Published:Updated:

மா.கா.பா-வின் பல்பு, டி.ஆரின் டான்ஸ், ரோபோவின் நெகிழ்ச்சி..! #VijayTelevisionAwards

மா.கா.பா-வின் பல்பு, டி.ஆரின் டான்ஸ், ரோபோவின் நெகிழ்ச்சி..!  #VijayTelevisionAwards
மா.கா.பா-வின் பல்பு, டி.ஆரின் டான்ஸ், ரோபோவின் நெகிழ்ச்சி..! #VijayTelevisionAwards

வெள்ளித்திரை கலைஞர்களுக்கு இணையாக சின்னத்திரையில் தடம் பதித்துக்கொண்டிருக்கும் தாய்வீட்டு உறுப்பினர்களுக்கு, ஏராளமான விருதுகள் வழங்கி அவர்களை கெளரவப்படுத்தியுள்ளது விஜய் டிவி. ஆம், சேனலின் தூண்களாகத் திகழும் நிகழ்ச்சித் தொகுப்பாளர்கள், மெகா தொடர் கலைஞர்கள், இயக்குநர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களுக்கு ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்ஸ்’ விழா மேடையில் மகுடம் சூட்டியிருக்கிறது விஜய் டிவி.

கடந்த சனிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘விஜய் டெலிவிஷன் அவார்ட்’ விருது நிகழ்ச்சியை மூன்றாவது வருடமாக தொடந்து நடத்தி மகிழ்ந்திருக்கிறது விஜய் டிவி. விழாவில் உதிர்ந்த மகிழ்ச்சித் தூறல்கள் சில இங்கே...

*தொகுப்பாளினி ரம்யாவும் `வேட்டையன்’ கவினும் விழாவைத்  தொகுத்து வழங்கினர். நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்குவதில் சிறந்த அனுபவம் உள்ள ரம்யா, கறுப்பு-நீல நிற உடையில் பளிச்சிட்டார்.

* விஜய் டிவி தொடர்களில் சிறந்த அம்மா விருது ‘பகல் நிலவு’ சிந்து ஷ்யாமுக்குக் கிடைத்தது. சிந்துவிடம், ரம்யா கேள்விகள் கேட்டுக்கொண்டிருக்கும்போதே நடுவில் புகுந்த மா.கா.பா ஆனந்த், ‘உங்க சீரியல் ஹீரோ பற்றி கிசுகிசு ஒண்ணு உலாவுதே, உங்களுக்கு தெரியுமா?’ என்று சிந்துவிடமே கேள்வி எழுப்பினார். தொடர்ந்து கிசுகிசுக்களுக்குச் சொந்தக்காரர்களான அன்வர் - ஷமீரா செரீஃப்பையும் மேடைக்கு அழைத்து, இருவருக்கும் காதல் இருக்கிறது என்பதையும் போட்டுடைத்தார். ‘இது ஊருக்கே தெரியுமே’ என்று சிந்து கூற, மா.கா.பா பல்பு வாங்கியது தனிக்கதை.

*சிறந்த தொகுப்பாளினிக்கான விருது பட்டியலில் இருந்து இந்த வருடம் கோபிநாத், டிடி இருவருக்கும் விடுமுறை கொடுத்துவிட்டார்கள் விஜய் டிவி குடும்பத்தினர். பல வருடங்களாக, அந்த இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருந்த இவர்கள், இந்த வருடம் மற்றவர்களுக்கு விருதை வழங்கி கெளரவித்தனர். ‘நீங்கள் அதற்கும் மேலே’ என்று முன்னோடிப் பட்டமெல்லாம் வழங்கி கோபியையும் டிடியையும் ஆனந்தப் பரவச நிலைக்குக் கொண்டுசென்றனர் கவினும் ரம்யாவும்.

*சிறந்த குழந்தை நட்சத்திர விருதைப் பெற்ற ‘நீலி’ ஷாவிக்கு `காக்கா முட்டை' சின்ன காக்கா முட்டையும், பெரிய காக்கா முட்டையும் இணைந்து விருதை வழங்கினார்கள். ‘கலக்கப்போவது யாரு?’ நிஷாவையும் தீனாவையும் கூப்பிட்டுவைத்துக் கலாய்த்தார்கள் சுட்டிகள் இருவரும். `‘கலக்கப்போவது யாரு?’ ஷூட் நடக்கும்போதே நேரடியாகப் பார்க்க வேண்டும்' என்று ஆசையைக் கூறிய சின்ன காக்கா முட்டை, அவர்களுடன் ஒரு செல்ஃபி எடுத்துக்கொண்டார்.

* நிகழ்ச்சியின் மாஸ் ஹைலைட் டி.ஆர் என்ட்ரி. இசைக் குழுவுடன் இணைந்து தனது டிரேட் மார்க் நடனத்துடன் பாட்டு பாடி அரங்கத்தையே அதிரவைத்துவிட்டார் . தலைமுடியைச் சிலுப்பியபடியே அவர் பாடிய குத்துப்பாடலும், வெளிப்படுத்திய எனர்ஜியும் அப்ளாஸ் அள்ளின.

*சிறந்த தொகுப்பாளினியான விருது பெற்றவர் ப்ரியங்கா. இதுவரை சிரிப்பை மட்டுமே முகத்தில் தேக்கிவைத்திருந்த ப்ரியங்கா, தான் கடந்து வந்த கரடுமுரடான பாதை, தாயின் தியாகம், கணவரின் சப்போர்ட் என நெகிழ்வான அத்தனை உணர்வுகளையும் கண்ணீர் கசியப் பகிர்ந்துகொண்டது, அரங்கத்தில் அனைவரையும் உருகவைத்தது.

*`பிரைட் ஆஃப் விஜய் டிவி’ என்னும் சிறப்பு விருதைப் பெற்றவர் ரோபோ சங்கர். விஜய் டிவி-யின் அத்தனை தொகுப்பாளர்களும் இணைந்து இந்த விருதை அவருக்கு வழங்கி மகிழ்ச்சியைப் பகிர்ந்துகொண்டனர். ‘இத்தனை வருட உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரம் இது’ என்று ரோபோ சங்கரின் மனைவி ப்ரியங்கா, மேடையிலேயே ஆனந்தக் கண்ணீர் சிந்தினார்.

தொடர்ந்து சிறந்த நடிகர், சிறந்த நடிகை, சிறந்த நகைச்சுவை நடிகர், சிறந்த வில்லி, மக்கள் மனம் கவர்ந்த தொலைக்காட்சித் தொடர் என பெருமைக்குரிய பல விருதுகள் இந்த நிகழ்ச்சியில் வழங்கப்பட்டன. இங்கு நிகழ்ந்த கலாய் காமெடி, அனுபவப் பகிறல்கள், மனதை நெகிழச்செய்யும் நிகழ்வுகள்,  நிகழ்ச்சியோடு பார்வையாளர்களையும் குதூகலப்படுத்தின ஆடல் பாடல்கள் என்று இன்னும் இன்னும் நிறைய இருக்கின்றன. எல்லாத்தையும் இப்பவே சொல்லிட்டா எப்படி.. பாஸ்! அதனால, ஸ்டே ட்யூன் டு விஜய் டிவி டெலிவிஷன் அவார்ட்ஸ்!