Published:Updated:

’பாகுபலிக்கு சக்திமான் சவால் விடுவான்!’ - முகேஷ் கன்னா நம்பிக்கை! #VikatanExclusive

’பாகுபலிக்கு சக்திமான் சவால் விடுவான்!’ - முகேஷ் கன்னா நம்பிக்கை! #VikatanExclusive

’பாகுபலிக்கு சக்திமான் சவால் விடுவான்!’ - முகேஷ் கன்னா நம்பிக்கை! #VikatanExclusive

’பாகுபலிக்கு சக்திமான் சவால் விடுவான்!’ - முகேஷ் கன்னா நம்பிக்கை! #VikatanExclusive

’பாகுபலிக்கு சக்திமான் சவால் விடுவான்!’ - முகேஷ் கன்னா நம்பிக்கை! #VikatanExclusive

Published:Updated:
’பாகுபலிக்கு சக்திமான் சவால் விடுவான்!’ - முகேஷ் கன்னா நம்பிக்கை! #VikatanExclusive

து இருபத்தி ஒன்றாம் நூற்றாண்டை நெருங்கிக் கொண்டிருந்த காலம். எல்லோர் வீடுகளிலும் டி.வி இருக்கிறதோ இல்லையோ... சக்திமான் ஸ்டிக்கர்கள் சுவர், பீரோ, ஜன்னல் என எல்லா இடங்களையும் ஆக்கிரமித்திருக்கும். சக்திமான் பெயரைச் சொல்லியே பல பிராண்டுகள் கல்லாக் கட்டிக் கொண்டிருந்தன. 2000-த்திற்குப் பிறகு ஸ்பைடர்மேன் ரசிகர்களான இந்தியக் குழந்தைகளுக்கு எல்லாம் முன்னோடியே இந்த 'சக்திமான்'தான். 

சூப்பர்ஹீரோ பாத்திரங்கள் குழந்தைகளை வெகு எளிதாக ஈர்த்துவிடும். அதை இந்தியத் தொலைக்காட்சி வரலாற்றில் சோதனை முயற்சியாகச் செய்து பெரும் வெற்றியும் பெற்றது இந்தத் தொடர். சக்திமான் வந்து தங்களைக் காப்பாற்றுவார் என நம்பி உயரமான கட்டிடங்களில் இருந்து குதித்து இறந்த குழந்தைகளின் சோகமான கதைகள் எல்லாம் இந்தத் தொடருக்குப் பின்னணியில் இருக்கின்றன. இந்த ஃபேஸ்புக், வாட்ஸ்-அப் யுகத்தின் பரபரப்பிலும் சக்திமான் திரும்ப ஒளிபரப்பாகப் போகிறது என சந்தோஷப்பட்டவர்கள் இருக்கிறார்கள். நீண்ட முயற்சிகளுக்குப் பிறகு ஆதர்ச ஹீரோ சக்திமானாக நடித்த முகேஷ் கன்னாவைப் பிடித்தேன்.

"நான்தான் முகேஷ் கன்னா. 90'களின் குழந்தைகளுக்கு என்னை சக்திமானாகத்தான் அடையாளம் தெரியும். ஆனால் குழந்தைகளின் சூப்பர் ஹீரோவாக மாறுவதற்கு முன்னாடி எல்லா மனிதர்களையும் போல எனக்கும் நிறைய பிரச்னைகள் இருந்துச்சு. எனக்கு எப்போதுமே படிப்பில் பெரிய ஈடுபாடு இருந்ததில்லை. ஆனாலும் அப்பா சொன்னதுக்காகப் படிச்சேன். பி.எஸ்.சி படிச்சு முடிச்ச அப்புறம் லா படிச்சேன். நான் நடிக்க வருவேன்னு நானோ வேற யாருமோ கொஞ்சம் கூட எதிர்பார்க்கவே இல்லை. சூப்பர் ஹீரோவாக நடிக்கணும்ங்கிறது என்னோட லட்சியமும் இல்லை."

"லா காலேஜ் டு சூப்பர்ஹீரோ தொடர்... எப்படி?"

லா காலேஜ்ல படிச்சிட்டு இருக்கும்போது நிறைய நாடகங்கள்ல நடிச்சேன். அப்புறம் ட்ராமா அசோசியேஷன்ல செகரட்டரி ஆனேன். படிச்சி முடிச்சு வெளியில் வந்ததுக்கு அப்புறம் ஃப்ரெண்ட்ஸ் நிறைய பேர் 'நீ ஏன் நடிப்பை நோக்கி போகக் கூடாது..? உனக்கு நடிப்பு நல்லாவே வருது... அதை நோக்கிப் போ...'னு சொன்னாங்க. அப்புறம் நானும் புனே ஃபிலிம் இன்ஸ்ட்டியூட்டில் சேர்ந்து ரெண்டு வருஷம் படிச்சேன். வெளியில் நடிப்புக்கு வாய்ப்புத் தேடி ஐந்து படங்களில் நடிச்சேன். அந்த படங்கள் முழுசா வேலை முடியாம ரிலீஸ் கூட ஆகாமலே போயிடுச்சு. இந்த நடிகர் எதுக்குமே சரிப்பட்டு வரமாட்டான்னு எல்லோரும் நினைச்சுக்கிட்டு இருந்த நேரத்துலதான் 'மஹாபாரதம்' நாடகத்துல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது. அந்த நாடகம் மூலமாகத்தான் நடிகனாக எனக்கு ஒரு அடையாளம் கிடைச்சது. என்னுடைய முகமும் பாலிவுட் நடிகர்களைப் போல மக்களுக்குத் தெரிய ஆரம்பித்தது. அந்த ஃபேஸ் வேல்யூவைப் பயன்படுத்தி படம் எடுத்து ரிலீஸ் பண்ணாங்க. தோல்விகளால் சூழப்பட்ட அந்தக் காலகட்டத்தில் அதுவும் கடைசியில ஃப்ளாப் ஆனது. இதற்கிடையே நான் பண்ணின போலீஸ் ரோல் மூலமாக என்னை ஒரளவுக்கு நல்லாப் பேசுனாங்க. இதெல்லாம் நடந்துக்கிட்டு இருந்த நேரத்தில்தான் எனக்கு 'சக்திமான்'ல நடிக்கிற வாய்ப்பு கிடைச்சது."

"சக்திமானாக நடிச்ச அனுபவத்தைப் பற்றிச் சொல்லுங்க?"

"நான் 'மஹாபாரதம்' நாடகத்துல பண்ணின 'பீஷ்மர்' கதாபாத்திரம் மூலமாக எனக்கு நல்ல வரவேற்பு இருந்தது. ஆனால் அதை அடிச்சுத் துவம்சம் பண்ற மாதிரியான ரோல்தான் எனக்கு சக்திமான் நாடகம் மூலமா கிடைச்சது. இன்னமும் என்னோட உண்மையான பெயர் நிறைய பேருக்குத் தெரியாது. நான் வெளியில் எங்கே போனாலும் சிறுவயதுக் குழந்தைகள் முதல் பெரிய ஆட்கள் வரை சக்திமான்னுதான் கூப்பிடுவாங்க. அந்த அளவுக்கு மக்கள் மனசுல பதிஞ்ச கதாபாத்திரம்தான் இந்த சக்திமான். அந்த நாடகம் 7 வருஷமா தூர்தஷன் டி.வி-யில் போட்டிருக்காங்க. அந்த ஏழு வருஷத்தை நான் என்னோட வாழ்க்கையில மறக்கவே முடியாத நாள்களாகக் கருதுறேன். நிறைய மொழிகள்ல அந்த நாடகம் டப் ஆச்சு. என்னோட புகழும் அந்த நாடகத்தில் நடிச்சதால் ரொம்பவே அதிகமா உயர்ந்துச்சு. அந்தக் காலகட்டத்தில் எனக்கு வந்த பட வாய்ப்புகள் எல்லாத்தையுமே 'சக்திமான்' எனும் சூப்பர்ஹீரோ பாத்திரத்துக்கு சிக்கல் வருமேங்கிற ஒரே காரணத்தால் ஒதுக்கிட்டேன். தொடர் ஒளிபரப்பான ஏழு வருஷமும் முழுக்க முழுக்க சக்திமான் நாடகம் மேல மட்டுமே கவனம் செலுத்துனேன். அந்த நாடகத்துக்கு நானும் ஒரு தயாரிப்பாளர்." 

" 'சக்திமான்' ரீ-என்ட்ரியை எதிர்பார்க்கலாமா?"

"சில மாதங்களுக்கு முன்பு அதற்கான பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருந்துச்சு. அதே தூர்தர்ஷன் சேனல்ல போடலாமானு யோசிச்சிக்கிட்டு இருந்தாங்க. அப்புறம் ஸ்டார் ப்ளஸ்ல போடலாமானு பேச்சுவார்த்தை நடந்துக்கிட்டு இருந்தது. எனக்கோ ஆரம்பிச்ச இடத்துலேயே போய் நிக்கணுமானு ஒரு பக்கம் யோசனையா இருந்துச்சு. இன்னோரு பக்கம் அந்த கேரக்டருக்காக 10 கிலோ இடையை குறைக்கனும். அந்த ரோல் என்னைத் தவிர வேற யாராலேயும் பண்ண முடியுமானு எண்ணம் வர ஆரம்பிச்சது. அப்புறம் அதற்கான ட்ரெண்டும் இப்போ இருக்கும் குழந்தைகளைக் கவரும் விதத்தில் இருக்குமானு யோசிச்சதால் அந்த ப்ளானும் ட்ராப் ஆகிடுச்சு. இப்போதும் கூட ஸ்கூல், காலேஜ் ஆண்டு விழாக்கள்ல என்னை கெஸ்ட்டா கூப்பிடுவாங்க. குழந்தைகள் இருக்கும் விழாக்களில் கலந்துகொள்ளும்போது எல்லோரும் சக்திமான்னுதான் என்னை அடையாளம் சொல்றாங்க. அது மட்டும் இல்லாம கோரஸா 'சக்திமான்... சக்திமான்...'னு சவுண்ட் கொடுப்பாங்க. அதை கேட்கும்போதெல்லாம் சக்திமானாதான் என்னை நானே ஃபீல் பண்ணிக்குவேன். இந்த மகிழ்ச்சியே எனக்கு போதும்னு அடுத்த கட்டத்தைப் பற்றிப் பெருசா எதுவும் யோசிச்சுப் பார்க்கலை. இவை எல்லாத்தையும் விட சக்திமான் நாடகம் ஹிட் ஆனது நாங்கள் யாருமே கொஞ்சம் கூட எதிர்பார்க்காத விஷயம். அது தானாகவே நடந்த ஒரு அதிசயம். இப்போ டிரெண்டுக்கு அப்போ பண்ண மாதிரியே சக்திமான் பண்ணா, நல்லா இருக்காது. பாகுபலிக்கே சவால் விடுற அளவுக்கு சக்திமானுக்கு புதுப்புது விஷயங்கள்ல அப்டேட் ஆகணும். அப்படி ஒரு வாய்ப்பு கிடைச்சா, நிச்சயம் சக்திமான் ரீ-எண்ட்ரி கொடுப்பான்

"நீங்க நடத்துற சைல்டு ஃப்லிம் சொசைட்டி (Child Film Society) பற்றிச் சொல்லுங்க?"

"நான் அந்த அமைப்புக்கு 2016-ல் தான் தலைவர் ஆனேன். 'சக்திமான்' சீரியல் பண்ணிக்கிட்டு இருந்த காலத்தில் குழந்தைகள் என்னை சூப்பர் ஹீரோவாகப் பார்த்தது எனக்கு ரொம்ப பிடிச்சதுனாலதான் இந்த அமைப்பில் இறங்கலாம்னு முடிவு பண்ணினேன். உள்ளே போனதுக்கு அப்புறமாதான் தெரிஞ்சது அப்போ இருந்த குழந்தைகளுக்கும் இப்போ இருக்கிற குழந்தைகளுக்கும் நிறையா வித்தியாசம் இருக்குங்கிறது. நிறைய டெக்னாலஜி ரீதியிலான விஷயங்கள் இந்த ஜெனரேஷன் குழந்தைகளை ரொம்பவே மாத்திடுச்சுனு புரிஞ்சிக்கிட்டேன். அதை மனதில் வைத்துத்தான் ரொம்ப கஷ்டப்பட்டு நானே 250 படங்களுக்கு மேல் தயாரித்தேன். ஆனால் அது ஒண்ணு கூட வெளிவரவில்லை. நிறைய ஃபெஸ்டிவல்களுக்கு அனுப்பியும் ஒரு பயனும் இல்லை. இந்தக் குழந்தைகளுக்கு ஏதாவது செய்யணும்னுதான் தினசரி கஷ்டப்படுறேன். எதாவது நடந்தா நல்லா இருக்கும். நான் மலையாளத்துல ரெண்டு படம் பண்ணியிருக்கேன் அந்தப் படங்களில் என்கூட வேலை பார்த்த சந்தோஷ் சிவனுக்கும் இந்த அமைப்பில் நடக்குற விஷயங்களைப் பற்றியெல்லாம் தெரியும்."

"எப்படியும் இந்தக் கேள்வியைத்தான் கடைசியாகக் கேட்கப் போறீங்க... நானே சொல்லிடுறேன்" எனச் சிரித்தபடியே... 

"அடுத்த ஆண்டும் இந்த அமைப்புக்கு நான்தான் தலைவரா இருப்பேன். நான் இருக்கும்போதே இந்த அமைப்பில் இருக்கும் குழந்தைகளுக்கு ஏதாவது செய்தே ஆகவேண்டும் என்பதுதான் என் எண்ணம். குழந்தைகளிடம் இருக்கும் திறமைகளை வெளிக்கொணர்ந்து அவர்களுக்குச் சரியான அங்கீகாரம் கிடைக்கப் போராடுவேன்."