், பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னால கம்பீரமா சொல்ற மாதிரி பேசிட்டேன். ஆனா டிரெய்லர்ல அப்படி இருந்தா சரியா இருக்காதுனு பேசச் சொல்லிருக்கார். ஒவ்வொரு டயலாக்கும் எப்டி சொல்லணும்னு பக்கத்துலயே இருந்து சொல்லிக் குடுத்தார்.  அதோட ரிசல்ட் தெரிஞ்சது. ஒரு விஷயம் சொன்னா ஆச்சர்யப்படுவீங்க. ‘மகிழ்மதி’ - இந்த ஒரு வார்த்தைய சொல்றதுக்கு திரும்ப ஃப்ளைட் டிக்கெட் போட்டு ஹைதராபாத் கூப்டாங்க. அதான் ராஜமௌலி சார்”

“அது ஏன்?”

“அனுஷ்கா மகிழ்மதிக்குள்ள என்ட்ரி ஆகற சீன். கம்பீரமா ‘மகிழ்மதி’னு சொன்னேன். ராஜமௌலி சார் கேட்டுட்டு, ‘அது அமரேந்திர பாகுபலிக்கு பழகிப்போன ஊரு. அவன் இவ்ளோ பிரமிப்பா சொல்ல மாட்டான். சாதாரணமா சொன்னா போதும்னுட்டார். அந்த ‘மகிழ்மதி’ வார்த்தையைச் சொல்றதுக்காக திரும்ப ஹைதராபாத் டப்பிங் பேசப்போனேன்.

அப்பறம் ‘தேவசேனையின்மீது கைவைப்பதும், பாகுபலி கத்தியின்மீது கைவைப்பதும் ஒன்றுதான்’ அப்டின்ற வசனம். ஃபுல் கிரிப்ல பேசிட்டேன். அப்பறம் ராஜமௌலி சார், பாகுபலி அசாதாரண வீரன். நான் வீரன்னு அவன் குரல்ல மிரட்டணும்னு இல்ல. சாதாரணமா சொன்னாலே போதும்னுட்டார். அவ்ளோ டீட்டெய்ல் பார்ப்பாரு”

“பாகுபலி டீம் பத்தி சொல்லுங்க”

“பர்ஃபெக்ட் டீம். எல்லா டெக்னீஷியன் டீம்லயும் பெண்களுக்கு முக்கியத்துவம் குடுத்திருந்தாங்க. ஆர்ட், கிராஃபிக்ஸ், டப்பிங்னு எல்லா டிபார்ட்மெண்ட்லயும் பெண்கள் முக்கியப் பொறுப்புல இருந்தாங்க.  ராணா, பிரபாஸ், அனுஷ்கானு யாரா இருந்தாலும் ராஜமௌலி சார் ஒரு முடிவெடுத்துட்டா அது நமக்கு நல்லதாதான் இருக்கும்னு முழுமையா நம்பி வேலை செஞ்சாங்க.

கே.என்.விஜய்குமார் சார்னு பாகுபலி தமிழ் டீமை பாத்துகிட்டவர். சிலது பேசி முடிச்சு சென்னை வந்தபிறகு, ‘இப்டி பேசிருக்கலாம்னு தோணிச்சு’னு சொல்லுவேன். உடனே டிக்கெட் போட்டு கூப்டு மறுபடி பேசச்சொல்லுவாங்க. ‘இவன் சொல்றத ஏன் கேட்கணும்’னு அவங்க நினைக்கவே இல்ல.  அப்பறம் மதன் கார்க்கி சார். பிரபாஸ் கோழையா நடிக்கற காட்சிகள்ல மாடுலேஷன் சம்பந்தமா நிறைய இன்புட்ஸ் குடுத்தார் அவர்”

“நாடகத்துல நடிச்சிருக்கீங்க. பெரிய திரைல நீங்க நடிக்கலையா?” 

“கொடைக்கானல்னு ஒரு படம் பண்ணினேன். ‘என்னை அறிந்தால்’ல அஜித் சார் கூடவே வர்ற போலீஸ்காரரா வந்தேன்.”

“வேற நீங்க பேசின குரல்கள்ல மறக்க முடியாதது?”

“‘பவித்ரா’ படத்துல அஜித் சாருக்கு நான்தான் குரல் கொடுத்தேன். எம்.எஸ்.தோனில, சுஷாந்த் குரல் நான் பேசினதுதான், ‘சென்னை எக்ஸ்ப்ரஸ்’ உட்பட பல படங்கள்ல ஷாருக் சார் வாய்ஸ் நான்தான். ஷாருக்கான் எந்தப் படம்னாலும் அவரே தயாரிப்பாளர்கிட்ட என்னைப் பத்தி சொல்லிடுவார்”

பேட்டியை முடிக்கும்போது அந்த வசனத்தைச் சொல்லச் சொல்லிக் கேட்டேன்.  

“நீர் என் அருகில் இருக்கும்வரைக்கும் என்னைக் கொல்லும் ஆண் மகன் இன்னும் பிறக்கவில்லை மாமா!”

அழைப்பு முடிந்தபிறகும் கேட்டுக் கொண்டிருந்தது அந்த கம்பீரக்  குரல்.