Published:Updated:

சூர்யா காதலியைத் தேடி அமெரிக்கா போனதற்கும், துல்கர் சென்றதுக்கும் என்ன வித்தியாசம்? - ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ படம் எப்படி?

விகடன் விமர்சனக்குழு
சூர்யா காதலியைத் தேடி அமெரிக்கா போனதற்கும், துல்கர் சென்றதுக்கும் என்ன வித்தியாசம்? - ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ படம் எப்படி?
சூர்யா காதலியைத் தேடி அமெரிக்கா போனதற்கும், துல்கர் சென்றதுக்கும் என்ன வித்தியாசம்? - ‘காம்ரேட் இன் அமெரிக்கா’ படம் எப்படி?

வாரணம் ஆயிரம் படத்தில் சூர்யா காதலுக்காக அமெரிக்கா போவார். அதே போல காதலுக்காக நாடு தாண்டிப் பயணப்படும் காம்ரேடின் பயணமும், பயணம் கொடுக்கும் போதனைகளும் தான் 'காம்ரேட் இன் அமெரிக்கா'. 

அஜி மேத்திவ் (துல்கர் சல்மான்) ஒரு கம்யூனிஸ்ட். ஊரில் நடக்கும் சில போராட்டங்களில் பங்கெடுப்பது, கல்லூரி மாணவர்களின் பிரச்னைகளைச் சரிசெய்வது, நண்பர்களுடன் ஃபுட்பால் ஆடுவது இவைதான் அவரது தினசரி. அப்போதுதான் அமெரிக்காவிலிருந்து வந்து கல்லூரியில் சேரும், சாராவின் (கார்த்திகா முரளிதரன்) அறிமுகம் கிடைக்கிறது. நட்பு காதலாக மாறுகிறது. இந்தக் காதல் விவகாரம் கார்த்திகாவின் வீட்டிற்கு தெரிந்து விட அமெரிக்காவிற்கு அழைத்து சென்று திருமண ஏற்பாடுகளைச் செய்கின்றனர். இதனால் துல்கர் அமெரிக்காவிற்குச் செல்ல முடிவெடுக்கிறார். இது படத்தின் கதை அல்ல, படத்தின் பின்னணிதான். இரண்டு வாரத்தில் தன் காதலிக்கு திருமணம். அமெரிக்கா செல்வதற்கு துல்கரிடம் பாஸ்போர்டைத் தவிர எதுவும் இல்லை. விசா இல்லாமலேயே அமெரிக்காவிற்குக் கிளம்புகிறார். துல்கரின் அமெரிக்கா பயணமும், காதல் என்னவானது என்பதுதான் படம். 

'ஒரு மெக்சிகன் அப்ரதா', 'சகாவு' படங்களைத் தொடர்ந்து கம்யூனிச கொள்கையை மையப்படுத்தி வந்திருக்கிறது 'காம்ரேட் இன் அமெரிக்கா'. முன்பு துல்கரே 'நீலாகாசம் பச்சக்கடல் ச்சுவந்ந பூமி' என்ற சேகுவேராவின் பயணத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படத்தில் நடித்திருந்தார். அதுபோலவே இதுவும் ஒரு பயணம்தான். நிறையவே ஆபத்தான பயணம். அதில் நிறைய சுவாரஸ்யம் சேர்த்தே கொடுத்திருக்கிறார் இயக்குநர் அமல் நீரத். சேகுவேரா, மார்க்ஸ், லெனின் மூவரிடமும் துல்கர் தன் காதல் கதையைச் சொல்வது, அமெரிக்கா செல்ல மெக்ஸிகோ வழியாக ஆபத்தான பயணம், துல்கரின் தந்தை காங்கிரஸ், துல்கர் கம்யூனிஸ்ட் என கதை அமைத்த விதத்தில் கவனிக்க வைக்கிறார் படத்தின் கதாசிரியர் சிபின் ஃப்ரான்சிஸ். 

துல்கருக்கு ஹீரோவில் இருந்து மாஸ் ஹீரோ ஆகும் வாய்ப்பு கிடைக்க, அதில் எவ்வளவு ஸ்கோர் செய்ய முடியுமோ செய்கிறார். தியேட்டரிலும் அவரின் சண்டைக் காட்சிகளுக்கு பலத்த வரவேற்பு. அப்பாவுடன் சின்னச் சின்ன சண்டைகள், தன் அம்மாவுக்கு போன் செய்து குரலை மட்டும் கேட்டுவிட்டு எதுவும் பேசாமல் போனைக் கட் செய்வது, திக்குத் தெரியாமல் ஏதோ ஒரு காட்டுக்குள் அலைவது என பல காட்சிகளில் நடிப்பில் அசத்துகிறார். 

கதாநாயகி என சொல்லப்பட்டாலும் சில காட்சிகள் மட்டும்தான் கார்த்திகா வருகிறார். அறிமுக நாயகி என்கிற அடையாளம் தெரியாதபடி நன்றாக நடித்திருக்கிறார். டாக்ஸி டிரைவர் ரோலில் வரும் ஜான் விஜயின் நடிப்பும் கவர்கிறது. திலேஷ் போத்தன் - சௌபின் கூட்டணியின் காமெடி முதல் பாதி படத்தை போர் அடிக்காமல் கொண்டு செல்கிறது. இரண்டாம் பாதியில் என்ட்ரி கொடுக்கும் சாந்தினி க்ளைமேக்ஸில் விமானத்தில் துல்கரை சந்திக்கும் காட்சியில் நடிப்பில் படத்தின் நாயகி கார்த்திகாவை மிஞ்சுகிறார். 

கமர்ஷியல் சினிமாக்களைத் தவிர்த்துவிட்டு, கதையை மட்டுமே முன்வைத்து நடிக்க ஆரம்பித்து இருக்கும் கேரள ஹீரோக்களுக்கும், கேரள ரசிகர்களுக்கும் அந்த பஸ் சண்டைக்காட்சி ரொம்பவே ஸ்பெஷல். டிபிக்கல், தமிழ் சண்டைக்காட்சி போல் இருந்தாலும், அந்தக் காட்சியின் இசை, ஒளிப்பதிவு எல்லாமே தூள். அதே போல், மெக்ஸிகோ அமெரிக்கா பார்டரில், அவர்கள் பயணப்படும் போது, நம்மையும் ஒருவித பீதியில் வைக்கிறது ரனடிவ் கேமரா. 

‘ஹர்த்தாலு’க்கு பெயர் போன கேரளத்தில், காங்கிரஸின் மந்திரி ஒருவர் செய்யும் செயலுக்கு, கம்யூனிஸ்டுகள் போர்க்கொடி உயர்த்த, போராட்டம் வெடிக்கிறது. போலீஸ் எப்போதும் போல், தங்கள் வேலையை செவ்வனே செய்ய, பாட்டில் திரியில் ஹீரோயிச தீ வைத்து எறிவதோடு, ஆரம்பிக்கிறது துல்கர் சல்மானின் என்ட்ரி. முதல் பாதி முழுக்க மிகவும் மெதுவாகவே நகரும் கதைக்கருவில், நெட்டிமுறிக்க வைக்காமல் பார்த்துக்கொள்கிறது பிரவீன் பிரபாகர் எடிட்டிங். அதிலும் அந்த கார்ல் மார்க்ஸ், லெனின் சீன் செம்ம.

வறுமையின் உச்சத்தில், பிழைக்க வழி இல்லாதவர்கள் அகதிகளாக அமெரிக்காவிற்குள் நுழைய மேற்கொள்ளும் ஆபத்தான பயணத்தைத்தான் துல்கரும் படத்தில் மேற்கொள்கிறார். ஆனால், அவர் காதலுக்காக பயணிக்கிறார். அதில் அசால்டாக துப்பாக்கியெடுத்து சுடுவது, அமெரிக்கா எல்லையின் ரேடாரில் சிக்காமல் தப்பிப்பது எனச் சில ஹீரோயிச செயற்கைத் திணிப்பு தனித்துத் தெரிகிறது. 

துல்கர் பாடிய பாடல்:

கம்யூனிசம், சகாவு, காம்ரேட், லால் சலாம் என சொன்னாலும் கவனிக்க வைக்கும் படியான வசனங்கள் எதுவும் படத்தில் இல்லை. துல்கர் சொல்லும் அந்த கம்யூனிச உதாரணம் கூட கத்தி படத்தை நினைவுபடுத்துகிறது. முதல் பாதியில் துல்கருக்கும், கார்த்திகாவுக்குமான காதலை சொல்லிவிட்டாலும், அந்த ஆபத்தான பயணத்திற்கு, இந்தக் காரணம் அவ்வளவு வலுவானதா என கேள்விகள் எழுகிறது. இந்தக் குறைகளைக் களைந்து இன்னும் ஷார்ப் ஆக்கியிருந்தால் அமெரிக்கப் பயணம் ஆல்ரவுண்ட் சக்ஸஸாகியிருக்கும்.