Published:Updated:

"எங்கிருந்து எடுத்தேனோ, அங்கேயே கொடுத்தேன்!" - உலகாயுதாவில் நெகிழ்ந்த விஜய் சேதுபதி

"எங்கிருந்து எடுத்தேனோ, அங்கேயே கொடுத்தேன்!" - உலகாயுதாவில் நெகிழ்ந்த விஜய் சேதுபதி
"எங்கிருந்து எடுத்தேனோ, அங்கேயே கொடுத்தேன்!" - உலகாயுதாவில் நெகிழ்ந்த விஜய் சேதுபதி

வ்வொரு வெற்றிப் படத்திற்குப் பின்னாலும் இருக்கும் முகவரி அற்ற, முகம் தெரியாதவர்களின் உழைப்பு அதிகம். எங்கோ ஒரு பேட்டியில், ஏதோ ஒரு விழாவில் திரைக்குப் பின்னால் இருக்கும் கலைஞர்களைப் பற்றிப் பேசுவார்கள், புகழ்வார்கள். முதல்முறையாக திரைக்குப் பின்னால் உழைத்த, உழைத்துக்கொண்டிருக்கிற கலைஞர்களைக் கவுரவித்திருக்கிறது, இயக்குநர் எஸ்.பி.ஜனநாதனின் ‘உலகாயுதா’ என்ற அமைப்பு. தமிழ்  சினிமாவின் நூற்றாண்டுக் கொண்டாட்டமாக நடைபெற்ற இந்நிகழ்வில், தமிழ் சினிமாவின் 100 மூத்த திரைப்படத் தொழிலாளர்களுக்கு தங்கப் பதக்கங்களை வழங்கி கவுரவித்தார்கள். ஒரு பதக்கம் ஒரு சவரன் வீதம், 100 சவரன் தங்கத்திற்கான செலவை, நடிகர் விஜய் சேதுபதி ஏற்றுக்கொண்டார். நிகழ்வின் சுவாரஸ்யங்கள்... 

இயக்குநர், நடிகர் கரு.பழனியப்பன் வரவேற்புரை கொடுக்க, சினிமா தொழிற்சங்க முன்னோடிகளான திரு.நிமாய்கோஷ், திரு.எம்.பி.சீனிவாசன் படங்கள் திறுந்து வைக்கப்பட்டது. இயக்குநரும், ‘உலகாயுதா’ அமைப்பின் நிறுவனருமான எஸ்.பி.ஜனநாதன் விழாவின் நோக்கத்தை எடுத்துரைத்தார். விஜய் சேதுபதியை நடிகராக சினிமாவிற்கு அறிமுகப்படுத்திய இயக்குநர் சீனு ராமசாமிக்கு முதல் பதக்கம் வழங்கப்பட்டது.

இயக்குநர் எஸ்.பி.ஜனநாதன், ‘’தமிழின் முதல் சலனப் படமான ‘கீசக வதம்’ 1916-ல் வெளியானது. கடந்த ஆண்டோடு முதல் சலனப் படம் எடுக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகிவிட்டது. தமிழ்சினிமாவின் கலைஞர்களுக்கு ஒரு பாராட்டு விழா நடத்தவேண்டும் என்று நண்பர்களோடு பேசிக்கொண்டிருக்கும்போது, தங்கப் பதக்கங்கள் வழங்கலாம் என முடிவு செய்தோம். நடிகர் விஜய்சேதுபதி முழு பொறுப்பையும் ஏற்றுக்கொள்வதாகச் சொன்னார். இதுபோன்ற நிகழ்வுகள் கலைஞர்களை கவுரவிக்கும்’’ என்றார்.

சங்கம் சார்ந்து இயங்கக்கூடிய கலைஞர்களுக்கு மட்டுமல்லாமல், சங்கம் சாராமல் இயங்கும் கலைஞர்களுக்கும் பதக்கம் வழங்கப்பட்டது. மூத்த திரைப்பட ஆபரேட்டர் ராமலிங்கம் என்பவருக்கு, ஆபரேட்டராகப் பணியாற்றிய இயக்குநர் சேரனின் அப்பா, பாண்டியன் பதக்கம் அணிவித்தார்.  

நடன இயக்குநர்கள், டிரைவர்கள், விநியோகஸ்தர்கள், ஒப்பனைக் கலைஞர்கள், ஆபரேட்டர்கள், ஸ்பெஷல் எஃபெக்ட்ஸ், சிறப்பு சப்தம், ஃபிலிம் லேப் வொர்க்கர்ஸ்... என சினிமாவின் அனைத்துத் துறைகளைச் சார்ந்தவர்களுக்கும் பதக்கம் அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திரைப்பட ஆவணங்களைக் காத்துவரும் திருநின்றவூர் சந்தானகிருஷ்ணன், திரைப்பட ஆய்வாளர் வரிசை.கி.ராமச்சந்திரன் மற்றும் மூத்த சினிமா பத்திரிக்கையாளர்களுக்கும் பதக்கம், சான்றிதழ்கள் வழங்கப்பட்டன.

மேடையைக் கலகலப்பாக்கியவர்களில் முக்கியமானவர், மூத்த வசனகர்த்தா ஆர்.கே.சண்முகம். அவர், ‘’எனக்கு 87 வயசாகிடுச்சு. ஆனா, 27 வயசுப் பையனாதான் நினைக்கிறேன். எம்.ஜி.ஆருக்கும் எனக்கும் 25 வருட நட்பு இருந்தது. அவருடைய ‘ஆயிரத்தில் ஒருவன்’ படத்திற்கு நான்தான் வசனம் எழுதினேன். ‘வீரபாண்டிய கட்டபொம்மன்’ உள்ளிட்ட சில படங்களுக்கு உதவி இயக்குநராகவும் வேலை பார்த்தேன். இந்த விழா, என் போன்ற கலைஞர்களுக்கு இன்னும் ஊக்கத்தைத் தருகிறது. எஸ்.பி.ஜனநாதனுக்கு நன்றி’’ எனத் தெரிவித்தார்.

’’ஊர்ப்பக்கம் ஒரு பழமொழி சொல்வாங்க. பணம் இருக்கிறவன்கிட்ட குணம் இருக்காது; குணம் இருக்கிறவன்கிட்ட பணம் இருக்காது. ஆனா, விஜய்சேதுபதிக்கு ரெண்டுமே இருக்கும்படியான நிலையைக் கடவுள் கொடுத்திருக்கார். எஸ்.பி.ஜனநாதனுக்குப் பணம் இல்லை. குணம் நிறைய இருக்கு. பணத்தை ஒரு பொருட்டாவே நினைக்காத மனிதர் அவர். இன்னைக்கு இந்த நிகழ்வை நடத்துறார். அர்னால்ட், ஜாக்கிசான், ரஜினி, கமல், விஜய், அஜித்... இப்படி சினிமாவுல பிரபலங்கள் கலந்துகிட்ட பல நிகழ்ச்சிகளைப் பார்த்திருப்பீங்க. மொத்த அரங்கமும் நிறைஞ்சிருக்கும். ஆனா, இந்த நிகழ்ச்சியில அரங்கம் நிறையலை. அரங்கத்திற்கு வந்திருக்கிற எல்லோருடைய மனசும் நிறைஞ்சிருக்கு.

இப்படி ஒரு நிகழ்ச்சியை இதுவரை பார்க்கலை. இனியும், பார்ப்பேனானு தெரியலை. எல்லோருக்கும் ஒரு பவுன் பதக்கம் கொடுத்திருக்காங்க. அது ஒரு பவுன் தங்கம் இல்லை. இத்தனை வருடம் சினிமாவுல நாம இருந்தோம்ங்கிறதுக்கான ஒரு அங்கீகாரம் இது. அரசியல் போல அல்ல சினிமா கலைஞர்கள். அவர்களை நட்சத்திரங்கள்னு சொல்றோம். ஏன்னா, மின்னி மறைஞ்சிடுவாங்க. இந்த விழாவுக்கு நான் எதுவும் பண்ணலை. பண்ணக்கூடிய சூழ்நிலையில் நான் இல்லை. ஆனாலும், இந்த நிக்ழ்ச்சிக்கு என்னைத் தலைமை தாங்க அழைச்சிருக்கார் ஜனநாதன். அவருக்கு என் நன்றி. விஜய்சேதுபதிக்கு என் நன்றி. இந்த நிகழ்ச்சிபோல, சினிமாவின் ஒவ்வொரு சங்கங்களும் தங்கள் சங்கத்தோட கலைஞர்களை கவுரவிக்கவேண்டும்’’ என்ற கோரிக்கையோடு தன் உரையை முடித்தார் இயக்குநர் அமீர்.

ஏற்புரை பேசிய விஜய்சேதுபதி, ‘’எல்லோரும் நூறு சவரன் நான் கொடுத்தேன், நான் கொடுத்தேன்னு பேசிக்கிட்டு இருக்காங்க. ஏன் கொடுத்தேன்? இங்க இருந்துதான் எடுத்தேன்... அதனால கொடுத்தேன். இன்னைக்கு எனக்குக் கிடைக்கிற மரியாதை எல்லாம் ‘நடிகர்’ விஜய்சேதுபதிக்குக் கிடைக்கிற மரியாதை. என்னை ஒரு நடிகரா அங்கீகரிச்சிருக்கிற இந்த சினிமாவுக்கு, நான் பண்ற நன்றிக்கடனாக மட்டும்தான் இதைப் பார்க்கிறேன்.’’ எனப் பேசிவிட்டு, ‘’எல்லோருக்கும் தங்கம் கொடுத்து அழகு பார்த்த என் அண்ணன், ஆசான், நண்பர் எஸ்.பி.ஜனநாதனுக்கு நான் தங்கம் கொடுக்க ஆசைப்படுறேன்’’ என அவருக்கும் பதக்கம் வழங்கி, நிகழ்ச்சியை நிறைவாக்கினார்.

விழாவில் கலந்துகொண்ட, பதக்கம் பெற்ற அத்தனை திரைப்படக் கலைஞர்கள் முகத்திலும், நூறாண்டு அங்கீகாரம்!