Published:Updated:

'சிவகார்த்திகேயனுக்கு என்னைப் பிடிக்கும்... ஏன்னா...?' - ஜெயச்சந்திரனின் ஃப்ளாஷ்பேக்

தார்மிக் லீ
ப.சூரியராஜ்
'சிவகார்த்திகேயனுக்கு என்னைப் பிடிக்கும்... ஏன்னா...?' - ஜெயச்சந்திரனின் ஃப்ளாஷ்பேக்
'சிவகார்த்திகேயனுக்கு என்னைப் பிடிக்கும்... ஏன்னா...?' - ஜெயச்சந்திரனின் ஃப்ளாஷ்பேக்

சின்னத்திரை நிகழ்ச்சிகள், வெள்ளித்திரைப் படங்கள் என ஆல்-ஏரியாவிலும் பிஸியாக வலம்வந்து கொண்டிருக்கும் ஜெயச்சந்திரன், இப்போது யூ-ட்யூபிலும் காலடி எடுத்துவைத்திருக்கிறார். தொடர்ந்து எல்லா ஏரியாக்களிலும் கலந்துகட்டி கலக்கிக் கொண்டிருக்கும் அவரிடம் சின்னதாய் ஒரு சாட்டிங்.

"உங்களின் எஸ்.டி.டி-யை சொல்லுங்களேன்..."

"சென்னையிலேயே பிறந்து வளர்ந்த பக்கா சென்னைவாசி நான். வயசு 39 ஆகுது. ஒரே ஒரு பையன், ஒரே ஒரு மனைவி. (போதும்... போதும்..!) விலங்கியலில் யூ.ஜி., சமூகப் பணியில் பி.ஜி., இதழியலிலும் பி.ஜி., அப்புறம் சமூகவியல்ல எம்.ஃபில் படிச்சுருக்கேன். ஊடகத்துறை மேல் இருந்த ஆர்வத்தில், டான்-பாஸ்கோ சமூகத்தொடர்பு மையத்தில் முதலில் வேலைக்குச் சேர்ந்தேன். அங்கே ஊடகம் சார்ந்த விழிப்புணர்வை இளைஞர்களுக்கு, பெண்களுக்குக் கொண்டு சேர்க்கும் வேலையைப் பார்த்துட்டு வந்தேன். ஊடகங்களின் தாக்கங்களை எப்படி எதிர்கொள்வது, மாற்று ஊடகங்களை எப்படி உருவாக்குவதுன்னு நிறைய விஷயங்களை அங்கே கத்துக்கவும், கற்றுக்கொடுக்கவும் வாய்ப்பு கிடைச்சது. இப்படியே அங்கே ஒரு 5 ஆண்டுகள்... மனித உரிமை, பெண்ணியம், தலித்தியம், மார்க்ஸியம்னு பல விஷயங்கள் பற்றி படிக்க பலரோடு விவாதிக்க முடிஞ்சது. அதுதான் என்னைச் செதுக்குச்சுனு சொல்லலாம். நான் விஜய் டி.வி-யில் சேர்ந்த சமயத்தில் அது வெறும் விஜய் தான், ஸ்டார் விஜய் கிடையாது. அங்கே சில நிகழ்ச்சிகள் பண்ணினேன். இடையில் கிடைச்ச கொஞ்ச கேப்பில் வேறுதுறை சார்ந்த வேலைகளும் பார்த்தேன், எம்.ஃபில்லும் முடிச்சேன். மெகா டி.வி-யில் கொஞ்ச நாள்கள் ஒரு நிகழ்ச்சி தொகுத்து வழங்கினேன். மறுபடியும் `கிங்ஸ் ஆஃப் காமெடி' நிகழ்ச்சி மூலமா விஜய் டி.வி-க்கு வந்தேன். நான் பண்ணின ஷோ அந்த இயக்குநருக்குப் பிடிச்சுப்போக அப்படியே அங்கிருந்து `அது இது எது', ஜீ தமிழில் `ஸ்டுடியோ சிக்ஸ்', சன் டி.வி-யில் `காமெடி ஜங்ஷன்'னு தொடர்ந்து நிறைய நிகழ்ச்சிகள் பண்ண ஆரம்பிச்சேன். இப்போ விகடன் மூலமா யூ-ட்யூபிலும் காலடி எடுத்து வெச்சாச்சு."

"பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சுருக்கீங்களே பாஸ்..."

"நிறைய பேர் இப்படித்தான் கேட்பாங்க. ஆனால், என்னைப் பொறுத்தவரை நிறையப் படிக்கிறதுனா நிறையப் புத்தகங்கள் படிக்கிறதுதான். பட்டமும், படிப்பும் மட்டுமே ஒரு மனுஷனோட அறிவை எடை போடாதுனு நம்புறேன். நிறையப் புத்தகங்கள் படிக்கணும், குறைஞ்சது தினமும் நியூஸ் பேப்பராவது படிக்கணும். அப்படிப்பட்ட உண்மையான படிப்பாளியா ஆகணும்னு ஆசை இருக்கு."

" `நீங்க தான் எனக்கு இன்ஸ்பிரேஷன்'னு உங்களைப் பற்றி ஒருமுறை சிவகார்த்திகேயன் டிவி பேட்டியில் சொன்னாரே..."

"அது பலகுரலுக்காக. முன்னாடி விஜய் டி.வி `ஸ்டார் நைட்' நிகழ்ச்சிள்ல நான் செய்த மிமிக்ரியை அவர் பார்த்திருக்கார். நான் பேசின குரல்களைப் பேச முயற்சி செய்திருக்கார். அவர் டி.வி-யில் நிகழ்ச்சிகள் பண்ணும்போது பலமுறை சந்திச்சு சில ஆலோசனைகளையும் கொடுத்திருக்கேன். சொல்லும் எல்லா விஷயங்களையும் அவ்வளவு கவனமா கேட்பார். இப்பவும் சிவா என்னை எங்கே பார்த்தாலும் `அண்ணே எப்பிடி இருக்கீங்க?'னு அன்பா விசாரிப்பார். அவர் கடந்துவந்த பாதையை அவர் மறக்கலை. இதுதான் அவரோட ஸ்பெஷல்."

"சினிமா என்ட்ரி..."

" `ஆத்யன்'னு ஒரு படத்தில் காமெடி கலந்த வில்லன் கதாபாத்திரத்தில் நடிச்சிருந்தேன். `குற்றம் கடிதல்' படத்துல சமூக ஆர்வலராக ஒரு சின்ன கதாபாத்திரத்தில் நடிச்சுருந்தேன். ஒரு எக்ஸ்ப்ரிமென்டல் படத்துக்கு வசனங்கள் எழுதியிருக்கேன். `வெருளி', `காத்தாடி', `இன்னும் கொஞ்ச நேரம்' போன்ற படங்கள் ரிலீஸுக்கு வெயிட்டிங். அப்புறம் `அப்பத்தாவ ஆட்டையப் போட்டாங்க' படத்தில் எல்லோருடைய மனசுலேயும் நிற்கக்கூடிய ஒரு கதாபாத்திரத்தில் நடிச்சிருக்கேன். நான் ரொம்ப எதிர்பார்த்துட்டு இருக்கிற படம் அது."

"பல இடங்களில் பணியாற்றியிருக்கீங்க, சினிமா துறைக்குள்ளேயும் வந்துட்டீங்க. இயக்குநர் ஆகனும்ங்கிற ஆசை இருக்கா?"

"ஆசை கண்டிப்பா இருக்கு. 6 குறும்படங்கள், 8 ஆவணப்படங்கள் எடுத்திருக்கேன். என்னுடைய நண்பர் ஒருவர் `நீ படம் பண்ணு... நான் தயாரிக்கிறேன்'னு அடிக்கடி சொல்வார். படம் பார்க்குற எல்லோரையுமே வயிறு குலுங்கச் சிரிக்க வெச்சு, விழியோரம் லேசா கலங்க வைக்கக்கூடிய ஒரு நல்ல படத்தை எடுக்கணும்ங்கிறதுதான் என் ஆசை. அதற்கான நேரம் வரும்போது கண்டிப்பா நான் படம் பண்ணுவேன்." என நம்பிக்கையோடு பேசினார் ஜெயச்சந்திரன். 

புகைப்படம் : ப்ரியங்கா