Published:Updated:

ரஜினியைச் சந்தித்த கதை சொல்கிறார் நக்மா!

வெங்கட சேது.சி
ரஜினியைச் சந்தித்த கதை சொல்கிறார் நக்மா!
ரஜினியைச் சந்தித்த கதை சொல்கிறார் நக்மா!

திரைத்துறைக்கும், தமிழக அரசியலுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. பேரறிஞர் அண்ணா, எம்.ஜி.ஆர், கருணாநிதி, ஜெயலலிதா, விஜயகாந்த் என்று திரையுலகில் இருந்து அரசியலுக்கு வந்தவர்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். அப்படி இருக்கும்போது, சூப்பர்ஸ்டாராக தொடர்ந்து வலம்வரும் ரஜினியை அரசியலுடன் இணைத்துப் பேசாமல் இருப்பார்களா என்ன?

1996-ம் ஆண்டு, அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்போதைய தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் ஜி.கே. மூப்பனார், த.மா.கா-வைத் தொடங்கி தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து தேர்தலைச் சந்தித்தார். அன்றைய சூழ்நிலையில் தி.மு.க - த.மா.கா கூட்டணிக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்த் வாய்ஸ் கொடுத்தார். அந்தக் கூட்டணி மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது. என்றாலும், அடுத்தடுத்து நடைபெற்ற தேர்தல்களில், ரஜினியின் அரசியல் வாய்ஸ் எடுபடாமல் போனது. இதனால், 1999-ம் ஆண்டுக்குப் பின்னர், 'நமக்கேன் வம்பு?' என்று நினைத்து, தேர்தல் சமயங்களில் சென்னையில் இருப்பதையே ரஜினி தவிர்த்தார். என்றாலும், ரஜினி அரசியலுக்கு எப்போ வருவார். எப்படி வருவார்? என்ற கேள்விகள் தொடர்ந்து, அவரைச் சுற்றி வந்து கொண்டுதான் உள்ளன.

கடந்த 2014-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில், சென்னையில் பி.ஜே.பி கூட்டணி சார்பில் நடைபெற்ற பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பங்கேற்க வந்த இப்போதைய பிரதமர் மோடி, விமான நிலையத்தில் இருந்து நேராக நடிகர் ரஜினிகாந்தை, அவரது இல்லத்திற்கே சென்று சந்தித்துப் பேசினார். என்றாலும் அந்த சந்திப்பு நட்புரீதியானது என்றே சொல்லப்பட்டது. வெளிப்படையாக ரஜினிகாந்த்-ம் தனது ஆதரவை பி.ஜே.பி-க்கு தெரிவிக்கவில்லை.

2016-ம் ஆண்டு தமிழக சட்டசபைத் தேர்தலின்போதும், ரஜினியை தங்களுக்கு ஆதரவாகத் திருப்ப பி.ஜே.பி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டது. ஆனாலும் அதில் எந்தப்பலனும் கிடைக்கவில்லை. இந்த நிலையில்தான் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க பொதுச்செயலாளராகவும், முதல்வராகவும் இருந்த ஜெயலலிதா மரணம் அடைந்து, தமிழக அரசியலில் மிகப்பெரும் வெற்றிடம் உருவாகியுள்ளது.

இந்த வெற்றிடத்தைத் தங்கள் கட்சிக்கு சாதகமாக்கிக் கொள்ள, தமிழகத்தில் உள்ள இதர கட்சிகளைப் போலவே பி.ஜே.பி-யும் தொடர்ந்து முயற்சி மேற்கொண்டுள்ளது. அதன் ஒரு கட்டமாகத்தான், ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர்த் தொகுதியில் இசையமைப்பாளர் கங்கை அமரனை வேட்பாளராக அறிவித்தது. அவரும், தனக்கு ரஜினியுடன் உள்ள நட்பைப் பயன்படுத்தி, வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் ரஜினியை அவரது வீட்டிற்குச் சென்று சந்தித்தார். இதையடுத்து ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பரபரப்பானது. நடிகர் ரஜினிகாந்த் தங்களுக்கு ஆதரவு தெரிவிப்பார் என்று பி.ஜே.பி-யைச் சேர்ந்த சிலர் தெரிவித்தனர். ஆனால், ரஜினியோ யாருக்கும் ஆதரவு இல்லை என தெளிவாக அறிவித்தார். அதன் பின்னர் அ.தி.மு.க-வினரின் பணப்பட்டுவாடாவைக் காரணம்காட்டி, ஆர்.கே.நகர் தேர்தல் ரத்து செய்யப்பட்டது தனிக்கதை.

இதன் தொடர்ச்சியாக, 'பி.ஜே.பி சார்பில் குடியரசுத் தலைவர் பதவிக்கான வேட்பாளராக ரஜினியை நிறுத்த பி.ஜே.பி திட்டம்' என்று சமூக வலைதளங்களில் தகவல்கள்  வெளியாகின. ஆனால், அந்த தகவல்களில் உண்மை இல்லை என்பது பின்னர் தெரியவந்தது.

நடிகர் ரஜினிகாந்தை மையமாக வைத்து பி.ஜே.பி.-யின் இதுபோன்ற காய் நகர்த்தல்களைத் தெரிந்து கொண்டதாலோ என்னவோ, காங்கிரஸ் தலைமையும், தமிழகத்தில் வலுவாகக் காலூன்ற வேண்டும் என்ற எண்ணத்தில் தற்போது களம் இறங்கி இருப்பதாகத் தோன்றுகிறது. தமிழக காங்கிரஸ் கட்சியின் அண்மைக்கால நிகழ்வுகள் இதை உறுதி செய்யும் வகையில் உள்ளன.

அகில இந்திய மகிளா காங்கிரஸ் பொதுச் செயலாளரும் நடிகையுமான நக்மா, அவ்வப்போது தமிழகம், புதுச்சேரிக்கு பயணம் மேற்கொள்கிறார். அதிலும் குறிப்பாக தமிழகத்திற்கு மாதந்தோறும் வருகை தந்து, காங்கிரஸ் நிர்வாகிகளைச் சந்திப்பது, பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்பது என்று காங்கிரஸ் கட்சியும் தமிழகத்தில் ஆக்டிவாகத்தான் உள்ளது என்பதை உணர்த்தும் வகையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.

ரஜினிகாந்த்-வுடன் நெருக்கத்தை காண்பிக்க பி.ஜே.பி-யால்தான் முடியுமா? எங்களால் முடியாதா? என்று நக்மா நினைத்திருக்கலாம். சென்னையில் திடீரென்று இன்று ரஜினிகாந்த் வீட்டிற்கு விசிட் அடித்தார் நக்மா. 1995-ம் ஆண்டில் வெளியாகி வசூல் சாதனை படைத்த 'பாட்ஷா' படத்தில் ரஜினியுடன் நடித்தவர் நக்மா. அந்த நட்பின் அடிப்படையில் அவரைச் சந்தித்தாராம்.

ரஜினியைச் சந்தித்த பின் செய்தியாளர்களிடம் பேசிய நக்மா, "நட்புரீதியிலேயே நான் ரஜினியை சந்தித்துப் பேசினேன். ரஜினி அரசியலுக்கு வரவேண்டும் என்பது என் விருப்பம். அவர் அரசியலுக்கு வந்தால் மகிழ்ச்சி; ஆனால், அரசியல் காரணங்களுக்காக நான் அவரைச் சந்திக்கவில்லை" என்று குறிப்பிட்டார்.

பி.ஜே.பி ஒருபுறம் ரஜினியை தங்கள் வலைக்குள் விழவைக்க பல்வேறு பிரயத்தனங்களை மேற்கொண்டு வருகிறது. ஆனால். பி.ஜே.பி-யைச் சேர்ந்தவர்களோ, நண்பர் என்ற அடிப்படையிலேயே ரஜினிகாந்தைச் சந்திப்பதாகவும், வேறு அரசியல் நோக்கம் எதுவும் இல்லை என்றும் தொடர்ந்து தெரிவித்து வருகிறார்கள். தற்போது காங்கிரஸ் கட்சியும் ரஜினிகாந்தை மையப்படுத்தி, தங்களுக்கும் ரஜினி நெருக்கம்தான் என்பதை பறைசாற்றிக் கொள்வதற்காக இந்த சந்திப்பை அரங்கேற்றுகிறதோ என்ற சந்தேகம் அரசியல் நோக்கர்கள் மத்தியில் மட்டுமல்லாது, பொதுமக்கள் மத்தியிலும் எழுந்துள்ளதை மறுப்பதற்கில்லை.

இவற்றுக்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கவேண்டியது வேறு யாருமல்ல.. சாட்சாத் அந்த ரஜினியேதான் !?