Published:Updated:

“ரஞ்சித்துக்கு கிடைத்த வாய்ப்பு, எனக்கும் கிடைக்கும்!” - மொட்டசிவா கெட்டசிவா விழாவில் சாய்ரமணி நம்பிக்கை!

“ரஞ்சித்துக்கு கிடைத்த வாய்ப்பு, எனக்கும் கிடைக்கும்!” - மொட்டசிவா கெட்டசிவா விழாவில் சாய்ரமணி நம்பிக்கை!
“ரஞ்சித்துக்கு கிடைத்த வாய்ப்பு, எனக்கும் கிடைக்கும்!” - மொட்டசிவா கெட்டசிவா விழாவில் சாய்ரமணி நம்பிக்கை!

ஒரு படம் மூன்று நாட்கள் ஓடுவதே சிரமமான காலம் இது. இந்தக் காலகட்டத்தில் ஒரு படம் 50 நாட்கள் ஓடி சாதனை செய்திருக்கிறது என்று உற்சாகத்தில் திளைக்கிறது தமிழ் திரையுலகம். அந்தப் படம்.... ராகவா லாரன்ஸ் நடித்திருக்கும்... ’மொட்ட சிவா கெட்ட சிவா’! (ஆம்... நீங்கள் சரியாகத்தான் வாசித்தீர்கள். அது மொட்ட சிவா.. கெட்ட சிவாவுக்கான விழாதான்). சூப்பர் ஸ்டார் ரஜினி ரசிகரான சாய்ரமணி, சூப்பர் ஸ்டாரை தனது குருவாக மதிக்கும் லாரன்ஸை வைத்து இயக்கிய ‘மொட்ட சிவா கெட்ட சிவா’வின் வெற்றியைக் கொண்டாடும் விதமாக சூப்பர் ஸ்டாரின் திரைதீபம் ரசிகர் மன்றத்தின் சார்பாக பாராட்டு விழா நடந்தது. விழாவில் கலந்து கொண்ட பிரபலங்கள் பேசியவை உள்ளது உள்ளபடி... 

மனோபாலா:

சாய் ரமணி இந்தப் படம் தொடங்கினதில் இருந்து எத்தனை போராட்டத்தை சந்திச்சிருக்கார்னு கூட இருந்து பார்த்ததால் எனக்குத் தெரியும். இப்போ எல்லாம் படம் எடுக்கறது பெரிய விஷயம் இல்ல, படத்துடைய வெளியீடு இருக்குப் பாருங்க, வானத்தில் போற காக்கா கூட பெட்டி மேல வந்து உட்காரும். சோதனை எல்லாத்தையும் தாண்டி படம் திரையாகி வெற்றியடையறது தான் சாதனை. அந்த விதத்தில் பெரிய சாதனையை செய்திருக்கிறார் சாய்ரமணி. உழைப்பு உழைப்பு உழைப்பு இது மூனு மட்டும் தான் அவருக்குத் தெரியும். லாரன்ஸ் மாஸ்டர் அதுக்கு மேல. இந்தப் படத்துக்கு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்னை வந்திட்டே இருந்தது. என்னுடைய முழு சம்பளத்தையும் கொடுத்துர்றேன். எப்படியாவது இந்தப் படத்தை வெளிக் கொண்டுவாங்கனு எந்த நடிகராவது சொல்வாங்களா? அவர் சொன்னார். சொன்னதுக்குக் காரணம் இந்த சினிமாலதான் இருப்பேன். உழைத்து மீண்டும் என்னால் சம்பாதிக்க முடியும் என்கிற தன்னம்பிக்கை தான் காரணம். அந்த தன்னம்பிக்கை சூப்பர் ஸ்டாரிடமிருந்து வந்தது. சினிமாக்காரர்களே 50வது நாள் விழா எடுக்காத இந்த காலத்தில் ரசிகர் மன்றம் சார்பாக இப்படி ஒரு விழா எடுப்பதைப் பார்க்க சந்தோஷமாக இருக்கிறது! 

பாடலாசிரியர் சொற்கோ:

‘அன்பு என்றால், பண்பு என்றால், அறிவு என்றால், தாய்மை என்றால் இந்த மூன்றெழுத்தும் ரஜினி என்ற தலைவன். அந்த ரஜினி என்கிற தலைவனை, தன்னுடைய தாயாக, தெய்வமாக இன்னும் சொல்லப்போனால் எஜமானாக வழிகாட்டியாக கொண்டிருக்கும் அதே மூன்றெழுத்தில் பெயர் கொண்ட தலைவன் ராகவா என்ற தலைவன். அந்த ராகவா என்கிற தலைவன் இல்லை என்றால் இந்த வெற்றி இல்லை. இந்த மொட்ட சிவா கெட்ட சிவா என்கிற படத்தை காண இப்படத்தின் இசையமைப்பாளரும் என் தம்பியுமான அம்ரீஷுடன் நான் சென்றேன். அங்கு ஒரு ஜாக்கிசானைப் போல, மிகப் பெரிய மைக்கேல் ஜாக்சனுக்கு கிடைப்பதைப் போல, ஒரு அலைகடல் எழுந்து ஆர்ப்பரிப்பதைப் போல, சுனாமி எழுந்து சூரையாடுவதைப் போல, பசுபிக் கடல் வெடித்து சிதறுவதைப் போல அந்த அரங்கமே குலுங்கியது, ராகவா என்ற தலைவனைக் கண்டு. என்ன காரணம் என்றால், அவன் சாதாரண தலைவன் அல்ல ரஜினிகாந்தைத் தலைவனாய் ஏற்ற ஒரு தலைவன். இந்தப் படத்தின் இயக்குநர் அன்பு மணி, பண்பு மணி, அறிவு மணி, வீர மணி, இவன் வெல்லும் மணி, தில்லாக நிற்கும் மணி, ரஜினிகாந்த் ரசிகனாய்ப் பிறந்த மணி இந்த சாய் ரமணி. விமர்சனம் பண்றானாம் ஒரு முட்டாள். இந்த வெற்றி அவனுடைய முகத்தில் காரி துப்புவதைப் போன்றது. படம் பார்த்திட்டு தம்பி அம்ரீஷ் படம் எப்படி இருக்குன்னு கேட்டான், "உச்சம் தம்பி, 100 நாள் ஓடும்னேன், இதோ 50 நாள் தாண்டிருச்சு". வரிக்கு வரி, காட்சிக்கு காட்சி கைதட்டல் வாங்கின ஒரு இயக்குநர் சாய் ரமணி. இளையராஜ இசையில் அழகி படத்தில் ஒரு சுந்தரி வந்தாளாம்னு ஒரு பாடல் எழுதினேன். அதே போல அற்புதமான பாடலை எழுத இந்தப் படத்தில் தம்பி அம்ரீஷ் மூலமா வாய்ப்பு கிடைச்சது. ’ஹரஹர மகா தேவகி’னு ஒரு பிரமாதமான பாடல் எழுதினேன். அந்த வார்த்தைய பாடல்ல சேர்த்தது தம்பி அம்ரீஷ் தான். பிறகு சாய்ரமணி பார்வைக்கு சென்று அதில் என்னென்ன தேவை என்பதை சொல்ல நான் அந்தப் பாடலை எழுதினேன். 

கொக்கரக்கொ நா சேவக்கோழி 
நீ பக்கம் வந்தா செம ஜாலி
மண்ணக் கிண்டும் கோழி போல
நீதான் என்னக் கிண்டப் பாக்குறியே
துடிக்கிது என் மீசை
துறவிக்கும் வரும் ஆசை
பௌர்ணமியின் வெள்ளை நீ 
பாகிஸ்தான் எல்லை நீ

கவிஞர் சொல்லிய கவித்துவமான அந்தப் பாடல் உங்கள் பார்வைக்கு:

கவித்துவத்தோடு கலந்த அந்த வெற்றிகரமான இந்தப் பாடல் வரக் காரணம், இந்த உட்காந்திருக்காரே தாடி வைத்தவன் தாடிக்குள் தமிழ் அழகை மூடி வைத்தவன் சாய் ரமணி தான்.

தேவதர்ஷினி:

இங்க வந்திருக்கும் எல்லோரும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் சாரின் தலைமை ரசிகர்கள் சாய் ரமணி சாரும் உட்பட. அந்த வரிசையில் தலைமை ரசிகைகளில் நானும் ஒருத்தி. சின்ன வயசில் அவர் கதை சொன்னா தான் சாப்பிடுவேன், தூங்குவேன் மருந்து சாப்பிடுவேன் எல்லாமே. அதுனால எங்க அப்பா ரஜினி சாருக்கு ஒரு கடிதம் எழுதிப் போட்டார். என் பொண்ணுக்கு நீங்கன்னா ரொம்ப பிடிக்கும். அவளுக்கு உங்கள நேர்ல பார்க்க ஆசைனு. அடுத்து ரெண்டு நாள்ல அவருக்கு கல்யாணம். ஆனாலும், என்னைக் கூப்பிட்டு நேர்ல சந்திச்சார். அப்போ போட்டோ எடுக்க வாய்ப்பில்ல. ஆனா, அதுக்குப் பிறகு அவரோட ரோபோ படத்தில் இணைந்து நடிக்க வாய்ப்பு கிடைச்சது. அதை நான் பெரிய ஆசீர்வாதமா நினைப்பேன். மொட்ட சிவா செட்ட சிவா ஆரம்பிச்சப்ப சென்னைல வெள்ளம் வந்தது. எடுத்து முடிச்சு ரிலீஸ் ஆக ஒரு வருஷம் ஆச்சு. ரிலீஸுக்குப் பிறகும் பல பிரச்னைகள். இதை எல்லாம் தாண்டி படம் இப்படி ஒரு வெற்றியடைந்திருப்பது சந்தோஷம். எனக்குத் தெரிஞ்சு சாய் ரமணியுடைய பேர டிக்‌ஷ்னரியில் சேர்த்து, எந்தப் பிரச்னை வந்தாலும் அதை தைரியமா சந்திச்சு, தீர்க்கக் கூடியவர்னு விளக்கம் கொடுக்க விரும்பறேன். 

இசையமைப்பாளர் அம்ரீஷ்:

ரஜினி சார் வீட்டு பக்கத்தில் தான் என் வீடும். ஆனா, அவரை சந்திச்சது 'மொட்ட சிவா கெட்ட சிவா' படத்திற்குப் பிறகு தான். அதற்காகவே இந்த குழுவுக்கும், ராகவா லாரன்ஸ் சாருக்கும்,  இயக்குநர் சாய் ரமணி சாருக்கும் நன்றி சொல்லிக்கறேன். நாங்க அவரை மீட் பண்ணப் போனதும், எங்கள காக்க வைக்காம உடனடியா வந்து சந்திச்சார். அவருக்கு யாரும் வெயிட் பண்ண வைக்கும் பழக்கம் கிடையாது. அதனால தான் அவர் சூப்பர்ஸ்டார். இன்னொரு ஸ்பெஷலான செய்தி சொல்றேன். சாய் ரமணி சார் சீக்கிரமே நம்ம சூப்பர்ஸ்டார் வெச்சு படம் பண்ணப் போறாரு (என்னாது...!). இந்த விஷயம் எங்களுக்குள்ளயே இருந்தது, இப்போ தான் நான் வெளிய சொல்றேன். அதில் நான் இருப்பேனானு தெரியல, இருந்தாலும் தலைவர் படத்தை சாய் ரமணி சார் இயக்குவதே எனக்குப் பெரிய சந்தோஷம்!

சாய்ரமணி:

இந்த நாள் என் வாழ்க்கையிலேயே மிகப் பெரிய சந்தோஷமான நாளா நினைக்கறேன். தலைவருடைய ரசிகர் மன்றம் சார்பா நடத்தப்படும் இந்த விழாவை என் தாய் வீட்டு சீர் போல நினைக்கறேன். இந்தப் படத்தை தலைவர் பார்க்கணும்னு ஆசைப்பட்டதே சந்தோஷமா இருந்தது. படம் பார்த்திட்டு அவர் வாழ்த்தினது அதை விட பெரிய சந்தோஷம். அவரை வைச்சு நான் படம் பண்ணனும்ங்கறது என்னுடைய கனவு! அதுக்கான வேலைகள்ல இருக்கேன்னு சொல்லியிருந்தேன். தம்பி அம்ரீஷ் அதை படம் பண்றார்னே சொல்லிட்டார் (எந்த ஒரு விஷயம்னாலும் ப்ளான் பண்ணிப் பண்ணனும்... ஓக்கே?). அது நடந்ததுன்னா இதே போல இன்னொரு விழா நடக்கும் அந்த மேடையில் தலைவரும் இருப்பாரு. இதெல்லாம் என்னுடைய ஆசை. எல்லாத்துக்கும் மேல இதுக்கான வழிய கடவுள் காட்டணும், நான் அதுக்கான முயற்சிகள் பண்ணனும். அவரை சந்திச்சிட்டு வந்ததில் இருந்து அவருக்காகவே கதை எழுதிட்டிருக்கேன். ஏன் என்னால அவரை இயக்க முடியாதா?! ஏற்கெனவே, அட்டகத்தி, மெட்ராஸ் பண்ணின திரு ரஞ்சித் அவர்கள் கபாலி படம் பண்ணலையா? ஏன் எனக்கு அந்த வாய்ப்பு கிடைக்கக் கூடாது? கண்டிப்பா அவரை சந்திப்பேன், கதை சொல்லுவேன். பிடிச்சிருந்தா பண்ணுவாரு. உழைக்கற இடத்தில் நான் இருக்கேன், கொடுக்கற இடத்தில் கடவுள் இருக்காரு. பக்கபலமா இருக்கவும், பாராட்டவும் நண்பர்கள் இருக்காங்க. இது போதும் எனக்கு.