Published:Updated:

பாகுபலி ட்விஸ்டை மிஞ்சும்... எங்க அம்மா ராணி - படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
பாகுபலி ட்விஸ்டை மிஞ்சும்... எங்க அம்மா ராணி - படம் எப்படி?
பாகுபலி ட்விஸ்டை மிஞ்சும்... எங்க அம்மா ராணி - படம் எப்படி?

பாகுபலி ட்விஸ்டை மிஞ்சும்... எங்க அம்மா ராணி - படம் எப்படி?

தாய் - மகள் பாசக் கதைக்குள், பேய் கதை கலந்து சொன்னால் எப்படி இருக்கும், அதுதான் 'எங்க அம்மா ராணி' படத்தின் கதை. பேய் + நோய் காமினேஷனில் படத்தை உருவாக்கி இருக்கிறார் இயக்குநர் எஸ்.பாணி.

தொலைந்து போன தன் கணவனைத் தேடிக் கொண்டு,  தன் இரட்டைக் குழந்தைகளுடன் மலேஷியாவில் வசித்து வருகிறார் துளசி (தன்ஷிகா). மீரா, தாரா என்கிற இரட்டைக் குழந்தைகளில் மீரா வினோத வகை நோயினால் இறந்து போகிறார். மீராவுக்கு வந்த நோயின் அறிகுறிகள் தாராவிடமும் தெரிய ஆரம்பிக்கிறது. இதை எப்படி சரி செய்வது என மருத்தவரிடம் கேட்க, இந்த வியாதிக்கான மருந்து என்ன எனத் தெரியவில்லை. அதைக் கண்டுபிடிக்கும் வரையில் நோயின் தன்மையைக் கட்டுப்படுத்த குளிர் பிரதேசம் செல்லுங்கள் என அறிவுரை சொல்கிறார். அதன்படி தன்ஷிகாவும் தாராவை அழைத்துக் கொண்டு மலேஷியாவின் கேமரூன் ஹைலேண்ட்ஸுக்கு செல்கிறார். அங்கு நடக்கும் அமானுஷ்ய விஷயத்தால் கதையின் ரூட் நோயிலிருந்து பேய்க்கு ஷிஃப்ட் ஆகிறது. கண்டுபிடித்து விட்டீர்களா? அதே தான் தாராவின் உடலுக்குள் நித்தி என்கிற சிறுமியின் ஆவி புகுந்து கொள்கிறது. காரணம் என்ன? கட்டப்பா சொல்லும் காரணத்தைவிட சிறப்பான காரணம்தான். அது என்ன காரணம் என்பதை கடைசியில் சொல்கிறேன்.

படத்தின் ப்ளஸ் தன்ஷிகா. தன்ஷிகா மட்டும்தான். இரண்டு குழந்தைகளுக்கு தாயாக நடிப்பதில் எந்த தயக்கமும் காட்டாமல், படத்தில் தன் பங்கை முழுமையாக செய்ததற்காகவே பாராட்ட வேண்டும். எப்போதும் சோகத்துடனேயும், குழந்தையைக் பாதுக்காக்க வேண்டும் என்கிற பதற்றத்திலேயே இருப்பதுமாக நிறைவாக நடித்திருக்கிறார்.

சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆதரவு தரவேண்டும் என்கிற போக்கு இப்போது நிறையவே அதிகரித்திருக்கிறது. 'உறியடி'யில் துவங்கி சமீபத்தில் வெளியான '8 தோட்டாக்கள்' வரை நிறைய படங்கள் மக்களாலும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதேவேளையில் சின்ன பட்ஜெட் படம் என்பதற்காக படம் எப்படி இருந்தாலும் ஆதரவு தர வேண்டும் என நினைப்பது நியாயமே இல்லாதது. பட்ஜெட் மட்டுமே ஒரு படத்தின் தரத்தை முடிவு செய்யாது. அதற்கு உதாரணமாக முன்பு சொன்ன படங்களையே எடுத்துக் கொள்ளலாம். சில லட்சங்களில் கூட சிறப்பான படங்கள் எடுக்கப்படும் களம்தான் இது. "சரி வா, வந்து எடுத்துக் காட்டு" என இத்தனை நாளாக சொல்லும் சப்பைகட்டும் ஏற்புடையது கிடையாது. சினிமா எடுப்பது கஷ்டம், எடுத்ததை வெளியிடுவது அதையும் விட கஷ்டம்தான். ஆனால், "ச்ச எவ்வளவு கஷ்டப்பட்டு இவரு படம் எடுத்திருப்பாரு" என நினைத்து யாரும் படத்தைப் பார்த்து, அரங்கத்தை நிறைய வைத்து ஹிட்டாக்கப் போவது கிடையாது. நீங்கள் எவ்வளவு பெரிய ஸ்டார்களை வைத்து புரமோஷன் செய்தாலும், செலவழித்தாலும் வேலைக்கே ஆகாது. இறுதியில் ஒன்றே ஒன்று தான் 'நம்ம படம்தான் பேசணும்!' எனவே, இனி படத்தின் கதையிலும், காட்சிகளிலும் இயக்குநர்கள் கொஞ்சமேனும் கவனம் செலுத்தினால் சினிமா ஆரோக்யமாக இருக்கும். 

அந்த பிரம்மாண்ட ட்விஸ்ட், 

தன்னையும் தன் தந்தையையும் கொன்றவர்களைப் பழி வாங்க நினைத்து நித்தியின் (நித்யானாந்தா இல்லை) ஆவி தாராவின் உடலுக்குள் புகுந்து கொள்கிறது. தன்ஷிகாவின் உடலுக்குள் புகுந்து கூட பழிவாங்கலாமே? (வியாதி இருக்கும் ஆள் மேல் தான் இறங்க வேண்டும் என சபதமா?) இதையும் விட சிறப்பான ட்விஸ்ட் இருக்கிறது. உடலுக்குள் ஆவி இருப்பதால், தாராவின் வியாதி மறைகிறது. ஆனால், பேய் போய் விட்டால் மீண்டும் நோய் வந்துவிடும் (எங்கயோ போயிட்டீங்க சார்). ஒரு கட்டத்தில் பேய் சென்றுவிட, மீண்டும் தாராவுக்கு வியாதி வந்துவிடுகிறது. மீண்டும் தன் மகள் உடலுக்குள் எதாவது பேயை ஏத்திவிட முடியுமா என மாந்திரீகரிடம் (அவரின் வாய்ஸ்... வேற லெவல்) கேட்கிறார் தன்ஷிகா. அவர் முடியாது எனச் சொல்ல, தன்ஷிகா எடுக்கும் முடிவு என்ன என்பதை தியேட்டரில் பார்த்து ரசியுங்கள்.  

அடுத்த கட்டுரைக்கு