Published:Updated:

என்னது பாகுபலி டிக்கெட் ரேட் ஒண்ணே கால் ரூபாயா?

தார்மிக் லீ
என்னது பாகுபலி டிக்கெட் ரேட் ஒண்ணே கால் ரூபாயா?
என்னது பாகுபலி டிக்கெட் ரேட் ஒண்ணே கால் ரூபாயா?

என்னது பாகுபலி டிக்கெட் ரேட் ஒண்ணே கால் ரூபாயா?

ல்லாப் பக்கமும் பாகுபலி இரண்டாம் பகுதிக்கு டிக்கெட் கிடைக்காமல் அவதிப்படும் நேரத்தில் எதார்த்தமாக ஃபேஸ்புக்கை நியூஸ் ஃபீடை ஸ்க்ரோல் செய்யும் போது 'எங்க ஊர் தியேட்டரில் பாகுபலி படத்தை ஒண்ணே கால் ரூபாய்க்குப் பார்த்தேனே..!' என்ற ஸ்டேட்டஸைப் பார்த்து ஹார்ட் அட்டாக்கே வந்துருச்சு. 'யார்யா அவரு எனக்கே அவரைப் பார்க்கணும் போல இருக்கே?' என்று நினைத்தபடி தியேட்டரைப் பற்றி தெரிந்துக் கொள்ள கூகுளை நோக்கிப் பாய்ந்தேன். 'இந்தத் தியேட்டரை அணுக இந்த நம்பரை தொடர்பு கொள்ளவும்' என்று குறிப்பிட்டிருந்தது. 'இதோ இப்போவே தொடர்பு கொள்(ல்)வோம்' என்று நினைத்தபடி அந்த நம்பருக்கு போன் பண்ணினேன். 

மு.கு : சில பல காரணத்தால் தியேட்டரின் பெயரையும், ஊரையும் குறிப்பிடவில்லை.

''உங்க தியேட்டரில் பாகுபலி ஒண்ணே கால் ரூபாய்க்கா ஓட்டுறீங்க தெய்வமே?''

தயக்கத்துடன் பதில் சொல்ல ஆரம்பித்தார். 

''அது வந்து, அதாவது படம் அதிக விலை செலவு பண்ணி பிரமாண்டமா எடுத்து பண்ணியிருக்காங்க. அப்போ அதான சார் நியாயம். டிக்கெட் ரேட்டுகளில் பல பஞ்சாயத்துகள் ஆனதால் டிக்கெட் அப்படி இருந்திருக்கும். (இவரு ஆமாங்கிறாரா இல்லைங்குறாரா?) எனக்கு இதுக்கு மேல என்ன சொல்றதுன்னு தெரியல இருங்க சார். நான் தியேட்டர் மேனேஜர் கிட்ட கொடுக்குறேன் நீங்களே பேசுங்க.'' என்று சொல்லி ''ஏய் இங்க வாங்கப்பா'' என்று கத்தி யாரையோ அழைத்தார். (அதுக்கு இது பதில் இல்லையே?) 

அவரிடம் 'உங்ககிட்டேயும் ஒரு தடவை கேட்குறேன், உண்மையிலேயே உங்க தியேட்டர்ல பாகுபலி படத்துக்கு ஒண்ணே கால் ரூபாய்தான் டிக்கெட் ரேட்டா சார்?' என்று கேட்டதற்கு இவரும் பம்மிய குரலுடன் பதில் சொல்ல ஆரம்பித்தார். ''என்ன சார் சொல்றீங்க ஒண்ணே கால்ன்னா டிக்கெட் பார்த்தீங்க? அப்படியெல்லாம் இருக்க சான்ஸே இல்லையே சார். இது எப்படி நடந்ததுன்னே எனக்கு தெரியல. அதை விடுங்க உங்களுக்கு யார் மொதல்ல என் நம்பரைக் கொடுத்தது' என என்னிடம் திருப்பிக் கேள்வி கேட்டார். அதற்கு நானும் 'உங்க தியேட்டரைப் பற்றி கூகுள் பண்ணேன் சார் இந்த நம்பர்தான் வந்தது' என்று கூறி மறுபடியும் கேள்வியை படாத பாடு பட்டு புரிய வைத்தேன். ''அட அதான் சார் எனக்கும் ஒண்ணுமே புரியல... என்னோட நம்பரை எவனோ நெட்ல ஏத்தி விளையாடுறாங்க சார். இப்படித்தான் சார் தினமும் எனக்கு ஒரு நூறு பேர் போன் பண்ணி டிக்கெட்டைப் பற்ற கேக்குறாங்க. உங்களுக்கு அது யார்ன்னு தெரியுமா சார்? முடிஞ்சா கண்டுபிடிச்சுக் கொடுங்க சார்'' என்று மறுபடியும்  சம்பந்தமே இல்லாமல் பக்கம் பக்கமாய் பேசினார்.  

'நான் கேட்குற கேள்வி உங்களுக்கு புரியுதா பாருங்க.. உங்க தியேட்டரில் உண்மையிலேயே டிக்கெட் எவ்வளவு?' என்று பெருமூச்சு விட்டபடி பொறுமையை இழந்து கேட்டேன். ''சார் எங்க தியேட்டர்ல டிக்கெட் ரேட் 120 ரூபாய். உங்களுக்கு நம்பர் யார் கொடுத்தது? மேனேஜர் இல்லாமல், ஓனர் இல்லாமல் என்கிட்ட ஏன் சார் இந்தக் கேள்வியை கேட்குறீங்க?' (என்னாது?) என  சொல்லி அடுத்த அணுகுண்டை கடாசினார். 'சார் கொஞ்ச நேரத்துக்கு முன்னாடிதான் மேனேஜர்னு சொல்லி உங்க நம்பரைக் கொடுத்தார். நீங்க அப்போ யார் சார்?' என்று கேட்டேன். ''அய்யோ சார் நான் கேன்டீன்ல வேலை பார்க்குற பையன். (விட்டா நம்மளை கிறுக்கனாக்கிடுவாங்க போலயே) எனக்கு எதுவுமே தெரியாது. மேனேஜரை உங்களுக்கு பேச சொல்றேன்'' என்றபடி போனை வைத்துவிட்டு எஸ்கேப் ஆகிவிட்டார்.

அதானே இப்போல்லாம் கிராமங்களில் இருக்கும் தியேட்டர்கள்ல சைக்கிளை நிறுத்துவதற்கே 15 ரூபாய் வாங்குறாங்க. இதுல படத்தையா ஒண்ணே கால் ரூபாய்க்கு ஓட்டப்போறாங்க? பொய்யா இருந்தாலும் ஒரு நியாயம் வேண்டாமா மக்களே? மொதல்ல நாலண்ணா, எட்டண்ணாவெல்லாம் செல்லுதான்னு தெரிஞ்சிட்டு இந்த மாதிரி பிட்டுகளைப் போடுங்க பாஸ்!

அடுத்த கட்டுரைக்கு