Published:Updated:

வடிவேலு காமெடியில் கவனம் ஈர்த்த இந்தப் பெண்களை ஞாபகம் இருக்கா?

தார்மிக் லீ
வடிவேலு காமெடியில் கவனம் ஈர்த்த இந்தப் பெண்களை ஞாபகம் இருக்கா?
வடிவேலு காமெடியில் கவனம் ஈர்த்த இந்தப் பெண்களை ஞாபகம் இருக்கா?

கோவை சரளா போன்ற முன்னணி நகைச்சுவை நடிகைகள் இருக்கும் இந்த கோலிவுட்டில் ஒரு சில சீன்களில் வந்தாலும் ரசிகர்கள் மனதில் பதிந்த போன இந்த நடிகைகளையெல்லாம் ஞாபகம் வருதான்னு பாருங்க ஃப்ரெண்ட்ஸ்!

வாம்மா மின்னல் :

சரத்குமார், மீனா, வடிவேலு, கோவை சரளா நடிப்பில் வெளியான படம் மாயி. 17 வருடங்கள் ஆகியும் இந்தப் படத்தின் காமெடி காட்சிகளுக்கு இன்னும் மவுஸ் குறையவில்லை. அதில் வடிவேலு கல்யாணம் செய்துகொள்ள ஒரு பெண்ணை போய் பார்ப்பார். அவரின் அப்பா 'வாம்மா மின்னல்' என்று அழைக்க, மின்னல் வேகத்தில் இந்தப் பக்கத்தில் இருந்து அந்தப் பக்கம் போய் விடுவார். முக்கி முனகி கடைசியாக வடிவேலு முகத்தைப் பார்த்துவிடுவார். ஆனால் தீபா கடைசியில் சரத்குமார்தான் கல்யாண மாப்பிளை என்று தெரிந்தவுடன் சாய்ந்துவிடுவார். அந்தப் படத்துக்குப் பின்னர் 'மின்னல் தீபா' என்று அழைக்கப்பட்டார். 

சோடா பெண் :

விஷால், ரீமா சென், வடிவேலு நடிப்பில் வெளியான படம் திமிரு. படத்தின் ஒரு காட்சியில் உச்சக்கட்ட வெயிலைத் தாங்க முடியாத காரணத்தால் ஒரு டீ கடையில் சோடா வாங்கி குடிக்கலாம் என்று போவார். அங்கு இருக்கும் பெண் வியாபாரியிடம் 'தல கிறுகிறுன்னு சுத்துது ஒரு சோடா ஒண்ணு குடு'னு கேட்க 'காரணம் சொல்லலேன்னா கூட சோடா கொடுப்போம்' என்று ஆரம்பத்திலேயே இடக்கு மடக்காகப் பேசி சோடாவுக்குத் தனி விளக்கமே தருவார். அதன் பின்னர் அவர் வாடர்ன் என்ற காரணத்தால் குடும்பத்தோடு வடிவேலுவை கும்மி விடுவார்கள். 

ஜமீன் பொண்ணு :

பார்த்திபன், வடிவேலு காம்போவில் வெளியான தெறி ரக காமெடிகள் இடம்பெற்ற படம்தான் 'காதல் கிறுக்கன்'. போறவன், வர்றவனெல்லாம் கல்யாணம் ஆகவில்லை என்று கேலி கிண்டல் செய்ய, எப்படியாவது கல்யாணம் பண்ணியே ஆகணும் என்ற முடிவுடன் சிங்கமுத்துவை கூட்டிச் சென்று பெண் பார்க்கப் போவார். இவர் பார்க்கும் பெண் தனியாக பேச வேண்டும் என்று அழைத்து இரண்டே நிமிடங்களில் வடிவேலுவுக்கு கல்யாணம் பண்ணும் ஆசையையே காணாமல் வைத்துவிடுவார். 

ராணி மங்கம்மா பரமேஷ்வரி :

சைலன்டாக பல படங்களில் பல்வேறு கதாபாத்திரங்களில் வடிவேலுவுடன் இணைந்து நடித்திருக்கிறார். காதல் கிறுக்கன், அரசு, ஆறு, மருதமலை என பல வடிவேலு நடித்த காமெடிகளில் இவரைக் காண முடியும். மருதமலை படத்தில் வடிவேலு போலீஸாக இருக்கும் ஸ்டேஷனில் கல்யாணம் பண்ண வரும் இவருக்கு வரிசையாக நான்தான் காதலன் என்று சொல்லி கும்பலாக கிளம்பி வருவார்கள். பல படங்களில் சின்னச் சின்ன கதாபாத்திரத்தில் வந்தாலும் வடிவேலுவை அடித்துத் துவைக்கும் போலீஸ் கேரக்டர்... பேஷ் பேஷ்!  

சூனா பானா :

கண்ணாத்தாள் படத்தின் கதையை விட மனதில் நின்றது வடிவேலுவின் எபிக் காமெடிகள்தான். படம் முழுக்கவே வடிவேலுவின் காமெடிகள் விழுந்து விழுந்த சிரிக்க வைக்கும். பஞ்சாயத்தில் ஆடு திருடியதை சமாளிப்பதில் ஆரம்பித்து, சரக்கு என்று நினைத்து விஷத்தைக் குடிக்கும் சீன் வரை எல்லாமே அல்டிமேட். இந்தப் படத்தில் வடிவேலுவின் மனைவியாக ஒருவர் இடம்பெறுவார். தினமும் சரக்கடித்துவிட்டு சம்பளமும் வீட்டுக்குத் தராமல் இருப்பார். ஒரு கட்டத்தில் பொறுமை தாங்க முடியாமல் வீட்டிற்கு வந்து ரகளை செய்யும் வடிவேலுவை தூக்கிப் போட்டு மிதித்து விடுவார். அந்த காலகட்டத்தில் மனதில் நின்ற பெண் காமெடி கதாபாத்திரத்தில் இவரும் ஒருவர். 

ஏழாவது : 

வடிவேலு நடித்த கருப்பசாமி குத்தகைதாரர் படத்தில் வரும் இந்த கேரக்டரை வேறு சில படங்களிலும் காண முடியும். அதே படத்தில் இவர் சொல்லும் 'என்ன படித்துரை... ஐம்பது ரூபாய் தர்ற?' எனும் டயலாக் இன்னமும் பலரால் உபயோகிக்கும் வடிவேலு டயலாக்குள் ஒன்றாகிவிட்டது. அதுமட்டுமின்றி வடிவேலு பஸ் கண்டக்டராக இருக்கும் ஏ.பி.சி.டி பட காமெடியில் சிங்கமுத்துவின் மனைவியாக இடம்பெறுவார். 'ஏன்மா இவன் உனக்கு எத்தனாவது புருஷன்?' என்று வடிவேலு கேட்பதற்கு ஸ்டைலாக 'ஏழாவது' என்று சொல்லும் ஒரே ஒரு டயலாக்கும் ரொம்பவே பேமஸ்.