விஜய் முதல் ஐஸ்வர்யா ராய் வரையிலான விளம்பர சர்ச்சையும் ராஜ்கிரணின் பாடமும்!

டிகர், நடிகைகளுக்கும் விளம்பரங்களுக்கும் ஏழாம் பொருத்தம். பணத்திற்காக அல்லது பப்ளிசிட்டிக்காக பண்ணும் விஷயம்தான். ஆனால், இன்று இல்லையென்றாலும், என்றாவது ஒருநாள் அதன் விளைவுகள் வெவ்வேறு வடிவங்களில் எதிரொலிக்கும். அந்தவகையில், விளம்பரங்கள் மூலம் சர்ச்சை ஆன பிரபலங்கள் சிலர் பற்றிப்  பார்ப்போமே?

 

நகைக்கடை விளம்பரம் ஒன்று, நடிகர் பிரகாஷ் ராஜுக்கு சிக்கலைக் கொடுத்தது. விளம்பரத்தில், மகளை அறிமுகப்படுத்தும் தந்தை பிரகாஷ்ராஜ், 'இது என் முதல் டென்ஷன். உங்களுக்கும் இதுபோல திருமண டென்ஷன் இருந்தால், 'டென்ஷன்' என மெசேஜ் அனுப்பும்படி' பார்வையாளர்களிடம் சொல்வார். பெண்களை 'டென்ஷன்' எனக் குறிப்பிட்டதாகவும், இது பெண்களுக்கு எதிராக, பெண்களைக் கொச்சைப்படுத்தும்படி இருக்கிறது எனவும் சென்னையைச் சேர்ந்த ஆசிரியை ஒருவர், பிரகாஷ்ராஜ் மீது பொதுநல வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்து, 'மனுதாரர் சார்பில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பவில்லை. பிரகாஷ்ராஜ் மீது மட்டும் குறிப்பிட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது' என மனுவை நிராகரித்தது நீதிமன்றம். ஆனால், இவ்விளம்பரம் பிறகு ஒளிபரப்பப்படவில்லை. 

பிரகாஷ்ராஜ்

நடிகர் விஜய் 'கத்தி' படத்தில் கோக் நிறுவனத்திற்கு எதிராக வசனம் பேசினார். 'அதே கோக் விளம்பரத்தில் நீங்களும்தானே நடித்தீர்கள்?' என ரசிகர் ஒருவர் கேட்ட நியாயமான கேள்விக்கு, ''அரசியல் கட்சிகள் கூட்டணி வைத்துக்கொள்ளும்போது இதே கேள்வியை எழுப்பினால் மகிழ்வேன். நானும், சச்சின், அமீர்கான் போன்ற பிரபலங்களும் கோக் விளம்பரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்போது நான் அதை விளம்பரப்படுத்துவதில்லை. நானும் சாதாரண மனிதன்தான். என் தவறுகளைத் திருத்திக்கொள்வேன்'' எனப் பதில் கொடுத்தார் விஜய்.

விஜய்

முன்னாள் உலக அழகி ஐஸ்வர்யா ராய் நடித்த நகைக்கடை விளம்பரம் ஒன்றும் சர்ச்சையில் சிக்கியது. விளம்பரத்தில், சிம்மாசனம் ஒன்றில் அமர்ந்திருக்கும் ஐஸ்வர்யா ராய்க்குப் பின்புறம் வைக்கப்பட்டிருந்த ஓவியத்தில், உடல் மெலிந்த கருப்பு சிறுமி ஒருவர், குடை பிடித்திருப்பது போல காட்சி அமைக்கப்பட்டிருந்தது. இந்த விளம்பரம் நிறவெறியையும், குழந்தைத் தொழிலாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும் அமைந்திருப்பதாக எதிர்ப்பு கிளம்ப, சம்பந்தப்பட்ட நிறுவனம் விளம்பரத்தை நிறுத்தியது. ஐஸ்வர்யா ராய் சார்பில் வருத்தமும் தெரிவிக்கப்பட்டது.

ஐஸ்வர்யா ராய்

மேகி நூடுல்ஸுக்குத் தடை விதிக்கப்பட்ட சமயம், அதன் விளம்பரத்தில் நடித்திருந்த ஆர்யா மீதும் எதிர்ப்புகள் குவிந்தது. ''இந்தியாவில் உற்பத்தி ஆகும் உணவுப் பொருட்கள், தர நிர்ணய சோதனைக்குப் பிறகே சந்தைக்கு வருகிறது. பிறகுதானே, நாங்கள் அதில் நடிக்கிறோம். விளம்பரத்தின் மூலம் கிடைக்கும் பணத்திற்கு வரியும் கட்டுகிறோம். எனவே, உணவுப் பொருட்களின் தரத்திற்கும் எங்களுக்கும் தொடர்பு கிடையாது. 'இது தரமான உணவு' எனச் சான்று அளித்த அரசுதான் பொறுப்பேற்க வேண்டும்' எனத் தன்னிலை விளக்கம் கொடுத்தார். இப்பிரச்னையின்போது மற்றொரு நடிகர் விஷாலும், 'நானும் சில குளிர்பான விளம்பரங்களில் நடிக்கிறேன். அதன் பிரச்னைகளுக்கு சம்பந்தப்பட்ட நிறுவனமே பொறுப்பு' எனக் குறிப்பிட்டார்.

ஆர்யா - விஷால் சர்ச்சை

'ஆரோக்கியம் இல்லாத குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் ஏன் நடிக்கிறீர்கள்?' எனச் சிறுமி ஒருத்தி கேட்ட கேள்வியால், வெளிநாட்டு குளிர்பான நிறுவனத்தின் விளம்பரத்தில் நடிப்பதை நிறுத்தினார் பாலிவுட் நடிகர் அமிதாப் பச்சன். விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டிருந்த நடிகர்கள் பலர் சில பல சர்ச்சைகளுக்குப் பிறகு, விளம்பரங்களில் தலை காட்டுவதே இல்லை. தமிழ் நடிகர்கள் பலரும் கட்டி மாய்ந்துவிட்ட வேட்டி விளம்பரத்தில், பெரிய தொகை சம்பளமாகப் பேசப்பட்டும், நடிக்க மறுத்தார் ராஜ்கிரண். ''வேட்டி என்பது ஏழைகளின் உடை. அதிகபட்சம் அவர்களால் ஒரு வேட்டியை 100 ரூபாய் மட்டுமே கொடுத்து வாங்க முடியும். இவர்கள் எனக்கே இவ்வளவு சம்பளம் தருகிறார்கள் என்றால், அதை யாரிடம் வசூலிப்பார்கள். ஏழைகளிடம்தானே? நான் வேட்டி விளம்பரத்தில் நடித்தால் எனக்கு லாபம்தான். என் சுய லாபத்திற்காக மற்றவர்களை கஷ்டப்படுத்துவது துரோகம்!'' என்பதுதான் ராஜ்கிரண் சொன்ன பதில்.

 

Do you like the story?

Please Appreciate the Author by clapping!