Published:Updated:

‘என் கேர்ள் ஃப்ரெண்ட்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்..!’ - ஜாலி சார்லி

தார்மிக் லீ
‘என் கேர்ள் ஃப்ரெண்ட்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்..!’ - ஜாலி சார்லி
‘என் கேர்ள் ஃப்ரெண்ட்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்..!’ - ஜாலி சார்லி

‘என் கேர்ள் ஃப்ரெண்ட்கிட்ட இருந்து நிறைய கத்துக்கிட்டேன்..!’ - ஜாலி சார்லி

சார்லினு சொன்னவுடன் ஞாபகத்திற்கு வருவது இரண்டே பேர்தான்... ஒருவர் ப்ளாக் அண்ட் ஒயிட் காலத்தில் பேசாமலே காமெடியில் இறங்கியடித்த 'சார்லி சாப்ளின்'. மற்றொருவர் நம்ம கோலிவுட்டில் ரியாக்‌ஷன்ஸ் மூலமாக ரசிகர்களை தன் பக்கம் திரும்பிப் பார்க்க வைத்த 'மனோகர்' (எ) 'சார்லி'... அவருடன் ஒரு ஜாலி பேட்டி! 

''மனோகர்' டு 'மாநகரம்' சார்லி இந்த சினிமா ட்ராவல் எப்படி இருந்தது?''

“நிறைய படங்களை நடிப்பது என்னடைய சாதனையல்ல. நான் 600-க்கும் மேல் படங்கள் நடிச்சுருக்கேன். 36 ஆண்டுகள் சினிமா பயணத்தை நான் பெரிய சாதனையாக நினைத்ததே கிடையாது. என்னுடைய வாழ்வியலுக்காக ஓடிய ஓட்டம்தான் இந்த சினிமா. ஒரு மாதமோ இரண்டு மாதமோ சினிமாவில் ப்ரேக் ஆகிடுச்சுன்னா மக்கள் என்ன நினைப்பாங்க? 'முன்னாள் நடிகர் சார்லி'னு ஆகிடும். சுருக்கமாக சொன்னால் 'கம் பேக்'னு சொல்வாங்க. ஆனால் ஒரு நடிகனுக்கு 'கம் பேக்' என்பதே கிடையாது. இப்போ இது எனக்கான நேரம். அடுத்தவர்கள் நடிக்கக் கஷ்டமாகக் கருதும் ரோல்கள் எல்லாமே என்னைத் தேடிவந்து கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். 'மாநகரம்' ஆரம்பிக்கும் சமயத்தில் நான் லோகேஷிடம் 'எல்லாருமே கொஞ்சம் புதுசா இருக்காங்களே... இது சரியா வருமா?'னு கேட்டேன். அதற்கு அவர் 'சார் இதில் நெகட்டிவ் ரோல், பாஸிட்டிவ் ரோல் என்றெல்லாம் கிடையாது... ஒரு சாதரண ஹ்யூமன் பீயிங் எப்படி இருப்பான்? இதான் சார் ரோல்'னு சொன்னதும் நான் புரிஞ்சுக்கிட்டேன். படம் வெற்றி பெற்றவுடன் என் நடிப்பைப் பார்த்து பல டைரக்டர்களிடமிருந்து எனக்கு கால் வந்தது.'' 

''பிடிக்காத விஷயங்கள்?''

''எனக்கு ஒரு பழக்கம் உண்டு. 'பொய்க்கால் குதிரை' படத்தில் 'மனோகர்' என்ற என் இயற்பெயரை மாற்றி 'சார்லி'னு அறிமுகம் செஞ்சாரு கே.பாலச்சந்தர். அதற்கு அப்புறம் அவருடன் சேர்ந்து பல படங்கள் பண்ணியிருக்கேன்.' ஃபாஸில்' இயக்கிய 'பூவே பூச்சூட வா' படத்திற்குப் பின் அவர் இயக்கிய எல்லாப் படங்களில் இருந்த ஒரே நடிகன் நான்தான். அப்படி நிறைய இயங்குநர்களின் பெயரைச் சொல்லலாம். வேலை பார்க்கும் இடத்தில் எனக்கு பிடிக்காத விஷயங்கள் எல்லாவற்றையும் எனக்கு பிடிச்சதாக மாற்றிக்கொள்வேன். அதற்கு அப்புறம்தான் நான் வேலையையே தொடங்குவேன்.''  

''சின்னச் சின்னதான முக ரியாக்‌ஷன்ஸ் எல்லாம் எப்படிப் பண்றீங்க?'' 

''இதுவரைக்கும் என்னிடம் யாருமே கேட்காத கேள்வி. அடிப்படையில் நான் ஒரு நாடகக் கலைஞன். அந்தத் துறையில் இருப்பவர்களுக்கு அது ஈசியாவே வரும். அதுபோக நம் லைஃப்ல நடக்கிறதை வெச்சே நிறையக் கத்துக்கலாம். சிம்பிளா சொல்லணும்னா தினசரி வாழ்க்கையில நடக்கிற விஷயங்களை கவனிச்சா போதும். ஜூனியர் விகடனில் ஒருமுறை என்னை வைத்து ஒரு கட்டுரை எழுதியிருந்தாங்க. அப்போ நான் 30 படங்கள் பண்ணி ஒரளவு பாப்புலரா இருந்தேன். பேன்ட், சர்ட், ஷூ என எல்லாமே நார்மலா போட்டுகிட்டு தலையில் மட்டும் வித்தியாசமாக ஒரு கிரீடம் மாட்டிக்கிட்டு மவுன்ட்ரோடில் சும்மா ஒரு விசிட் போனேன். மக்கள் அதை எப்படி பாக்குறாங்கன்னு ஒரு ஆர்ட்டிகிள் பண்ணிருந்தாங்க. எல்லோருமே ஆச்சர்யமாதான் பார்த்தாங்க. அதில் ஒருவர் மட்டும்தான் என்னை மிகவும் ஈர்த்தார். சாந்தி தியேட்டர் வாசலில் ஷூ பாலிஷ் போடுபவரின் பக்கத்தில் நின்றேன். அவர் நிமிர்ந்து என் முகத்தைக்கூட பார்க்கலை. எந்தக் கேள்வி கேட்டாலும் ஷூவை மட்டும் பார்த்தே எல்லா பதிலையும் சொன்னார். 'இந்தாங்க சார் காசு'னு கொடுத்தாலும் கையை மட்டும் உயர்த்தி கொடுத்த காசை வாங்கிக்கொண்டார். 'சார் என்னை கொஞ்சம் பாருங்க'னு சொன்னாலும் 'சரி சார்'னு சொல்லிட்டு ஷூவையேதான் பார்த்துக்கொண்டிருந்தார். அது எனக்குப் பிடிச்சுருந்தது. என்னோட படங்களிலும் அதைப் பண்ண ஆரம்பிச்சேன்.''      

''ஆக்டிங் எப்போ ஆரம்பித்தது?''

''என்னுடைய ஸ்கூல் டைம்ல இருந்தே அது ஆரம்பித்துவிட்டது. ஆனால் அப்போ நான் இப்படி ஒரு நடிகனாவேன்னு நினைக்கலை. அதுபோக நான் நல்லாப் படிக்கிற பையன். திடீர்னு காலேஜ் டைம்ல ஒரு அரியர் விழுந்துருச்சு. எங்க வீட்ல திட்டி இதான் சாக்குனு சொல்லி ரேசன் கார்டை ரினீவல் பண்றதுக்கு தாலுகா ஆபீஸுக்கு அனுப்பிட்டாங்க. என்னுடைய ஃப்ரெண்டை அங்கே பார்த்தேன். 'நடிகர்கள் தேவைனு விளம்பரம் கொடுத்துருக்காங்க. நீ அப்ளை பண்ணு'னு சொன்னார். அரைமனதாக நானும் அப்ளை பண்ணேன்.   ஐந்துநாள் கழித்து இன்டர்வியூ கார்ட் வந்தது. 'அடிச்சான் பாரு அப்பாயின்ட் ஆர்டர்'னு நானும் கிளம்பினேன். அப்போ சொன்னாங்க 'உங்க ஸ்கூல் டைம்ல நீங்க நிறைய பரிசுகளும், விருதுகளும் வாங்கியிருக்கீங்க அதனால உங்களை செலெக்ட் பண்றேன்'னு சொல்லி வந்த 80 பேர்ல என்னை மட்டும் செலெக்ட் பண்ணினாங்க.'' 

''உங்க ஃபேமிலி சப்போர்ட் எப்படி?''

''ஆரம்பக் காலத்தில் ஒரு சில கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் காலம் ஓட வீட்டிலிருந்தும் முழு சப்போர்ட் கிடைத்தது. அப்பாவிற்கு நான் பெரிய நடிகனாகனும்னு ஆசை. வீட்டில் பணம் சப்போர்ட்டைவிட அவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் என் வெற்றிக்கு ஹெல்ப் பண்ணுச்சு. கல்யாணம் ஆன பின் கொஞ்சம்கூட குறையாமல் என் மனைவி ஆனிமாவிடமிருந்தும் கிடைச்சுது. என் இரண்டு மகன்களும் அமெரிக்காவில் நல்ல நிலைமையில இருக்காங்க. இதுநாள்வரை நான் ஷூட்டிங்கிற்குக் கிளம்புறதுக்கு முன்னாடி ரெண்டு பேரும் போன் பண்ணி 'அப்பா இந்த கலர் சட்டை போடுங்க, இப்படி ட்ரெஸ் பண்ணுங்க'னு சொல்றது வழக்கம். என்னுடைய ரெண்டாவது மகன் 'அப்பா நீங்க தாடி வைங்கப்பா... இப்போ ட்ரெண்ட்டே அதான்'னு அடிக்கடி சொல்லிக்கிட்டே இருப்பான். இப்போ ஒரு படத்தில் சிவகார்த்திகேயனுக்கு அப்பா கேரக்டரில் நடிக்கிறேன். அந்தப் படத்துல என் பையன் சொன்ன மாதிரி தாடி வெச்சு நடிக்கிறேன். அந்த ஸ்டில்லைப் பார்த்த அடுத்த செகண்டே என் பையனிடமிருந்து கால் வந்துச்சு 'அப்பா இந்த தாடியைத்தான் நான் சொன்னேன்' னான். எல்லாரும் எனக்கு சப்போர்ட்தான். 

இது எல்லாத்தையும்விட என் கேர்ள் ஃப்ரெண்டிடம் கத்துக்கிட்டதுதான் நிறைய. ஹா ஹா... என் கேர்ள் ஃப்ரெண்ட்னு சொல்றது என்னுடைய பாட்டி மூக்கம்மாளை. இந்த வருடத்தோடு அவர்களுக்கு 106 வயதாகிறது. என்னுடன்தான் இன்னமும் இருக்கிறார்கள். தீவிரமான எம்.ஜி.ஆரின் ஃபேனும்கூட. ஸ்கூல் படிக்கும்போதும் காலேஜ் பண்ணும்போதும் அவர்தான் என்னை சினிமாவிற்குக் கூட்டிச் செல்வார். என்னைச் செல்லமாக 'குட்டி' என்றுதான் அழைப்பார்.''     

'' சினிமாவுக்கு வந்தபிறகு நீங்க மிஸ் பண்ணின விஷயங்கள் என்ன?'' 

''ஃபேமிலியில் நடக்கும் ஃபங்ஷன்ஸ் நிறைய மிஸ் பண்ணியிருக்கேன். எப்போ வேணாலும் ஷூட்டிங்கிற்கு அழைப்பு வரும் என்பதால் சில விஷயங்களைத் தியாகம் பண்ண வேண்டிய சூழ்நிலை. அந்த டைமில் வீட்டை ரொம்பவே மிஸ் பண்ணுவேன்.''

''எதுவும் ஆசை?''

''எனக்கு பாரதியாரை ரொம்ப பிடிக்கும். அச்சு அசல் அவரை மாதிரியே இமிடேட் செய்வேன். அவரை ஞாபகப்படுத்தும் வகையில் ஏதாவது படத்தில் ரோல் வந்தால் கண்டிப்பாக அதில் வரணும்னு ஆசை இருக்கு. என்னைக்காவது ஒருநாள் கண்டிப்பாக அது நிறைவேறும். சீக்கரமே அதை நீங்க பார்ப்பீங்க பாஸ்!''

வாழ்த்துகள் சார்!

அடுத்த கட்டுரைக்கு