Published:Updated:

ஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்! #Ballerina

ஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்! #Ballerina
ஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்! #Ballerina

ஒரு சிறுமியின் பாலே டான்ஸராகும் லட்சியப் பயணம்! #Ballerina

பாலே நடனக்காரியாக ஆக வேண்டுமென்பது அந்தச் சிறுமியின் வாழ்க்கை லட்சியம். அநாதைச் சிறுமியான அவளால் எப்படி இதைச் சாதிக்க முடியும்? தனது அசாதாரணமான கனவை நோக்கி அவள் பயணிக்கும் அனிமேஷன் திரைப்படம் Ballerina. ஒரு நிமிடம்கூட தேக்கமின்றி நகரும் சுவாரசியமான திரைக்கதை. எந்தப் பின்புலமும் இல்லாமல் அடிமட்டத்தில் இருந்து உயர்ந்த நிலைக்குப் பயணிக்கும் கதையை எல்லோருக்கும் பிடிக்கும்; உத்வேகம் தரும். இந்தத் திரைப்படமும் அப்படியொரு உற்சாக அனுபவத்தைத் தருகிறது.

காலம் 1880. கிராமத்தில் உள்ள ஓர் அநாதை விடுதியில் வளரும் சிறுமி ஃபெலிசி. பாலே டான்சரா ஆகும் தனது கனவைச் சாதிப்பதற்காக, அநாதை விடுதியிலிருந்து தப்பி பாரிஸ் நகருக்குச் செல்ல பலமுறை முயன்று தோற்கிறாள். அவளுடைய ஆருயிர் நண்பன் விக்டர். கண்டுபிடிப்பாளன் ஆவது அவனுடைய கனவு. சிறுமியின் இசைப்பெட்டி உடைந்து போகும்போது சரிசெய்து தருகிறான். 'என்னுடைய உதவி இல்லாமல் இங்கிருந்து தப்பிவிடுவாயா?" என்று சிறுமியிடம் சவால் விடுகிறான். வேறு வழியில்லாமல், அவனுடைய யோசனையின்படி அவர்கள் தப்பிச்செல்ல திட்டமிடுகிறார்கள். அதுவும் சொதப்பலாகி, விடுதிக் காவலர் துரத்துகிறார். பல சாகசங்களுக்குப் பிறகு எப்படியோ ரயிலில் ஏறி பாரிஸ் நகரத்தை அடைகிறார்கள்.

விக்டர் ஆற்றுப் பாலத்தில் இருந்து நகரும் படகில் விழுந்துவிட, ஃபெலிசி தனித்து விடப்படுகிறாள். அவ்வளவு பெரிய நகரில் என்ன செய்வதென்று அவளுக்குத் தெரியவில்லை. தன்னுடைய கனவுக் கட்டடத்தை ஒருவழியாக கண்டுபிடிக்கிறாள். பாலே நடனங்களுக்கான பயிற்சியும் நாடகங்களும் நிகழும் கலைக்கூடம் அது. உள்ளே நுழையும் அவள், ஒரு திறமையான பாலே டான்சரின் ஒத்திகையைக் கண்டு பிரமித்துப்போகிறாள். அவளுக்குள் இருக்கும் நடன ஆசை, கொழுந்துவிட்டு எரிகிறது. காவலாளி அவளைப் பிடித்து ''இங்கு திருட வந்தாயா?'' என்று மிரட்டுகிறான்.

கலைக்கூடத்தின் பணிப்பெண் ஃபெலிசியைக் காப்பாற்றுகிறாள். அவளுடைய கால் ஊனமாக இருக்கிறது. அவளைப் பின்தொடரும் ஃபெலிசி ''எனக்கு தங்குவதற்கு இடமில்லை. உதவுங்கள்'' என்று கெஞ்சுகிறாள். ''எவருக்கும் உதவ விருப்பமில்லை'' என்று அவளது வேண்டுகோள் நிராகரிக்கப்படுகிறது. விடாமல் பின்தொடர்ந்து செல்லும் ஃபெலிசி, அந்தப் பெண் ஒரு பெரிய கட்டடத்தில் பணிப்பெண்ணாக இருப்பதை அறிகிறாள். கட்டடத்தின் உரிமையாளராக இருக்கும் பெண்மணி, படிக்கட்டுகள் முழுவதையும் சுத்தம் செய்யும்படி ஆணையிடுகிறாள். மலைப்புடன் நிற்கும் பணிப்பெண்ணிடம், ''சுத்தம் செய்வதில் நானும் உதவுகிறேன். என்னை உங்களுடன் தங்குவதற்கு அனுமதியுங்கள் ப்ளீஸ்'' என்கிறாள் ஃபெலிசி. பணிப்பெண் மனது இளக, இருவரும் சேர்ந்து சுத்தம் செய்கிறார்கள். தன்னைப் பற்றிய விவரங்களைச் சொல்கிறாள் ஃபெலிசி.

மறுநாள், தன் நண்பன் விக்டரைச் சந்திக்கிறாள் ஃபெலிசி. இருவரும் தங்களின் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்கிறார்கள். அப்போது கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஃஈபில் டவரில் தானொரு முக்கிய பங்கை வகிப்பதாக அளந்துவிடுகிறான் விக்டர். உண்மையில் அவன் அங்கு சாதாரண உதவியாளனாகத்தான் இருக்கிறான். ஃபெலிசியைக் கவர்வதற்காக அவன் சொல்லும் இனிய பொய் அது.

தான் தங்கியிருக்கும் கட்டடத்தில் ஒரு சிறுமி பாலே ஆடிக்கொண்டிருப்பதைப் பார்க்கிறாள் ஃபெலிசி. அவளருகில் ஆர்வமாகச் செல்கிறாள். ஆனால், திமிர் பிடித்த அந்தச் சிறுமியோ "நீ யார், எப்படி இங்கு வந்தாய்?'' என்று கேட்கிறாள். ''எனக்கும் பாலே கற்றுக்கொள்ள ஆசை'' என ஃபெலிசி சொல்ல, ஆணவமாகச் சிரிக்கும் சிறுமி, "நீ ஒன்றுமே இல்லாதவள். என்னை மாதிரியெல்லாம் ஆக முடியாது" என்றபடி ஃபெலிசியின் இசைப் பெட்டியை தூக்கியெறிகிறாள். அது சாலையில் விழுந்து உடைந்து சிதறுகிறது. துயரத்துடன் அதைப் பொறுக்கியெடுகிறாள் ஃபெலிசி.

அப்போது தபால்காரன் வந்து ஒரு கடிதம் தருகிறான். அதுவொரு அழைப்புக் கடிதம். பாலே நடனத்தில் புகழ்பெற்றிருக்கும் நடன மங்கை ஒருவருடன் இணைந்து மேடையில் ஆடுவதற்கான ஓர் அற்புத வாய்ப்பு. அந்தக் கடிதம் திமிர் பிடித்த சிறுமியான மேடிக்கு வந்திருக்கிறது. சட்டென்று ஒரு யோசனை ஃபெலிசிக்கு தோன்றுகிறது. தவறுதான்; என்றாலும் பாலே கனவுக்கு முன்னால் எதுவும் பெரிதாக தெரியவில்லை.

அந்த அழைப்புக் கடிதத்துடன் சென்று 'தான்தான் மேடி' என்று பொய் சொல்லி கலைக்கூடத்தினுள் நுழைந்துவிடுகிறாள். ஆனால், பாலே நடனத்தில் முறையான பயிற்சி ஏதும் இல்லாததால் மிகவும் தடுமாறுகிறாள். ''இந்தத் தகுதிச் சுற்றில் இறுதியாக வெற்றி பெறுபவரே மேடையில் ஆட முடியும். மற்றவர்களுக்கு இடமில்லை. சிறப்பாக ஆடாதவர் ஒவ்வொருவரையும் தினமும் நீக்கிவிடுவேன்'' என்கிறார் ஆசிரியர்.

ஃபெலிசியைப் பராமரிக்கும் பணிப்பெண் அவளைக் கலைக்கூடத்தில் பார்த்து திகைத்துப்போகிறாள். தான் செய்த தவறையும் தன்னுடைய பாலே கனவையும் சொல்கிறாள் ஃபெலிசி. ''என்னுடைய முதலாளி மகளின் வாய்ப்பை நீ திருடியிருக்கிறாய். இதனால், என்னுடைய வேலையே போய்விடும் தெரியுமா?'' என்று கோபப்பட்டாலும், ஃபெலிசிக்காக மனமிரங்கி, ''சரி, நாளை காலை முதல் பயிற்சி. சீக்கிரம் எழுந்துகொள்" என்கிறாள் பணிப்பெண். அப்போதுதான் அவள் ஒரு முன்னாள் பாலே நடனக்காரி என்கிற உண்மை ஃபெலிசிக்கு தெரிகிறது.

கடுமையான பயிற்சிகள் ஆரம்பிக்கின்றன. முதலில் சலித்துக்கொள்ளும் ஃபெலிசி, பிறகு மெள்ள மெள்ள அவற்றில் தேறுகிறாள். இது தகுதிச் சுற்றுகளில் எதிரொலிக்கிறது. மற்றவர்கள் ஒவ்வொருவராக நீக்கப்பட, ஃபெலிசி இறுதிக் கட்டத்துக்கு தேர்வாகும் வாய்ப்பு நெருங்குகிறது. இந்தச் சமயத்தில் ஃபெலிசி பொய் சொல்லி போட்டியில் நுழைந்த விஷயம் அம்பலமாகிவிடுகிறது. கட்டட உரிமையாளப் பெண்மணி 'காச் மூச்'சென்று கத்துகிறாள். ''இந்தப் பொய்க்காரியைத் துரத்திவிட்டு என் மகளைத் தேர்வுசெய்ய வேண்டும்' என்கிறாள். இளகிய மனம்கொண்ட ஆசிரியர் இதற்கு ஒப்புக்கொள்வதில்லை. ஒரு தேர்வுவைக்க முடிவு செய்கிறார். ''இறுதியாக ஒரு வாய்ப்பு. இதில் எவர் சிறப்பாக நடனமாடுகிறார்களோ அவரே இறுதிக்கட்ட தேர்வுக்குச் தகுதி செய்யப்படுவார்" என்கிறார்.

ஆனாலும் ஃபெலிசியின் தவறுகளாலும் தடுமாற்றங்களாலும் அவள் போட்டிக்குத் தேர்வாகாமல் அநாதை விடுதிக்குத் திருப்பி அனுப்பப்படுகிறாள். ஃபெலிசி மீண்டும் முயற்சித்து தனது கனவைச் சாதிக்கிறாளா இல்லையா என்பதை விறுவிறுப்புடன் சொல்கிறது மீதிக் கதை.

ஆங்கிலம் மற்றும் பிரெஞ்சு மொழிகளில் வெளியாகியிருக்கும் இந்தத் திரைப்படம், கனடா மற்றும் பிரான்ஸ் தயாரிப்பு. பதினெட்டாம் நூற்றாண்டின் பின்னணியில் நடக்கும் கதை என்பதால், அப்போதுதான் கட்டப்பட்டுக்கொண்டிருக்கும் ஃஈபில் டவரைப் பார்க்க வியப்பாக இருக்கிறது. அநாதை விடுதியிலிருந்து ஃபெலிசியும் விக்டரும் தப்பிக்கும் காட்சிகள் சுவாரசிய கலாட்டா. பாரிஸ் நகரில் ஃபெலிசியை பிரிந்த முதல் நாளில் தனக்கு நிகழ்ந்த அனுபவங்களை விக்டர் விவரிப்பது, உறைந்த காட்சிகளாக பயணிப்பது அற்புதம்.

பாலே நடனத்தில் சிறந்து விளங்கும் ஒரு ரஷ்ய சிறுவனோடு ஃபெலிசிக்கு நட்பு ஏற்படுகிறது. அவன் சில பயிற்சிகளை அவளுக்கு சொல்லித்தருகிறான். இதைக் கேள்விப்படும் விக்டருக்கு காதில் புகை வருகிறது. இது சார்ந்த நகைச்சுவைக் காட்சிகள் சுவாரசியமாக இருக்கின்றன. விக்டர் கண்டுபிடிக்கும் ஒரு விஷயம் இறுதியில் ஃபெலிசிக்கு ஆபத்தில் இருந்து தப்பிக்க உதவுவது அருமை.

பாலே நடனம் தொடர்பான திரைக்கதை என்பதால், இதில் வரும் பாடல்களும் பின்னணி இசையும் அபாரமாக உள்ளன. பாலே நடனத்துக்கான அடிப்படையான பயிற்சிகளை ஃபெலிசி கற்றுக்கொள்ளும் காட்சிகள் அழகு. காற்றில் மிதந்து வரும் இறகு ஒன்றைப் பார்த்து ஃபெலிசி கற்றுக்கொள்வது அருமையான காட்சி. அவள் வைத்திருக்கும் இசைப்பெட்டி தவறி எங்கோ ஆழத்தில் விழுவது போன்ற கனவு அவளுக்கு அடிக்கடி வருகிறது. அது, தோல்விக்கான குறியீடு போல.

உச்சக்கட்ட காட்சி மிகவும் பரபரப்பாகவும் அற்புதமாகவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஃபெலிசி எப்படியாவது வெற்றிப் பெற்றுவிட மாட்டாளா என்று நமக்குள் பதற்றம் வந்துவிடுகிறது. வெற்றியின் நுனியை நெருங்கும் சமயத்தில் அவளுக்குள் ஏற்படும் தடுமாற்றம், நமக்குக் கோபத்தை உண்டாக்குகிறது. அந்தப் பாத்திரத்துடன் உணர்ச்சிகரமான பிணைப்பை உருவாக்கும் வகையிலான திரைக்கதை.

இந்தச் சுவாரசியமான அனிமேஷன் திரைப்படத்தை இயக்கியிருப்பவர்கள் எரிம் சம்மர் (Eric Summer) மற்றும் எரிக் வாரின் (Eric Warin). குழந்தைகள் அவசியம் கண்டுகளிக்க வேண்டிய அற்புதமான படைப்பு, Ballerina.

Ballerina படத்தின் டிரைலர்:

...

அடுத்த கட்டுரைக்கு