Published:Updated:

அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1

அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1
அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1

அஜித்தை அறிந்தால்... - #Ajith25 மினி தொடர் - Part 1

சான் மெமோரியல் பள்ளியில் ஆரம்பக் கல்வி. பிறகு அங்கிருந்து ஆந்திரா மெட்ரிக்கில் தனித்தேர்வராக 10ம் வகுப்பு படிப்பு... தொடர்ந்து அப்பாவின் நண்பர் நடத்திய ரெங்கா குரூப் என்ற ஏற்றுமதி நிறுவனத்தில் சூப்பர்வைசர் வேலை. பிறகு சென்னிமலை, ஈரோடு நகரங்களில் பெட்ஷீட் வாங்கிவந்து சென்னையில் விற்கும் சொந்த பிசினஸ். விளம்பரங்களில் நடித்தது, அதைத்தொடர்ந்து சினிமா. ‘இதுதான் அஜித்’ என்று ஒரே பாராவில் சொல்லிவிடலாம்தான். ஆனால் இந்த ஒரு பாரா வார்த்தைகள் வாழ்க்கையாகும்போது அவருக்கு அவ்வளவு எளிதாக இல்லை. அதுவும் குறிப்பாக சினிமா.

‘என் வீடு என் கணவர்’ என்ற படத்தில் ஒரு பாடல் காட்சியில் சில விநாடிகள் வந்து போனது மூலம் அமைந்ததுதான் அஜித்தின் முதல் சினிமா வாய்ப்பு. ஆனால் அடுத்து வந்த ‘பிரேம புஸ்தகம்’ என்ற தெலுங்கு பட வாய்ப்புதான் மிகச்சரியான அறிமுகம். 1992  ஆகஸ்ட் 3ல் அந்தப் பட, ஷூட்டிங் ஆரம்பிக்கப்பட்ட நாளிலிருந்து கணக்கிட்டால், இன்னும் சில மாதங்களில் 25 வது வருடத்தைத் தொடுகிறார் அஜித்.  அன்றைய தெலுங்கு பட அறிமுக அஜித், ‘வேறு மொழிப் படங்களில் நடிக்க மாட்டேன். தமிழில் மட்டும்தான் நடிப்பேன்’ என்று சொல்லும் இன்றைய ‘விவேகம்’ அஜித்தாக வளர்ந்தது எப்படி? இந்தக் கேள்விக்கான பதிலை அவரின் இந்த கால்நூற்றாண்டு கால திரைப்படங்களின் வழியாக நாம் உணர முடியும். அதற்கான ஒரு ரீவைண்ட் தான்.. இந்த ‘அஜித்தை அறிந்தால்’ #Ajith25 மினி தொடர்! 

பெரும்பாலானவை கமர்ஷியல் மசாலாக்கள்தான். இவர் காலகட்ட விக்ரம் போன்றோ, இன்றைய விஜய் சேதுபதி போன்றோ ஆகச்சிறந்த நடிப்பு, பரிட்சார்த்த முயற்சிகள் எதுவும் இல்லைதான். விஜய் அளவுக்கு மிகச்சிறந்த டான்சர் கிடையாதுதான். கேரளா, ஆந்திரா போன்ற மற்றமொழிகளில் சக தமிழ் நடிகர்களுக்கு உள்ள மார்க்கெட் போல இவருக்குக் கிடையாதுதான். இவ்வளவு ‘கிடையாது’களுக்குப்பிறகும் எப்படி இவருக்கு இத்தனை ரசிகர்கள்? ரசிகர் மன்றங்களை கலைத்தபிறகும் எப்படி இவருக்கு இவ்வளவு பெரிய மாஸ் ஓப்பனிங்? ஆம்... துரோகங்கள் நிறைந்த இந்த சினிமாவை தன்னம்பிக்கையான தன் தனிப்பட்ட வாழ்க்கையால் வென்று இருக்கிறார் என்பதுதான் அஜித் ஸ்பெஷல். 

இனி தினம் சில படங்கள் என, அஜித்தின் 57 படங்களை பற்றிய சுவாரஸ்ய செய்திகளை பார்ப்போம். 

இன்றைய அஜித் 5: 

1. ‘என் வீடு... என் கணவர்’

அஜித், அப்போது விளம்பரப் படங்களில் நடித்துக்கொண்டே சினிமா வாய்ப்பு தேடலில் இருந்தார். ‘ஹவாய் செப்பல்’ உள்பட சில விளம்பரங்களில் அவரைப் பார்த்திருக்கலாம். ‘அப்போது சுரேஷ்-நதியா நடித்த இந்தப் படத்தின் ஒரு பாடலில், யூனிஃபாம் அணிந்த பள்ளி மாணவர் ஒருவர் சக மாணவியுடன் சைக்கிளைத் தள்ளிக்கொண்டு பேசியபடி வருவார். அவர்களிடம் சுரேஷ், ‘இந்த வயசுலேயே உங்களுக்கு லவ்வா?’ என்ற தொனியில் அதட்டி அனுப்புவதாக வரும் அந்த காட்சியில், அந்தப் பள்ளி மாணவனாக வந்தவர் வேறுயாரும் அல்ல, ‘தல’ அஜித்தேதான். சில விநாடிக் காட்சியே என்றாலும், அது ஒரு வாய்ப்பு என்பதால் ‘என் வீடு... என் கணவர்’க்கும் கவுன்ட்டில் இடம் உண்டு.

2. ‘பிரேம புஸ்தகம்’

இந்தத் தெலுங்கு படம்தான் அஜித் ஹீரோவாக நடித்த முதல் படம். இதன் படப்பிடிப்பு 1992-ம் ஆண்டு ஆகஸ்ட் 3-ம் தேதி தொடங்கப்பட்டது. அந்த நாளிலிருந்து கணக்கிட்டுதான், இவர் சினிமாவுக்கு வந்த 25-வது ஆண்டாக இந்த 2017-ம் ஆண்டைக் குறிப்பிடுகிறார்கள். இந்தப் படத்தின் இயக்குநர் கொல்லப்புடி சீனிவாசராவ். விசாகப்பட்டினத்தில் ஷூட்டிங்கில் இருந்தபோது கப்பலிலிருந்து தவறி விழுந்து மரணமடைந்தார். பிறகு, இந்தப் படத்தை அவரின் அப்பாவும் இயக்குநருமான கொல்லப்புடி  மாருதிராவ்தான் இயக்கினார். இறந்த தன் மகனின் நினைவாக ‘கொல்லப்புடி சீனிவாஸ் நினைவு விருது’ என்ற அறக்கட்டளையைத் தொடங்கி, சிறந்த அறிமுக இயக்குநருக்கான விருதை ஒவ்வோர் ஆண்டும் வழங்கிவருகிறார் மாருதிராவ் என்பது கூடுதல் தகவல்.

3. ‘அமராவதி’

இந்தப் படம் தொடங்கும்போது வேறொரு நடிகர்தான் ஹீரோ. அவரை வைத்து டெஸ்ட் ஷூட் நடத்தினார்கள். ஆனால், தயாரிப்புத் தரப்பு தேடியதோ வேறொரு ஹீரோவை. இந்தச் சமயத்தில் ஹேமா என்பவரைப் பற்றி சொல்ல வேண்டும். அவர் இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் ட்ரூப்பில் மேடைப் பாடகி. அவர் அப்போது ‘கோஆர்டினேட்டர்’ என்ற ஒரு விளம்பர கம்பெனியிலும் வேலைபார்த்துக்கொண்டிருந்தார். அப்போது அந்த கம்பெனி ‘ப்ரீமியர் வேட்டி’க்காக ஒரு விளம்பரம் எடுத்தது. அதில் அஜித் நடித்தார். 

கையில் ஹெல்மெட், நீளமான தலைமுடியுமாக அந்த ஹேமாவைப் பார்க்க அஜித் வந்திருந்தபோது அவருக்கு அறிமுகமானவர்தான் அவரின் இன்றைய மேனேஜர் சுரேஷ்சந்திரா. அப்போது பட வாய்ப்புக்காக, சுரேஷ்சந்திராவிடம் நீள கலர் டிஷர்ட்டில் எடுக்கப்பட்ட சில போட்டோக்களைக் கொடுத்தார் அஜித். அதை இயக்குநர் செல்வாவிடம் சுரேஷ் காட்டியிருக்கிறார். ‘இந்தப் பையனைத்தாங்க நாங்களும் ஒரு விளம்பரத்துல பார்த்துட்டு தேடிட்டிருந்தோம்’ என்று செல்வா சொல்ல, அப்படித்தான் அஜித் ‘அமராவதி’க்குள் வந்தார். 

‘அமராவதி’யின் ஒட்டுமொத்தப் படப்பிடிப்பும் ஊட்டியில் நடந்தது. அங்கு உள்ள நட்ராஜ் ஹோட்டலில் அஜித்துக்கு ரூம் நம்பர் 403. அங்கு மொத்தமே 20 அறைகள்தான். ஆனால், அத்தனை அறைகள் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்த இந்த நம்பர் ப்ளான். அங்கு இருந்த 42 நாள்களும் ஹோட்டலில் இருந்து ஷூட்டிங்குக்கு இவர் சுரேஷ்சந்திராவுடன் டிசிஎன் 5259 என்ற எண் கொண்ட பைக்கில்தான் போய் வந்தார்.

யாருக்கும் தெரியாத புதுத் தகவல் என்னவென்றால் இந்தப் படத்தின் ரிலீஸின் போதுதான் அஜித்தும் விஜய்யும் முதல்முறையாக சந்தித்துக்கொண்டனர். விஜய் அப்போது ‘நாளைய தீர்ப்பு’ படத்தில் நடித்துக்கொண்டிருந்தார். அந்தப் படத்தின் ஒளிப்பதிவாளர் இமயவரம்பன். பிரபாகர் என்கிற பொது நண்பர் மூலமாக அந்த இமயவரம்பன் அஜித்துக்கும் அவர் சர்க்கிளுக்கும் பழக்கம். ‘அமராவதி’ ரிலீஸ் அன்று அஜித், இமயவரம்பன், பிரபாகர் உள்பட பலர் வடபழநி கமலா தியேட்டர் வெளியே பைக்கில் அமர்ந்தபடி பேசிக்கொண்டிருந்தனர். படம் ஆரம்பித்து பத்து நிமிடங்கள் இருக்கும். அப்போது வேகமாக வந்த இளைஞர் கூட்டம் ஒன்று விறுவிறுவென தியேட்டருக்குள் போனது. அந்தக் கூட்டத்திலிருந்து விலகி இவர்களை நோக்கி வந்த இளைஞர் ஒருவர், இமயவரம்பனைப் பார்த்து ‘ஹாய்’ சொல்கிறார். அவர்தான் விஜய். 

பிறகு இமயவரம்பன், ‘இவர் அஜித்... இவர் விஜய்’ என இருவரையும் ஒருவருக்கொருவர் அறிமுகப்படுத்திவைக்கிறார். ‘ஹாய் பாஸ். ஆல் தி பெஸ்ட்’ என்று ஒருவருக்கொருவர் கட்டியணைத்து வாழ்த்துகளைப் பரிமாறிக்கொண்டு கடந்தனர். இருவரும் பின்னாளில் ‘ராஜாவின் பார்வையிலே’ என்ற படத்தில் சேர்ந்து நடிப்போம் என்றோ, பெரிய ஹீரோக்களாக வளர்ந்து ரசிகர்களால் எதிரெதிர் துருவங்களாக நிறுத்தப்படுவோம் என்றோ அப்போது அவர்களுக்குத் தெரியாது. 

4. ‘பாச மலர்கள்’

சுரேஷ்மேனன், அப்போது நிறைய விளம்பரப் படங்கள் எடுத்துக்கொண்டிருந்தார். அப்படித்தான் அஜித்துக்கு அவர் பழக்கம். அந்தப் பழக்கத்தில், `அர்விந்த் சுவாமி ஹீரோவாக நடிக்கும் படத்தில் நீங்கள் நடிக்கிறீர்களா?’ என்று சுரேஷ்மேனன் கேட்டபோது பண்ணின படம்தான் ‘பாச மலர்கள்’. அந்தச் சமயப் பணத்தேவைகளுக்காக மட்டுமே பண்ணின படம்; நிறைய மனக்கசப்புகளுக்கு இடையில் நடித்த படம். இந்தப் படத்துக்கும் ‘அமராவதி’க்கும் அஜித்துக்கு டப்பிங் பேசியது நடிகர் விக்ரம்.

5. ‘பவித்ரா’

கதைப்படி, இதில் அஜித்துக்கு ஆபரேஷன் முடிந்து மருத்துவமனைப் படுக்கையில் இருக்கும் கேரக்டர். அப்போது பைக் ரேஸ் விபத்தில் உண்மையிலேயே சிக்கி, முதுகுத்தண்டில் அடிபட்டு மருத்துவமனையில் இருந்தார். ஆனாலும் சக்கர நாற்காலியில் வந்து படப்பிடிப்பில் கலந்துகொண்டார். கதையும் ஒரிஜினலும் ஒன்றாகவே இருந்ததால், படுத்துக்கொண்டே நடித்தார். அப்போது அஜித்துக்கு இதைத் தவிர பெரிதாக படங்கள் இல்லை. அதனால் டிவி தொடர்களில் நடிக்க நண்பர்கள் பலர் இவரை அழைத்தனர். சீனியர் சினிமா பிரபலம் ஏ.எல்.நாராயணனின் மகன் ஏ.எல்.என்.மோகன் அப்போது தொலைக்காட்சித் தொடர்கள் எடுத்துக்கொண்டிருந்தார். ‘ஒரு நாளைக்கு இரண்டாயிரம் ஆயிரம் ரூபாய் கிடைக்கும். மாசத்துக்கு 25 நாள்கள் ஷூட்டிங். 50 ஆயிரம் ரூபாய் கன்ஃபர்ம்’ என்று அஜித்திடம் கூறியிருக்கிறார். ஆனால் அஜித்தோ, ‘ஐ வில் மேக் இட் ஒன் டே. டோன்ட் வொர்ரி’ என்று நம்பிக்கையுடன் கூறினார். ‘தொலைக்காட்சித் தொடரில் நடிப்பது ஒன்றும் தீண்டத்தகாத விஷயம் அல்ல. ஆனால், சினிமாவுக்காக வந்துவிட்டு பணத்துக்காக மட்டுமே ஏன் டிவி-க்குப் போகவேண்டும்? சினிமாவிலேயே ஒருநாள் நிச்சயம் ஜெயிப்பேன்’ என்று அவ்வளவு சிரமங்களிலும் நம்பிக்கையோடு காத்திருந்தார்.

விஜய்யின் அம்மா கொடுத்தனுப்பிய உணவை சாப்பிட்ட அஜித், விநாயகர்-அஜித் காம்போ வென்றது எப்படி? விளம்பரங்களில் அஜித் இருட்டடிப்பு செய்யப்பட்ட படம் எது? நிக் ஆர்ட்ஸ் சக்கரவர்த்தி எந்தப் படத்தில் முதன் முதலில் அஜித்துடன் இணைந்தார்? அஜித்தின் அதிக பாடல்களுக்கு நடன இயக்கம் அமைத்த டான்ஸ் மாஸ்டர்கள் யார்  யார்? அஜித் வாங்கிய முதல் கார், அதன் நம்பர் என்ன?

 நாளை பார்ப்போம். 

-அஜித் அறிவோம்..! 

அடுத்த கட்டுரைக்கு