Published:Updated:

‘விஜய்க்கும் பிரியாணின்னா ரொம்ப பிடிக்கும்!’ - ஜாலி கேலி தாமு

தார்மிக் லீ
‘விஜய்க்கும் பிரியாணின்னா ரொம்ப பிடிக்கும்!’ - ஜாலி கேலி தாமு
‘விஜய்க்கும் பிரியாணின்னா ரொம்ப பிடிக்கும்!’ - ஜாலி கேலி தாமு

‘விஜய்க்கும் பிரியாணின்னா ரொம்ப பிடிக்கும்!’ - ஜாலி கேலி தாமு

தேர்ந்த நடிகர், பல்குரல் வித்தகர், கிச்சுகிச்சு காமெடியன், சமூக சேவகர் என தாமுவிற்கு பல முகங்கள் உண்டு. ஓட்டேரி நரியாக எல்லாரையும் விலா நோக சிரித்தவரின் வீட்டிற்குச் சென்றால் ஏதோ சொர்க்கலோக எபெக்டில் இருக்கிறது. காரணம்? அவரே சொல்லியிருக்கிறார். மேலே படிங்க பாஸ்! 

'நீங்க ரகளையான ஆள்னு எல்லாருக்கும் தெரியும். சின்ன வயசுல இருந்தே அப்படிதானா?'

''குழந்தையில இருந்தே எனக்குள்ள கலை மீதான ஆர்வம் ரொம்ப அதிகமாவே இருந்தது. மிமிக்ரி என்கிற விஷயத்தின் வாயிலாக கலை என்கூடவே பயணித்து வந்துகிட்டேதான் இருந்தது. என்னைச் சுற்றி எப்போதுமே ஒரு கூட்டம் இருந்துகிட்டே இருக்கணும். என் அப்பா ரயில்வே தொழிலாளி. அவருக்கு எப்போதுமே நைட் ஷிப்ட் என்பதால் அவர்கூட டைம் ஸ்பெண்ட் பண்றதே கிடையாது. நான் தினமும் 10 மணிக்கு மேல் வீட்டிலிருந்து காணாமல் போயிடுவேன். எங்க அம்மா இதைப் பற்றி அப்பாகிட்ட சொல்ல... 'இவன் எங்கதான் போறான்?'னு தேடிகிட்டே இருப்பார், பயங்கர அடியெல்லாம் கூட வாங்கியிருக்கேன். ஆனா நான் எங்க போறேன்னு யாருக்குமே தெரியாது.

ஒரு நாள் எதார்த்தமாக என் அப்பாவிடம் அவரின் உயர் அதிகாரி 'என்னன்னு தெரியல எப்பவும் வர்ற அந்தப் பையன் வரவேயில்லை ரொம்ப போர் அடிக்கிது, ரொம்ப ஜாலியான கேரக்டர். திடீர்னு மாடு, நாய்கள் கூட உட்கார்ந்து பேசிகிட்டு இருப்பான், அதுவும் இவன் பண்றதுக்கு ரெஸ்பாண்ட் பண்ணும். நீ அந்த பையனை கண்டிப்பா பார்க்கணும்'னு எங்க அப்பாகிட்டயே சொல்லிட்டு இருந்தார். அதுக்கு அடுத்த நாள் 'இவன் எங்கதான் போறான்?'னு என் பின்னாடியே வந்துட்டார். நான் வழக்கம்போல என் சேட்டைகளை அந்த உயரதிகாரி ரூம்ல காட்ட, அவர் ஒரு ஓரமா நின்னு பயங்கரமா சிரிச்சுக்கிட்டுருந்தார். இதைப் பார்த்த எங்க அப்பாவுக்கு பயங்கர ஷாக். மறுநாள் காலையில எங்க அப்பா என்கிட்ட எதுவும் காட்டிக்கலை. ஆபீஸ் வந்ததும் அந்த அதிகாரி என் அப்பாவிடம் 'அந்தப் பையனை ஒரு வழியா நேத்து பார்த்துட்டேன்யா'னு சொன்னவுடனேயே 'அது என் பையன்தான் சார்'னு சொன்னார். அதைச் சொன்ன அடுத்த நிமிடமே 'உன் பையன் ஸ்கூலுக்கு போயிட்டு வருவதற்கு நைட் ஆகிடும், நீ போய் உன் பையன் கூட ஜாலியா இருய்யா'னு சொல்லி நைட் ட்யூட்டியை கேன்ஸல் செய்துவிட்டார். அதுக்கு அப்புறம் வீட்ல ராஜ மரியாதைதான். அதெல்லாம் ஒரு கனாக்காலம் ஜி.

அப்புறம் 3-வது படிக்கும்போது க்ளாஸ்ல கடைசி பென்ச்ல உட்கார்ந்து மாடு, ஆடு மாதிரியெல்லாம் கத்திகிட்டு இருப்பேன். ஒரு நாள் என்னை ஸ்கூல் தலைமை ஆசிரியர் கூப்பிட்டு 'நீ தான் பின்னாடி உட்கார்ந்து ஆடு, மாடு மாதிரி கத்திட்டு இருக்கியா?'னு கேட்டதும் எனக்கு ரொம்ப பயம் ஆகிடுச்சு. அவர் என் அருகில் வந்து தோளில் கை போட்டு 'உன்னோட டீச்சர் உனக்காக நாளைக்கு நடக்க போற ஆண்டு விழாவுல 10 நிமிஷம் டைம் வாங்கியிருக்காங்க. பின்னாடி உட்கார்ந்து என்ன சேட்டையெல்லாம் பண்ணியோ ஒழுங்கா அதை அப்படியே ஸ்டேஜ்ல பண்ற'னு சொன்னார். இதைக் கேட்டதும் எனக்கு சந்தோஷம் தாங்கலை. இதுக்கெல்லாம் காரணம் என்னோட கணக்கு டீச்சர்தான். மறுநாள் இரண்டாயிரம் பேர் முன்னாடி நான் பண்ண மிமிக்ரிக்கு செம க்ளாப்ஸ் மற்றும் பாராட்டுக்கள். அதுக்கு பரிசாக 15 ரூபாய் கொடுத்தாங்க. மறக்க முடியாத நாட்கள்ல அதுவும் ஒன்று. 

"சினிமா ஆசை எப்போது வந்தது?"     

"நான் ஆறாவது படிக்கும்போது ஒரு கல்யாண வீட்டில நின்னு எங்க வீட்டு பாட்டில ஆரம்பிச்சு பாட்டில்ல பால் குடிக்கிற குழந்தை வரை எல்லார் மாதிரியும் மிமிக்ரி பண்ணி சிரிக்க வெச்சுட்டு இருந்தேன். திடீர்ன்னு தூங்கிட்டு இருந்த மாமா என்கிட்ட வந்து அடி, உதைன்னு என்னை பின்னி எடுத்துட்டார். அவரை மாதிரி இமிடேட் பண்ணது பிடிக்கலையோ என்னவோ? அழுதுகிட்டு இருந்த என்னை தேத்துறதுக்காக, 'ஒருநாள் நீ இதை எல்லாம் சினிமாவுல பண்ணுவ. அப்போ உன் மாமா கைதட்டுவார்'னு சொன்னாங்க. அந்த நொடியில இருந்துதான் எனக்குள்ள சினிமா ஆசை வரத் தொடங்கியது." 

"அந்த சின்ன வயது ஆசை எப்படி நிறைவேறியது?"

"என்னுடைய நண்பர் இயக்குநர் வசந்த், 'கேளடி கண்மணி' படத்தின் 50வது நாள் விழாவுக்கு மிமிக்ரி பண்ண என்னைக் கூப்பிட்டார். அங்கே இதுவரை பண்ணாத மிமிக்ரியெல்லாம் முயற்சி பண்ணேன். அங்கிருந்த பாலச்சந்தர் சார் என்னை ரொம்ப ரசித்துப் பார்த்துக் கொண்டே இருந்தார். விழா முடிந்ததும் என்னைப் பற்றி என்னுடைய கல்லூரி ஆசிரியர் மு.மேத்தா அவர்களிடம் விசாரித்தார். இந்த விஷயம் எனக்கு தெரிய வர உடனே வசந்தை அணுகி 'பாலச்சந்தர் சாரைப் பார்த்தே ஆகணும்'னு சொன்னேன். அடுத்த நாள் ஏதோ ஓர் வீட்டிற்கு கூட்டிட்டு போனார். என்னை வெயிட் பண்ண சொல்லிட்டு அவர் வேலை விஷயமாக வெளியே கிளம்பிட்டார். வயதான பெரியவர் வீட்டோடு சேர்த்து அங்கிருந்த சில விருதுகளையும் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அதைப் பார்த்த பிறகுதான் 'ரைட்டு இது பாலச்சந்தர் சார் வீடு போல'னு தெரிய வந்தது. அப்புறம் அந்தப் பெரியவர் என்னைப் பார்த்து 'என்ன பண்ற?'னு கேட்டார். நானும் காலேஜ் படிக்கிறேன் சார்'னு சொன்னேன். காலேஜ்ல 'படிக்கிறியா'னு அழுத்திக் கேட்டார். 'படிக்கிறதுக்கு தானே சார் காலேஜ் போவாங்க'னு நானும் குறும்பாக பதில் சொன்னேன். 'சரி எதாவது சாப்பிடுறியா'னு கேட்டார். 'கொடுத்தாதான் சார் சாப்பிட முடியும்'னு சொன்னதைக் கேட்டு பயங்கர சிரிப்புடன் அருகில் இருந்த கண்ணாடியை எடுத்து மாட்டினார். அதற்கு பிறகுதான் அந்தப் பெரியவர் பாலச்சந்தர்னு தெரியவந்தது. எனக்கு கையும் ஓடலை, காலும் ஓடலை, பதறியபடி அப்படியே கொஞ்ச நேரம் உட்கார்ந்திருந்தேன். அவர் சகஜமாக பழகிய பிறகு நானும் இயல்பு நிலைக்கு திரும்பினேன். அப்புறம் நான் ஜாலியாக பேசியது பிடித்துப்போய் 'என்னோட அடுத்த படத்துல நடிக்கிறியா?'னு கேட்டார். நானும் ஒப்புக்கொண்டு நடித்த படம்தான் 'வானமே எல்லை'. ஆரம்பத்தில் பயங்கரமா சொதப்பினேன். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பழகி, முடிவில் நான் நடித்தது எல்லோருக்கும் பிடித்துப்போனது. படம் வெளிவந்த பிறகு ஆனந்த விகடன் விமர்சனத்தில் 'செவ்வாய் எனும் கதாப்பாத்திரம் ஓர் இரு காட்சிகளில் வந்தாலும் மக்கள் மனதில் நின்றார்'னு ஒரு வரி வந்திருந்தது. வரியைப் பார்த்து பாலச்சந்தர் சார் என்னை அழைத்து புகழ்ந்து தள்ளினார். அங்கிருந்துதான் என் சினிமா பயணம் தொடங்கியது.'' 

"அப்துல் கலாம் அய்யாவுடன் உங்களுக்கு நெருங்கிய பழக்கம்? உங்க முதல் அறிமுகம் எப்படி நடந்தது?"

"என்னை ஒரு விழாவுக்கு மிமிக்ரி செய்ய கூப்பிட்டிருந்தாங்க. அந்த விழாவின் சிறப்பு விருந்தினர் அப்துல் கலாம்தான். அய்யா வருவதற்கு லேட்டான காரணத்தினால அங்குள்ள மாணவர்கள் மத்தியில என்னை மிமிக்ரி செய்யச் சொன்னார்கள். மிமிக்ரி செய்து சிரிக்க வைப்பதோடு இல்லாமல் அதைத் தாண்டி நிறைய விஷயங்களை மாணவர்கள் மத்தியில் கொண்டு சேர்த்தேன். அதோடு ஆசிரியர்களின் கவனத்தையும் ஈர்த்தேன். எல்லோரும் ரசித்து கண் இமைக்காமல் என்னையே பார்த்துக் கொண்டிருக்க... தூரத்தில் அய்யா அப்துல் கலாமும் என்னைப் பார்த்துகிட்டே இருந்தார். அவரோட அறிவியல் ஆலோசகர் வேற அவருக்கு என் வீடியோக்களை போட்டுக் காட்டியிருக்கிறார். எல்லாம் முடிந்தவுடன் அவர் பக்கத்திலேயே ஒரு சேர் போட்டு என்னை உட்கார வைத்து அந்தக் குழந்தைத் தனமான குரலில் என்னுடன் பேச ஆரம்பித்தார். 'மூணு மணி நேரம் நீ பேசிய விஷயங்கள் எல்லாமே ரொம்ப நல்லா இருந்தது. நான் ஒருத்தன் இங்க வரப் போகிறேன் என்பதையே எல்லாரையும் மறக்க வைத்துவிட்டாய் ஒரு பேச்சாளருக்கு அதான் முக்கியம். ரொம்ப நல்லா பண்ணியிருக்க, நீ ஏன் இந்த மிமிக்ரியைப் பற்றியெல்லாம் ரிசர்ச் பண்ணக் கூடாது? அதுமட்டுமில்லாமல் நீ நிறைய இடத்துக்குச் சென்று நிறைய மாணவர்களுடன் பழகு, உனக்கு ஒரு 10 கட்டளைகள் சொல்லிக் கொடுக்கிறேன் அதை மட்டும் நினைவில் வைத்துக் கொண்டு உன் பயணத்தை ஆரம்பித்துவிடு.' என்று சொல்லியதின் பயனாக கடைசி 5 வருடங்களில் பல மாணவர்களைச் சந்தித்துவிட்டேன்."

"விஜய்க்கும் உங்களுக்கும் எப்படி எல்லா தடவையும் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆகுது?"

"அவன் ஊருக்குதான் நடிகர் விஜய், ஆனால் எனக்கு நெருங்கிய நண்பன் விஜய்தான். ரொம்பவே சாதுவான ஒரு ஆள். விஜயின் வளர்ச்சிக்கு 10 பேர் காரணமாக இருக்கிறார்கள் என்றால் என்னைப் பொருத்த வரையில் அந்த 10 பேரில் முதல் ஆளாக நான்தான் இருப்பேன். நான் ஏறும் ஒவ்வொரு மேடையிலும் என் நண்பனை பாராட்டிக் கொண்டேதான் இருக்கிறேன். அதற்குக் காரணம் எங்களுக்குள் இருக்கும் நட்பு. ஒருநாள் என்னை அவன் வீட்டிற்கு அழைத்து ஜுராஸிக் பார்க் படத்தை போட்டுக் காட்டி 'நீ ஏன் நண்பா இதைப் பண்ணக் கூடாது?'னு சொன்னதுதான் இந்த அளவிற்கு நான் மிமிக்ரி செய்யவும் காரணம். பந்தாவாக இருக்கும் ஆள் கிடையாது, ரொம்பவே பந்தத்தோடு இருக்கும் ஆள்தான் விஜய். அவரைப் போல் செய்யும் தொழிலை நேசிக்கும் ஆளைப் பார்க்கவே முடியாது. அவனைப் பற்றி யாருக்கும் தெரியாத ஒரு விஷயத்தை சொல்றேன். அவனுக்கு பிரியாணின்னா ரொம்ப உயிர், அதே சமயம் அவன் ரைஸ் சாப்பிட்டே ரொம்ப நாள் ஆகிடுச்சு. அவனோட உடலை மெயின்டெயின் பண்றதுக்காக ரொம்பவே கஷ்டப்படுவான். அவனுடைய வளர்ச்சியைத் தடுக்கவே முடியாது. ஒரு நாள் அவனே ஓய்வு எடுத்தால்தான் உண்டு. இன்றைக்கும் உன் கூட நடிக்கணும்னு அவன்கிட்ட சொன்னா கண்டிப்பா நடக்கும். ஆனா, என் நண்பனை வற்புறுத்துறதுல எனக்கு விருப்பமில்ல." 

''உங்க வீடு சினிமா செட் மாதிரி வெள்ளை வெளேர்னு இருக்கே ஜி?" 

"ஒரே வரியில சொல்லணும்ன்னா 'எண்ணம்தான் வண்ணம் ஜி'. நான் எவ்வளவு டென்ஷனோட இருந்தாலும் வீட்டுக்கு வரும்போது ரொம்ப சாந்தமா ஆகிடுவேன் அதுக்குதான் சோபாவில் ஆரம்பித்து வீட்டு சுவர் வரைக்கும் இந்த ஒயிட் எஃபெக்ட்.'' 

"சினிமாவுல ரீ-என்ட்ரி தர்ற ஐடியா இருக்கா?" 

''2018ல 'ஓட்டேரி நரி'னு ஒரு படம் பண்ணலாம்னு இருக்கேன். கண்டிப்பா அது வெற்றியடையும்னு நம்பிக்கை இருக்கு. அதுக்கு தமிழ் மக்களோட ஆசிர்வாதம் வேணும். 

கடைசியா சீரியஸா ஒரு விஷயம் சொல்லிக்க விரும்புறேன். சமூக வலைதளங்கள் இப்போ இருக்குற குடும்ப அமைப்பை சிதைக்குது. பசங்க எப்போதுமே அதுலேயே குடியிருக்காமல் வெளியுலகமும் எப்படி இருக்குதுனு பார்க்கணும். குடும்பத்தோட நேரம் செலவழிக்கணும். இதெல்லாம் பண்ணுவாங்கனு நம்புறேன்.'' 

அடுத்த கட்டுரைக்கு