Vikatan.com

www.vikatan.com would like to send you push notifications.

Notifications can be turned off anytime from browser settings.

விஜய், விஷால் முதல் விஜய் சேதுபதி வரை..! நடிகர்கள் பாடிய முதல் பாடல் #HeroesAsSingers

முன்பெல்லாம் நடிக்க வருபவருக்கு பாடவும் தெரிந்திருக்க வேண்டும் என ஒரு கண்டிஷனே இருந்தது. பெயரிலேயே பாகவதர் இருந்தவர்தான் சூப்பர் ஸ்டாராக இருந்தார். பிறகு படிப்படியாக ‘நீங்க நடிச்சா மட்டும் போதும்’ லெவலுக்கு வந்தார்கள்.  இப்போது ஹிஸ்ட்ரி இஸ் பூமராங் போல எல்லா நடிகர்களும் பாடவும் ஆரம்பித்திருக்கிறார்கள். 

ரஜினி பாடிய அடிக்குது குளிரு... துவங்கி விஜய் பாடிய பாப்பா பாப்பா வரை அத்தனையும் கேட்டிருப்போம், தெரிந்தும் வைத்திருப்போம். இன்னும் நமக்குத் தெரிந்த நடிகர்களின் பாடகர் அவதாரங்கள் தொடங்கிய கதையும், பாடல்களும் கீழே... இதில் உங்களுக்குப் பிடித்த பாடகரை கமெண்ட் செய்யலாமே!

பாடல்

சூர்யா:

அதற்கு முன்பு சன்ரைஸ் விளம்பரத்தில் பாடிய சூர்யா பிறகு பாடாமல் சைலன்டாக இருந்தார். அவரை மீண்டும் பாட அழைத்து வந்தார் இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா. 'அஞ்சான்' படத்தில் இடம்பெற்ற ஏக் தோ தீன் சார் பாடலை ஆண்ட்ரியாவுடன் இணைந்து பாடியிருந்தார் சூர்யா.

 

விக்ரம்:

விக்ரம் பாடியதில் பலருக்கும் முதலில் நினைவிருப்பது ஓ போடு பாடலின் விக்ரம் வெர்ஷன் மட்டும்தான் இருக்கும். ஆனால் அதற்கு முன்பே சூர்யா நடித்த 'ஸ்ரீ' படத்தில் ஹே காற்றே பாடலை சங்கர் மகாதேவன், திப்புவுடன் இணைந்து பாடியிருந்தார். அதற்குப் பிறகு 'கந்தசாமி'யில் நான்கு பாடல்கள், மதராசப்பட்டினம்  படத்தில் எம்.எஸ்.வியுடன் இணைந்து மேகமே பாடல், தெய்வத்திருமகள், ராஜபாட்டை, டேவிட், ஸ்கெட்ச் ஆகிய படங்களில் பாடியிருக்கிறார் சீயான்.

 

 

சிம்பு: 

குட்டிப்பையனாக ஐயம் எ லிட்டில் ஸ்டார் பாடிய சிம்பு, வளர்ந்த பின் தந்தை டி.ராஜேந்தர் இசையமைத்து இயக்கிய 'சொன்னால்தான் காதலா' படத்தில் ‘முள்ளாக குத்தக் கூடாது’, ‘சுக்குமலா’ (ஆமாங்க... சுக்குமலாதான்!) என இரண்டு பாடல்களைப் பாடினார். அதன் பிறகு சரசரவென அதிகரித்தது சிம்புவின் ட்ராக் ரெக்கார்ட்.

 

 

தனுஷ்:

பொயட்டு தனுஷை பாடகராக அறிமுகம் செய்து வைத்தது யுவன் ஷங்கர் ராஜா தான். தனுஷ் நடித்த 'புதுக்கோட்டையிலிருந்து சரவணன்' படத்தில் தனுஷ் பாடிய நாட்டு சரக்கு பாடல் இன்ஸ்டன்ட் ஹிட்டும் ஆனது. அதிலிருந்து கொலவெறி ஹிட் கொடுத்ததும், கன்னடப் படம் 'வஜ்ரகயா'வில் ஒரு பாடல், தெலுங்கில் 'திக்கா' படத்தில் பாடியது வரை நீள்கிறது தனுஷின் ட்ராக் லிஸ்ட்.

 

 

கார்த்தி:

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்த பருத்திவீரன் மூலம் கதாநாயகனாக அறிமுகமானார் கார்த்தி. அதில் ஊரோரம் புளியமரம், சகுனி படத்தில் கந்தா காரவட பாடல்களில் வசனங்கள் பேசியிருந்தார். அவரைப் பாடகராக அறிமுகம் செய்தது யுவன்தான். தனது 100வது படமான பிரியாணி படத்தில் பிரேம் ஜி, ப்ரியா ஹேமேஷ் ஆகியோருடன் கார்த்தியைப் பாடவைத்தார். லேட்டஸ்டாக ஜிப்ரான் இசையில் 'மகளிர் மட்டும்' படத்துக்காக ஒரு பாடலைப் பாடியிருக்கிறார்.

 

 

விஷால்:

விஷால் சுந்தர்.சி இயக்கத்தில் நடித்த படம் 'மத கஜ ராஜா'. அந்தப் படத்தின் இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி "நீங்க பாடினா நல்லாயிருக்குமே" என ஐடியாவை சொல்ல மைடியர் லவ்வரு ரெடியானது.

 

 

ஜெயம் ரவி:

சுராஜ் இயக்கத்தில் தான் நடித்த 'சகலகலா வல்லவன்' படத்தின் மூலம் பாடகரானார் ஜெயம் ரவி. தமன் 'டைகர்' என்ற படத்திற்கு போட்ட ட்யூனிலேயே ‘பல்பு வாங்கிட்டேன்’ பாடலை கம்போஸ் செய்ய, அதை பாடிக் கொடுத்தார் ரவி. 

சித்தார்த்:

யுவன் இசையில் வெளியான, 'தரமணி'யில் இடம் பெற்றும் 'உன் பதில் வேண்டி' பாடலை மனதுக்குள் ஓடவிட்டுப் பாருங்கள். ஆம், அதை ஸ்ருதியுடன் பாடியது சித்தார்த் தான். தெலுங்கில் முன்பே மூன்று பாடல்கள் பாடியிருந்த சித்தார்த் தமிழில் பாடியது 'சந்தோஷ் சுப்ரமணியம்' படத்தில் இடம்பெற்ற 'அடடா அடடா' பாடல் மூலம். இதன் ஒரிஜினல் 'பொம்மரில்லு' படத்தில் இதே பாடலின் தெலுங்கு வெர்ஷனையும் சித்தார்த் பாடியிருந்ததால், தமிழுக்கும் சித்தார்த்தையே பயன்படுத்திக் கொண்டார், அப்படியே சித்தார்த்தை தமிழில் பாடகராகவும் அறிமுகம் செய்தார் டி.எஸ்.பி. அதன் பின் 'காதலில் சொதப்புவது எப்படி' படத்தில் 'பார்வதி பார்வதி', 'எனக்குள் ஒருவன்' படத்தில் பிரபலமாகவே, 'ஜில் ஜங் ஜக்' படத்தில் ஷூட் த குருவி ஆகிய பாடல்களைப் பாடினார்.

 

 

சிவகார்த்திகேயன்:

நடிகரைப் பாடகராக மாற்றும் ஸ்பெஷலிஸ்ட் இமான்தான் சிவகார்த்திகேயவைப் பாடகராக அறிமுகம் செய்தார். 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ படத்தில் டைட்டில் ட்ராக் பாடியவர் அதற்குப் பிறகு தான் நடிக்கும் ஒவ்வொரு படத்திலும் பாடினார். 'ரெமோ'வில் மட்டும் சிங்கர் சிவா மிஸ். 

 

 

விஜய் சேதுபதி:

தான் தயாரிப்பளராக அறிமுகமான 'ஆரஞ்சு மிட்டாய்' படம் மூலம் பாடலாசிரியராகவும், பாடகராகவும் அறிமுகமானார் விஜய் சேதுபதி. 'ஸ்ட்ரெயிட்டா போய்', 'ஒரே ஒரு ஊருல' பாடல்களைப் பாடினார். 

 

கோலிவுட் வட்டாரத்தில் இன்னும் பாட்டுப் பாடாத நடிகர் இவராகத் தான் இருக்கும். அஜித்! அவரின் குரலை 'உல்லாசம்' படத்திற்காக பதிவு செய்தது இசையமைப்பாளர் கார்த்திக் ராஜாதான். அஜித் இதில் பாடவில்லை. உல்லாசம் படத்தில் இடம்பெற்ற ’வாலிபம் வாழ சொல்லும்’ பாடலில் ஒரு வசனத்தை மட்டும் விக்ரமுடன் இணைந்து பேசியிருப்பார். சீக்கிரம் பாடுங்க ஜி. 

உங்கள் கருத்தைப் பதிவு செய்யுங்கள்

Advertisement
Advertisement
Advertisement
Advertisement

MUST READ

Advertisement

எடிட்டர் சாய்ஸ்