‘துள்ளுவதோ இளமை' மகேஷ்... இன்று 'சிங்கிள் @ 64' இயக்குநர்... வாவ் தனுஷ்! #15YearsOfDhanushism

"ஸ்கூல் ஃபைனல் படிச்சுட்டு இருக்கும்போது 'சாப்பிட்டியாப்பா?’னு யாரும் என்கிட்ட கேட்டது இல்லை. 'அடுத்து என்ன, டாக்டரா... இன்ஜினீயரா?’னுதான் விசாரிப்பாங்க. ஃபர்ஸ்ட் பெஞ்ச் பசங்க மெடிக்கல், இன்ஜினீயரிங் கவுன்சலிங்குக்காக தனித்தனி டியூஷன் படிச்சுட்டு இருப்பாங்க. எனக்கு அப்ப என்ன பண்றதுனு குழப்பமா இருந்தது. அதுவும் இன்ஜினீயரிங் என்ட்ரன்ஸ் எக்ஸாம் பத்தி நினைச்சாலே திக்குனு இருக்கும். அதுக்குப் பயந்தே சினிமா பக்கம் ஓடி வந்தவன் நான்." இப்படி தன் சினிமா பயணத்தை ஆரம்பித்த ஒருவர் பின்னாளில், நடிகராக, பாடகராக, பாடலாசிரியராக, இயக்குநராக, தயாரிப்பாளராக வளர்ந்து ஜெயிப்பார் என யாருக்கும் தோன்றியிருக்காது. ஆனால், அது நடந்தது. நடத்திக் காட்டினார் தனுஷ்.  இது சினிமாவில் அவரது 15வது வருடம். அவரது முதல் படமான 'துள்ளுவதோ இளமை' படம் இதே நாளில் - 10 மே 2002 -  வெளியானது. துள்ளுவதோ இளமை ‘மகேஷ்’, இன்றைக்கு, ‘வயது 64.  சிங்கிள்’ என்று ஸ்டேட்டஸ் தட்டும் ஒருவரது மெச்சூர்ட் லவ்வைப் படம் பிடித்த  இயக்குநர்!  பல விமர்சனங்கள், கேலிகள் தாண்டி இன்று தனுஷ் தொட்டிருக்கும் உயரம் கற்பனை செய்ய முடியாதது. சூப்பர்ஸ்டார் மகளுடன் திருமணம், கமல்ஹாசன் மகள்களுடன் டூயட் என்பதைத் தாண்டி அவரது சினிமாப் பயணம் குறித்துப் பேச நிறைய இருக்கிறது. 

தனுஷ்

முதல் படமான 'துள்ளுவதோ இளமை' 2002ல் படம் வெளியானது. படம் குறித்து வந்த பேச்சுகளில் பாதி கூட, தனுஷ் குறித்து எழவில்லை. ஆனால், செல்வராகவன் இயக்கத்தில் நடித்த 'காதல் கொண்டேன்' மூலம் 'நடிகர் தனுஷ்' வெளியில் தெரிந்தார். சுப்ரமணியம் சிவா இயக்கத்தில் தனுஷ் நடித்த 'திருடா திருடி' பெரிய வெற்று பெற்றது.  கன்னடத்தில் ரீமேக்கும் ஆனது. மன்மத ராசா பாடல் ரிப்பீட் மோடில் டி.விகளில் ஒளிப்பரப்பானது. அதன் பிறகு சின்ன சறுக்கல்களை சந்தித்தார் தனுஷ். "ஆரம்ப வெற்றிகள் பெரிய சந்தோஷம் கொடுத்தது. அதை ஒவ்வொரு நிமிஷமும் ரசிச்சு அனுபவிச்சேன். அப்புறம் திடீர்னு சில ஃப்ளாப்கள். அப்போ அதுவரை என்கூட நின்னு கைதட்டிட்டு இருந்தவங்களே, பின்னாடி நின்னு சிரிச்சாங்க. யார் யாரெல்லாம் அப்படிப்பட்டவங்கனு தெரிஞ்சுக்க அது ஒரு சந்தர்ப்பம். அப்புறம் வெற்றி, தோல்வி ரெண்டையும் ஒரே மாதிரி எடுத்துக்கப் பழகிட்டேன். இப்போ என்னை எதுவும் பாதிக்கிறது இல்லை. என் வேலையை நான் ஒழுங்கா செஞ்சேனா... அதனால யாருக்கும் எந்தச் சிக்கலும் இல்லையா... அதை மட்டும்தான் நான் கவனிக்கிறேன்." என அந்த தோல்விகள் தன்னைப் பக்குவப்படுத்தியது பற்றிக் குறிப்பிட்டிருந்தார் தனுஷ்.

Pudhupettai

அதே நேரத்தில்தான் பாலுமகேந்திரா இயக்கிய 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் நடித்தார். இங்கு அறிமுகமான இன்னொருவர்தான் பின்னாளில் தனுஷின் வேறு பரிமாண நடிப்பை வெளிக் கொண்டுவந்தார். அவர் பற்றி அடுத்து சொல்கிறேன். சில தோல்விகளுக்குப் பிறகு 'தேவதையைக் கண்டேன்' படம் மீண்டும் வெற்றியைக் கொடுத்தது. ஒரு முழுமையான நடிகனாய் தனுஷை மாற்றியதில் 'அது ஒரு கனாக்காலம்', 'புதுப்பேட்டை' இரண்டும் முக்கியமான படங்கள். ஒரு படம் காலம் தாண்டி கொண்டாடப்படுவது தமிழ் சினிமாவில் புதிது கிடையாது. அப்படி கொண்டாடப்பட்ட, கொண்டாடப்படுகிற படங்களில் 'புதுப்பேட்டை'யும் ஒன்று. சமீபத்தில் வெளியாகி பத்து ஆண்டு நிறைவானதற்காக 'புதுப்பேட்டை' ரீ-ரிலீஸ் ஆனது குறிப்பிடத்தக்கது. இயக்குநராக செல்வராகவனுக்கும் அது முக்கியமான படம். தட்டித்தட்டி தனுஷின் நடிப்பை முறைப்படுத்தியதில் இவருக்கு பெரும் பங்கு உண்டு. இதைப் பற்றியும் பின்னால் சொல்கிறேன். 'காதல் கொண்டேன்' கடந்து 'புதுப்பேட்டை' வந்த தனுஷால் தன் நடிப்பை இன்னும் அழகாக கையாள முடிந்தது. இங்கிருந்து தனுஷின் படங்களின் இரண்டு வகையாகப் பிரிவதை நம்மால் கவனிக்க முடியும். 'திருவிளையாடல் ஆரம்பம்', 'பொல்லாதவன்', 'யாரடி நீ மோகினி' தொடங்கி 'வேலையில்லா பட்டதாரி' வரை பல ஹிட் படங்கள், மற்றும் 'அது ஒரு கனாக்காலம்', 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன', 'ஆடுகளம்', 'மரியான்' என  நடிப்புக்கு முக்கியத்துவம் தரும் படங்கள் என இரண்டு வகைப் படங்களிலும் தன்னை நிலை நிறுத்திக் கொண்டார். இதில் 'ஆடுகளம்' படத்திற்காக சிறந்த நடிகருக்கான தேசிய விருது பெற்றார்.

Dhanush

'மயக்கம் என்ன' படத்தில் தனது பாடலாசிரியர் ஆர்வத்தையும் வெளிக்காட்டினார். அதில் யாருமே எதிர்பார்க்காத அளவு வெற்றியைப் பெற்றது '3' படத்தில் இடம்பெற்ற 'ஒய் திஸ் கொலவெறி' பாடல். ஒரு பாடலாக அது எப்படிப்பட்டது என்பதை ஆராய்வதை விட அது தனுஷுக்கு திறந்து விட்ட கதவுகளைத்தான் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். தனுஷின் இந்த ஆர்வம் அவருக்குள் இருந்த இயக்குநர் ஆசைக்கான விதையாகக் கூட இருந்திருக்கலாம். இந்தப் பாடல்தான் அவரை மலையாளத்தில் ஒரு பாடலுக்கு கேமியோ கொடுக்கச் சொல்லி அழைக்கச் செய்தது, கன்னடம், தெலுங்கில் பாடவைத்தது, இந்தியில் 'ராஞ்சனா' படத்தில் நடிக்க அழைத்துச் சென்றது. அதன் பின், அமிதாப் பச்சனுடன் 'ஷமிதாப்' நடித்தது, மே 14 முதல் நடிக்கவிருக்கும் ஹாலிவுட் படம் என தொடர்ந்து தனது எல்லையை கொக்கி குமாரு போல விரிவு செய்து கொண்டேதான் இருக்கிறார் தனுஷ்.

Vetrimaran

தனுஷை நல்ல நடிகராக வடிவமைத்ததில் இரண்டு இயக்குநர்களின் பங்கு முக்கியமானது. தனுஷின் தோற்றத்தை கேலி செய்தவர்களே அவரைப் பாராட்டும்படி மாற்றியவர்களில் முதன்மையானவர் செல்வராகவன். தனுஷ் நடிப்புத் திறமைக்கு என ஒரு டைம்லைன் போட்டால் அது செல்வா படங்களைக் கடக்கும் போது மட்டும் கொஞ்சம் எக்ஸ்ட்ராவாக உயரும். ஒரு கதாபாத்திரத்தின் அடர்த்தியை தனுஷுக்குப் புரிய வைத்தது செல்வாதான். காதல் ஒன்றுதான். ஆனால், திவ்யாவைக் காதலிப்பதற்கும், யாமினியைக் காதலிப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறது. கோபம் ஒன்றுதான். ஆனால், கொக்கி குமாரின் கோபத்துக்கும், கார்த்திக்கின் கோபத்திற்கும் வித்தியாசம் இருக்கிறது என ஒவ்வொன்றாக தனுஷுக்குப் புரியக் காரணம் செல்வா. இந்தப் புரிதல் எந்த அளவுக்கு என்றால், 'யாரடி நீ மோகினி'யில் செல்வாவின் டச்சை தனுஷ் மூலம் உங்களால் உணர முடியும் அளவுக்கு. அந்தப் படத்தை இயக்கியது மித்ரன் R ஜவஹர். ஆனால், கதை செல்வாவினுடையது. ஒரு கட்டத்துக்கு மேல் செல்வாவின் கதாபாத்திரத்தை தனுஷால் எளிதாக உணர்ந்து அதை லாவகமாக வெளிப்படுத்த முடிந்தது. இதன் பிறகு இன்னொரு முக்கியமான நபர் இருக்கிறார். அது பாலுமகேந்திராவின் 'அது ஒரு கனாக்காலம்' படத்தில் நடித்துக் கொண்டிருக்கும் போது தனுஷுக்கு அறிமுகமான உதவி இயக்குநர் வெற்றிமாறன். வெற்றிமாறன் இயக்கியது மூன்றே படங்கள். மூன்றில் இரண்டு தனுஷ் நடித்தது. மூன்றாவது கூட தனுஷ் வரும் வரை வேறு ஒரு படம் இயக்குவோம் என இயக்கியது தான். அந்த அளவுக்கு வெற்றிமாறனுக்கும் தனுஷுக்குமான புரிதல் இருந்தது. அறிமுக இயக்குநர் வெற்றிமாறன் என்ன சொல்கிறார் என தனுஷால் புரிந்து கொண்டு நடிக்க முடிந்தது. செல்வாவிடம் அழுத்தமான நடிப்பைக் கற்றது போல், வெற்றிமாறனிடம் இயல்பான நடிப்பை வெளிப்படுத்தக் கற்றுக் கொண்டார். பொல்லாதவனில் கிஷோரிடம் 'நான் சப்ப தான..." எனப் பேசுவது, ஆடுகளத்தில், "‘நீஞ்செய்யிறது எனக்குப் புடிக்கல, செத்துப்போயிருடா’ன்னா நானே செத்திருப்பனேன்ணே... நீ ஏண்ணே இதச் செஞ்சே...' எனப் பேசும் க்ளைமாக்ஸ் காட்சிகளை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.

 

 

அடுத்து கௌதம் மேனனின் 'எனை நோக்கிப் பாயும் தோட்டா'வில் வேறு ஸ்டைல் தனுஷையும் எதிர்பார்க்கலாம். அனிருத், சிவகார்த்திகேயன், துரை செந்தில்குமார், மணிகண்டன் என பலரது சினிமா வளர்ச்சியில் தனுஷின் பங்கு பெரிது. ஒட்டு மொத்தமாகப் பார்த்தால் தனுஷ் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த அரிய நடிகர்.  தயாரிப்பாளராகவும் தேசிய விருது பெற்றவர். இப்போது ப.பாண்டி மூலம் இயக்குநராகவும் கவனம் பெற்றிருக்கிறார். இன்னும் பல உயரங்கள் தொட வாழ்த்துகள் தனுஷ்!

Do you like the story?

Please Appreciate the Author by clapping!