Election bannerElection banner
Published:Updated:

“வருங்கால சி.எம்-க்கு ‘ஹலோ’ சொல்றோமோன்னு தோணுச்சு!” - ‘சரவணன் இருக்க பயமேன்’ கலகல!

“வருங்கால சி.எம்-க்கு ‘ஹலோ’ சொல்றோமோன்னு தோணுச்சு!” - ‘சரவணன் இருக்க பயமேன்’ கலகல!
“வருங்கால சி.எம்-க்கு ‘ஹலோ’ சொல்றோமோன்னு தோணுச்சு!” - ‘சரவணன் இருக்க பயமேன்’ கலகல!

“வருங்கால சி.எம்-க்கு ‘ஹலோ’ சொல்றோமோன்னு தோணுச்சு!” - ‘சரவணன் இருக்க பயமேன்’ கலகல!

'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்தின் மூலம் ரசிகர்களுக்குக் கிச்சுக்கிச்சு மூட்டிய இயக்குநர் எழில், அடுத்து இயக்கும் படம் 'சரவணன் இருக்க பயமேன்'. இந்தப் படத்தைத் தயாரித்து ஹீரோவாகவும் நடித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். ரெஜினா, ஸ்ருஷ்டி டாங்கே என டபுள் ஹீரோயின். காமெடிக்கு சூரி, சாம்ஸ், மன்சூர் அலிகான், ரோபோ சங்கர் உள்ளிட்ட பெரிய ஸ்டார் கேங். 

படத்தின் பிரஸ்மீட்  சென்னையில்  நடந்தது. படத்தின் ட்ரெய்லரை இரண்டு முறையும், 'எம்பூட்டு இருக்கு ஆசை...' என்ற ரொமான்ட்டிக் பாடலையும்,  'லாலா கடை சாந்தி...' என்ற குத்துப் பாடலையும் தலா ஒருமுறையும் திரையிட்டு நிகழ்ச்சியைத் தொடங்கினார்கள்.

நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார் நடிகர் சாம்ஸ். இசையமைப்பாளர் டி.இமான், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

உடல்நிலை சரியில்லாததால் முதலில் பேசினார் ரோபோ ஷங்கர். " 'வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்' படத்துல 20 நிமிஷம் காமெடியில் தெறிக்கவிட்டிருப்பார் எழில் சார். அந்த காமெடிக்குச் சிரிக்காத ஆளே கிடையாது. அதுக்காக எழில் சாருக்கு ஸ்பெஷல் தேங்ஸ். அடுத்து, இன்றைய விழா நாயகர் இமான் சாருக்கு வாழ்த்துகள். இப்ப போட்ட ரெண்டு பாடல்களையும் கேட்கும்போதே அள்ளுது. சிறப்பு சார். (இது இசை வெளியிட்டு விழா கிடையாது. பிரஸ் மீட்)  இந்தப் படத்துலயும் நடிச்சிருக்கேன். பார்த்துட்டுச் சொல்லுங்க. நன்றி" என விடைபெற்றார்.

ஜி.எம்.குமார் "உதயநிதியின் பின்னணி என்னன்னு எல்லாருக்குமே தெரியும். நான் இவரை ரெண்டே ரெண்டு தடவைதான் ஷூட்டிங் ஸ்பாட்ல மீட் பண்ணியிருக்கேன். ஒருமுறை நான் அவருக்கு 'ஹலோ' சொன்னேன். இன்னோரு முறை அவரே வந்து எனக்கு 'ஹலோ' சொன்னார். நான் பயந்துபோய் என் மனசுக்குள்ள `நம்ம தமிழ்நாட்டின் வருங்கால சி.எம்-க்கு 'ஹலோ' சொல்றோமோ!'னு நினைச்சுக்கிட்டேன். பாலிட்டிக்ஸ்ல இது எல்லாம்கூட நடக்கலாம் இல்லையா. இருபது வருஷங்கள் கழிச்சு நான் இருப்பேனான்னு தெரியாது. ஒருவேளை இருந்தா, `சி.எம்-கூட எல்லாம் நான் நடிச்சிருக்கேன்'ன்னு சொல்லிக்கலாமே! (உதயநிதி முகத்தில் பிரகாசச் சிரிப்பு) அதுக்காக இந்தப் படத்துல நடிக்க சான்ஸ் கொடுத்த உதயநிதிக்கும் இயக்குநர் எழிலுக்கும் நன்றி" என்றார். 

``டிக்கெட் விலை எல்லாம் குறைக்க, தியேட்டர்கள் மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும். அப்படி எடுத்தால்தான் இன்னும் நிறைய மக்கள் படம் பார்க்க தியேட்டருக்கு வருவார்கள்'' என்று விலைப் பட்டியலுடன் பேசினார் நடிகர் லிவிங்ஸ்டன். "இப்பெல்லாம் ஒரு குடும்பம் சினிமா பார்க்க வந்தால், குறைந்தது 1,500 ரூபாய் செலவாகுது. படம் பார்க்க வருவதற்கு ஆட்டோ, காருக்குத் தனி செலவு. தியேட்டர்குள்ளே வந்துட்டா, ஒரு குட்டி பப்ஸ் 80 ரூபாய். சின்னத் தண்ணி பாட்டில் 50 ரூபாய். டிக்கெட் விலையும் அதிகம். இதனால்தான் மக்கள் தியேட்டர் பக்கமே வர்றதில்லை.  எல்லோராலும் எப்படி 1,500 ரூபாய் செலவு பண்ண முடியும்? இனி இந்த விலையெல்லாம் குறைக்க நடவடிக்கை எடுத்தால்தான், மக்கள் தியேட்டர் பக்கம் வருவாங்க. இந்த விலையைக் குறைக்க நடவடிக்கை எடுத்தே ஆகணும்.

இந்தப் படம்  அருமையா வந்திருக்கு. உதயநிதி நடிப்பு எனக்கு ஆரம்பத்துல இருந்தே ரொம்பப் பிடிக்கும். இன்னொசன்ட்டான முகம் அவருக்கு. காமெடி பண்ணாலும் ஆக்‌ஷன் பண்ணாலும் நாம ரசிக்க முடியும். எதிர்காலத்தில் நிச்சயம் உதயநிதி தவிர்க்க முடியாத ஒரு பெரிய ஸ்டார் ஆகிடுவார். அந்த நம்பிக்கை எனக்கு இருக்கு. இதை நான் காக்க பிடிக்கச் சொல்றேன்னு நினைக்க வேண்டாம்" என வாழ்த்தி விடைபெற்றார். 

அதன்பிறகு மைக் பிடித்த நடிகர் மன்சூர் அலிகான், "நான் 'பாகுபலி' படம் பார்த்து ரெண்டு  இடங்கள்ல அழுதுட்டேன். 'தப்பு பண்ணிட்டே சிவகாமி'னு சத்யராஜ் சார் சொல்லும்போது கண்ணுல தண்ணி கொட்டிருச்சு. ராஜமெளலி பெரிய இயக்குநர் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனா, என்னுடைய ஆதங்கம் எல்லாம், தமிழ்நாட்டுல ஏன் இப்படியெல்லாம் படம் எடுக்க மாட்டேங்குறாங்க? இங்கே படம் எடுத்திருந்தால் பத்தாயிரம் தொழிலாளர்களுக்கும் மேல வேலை கிடைச்சிருக்குமே! மத்திய அரசு, மாநில அரசுனு யாருமே தமிழ்நாட்டைக் கண்டுக்க மாட்டேங்கிறாங்க.

நம்ம பூமி வறண்ட பூமியா மாறிட்டிருக்கு. படம் பார்க்க அடிச்சுப்பிடிச்சு டிராஃபிக் எல்லாம் கடந்து தியேட்டர்ல போய் உட்கார்ந்தால், உடனே `இந்தியில் மட்டும்தான் தேசிய கீதம் இசைக்கப்படும்'னு  போடுறாங்க. தமிழ்நாட்டுல, தமிழ் மொழியில் சொன்னால்தான் புரியும். இங்கே என்ன ராணுவ ஆட்சியா நடக்குது? இந்தக் கொடுமை எல்லாம் என்னன்னு சொல்றது? இதை பா.ம.க., சீமான்னு யாருமே கவனிக்கலை. நான் கவனிச்சதால் சொல்றேன். இதையெல்லாம் மாத்துங்கப்பா" என, படம் வெற்றிபெற வாழ்த்து தெரிவித்தார்.

"எனக்கு சுசீந்திரன் சார் படத்துலதான் முதல் முதல்ல 'பரோட்டா'ங்கிற  பேரு சேர்த்து 'பரோட்டா சூரி'னு அடைமொழி வந்துச்சு. இப்ப அதை உடைக்கிற மாதிரி 'புஷ்பா புருஷன்' பேரு மாத்தி வெச்சவர் எழில் சார். சுசீந்திரன் சாரோட குருதான் எழில் சார். சிஷ்யனை மிஞ்சிய குரு ஆகிட்டார்" என்று பன்ச் வைத்துப் பேசத் தொடங்கினார் நடிகர் சூரி.

"எழில் சார் மூலமா, 'புஷ்பா புருஷன்'னு பேரு மாறினதுல சந்தோஷம். ஆனா என்ன... என் பொண்டாட்டியைத்தான் இப்ப எங்கேயும் கூப்பிட்டுப் போக முடியாதபடி ஆகிடுச்சு. 'ஹோட்டல், கோயில், தியேட்டர்...'னு எங்கே போனாலும் 'புஷ்பா புருஷன்... புஷ்பா புருஷன்'னு கூப்பிடுறாங்கனு ஒருமாதிரி ஆகிட்டாங்க . 'அட... விடுடி. இதுவும் ஒரு நல்ல பதிவுதான்'னு சொல்லிபுட்டேன்.

அடுத்து இந்தப் படத்துல நடிப்பதற்கு முன்னாடி உதயநிதி சார் கூப்பிட்டு, 'எழில் சார் கதையைச் சொல்லிட்டார். நீங்களும் கேட்டுக்கோங்க'னு சொன்னார். 'என்னது எழில் சார் கதையெல்லாம் சொல்றாரா?!'னு ஷாக்காகிட்டேன். அப்புறம் என்கிட்டயும் எழில் சார் கதை சொன்னார். நான் சொன்னேன், 'அண்ணா, உங்க படத்துல 'கதை இல்லை.. கதை இல்லை'னு சொல்லாதீங்க. இப்ப நீங்க சொன்ன கதையே பிரமாதமா இருக்கு'னு சொன்னேன். எழில் சார் 'என்னது கதை இருக்கா? நான் கதை வராத மாதிரிதான் பார்த்துக்கிறேன். ஆனா, எப்படியோ கதை வந்துடுதுப்பா'னு சிரிச்சார். ரொம்ப ஜாலியான மனுஷன். எதுக்கும் டென்ஷனே ஆக மாட்டார்.

முதல் நாள் ஷூட்டிங்போது உதயநிதி சார் என்கிட்ட வந்து, 'எழில் சார் எதுவுமே சொல்ல மாட்டேங்கிறார். டயலாக் மட்டும் கொடுத்துட்டுப் போயிட்டாங்க. இப்ப நான் என்ன பண்றது?'னு கேட்டார். நான் சொன்னேன், 'பிரதர், சில ஸ்கூல்ல ரெண்டாவது படிக்கிற பையன் அஞ்சாது படிக்கிற க்ளாஸுக்குப் போவான். அஞ்சாவது படிக்கிறவன் மூணாவது க்ளாஸ்ல போய் உட்காருவான். ஆனா, எல்லாரும் கடைசியில் பாஸ் பண்ணிடுவாங்க. அப்படிதான் எழில் சார் ஸ்கூல். நீங்க என்ன வேணாலும் எப்படி வேணாலும் பண்ணுங்க. சார் எல்லாத்தையும் பார்த்துப்பார். இங்கே ஒரு பய பேப்பரில் இருக்கும் டயலாக்கை சரியா சொல்ல மாட்டான். ஆக்‌ஷன் சொன்னதும் இஷ்டத்துக்கு அடிச்சுவிடுவாங்க. எழில் சார் எல்லாத்தையும் பார்த்துட்டு அமைதியாகத்தான் இருப்பார். ஆனா, எடிட்டிங் டேபிளில் உட்கார்ந்து எல்லாத்தையும் வெட்டித் தூக்கிட்டு படம் ஆக்கிடுவார்" என ஜாலி பண்ணினார் சூரி.  இயக்குநர் எழில் படத்தில் பணியாற்றியவர்களைப் பற்றி ஒரிரு வார்த்தைகள் பேசி நன்றி சொல்லி விடைபெற்றார். 

இறுதியாகப் பேசிய உதயநிதி, "என் முதல் படம் இயக்கிய டைரக்டர் ராஜேஷ் சார், என் பாடிலாங்வேஜ்ல இருந்து எல்லாத்தையும் கூட இருந்து சொல்லித்தருவார். எஸ்.ஆர்.பிரபாகரன்  சார் கொஞ்சம் சீரியஸான டைரக்டர். சின்னச் சின்ன விஷயங்களை எல்லாம் கத்துக்கொடுப்பார். ஆனா, எழில் சார் 'ஆக்‌ஷன்' மட்டும்தான் சொல்வார். 'கட்' கூடச் சொல்ல மாட்டார். சில டேக்ல ரெஜினாவே 'கட்' சொல்லியிருக்காங்க. அந்த அளவுக்கு மிஸ்டர் கூல் டைரக்டர் எழில் சார். 'எம்பூட்டு இருக்குது ஆசை...'னு ரொமான்டிக் பாட்டுக்கு நானும் ரெஜினாவும் டான்ஸ் ஆடும்போது, அதைப் பார்ப்பதற்குப் பெரிய கூட்டமே சேர்ந்துட்டாங்க. என் இன்னோரு படத்தின் கேமராமேன் பாலசுப்ரமணியெம் சார் எல்லாம் கிளம்பி வந்துட்டார். ரொம்ப ஜாலியா படம் எடுத்து முடிச்சோம். படம் செம காமெடியா வந்திருக்கு. படம் பாருங்க நல்லா இருந்தால் அன்னிக்கே விமர்சனம் எழுதுங்க. நல்லா இல்லைன்னா மூணு நாள் கழிச்சு எழுதுங்க. அவ்வளவுதான்" என்றார் உதயநிதி. 

ஜி.எம்.குமார் சொன்ன வருங்கால சி.எம் மேட்டருக்கு, உதயநிதி "அந்தச் சமயத்துல நிறைய பேர் கூட்டமா நின்னுட்டிருந்தாங்க. நீங்க (ஜி.எம்.குமார்) என்னைக் கவனிக்கவே இல்லை. அதுதான் நான் உங்களுக்கு 'ஹலோ...'னு சொன்னேன். வேற எதுவும் இல்லைங்க" என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு