Published:Updated:

டியர் ஆண்களே... 'பாகுபலி' தேவசேனா உங்கள் அருகில்தான் இருக்கிறாள். உணர்ந்திருக்கிறீர்களா?

டியர் ஆண்களே... 'பாகுபலி' தேவசேனா  உங்கள் அருகில்தான் இருக்கிறாள். உணர்ந்திருக்கிறீர்களா?
டியர் ஆண்களே... 'பாகுபலி' தேவசேனா உங்கள் அருகில்தான் இருக்கிறாள். உணர்ந்திருக்கிறீர்களா?

இந்திய சினிமா ரசிகர்களின் இரண்டு வருடக் காத்திருப்புக்கு, அற்புத விருந்து படைத்துவிட்டது பாகுபலி 2. படத்தில் கட்டப்பா மற்றும் பாகுபலியைத் தாண்டி நம்மை ஈர்ப்பவள், தேவசேனா. அப்படி என்ன இருக்கிறது அவளிடம்? அழகு... அறிவு... அதுக்கும் மேல... அவளது அந்தத் துணிச்சலும் அதை வெளிப்படுத்திய விதமும் பெண்மைக்கான புது கருத்தாக்கம்.

தேவசேனாவைப் பார்த்தவுடன், மனதுக்குள் எழுந்த முதல் கேள்வி, "அவந்திகாவை மட்டும் ஏன் இப்படி பண்ணீங்க ராஜமௌலி சார்?" என்பதுதான். பாகுபலியின் முதல் பகுதி வெளியானபோது, அவந்திகாவின் வீரம் பாராட்டப்பட்ட அளவுக்கு, அவளது பெண்மைப் பாராட்டப்படவில்லை. முன்பின் அறிமுகமில்லா ஓர் ஆடவன் வந்து ஆடைகளைக் களைத்தபோது கோபம்தானே வரவேண்டும் பெண்மைக்கு? வலுக்கட்டாயமாக அவளது கண்களுக்கு மையிட்டு, இதழுக்குச் சாயம் பூசி, நீரில் பிம்பத்தைக் காண்பித்து செய்யும் வன்புணர்வுக்கும் வற்புறுத்தலுக்கும் போராடத்தானே வேண்டும்? ஆனால், அவந்திகாவுக்கு எழும் கோபம் சட்டென்று காதலாகிறது. கசிந்துருகி, நாயகனை மனமின்றி பிரிந்துச்செல்ல நினைக்கிறாள். இப்படியான பார்வைகளும் முன்வைக்கப்பட்ட போதிலும், 'கட்டப்பா ஏன் பாகுபலியை கொலை செய்தார்?' என்ற கேள்வியே பெரிதாக இருந்தது. கட்டப்பாவுக்கும் பாகுபலிக்கும் இடையில் அவந்திகாவின் பெண்மை போராட்டம் மறுக்கப்பட்டது. பாகுபலியின் இரண்டாம் பாகத்தில் தேவசேனா மூலம் பெண்மை மரியாதை செய்யப்பட்டுள்ளது. அவள் கற்றுத்தரும் பாடங்கள் அதிகம்.

திருடர்களைப் பிடிப்பதற்காக பல்லக்கின் திரையைக் கிழித்துக்கொண்டு வாளுடன் வெளியே வரும் முதல் காட்சியிலேயே மனதைப் பறிக்கிறாள் தேவசேனா. அமரேந்திர பாகுபலிக்கோ, அவள் மீது கண்டதும் காதல். இதானே முதல் பாதியின் அவந்திகாவும் என்கிறீர்களா? அங்கேதான் ட்விஸ்ட். இந்த அப்பா பாகுபலிக்கு யுவராணியின் மனதை வெல்ல வேண்டும் என்ற அவா. தான் ஓர் இளவரசன் என்பதை மறைத்து, சராசரி கடைநிலை குடிமகனாக இருந்து, அந்தக் குறுநில நாட்டில் வாழ்கிறான். அவள் மீதான காதலைச் சிந்தும் இடங்கள் யாவும், மென்மையானவை. அநியாயத்தின் பக்கம் நிற்பவர் யாராயினும் அவர்களை எதிர்த்து நின்று, தன்னை நம்பி வந்தவளது புகழுக்கு குந்தகம் விளைவிக்காத வீரம் கொள்ளை அழகு. பதவியா, மனைவியா என்ற கேள்வி வரும் இடத்திலும், ''அவனது கையை அறுத்தது தவறு தேவசேனா'' என்ற கூறும் இடத்திலும், இடைநிலை மாறாது சமநிலையில் நிற்கிறான் இந்த அமரேந்திர பாகுபலி.

சிவகாமி தேவியாக வரும் ரம்யாகிருஷ்ணனை நேருக்கு நேராய் நின்று கேள்வி கேட்கும் துணிவும் அறிவும்கொண்ட மங்கையாகப் படம் முழுக்க நம்மை எழுந்து நிற்கவைக்கிறது தேவசேனாவின் கதாப்பாத்திரம். அரசவையில் எல்லோரும் பொறுமையாகவும் நிதானமாகவும் ராஜமாதாவிடம் பேசும்போது, தேவசேனா மட்டும் குரலை உயர்த்திக் கேட்கிறாள். எதிர்த்துக் கேட்டால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம் என்ற ஒருவரின் முன்பு, யார் செய்தாலும் தப்பு தப்புதானே என்ற தோரணையில் கேட்கும் அந்தத் துணிச்சலை நிச்சயம் பாராட்டலாம். ''பொன், பொருள் கொடுத்து அடைவதற்கு நான் ஒன்றும் பொருள் அல்ல, பெண்'' என்ற அந்தக் கம்பீரம், ''சம்பந்தப்பட்ட பெண்ணின் விரும்பம் என்னவென்பதை தெரிந்துகொள்ளாமல் அவள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை, உங்களுக்கும் இல்லை'' என்கிற சீற்றம், ''கயவன் ஒருவனின் குற்றத்தைக் காட்டிலும், நல்லவன் ஒருவனின் மௌனம் கொடியது என உங்களுக்குத் தெரியாதா'' என்கிற அந்தக் கோபம், ''பெண்களைத் தவறாக அவன் தொட்டான், விரலை வெட்டினேன்'' என்ற அனல் கண்கள், தவறிழைத்தது யாராகினும் கோபப்படுவாள் அவள். மனதுக்குள் வஞ்சகமும் வன்மமும் கலக்கும் பெண்களையும், ஆண்களுக்கு எதிராகப் பேசுவதையே வீரமாக நினைக்கும் பெண்களையும், காதல் என்ற பெயரில் ஏமாற்றிவிடுவதாகக் கூறப்படும் பெண்களையுமே காட்டப்பட்ட வெண்திரையில் தேவசேனா சரியான மாற்று.

மணாளனாக மனதில் நினைத்த ஒருவன், ''கைதியாக என்னோடு தற்சமயம் வா. எல்லாவற்றையும் சரிசெய்கிறேன்'' என்கிறபோது, ''முதலில் நீ யார் எனச் சொல்'' என்று கோபப்பட்டு, பின்னர் தவறானப் புரிதலை உணர்கிறாள். 'கல்லானாலும் கணவன், புல்லானாலும் புருஷன். உன்னோடு என்றால் சிறைவாசம்கூட எனக்குச் சரிதான்' என்கிற பெண்ணாக அவள் இல்லை. ''உன் வீரத்துக்குக் கட்டுப்பட்டு உன் பணிப்பெண்ணாகவும் வரலாம். ஆனால், காதலை காரணமாக்கி என்னால் கைதியாக வர இயலாது. என் மரியாதைக்கோ, தன்மானத்துக்கோ இழுக்கு நேருமேயானால், நான் அதனை செய்ய மாட்டேன்'' என்று உறுதியாக நிற்கிறாள். தனக்கான சம உரிமையைக் கெஞ்சவில்லை. நிமிர்ந்த நன்னடையோடும் நேர்கொண்ட பார்வையோடும் கேட்கிறாள். ''இறுதி மூச்சு வரை உன் கற்புக்கோ, மரியோதைக்கோ இழுக்கு வராது'' என உறுதியளித்த பின்னரே பாகுபலியுடன் செல்கிறாள். கைதியாக அல்ல; மனையாளாக. படகில் அவள் ஏறும் அந்தக் காட்சி, ப்பாஆஆஆ.... அவ்வளவு கம்பீர அழகு. ''கட்டப்பாவைப் பத்திரமாக மீட்டு வாருங்கள்'' என வாளைக் கொடுத்து அனுப்புவதெல்லாம், வேற லெவல்!

இதைப் படிக்கும் பலருக்கும், 'இங்கே தேவசேனா மாதிரி பொண்ணுங்க எங்கே இருக்காங்க?' என்று தோன்றலாம். அவர்களுக்கு ஒரே ஒரு பதில். தேவசேனா புரட்சி நாயகியெல்லாம் இல்லை. அவளைப் போன்றவர்களை நீங்கள் கண்டறிவது வெகு சுலபம். உங்கள் வகுப்பில், அலுவலகத்தில், ''சரியான திமிறு பிடிச்ச பொண்ணு. அவகிட்டே பேச்சுக் கொடுக்காதே'' என யாரையாவது சொன்னால், அந்தப் பெண்ணை சற்றே நிதானமாகக் கவனியுங்கள். தேவசேனா கண்களுக்குத் தெரியலாம்!