Published:Updated:

"ரஜினி க்ரேட்.. கமல் ஷார்ப்.. விஜய் ஸ்டைல்..!" செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் தீரனின் அனுபவங்கள்! #VikatanExclusive

"ரஜினி க்ரேட்.. கமல் ஷார்ப்.. விஜய் ஸ்டைல்..!" செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் தீரனின் அனுபவங்கள்! #VikatanExclusive
"ரஜினி க்ரேட்.. கமல் ஷார்ப்.. விஜய் ஸ்டைல்..!" செலிபிரிட்டி ஃபோட்டோகிராஃபர் தீரனின் அனுபவங்கள்! #VikatanExclusive

சினிமா செலிப்பிரிட்டிகளின் இயல்பு மாறாமல் அப்படியே க்ளிக்குவதுதான் போட்டோகிராஃபர் தீரனின் ஸ்பெஷல். ரஜினி, கமல், விஜய் தொடங்கி, பல பிரபலங்களையும் க்ளிக்கித் தள்ளியிருக்கிறார்.

"நான் இப்படி வருவேன்னு கனவுகூடக் கண்டது இல்லைங்க. அரக்கோணம்தான் எனக்கு சொந்த ஊர். சின்ன வயசுல எங்க வீட்டுல ஒரு கேமரா இருந்துச்சு. அதை எங்க அண்ணன்தான் எப்பவும் வெச்சிருப்பான். அவன்கிட்ட கெஞ்சிக் கூத்தாடி கேமராவை எடுத்துப் போட்டோ எடுக்க ஆரம்பிச்சேன். அப்பவே கேமரா மேல லவ் ஆகிடுச்சு. மரம், செடி கொடினு தொடங்கி வீட்டுல உட்கார்ந்து இருக்கும் பாட்டி வரை எல்லாத்தையும் க்ளிக் பண்ணித் தள்ளினேன்.

என் ஆசை இதுல இருந்தாலும், அப்பா- அம்மாவின் ஆசைக்காக சென்னையில் ஒரு தனியார் காலேஜ்ல காமர்ஸ் பாடம் எடுத்துப் படிச்சு முடிச்சேன். இந்தியாவின் நம்பர் ஒன் கார்ப்பரேட் கம்பெனியில் அக்கவுன்டன்ட் வேலை கிடைச்சது. கை நிறைய சம்பளம். ஆனாலும் லைஃப்ல ஏதோ மிஸ்ஸிங். பெரிய வெற்றிடம் விழுந்த மாதிரி தோணுச்சு. அப்ப எனக்கு இருந்த ஒரே ஆறுதல், போட்டோகிராஃபிதான். லீவு நாள்ல எல்லாம் எங்கேயாவது போட்டோ எடுக்கப் போயிடுவேன். ஆபீஸ் போகணும்னு நினைச்சாலே எரிச்சலா இருக்கும். ஒருநாள் திடீர்னு நிம்மதி இல்லாத இந்த வேலை எதுக்குனு ரிசைன் லெட்டர் எழுதிக் கொடுத்துட்டு வந்துட்டேன். மனசு போற போக்குல மூணு வருஷங்கள் சுத்திட்டு, பல வகையான மனிதர்களைச் சந்தித்து போட்டோ எடுத்துட்டிருந்தேன்.

அப்பதான் என் நண்பர் மூலமா சினிமாவுல பி.ஆர்.ஓ-வாக இருக்கும் நிகில் அண்ணாவின் பழக்கம் கிடைச்சது. சினிமா நிகழ்ச்சிகள், பிரபலங்களை வெச்சு போட்டோ எடுக்கும் வேலை. 2013-ம் ஆண்டுல சேர்ந்தேன். வேலைக்குச் சேர்ந்த முதல் நாளே, கமல் நிகழ்ச்சி. போட்டோ எடுக்கச் சொன்னாங்க. எடுத்துக் காமிச்சேன். 'நல்லா இருக்கு'னு பாராட்டினாங்க. அன்னிக்கு எடுக்க ஆரம்பிச்சதுதான், இப்ப வரைக்கும் தமிழ் சினிமாவுல எல்லாத்தையும் எடுத்துட்டேன். இப்ப வாழ்க்கையும் ரொம்ப கலர்ஃபுல்லா மாறிடுச்சு. அதுக்கெல்லாம் முக்கியமான காரணம் நிகில் அண்ணாதான்."  

இவரது ஸ்பெஷல், அந்தத் தருணத்தையோ, அந்தப் பிரபலங்களையோ எந்தவிதமான தொந்தரவும் செய்யாமல் அந்த நொடியை உள்ளது உள்ளபடி உறையவைத்து க்ளிக்குவதுதான். அந்தத் தருணங்களை நம்மிடம் பகிர்ந்துகொள்கிறார்.

ரஜினி:

ரஜினி சாரை நான் பல நிகழ்ச்சிகள்ல போட்டோ எடுத்திருக்கேன். '2.0' நிகழ்ச்சி மும்பையில நடந்தது. அப்பகூட அங்கே போய் எடுத்தேன். ஆனா, மறக்க முடியாத க்ளிக் ரஜினி சார் வீட்டுல அவரை போட்டோ எடுத்ததுதான். 'தர்மதுரை' படம் 100-வது நாள் ஓடியதற்காக ரஜினி சாரிடம் வாழ்த்து வாங்க விஜய் சேதுபதி அண்ணாவும், டைரக்டர் சீனுராமசாமி சாரும் போனாங்க. நானும் போட்டோ எடுக்கப் போயிருந்தேன். அங்கே ரஜினி சார் நடிச்ச 'பாபா' பட ஸ்டில் ஒண்ணு ஃப்ரேம் போட்டு மாட்டி வெச்சிருந்தாங்க. ரஜினி சார், விஜய் சேதுபதி அண்ணாவுக்கு 'வணக்கம்' சொல்லும்போது இந்த ரெண்டையும் ஃப்ரேம்ல வர்ற மாதிரி எடுத்த க்ளிக் இது. அவரு எப்பயுமே க்ரேட்ங்க. அவர் வணக்கம் எப்போதுமே ஸ்பெஷல்தான்.  


கமல்:


கமல் சார் செம ஷார்ப். அவரை இதுவரைக்கும் பல நிகழ்ச்சிகள்ல போட்டோ எடுத்திருக்கேன். அவர் நிகழ்ச்சியில் நடக்கும் எல்லாத்தையும் பார்த்துட்டேதான் இருப்பார். நீங்க அவரை ரசிச்சு போட்டோ எடுக்குறீங்கனு நோட் பண்ணிட்டார்னா, மேடையில் இருந்தபடியே விதவிதமான போஸ் கொடுப்பார். மேடையில் இருந்தாலும் போட்டோகிராஃபர்கூட கண்லயே பேசுவார். அவர் பிறந்த நாள் நிகழ்ச்சிக்கு வரும்போது நல்லா முறுக்கு மீசை வைச்சு இருந்தார். அவருக்குப் பின்னாடி பேனர்ல முறுக்கு மீசை பாரதி படம். இவர் மீசையை முறுக்கினால் நல்லா இருக்குமேனு நான் நினைக்கும்போதே கமல் சார் மீசையை நிதானமா நான் எடுத்து முடிக்கிற வரைக்கும் முறுக்கி ஒரு சின்ன போஸ் கொடுத்துட்டே இருந்தார். அப்ப எடுத்ததுதான் இது! கமல் சார், ரசனைக்காரருங்க!

விஜய்:

விஜய் சார் சிம்பிளா இருந்தாலும் செம ஸ்டைலா இருப்பார். டான்ஸ் மாஸ்டர் லலிதா - ஷோபியோட வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ள சிம்பிளான கோட் போட்டு வந்திருந்தார். அவர் நடந்து வரும்போது இதழ் ஓரமா சின்னச் சிரிப்புடனே வந்தார். அதை அப்படியே உறையவைத்த போட்டோதான் இது. விஜய் சாரின் பல ரசிகர்கள் `இந்த போட்டோவை ஃப்ரேம் பண்ணி மாட்டிக்கிறோம்'னு கேட்டாங்க. ஒரிஜினல் போட்டோவையே அனுப்பிவைச்சேன்.

தனுஷ்:


தனுஷ் சார், நம்ம பக்கத்து வீட்டுல இருக்கிற அண்ணா மாதிரி. ஒரு மஞ்சள் வெயில் மாலையில் பிளாக் அண்ட் வொயிட் க்ளிக்கிய போட்டோ இது. அவர் பிறந்த நாள் அன்னிக்கு, அவர் பிறந்த நாள்னு தெரியாமலேயே நான் இந்த போட்டோவை சும்மா சோஷியல்  மீடியாவுல போட்டேன். செம வைரல்!

விஜய் சேதுபதி:


எல்லார்கூடவும் ரொம்ப இயல்பா பழகுவார். பந்தா எல்லாம் பண்ண மாட்டார். இவரை தனியாவே ரெண்டு மூணு முறை போட்டோ ஷூட் பண்ணியிருக்கேன். அவர் கண்ணே பல கதைகள் சொல்லும். அவர் ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம்ல டி.பி-யாக நான் எடுத்த சில போட்டோக்களை வெச்சிருக்கிறார். ஒரு தடவை, நான் எடுத்த போட்டோவை `பட போஸ்டருக்குப் பயன்படுத்திக்கிறேன்'னு சொன்னார். செம ஹேப்பி!

மடோனா செபாஸ்டின்:


இவங்க 'பிரேமம்' படத்துக்கு அப்புறம் தமிழ்ல 'கா க போ' படத்துல நடிக்க வந்தாங்க. இவங்க, படத்துக்காகனு எல்லாம் தனியா போட்டோ ஷூட் எடுத்ததே கிடையாது. முதல்முதல்ல நான்தான் இவங்களை போட்டோ எடுத்தேன். ரொம்ப கூலானவங்க. நீங்க எப்படிச் சொல்றீங்களோ அப்படியே போஸ் தருவாங்க.


ரித்திகா சிங்:


மடோனா மாதிரிதான் ரித்திகாவும். இவங்க சென்னை வந்து `மீடியாவுக்கு போட்டோஸ் கொடுக்க போட்டோ ஷூட் பண்ணணும்'னு சொன்னதும், அவங்க போட்டிருந்த டிஷர்ட்டோடு லைட்டா மேக்கப் பண்ணி போட்டோ எடுத்தேன். இந்த போட்டோஸ்தான் இப்ப எல்லாருமே பயன்படுத்திட்டிருக்காங்க.

இன்னமும் பல பிரபலங்களை போட்டோ எடுத்திருக்கேன். வாழ்க்கை நான் நினைச்ச மாதிரி இப்பதான் மகிழ்ச்சியா இருக்கு."