Published:Updated:

தனுஷ்கோடி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை ஆமை முட்டைகள்!

தனுஷ்கோடி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை ஆமை முட்டைகள்!
தனுஷ்கோடி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை ஆமை முட்டைகள்!

மிகவும் அரிதான  இதுவரை இல்லாத அதிக எடை (சுமார் 250 கிராம்) கொண்ட ஆமை முட்டைகள் தனுஷ்கோடிக் கடற்கரைப் பகுதியில் கண்டெடுக்கப்பட்டுள்ளன. மண்டபம் வன உயிரினப் பாதுகாவலர்கள் அவற்றைச் சேகரித்து குஞ்சு பொரிக்கும் மையங்களில் வைத்துள்ளனர்.

தனுஷ்கோடி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை ஆமை முட்டைகள்!

கடல் சூழலியற் பாதுகாவலனாகத் திகழ்வது ஆமைகள். இந்தியாவில் ஐந்து வகையான ஆமைகள் உள்ளன. மருத்துவ குணம் வாய்ந்தவை இவை என்பதால் அழிவுக்குள்ளாகி வரும் ஒரு இனமாக கடல் ஆமைகள் உள்ளன. எனவே, அழிந்து வரும் ஆமை இனத்தைப் பாதுகாக்க தமிழ்நாடு வன உயிரினப் பாதுகாப்புத் துறை பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. அவற்றில் ஒன்றாக ஆமைகள் முட்டையிடும் கடலோரப் பகுதிகளில் குஞ்சு பொரிப்பு மையங்கள்  ஏற்படுத்தி, அங்கு முட்டைகள் பாதுகாப்புடன் குஞ்சு பொரிக்க வைக்கப்படுகின்றன.

கடல் வாழ் உயிரினங்களின் சொர்க்கம் என்று அழைக்கப்படும் மன்னார் வளைகுடா கடலில் அதிகளவில் ஆமைகள் உள்ளன. இவை தங்களின் இனப்பெருக்க காலமான டிசம்பர் முதல் மார்ச் வரையிலான காலங்களில் தனுஷ்கோடியின் கரையோரப் பகுதியில் முட்டையிட்டுச் செல்வதை வழக்கமாகக் கொண்டுள்ளன. முட்டையின் எடை சராசரியாக 70-80 கிராம் இருக்கும்.

தனுஷ்கோடி கடற்கரையில் கண்டெடுக்கப்பட்ட அரியவகை ஆமை முட்டைகள்!


 

ஆனால் இன்று கண்டெடுக்கப்பட்ட முட்டைகள் சிலவற்றின் எடை 200 கிராமுக்கும் மேலாக உள்ளது. கடந்த 4  மாதங்களில் சுமார் 13 ஆயிரம் முட்டைகள் சேகரிக்கப்பட்டதில் 7500 முட்டைகளில் இருந்து ஆமைக் குஞ்சுகள் பொரித்துள்ளன. இந்நிலையில் இன்று சேகரிக்கப்பட்ட அதிக எடை கொண்ட முட்டைகள் குறித்து நம்மிடம் பேசிய மண்டபம் வன உயிரினப் பாதுகாவலர் சதீஷ், "அதிக எடை கொண்ட சுமார் 42 முட்டைகளும், 30 சிறு முட்டைகளும் இன்று சேகரிக்கப்பட்டன. இவை எந்த வகை ஆமை என குஞ்சு பொரித்த பின்னரே அறிய முடியும். அதற்கு 7 வாரங்கள் ஆகும். இதுவரை இல்லாத எடையில் இம் முட்டைகள் இருப்பதால் இவை குஞ்சு பொரிக்காமல் போகவும் வாய்ப்புள்ளது" என்றார்.